பரம தயாளன்

தென்னிந்தியத் திருவிழாக்களில், மிகவும் புகழ்மிக்கதும், ஸ்ரீரங்கத்தின் பெருமைகளில் ஒன்றாக மிளிர்வதும் வைகுண்ட ஏகாதசி திருவிழா. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னுமாக பத்து நாட்கள் சேர்த்து நடக்கும் இந்த வைபவத்துக்கு ‘திருஅத்யயன உத்ஸவம்’ என்று பெயர். இவ்விழா மார்கழி - தை (டிசம்பர் - ஜனவரி) இடையில் 21 நாட்கள் நடைபெறும். அதற்குரிய ஏற்பாடுகள் அக்டோபர் மாதத்தின் இறுதியில் ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தக்கால் நடுவதில் இருந்து தொடங்கும். 47 கம்பங்கள் உள்ள அப்பந்தல் வடகிழக்கு வாயிலில் ஆயிரம் கால் மண்டபத்தின் முன்னே அமைக்கப்படும். சுவாமி வடக்கு வாயில் வழியே உலாவந்து இப்பந்தலில் எழுந்தருள்வார். ஆச்சார்யர்கள், ஆழ்வார்களின் திருப்படிமங்களும் ஒன்றன்பின் ஒன்றாகச் சுவாமிக்கு அருகே எழுந்தருளச் செய்வர். பகல்பத்து, இராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் முன்னிலையில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்த பாடல்கள் ஓதப்படும். வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் பரமபதவாசல் வழியாக சுவாமி எழுந்தருள்கிறார். ஏன்?
பிறவா நிலை என்கின்ற பரமபதத்தை தம் அடியர்களுக்குத் தந்தருள்பவன், தாமே எழுந்தருள்வது எதனால்? அதுதான், பகவானின் தயை!
‘என்னை நோக்கி வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு அவன் அங்கே காத்திருப்பதில்லை. அந்த இடத்தின் தோற்றம், கேட்ட செய்திகள், தயக்கம், குழப்பம்.... என எந்தக் காரணத்தாலும், அடியார்கள் தம்மருகே வருவதில் தேக்கம் கூடாது. ‘நாமே முன்சென்று அழைத்து வந்தால், அவர்களுக்குள் எவ்விதமான சலனமும் ஏற்படாது’ என்பதற்காக, தாமே வந்து அழைத்துச் செல்கிறான் பரம தயாளனான பகவான்.
இந்த பரமகாருண்யம்தான் வைகுண்ட ஏகாதசியின் தனிச்சிறப்பு!
எம்பெருமானின் முதல் அர்ச்சாவதாரத் திருமேனியான திருவரங்கநாதனின் தலத்தில், இது விசேஷத் திருநாள்! இன்று நேற்றா இங்கே இந்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கிறான்?
‘ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளி பலர் தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன் பெரும் துருத்தி
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்’
என்று பாடுகிறார் சிலம்பாசிரியர். கிட்டத்தட்ட 1800 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சயனக்கோல தரிசனம்! மன்னர்கள், மகான்கள், ஆழ்வார்கள், அருளாளர்கள், அடியார்கள் - என கோடிக்கணக்கானோரை ஈர்த்தருளிய எம்பெருமானைத்தாம் நாம் தரிசிக்கிறோம் என்னும்போதே பூரிக்கிறது மனம்.
இந்த மூலவர் பிரம்ம தேவனின் தவநலத்தால் திருப்பாற்கடலினின்று வெளிப்பட்டவர். பிரம்ம தேவரால் பூஜிக்கப்பட்டவர். பின்னர் சூரிய குலத்தில் தோன்றிய இட்சுவாகு அரசன் தன் தலைநகராகிய அயோத்தியில் ஸ்ரீ ரங்கநாதரை பூஜித்து வந்தார். இக்குலத்திலேயே திருமாலின் அவதாரமாகத் தோன்றிய இராமபிரான் தனது முடிசூட்டு விழாவைக் காண வந்த விபீஷணனுக்கு அன்புப்பரிசாக ஸ்ரீரங்கநாதரை அளித்தார். அவர் மிகுந்த பக்தியுடன் தனது தலைமேல் சுமந்து இலங்கைக்கு எடுத்துச் சென்றார். பயணக்களைப்பில் காவிரியாற்றங்கரையில் சிறிது இளைப்பாறினார். அப்போது கீழே வைத்த அம்மூர்த்தத்தை எவ்வளவோ முயன்றும் எடுக்க முடியவில்லை. விபீக்ஷணன் கதறி அழுதான். அவரைத் தேற்றும் பொருட்டு ‘தென் திசை இலங்கை நோக்கி பள்ளிக் கொண்டருள்வதாகவும் தாம் காவிரி யாற்றங்கரையிலேயே தங்க விரும்புவதாகவும்’ அரங்கநாதர் அருளினார்.
அப்போது தர்மவர்மசோழன் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்தான். காலப்போக்கில் காவிரியின் வெள்ளப்பெருக்கினால் மண்ணில் மறைந்தது கோயில். வேட்டையாடச் சென்ற சோழ அரசன் கிள்ளிவளவன் ஒரு மர நிழலில் இளைப்பாறினான்.
அப்போது ஒரு கிளியானது, ‘இங்கே பிரணவாகார விமானத்தின் கீழே ரங்கநாதனான பகவான் பள்ளி கொண்டிருக்கிறான்’ எனச் சொல்லியது. அரசன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அந்தக் காடுகளை வெட்டி, மணலை அகற்றி கண்டுபிடிக்கப்பட்ட கருவறையைச் சுற்றிக் கோயிலைக் கட்டினார். தெருக்களை அமைத்தார். மதில்களை எழுப்பினார். திருவரங்கத் தீவைச் சூழ்ந்து ஓடுகின்ற காவிரி, கொள்ளிடம் என்னும் இரண்டு ஆறுகளின் கரைகளைத் திருத்திச் செப்பனிட்டார். அக்கோயிலில் நித்ய பூஜைகளையும், விழாக்களையும் ஏற்படுத்தினார்.
அந்த அரங்கன்தான் பக்தர் புடைசூழ பரமபதவாசல் நோக்கி, எழுந்தருளிக் கொண்டிருக்கிறான். பள்ளிகொண்ட பெருமானின் வடிவழகைக் கண்டு உள்ளம் உருகுகிறது என்றார் தொண்டரடிப்பொடியாழ்வார். அந்த பகவானின் பரம கருணையை நினைத்து உள்ளம் பொங்கி விழிகளில் பெருகுகிறது ஆனந்தம். எல்லோரின் உதடுகளும், மனமும் ‘ரங்கா ரங்கா’ என்றே உச்சரிக்கின்றன. அந்த ரங்கன், அரங்கத்தில் மட்டுமல்ல; நம் அந்தரங்கத்திலும் நிறையட்டும். நமக்கான கதவுகள் எப்போதும் திறக்கும்.

 

Comments