ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி

திருத்தணியிலிருந்து திருப்பதி செல்லும் வழியில், பொன்பாடி தலத்துக்கு அருகில் உள்ளது மத்தூர். இங்கே சாந்த சொரூபிணியாக, மலர்ந்த முகத்தோடு மூலவராக அருள்பாலிக்கிறாள் அன்னை ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி. எட்டு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கத்தி, வில் போன்றவை ஏந்தி மகிஷனை தமது திரிசூலத்தால் வதைத்து, உலகைக் காத்த உவகை முகத்தில் பொலியக் காட்சி தருகிறாள்.
சுமார் ஏழு அடிக்கும் மேல் நெடிதுயர்ந்த திருச்சிலை. மஹிஷனின் தலையின் மேல் அன்னை திருநடனம் புரியும் கோலம் பரவசத்தைத் தூண்டுகிறது. அன்னை, எப்போது, எப்படி இங்கே எழுந்தருளினாள்?
காலை வேளை. திருத்தணி - ரேணிகுண்டா வழியே மும்பாக்கு இரண்டாவது ரயில் பாதை அமைக்க மண் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஓரிடத்தில்‘டங்’ என்று ஒரு வெங்கல ஓசையெழ, மண் தோண்டிய வேலையாள் மயங்கி தரையில் வீழ்ந்தான்.
மற்றவர்கள், அங்கிருந்த மண்ணைத் தோண்டி அகற்றிப் பார்த்தபோது, எட்டு கரங்களுடன்கூடிய கம்பீரமான ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி அன்னையின் திருச்சிலை. பின்பு, உருவானதே இந்தத் திருக்கோயில்.
அன்னை மஹிஷாசுரமர்த்தினி பல ஆண்டுகளாக பூமிக்குள் இருந்தபோது அந்த இடத்துக்குப் பெயர் ‘சக்திமேடு.’ இங்கு உச்சிபொழுதிலோ, இரவு நேரத்திலோ வருபவர்களை, அன்னை தாம் அங்கு மண்ணுக்குள் இருப்பதை உணர்த்தும் பொருட்டு, அவர்களை மூர்ச்சையுறச் செய்து வந்தாளாம். அதனால் மக்களுக்கு ஒருவித பீதி உண்டாயிற்று. ஆனால், தற்போது அன்னைக்கு கோயில் உருவாகி அறுபது ஆண்டுகளாக இதுவரை ஒருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை என்று கூறுகிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அகத்தியர், கௌசிகர் போன்றோர் எழுதிய ஓலைச்சுவடிகளில் மத்தூர் ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி அன்னையின் பெயர் பதிக்கப்பட்டு அம்பிகைக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடன்களும் இந்த ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றிருப்பது மிகவும் விசேஷம். அம்மனுக்கு நேர்த்திக்கடன்கள் செய்து அவளின் அருளைப் பெற்றவர்கள் பலர். இதனால் இத்தலம் ஒரு பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.
கோயிலின் உள்ளே அம்பிகைக்கு நேர் எதிரேதல விருட்சமாக வேப்ப மரம். அன்னையை தரிசனம் செதுவிட்டு வெளியே வந்தவுடன், கோயில் ஊழியர் ஒருவர் மிகுந்த பணிவுடன் ஒரு சிறு துணிப்பையிலிருந்து வேப்பிலையை பிரசாதமாக நமக்குத் தருகிறார். அம்மனின் அருள் நிறைந்த இந்த வேப்பிலை கசப்பதில்லை என்பது விசேஷம். அம்பாள் இந்த இலையில் உள்ள கசப்பை தாம் ஈர்த்துக் கொள்கிறாள் என்று சொல்கிறார்கள். அதுபோலவே, நம் வாழ்வில் ஏற்படும் கசப்பான துன்பங்களை தாம் ஏற்றுக் கொண்டு, இனிப்பான இன்பங்களை நமக்கு அருள்வாள் என்று இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் ராகுகால பூஜை மற்றும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அர்ச்சனைகள் இங்கு நடத்தப்படுகின்றன.
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நண்பகல் 12 மணிக்கு அம்பிகைக்கு 108 குட பாலாபிஷேகம் உண்டு. பௌர்ணமி நாட்களில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை நவ கலச யாக பூஜை மற்றும் சங்கு அபிஷேகம் செய்யப்படுகின்றன.
இவைதவிர, தமிழ் புத்தாண்டு அன்று 1008 குட பல் அபிஷேக சிறப்பு பூஜை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று செப்புக் கவச அலங்காரம், அபிஷேகம் பார்க்கப் பக்திப் பரவச மூட்டும்.
நவராத்திரி விழாவில் ஒன்பது நாட்களிலும் சிறப்பு பூஜைகள், சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு மற்றும் விபூதி காப்பு, மலர் அலங்காரம் தேங்காய்ப்பூ அலங்காரம் போன்றவை நடைபெறுகின்றன.
என்னதான் கடும் தவம் புரிந்து கிடைப்பதற்கரிய வரங்களைப் பெற்றாலும், பெற்றதன் நோக்கம் நல்லதாக இல்லாவிட்டால் அழிவு நிச்சயம் என்ற உண்மையைத்தான் மஹிஷாசுர வதம் உணர்த்துகிறது. மாறாக, தூய அன்போடும், பக்தியோடும் வழிபடும் அன்பர்களின் வாழ்வில் அமைதியையும் மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்துபவளாக அன்னை மஹிஷாசுரமர்த்தினி விளங்கி கொண்டிருக்கிறாள் என்பதையும் உணர முடிகிறது.
செல்லும் வழி
திருத்தணி - திருப்பதி நெடுஞ்சாலையில் திருத்தணியிலிருந்து 8 கி.மீ.தொலைவில் உள்ளது பொன்பாடி ரயில் நிலையம். அங்கிருந்து மேற்கே சுமார் 2 கி.மீ. பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.
தரிசன நேரம்: காலை 7 முதல் 1 மணி வரை. மாலை 3 முதல் 8 மணி வரை. செவ்வாய் முழு நாளும் தரிசனம் உண்டு.
தொடர்புக்கு : 96262 74195

Comments