சி(வ)ன் முத்திரை


மனித உடல் குறிப்பிட்ட விகித அளவில் பஞ்ச பூதங்களின் கலவையாகவே இருக்கிறது என்பது இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ள உண்மை.
இந்த மூலங்களை உடலிலிருந்து வேறுபடுத்த முடியாது. இந்தப் பஞ்சபூத கலவையின் விகிதம் எப்போதும் ஒரே அளவில் பேணப்படுவதன் மூலமே யோகம் சித்திக்கும். அந்த விகித அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும்போது அதற்கு ஏற்ப உடல் நலிவும், நோயும் உருவாகின்றன.
சித்தர்கள் மனதைக் கட்டுப்படுத்தும் கலை அறிந்தவர்கள். தேகத்தில் உள்ள பஞ்சபூத கலவை விகிதாசார மாற்றம் அடையாத படி, ஒரு சீரான சமநிலையில் வைத்திருக்க அவர்களால் முடியும் ஆனால் சாதாரண மனிதர்களுக்கு?
"எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!' என்ற தூய எண்ணம் உள்ள சித்தர்கள், அதற்காகவே ஓர் எளிய முறையை நமக்கு அளித்துள்ளனர். அதுதான் முத்திரைகள் மூலம் உடல்நலம் பேணுதல் சித்தர்கள் முத்திரை முறைகளை இரண்டு வகைகளாக வந்துள்ளனர். அவை, யோக முத்திரைகள் மற்றும் மருத்துவ முத்திரைகள் எனப்படும் தேக முத்திரைகள்.
இந்த முத்திரைகள் மூலம் நமக்கு ஏற்படும் நோய்களை மருந்துகள் எதுவும் இல்லாமல் நம் நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சரி செய்ய முடியும். இவற்றுள் யோகம், தியானம், பிராணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது.
அட்டாங்க யோகத்தின் ஒரு அங்கமான ஹடயோகம் என்னும் யோகசனக்கலையோடு இணைத்துச் செய்யப்படுவதே முத்திரைக் கலையாகும். முத்திரை சிகிச்சையின் பரிணாம வளர்ச்சியில் தோன்றியவையே வர்ம சிகிச்சை, நுண் அழுத்த சிகிச்சை (அக்குபிரஷர்) மற்றும் நுண்துளை (அக்கு பஞ்சர்) சிகிச்சைகள்.
சித்தர்கள் இந்த முத்திரை கலையை முதன் முதலில் அறிந்து கொண்டது. சிவபெருமானிடம் இருந்துதான். மௌனமாய் முத்திரை காட்டிச் சொல்லாமல் சொன்னவர் என்று தட்சிணாமூர்த்தியைச் சொல்வது நினைவுக்கு வருகிறதா? சனகாதி முனிவர்கள் அவர் முன் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? சிவமே சித்துக்கலையை உலகிற்குச் சொன்ன முதற்கடவுள். அவரது ஓர் அம்சமான நடராஜரின் திருவடிவம் உணர்த்தும் பொருளை இன்று உலகமெல்லாம் கொண்டாடுகிறார்கள் பிரபஞ்சத் தத்துவம் என்று. விதவிதமான முத்திரைகளை முக்கண்ணன் திருநடனம் புரியும்போதே உணர்த்தியவைதான். இவற்றை நாட்டிய முத்திரைகள் என்பார்கள்.
அநேகமாக தெய்வத் திருவுருவங்கள் எல்லாமே ஏதாவது ஒரு முத்திரையைக் காட்டுவதுபோல்தான் அமைக்கப்பட்டிருக்கும். இந்துக் கோயில்களில் மட்டுமின்றி, பௌத்த மதக் கோயில்களிலும் புத்தர் சிலைகள் கைமுத்திரைகளுடன் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கோயில்களோடு தொடர்புடைய பரதநாட்டியக் கலையிலும் முத்திரைகள் உண்டு. தியானம் பயில்பவர்களும் கைகளில் முத்திரை பிடித்து அமர்ந்திருப்பதைக் காணலாம். யோகாசனங்களை செய்யமுடியாதவர்கள் முத்திரைகளை மட்டுமாவது செய்து பழகினால் உடல்நலம், மனநலம் பெறலாம் என்பது பலருடைய அனுபவமாக இருப்பதை அறியமுடிகிறது. முத்திரைகளை எளிதில் எல்லா வயதினராலும் செய்ய முடியும்.
முத்திரைப் பயிற்சிக்கு மூலதனம் கைவிரல்களேயாகும். முத்திரைகள் பற்றி தன்வந்திரி முனிவர் தன்னுடைய தன்வந்திரி வைத்தியம் 1000 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். தூய்மையும், அமைதியும் நிறைந்த இடத்தில் உடலைத் தளர்த்தி, இரண்டு கைகளையும் முழங்கால் மீது தளர்வாக வைத்து யோக முத்திரைகளைப் பிடிக்க வேண்டுமென தன்வந்திரி குறிப்பிடுகிறார். முத்திரைகளை உடல் நலம், மனநலம், ஆத்மஞானம் ஆகியவற்றைப் பெறுவதற்காக தியானத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.
மோகினி முத்திரை, சோபினி முத்திரை, திருவினி முத்திரை, யோனி முத்திரை, அபான முத்திரை, சுவகரண முத்திரை முதலிய ஆறு முத்திரைகளையும் சித்தியுள்ள முத்திரைகள் ஆறு எனக் குறிப்பிடுகிறார் தன்வந்திரி.
சின் முத்திரை, அனுசாசன் முத்திரை, கருட முத்திரை, முகுள முத்திரை, சுரபி முத்திரை, சங்கு முத்திரை, குபேர முத்திரை, சுவகரண முத்திரை, யோனி முத்திரை, அபான முத்திரை, ஞான முத்திரை, வாயு முத்திரை, சூரிய முத்திரை, பிராண முத்திரை, பச்சன் முத்திரை, லிங்க முத்திரை, அபான வாயு முத்திரை, வருணமுத்திரை, ஹாகினி முத்திரை, பிருதிவி முத்திரை, பூதி முத்திரை, தியான முத்திரை, வஜ்ஜிர பத்ம முத்திரை என பலவகையான யோக முத்திரைகள் யோகக் கலையில் உள்ளன.
பஞ்சபூதங்களில் ஏற்படும் குறைபாட்டை மருந்துகள் மூலமும், உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் குணப்படுத்தும் வழிமுறைகள் ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் உள்ளன. அதே சமயம் உடலில் உள்ள பஞ்ச பூதங்களை நாமாகவே சரி செய்து கொள்ள சில எளிய முத்திரைகள் கண்டுபிடித்து நமக்குத் தந்துள்ளனர்.
நம் கையில் உள்ள ஐந்து விரங்களுள் ஒவ்வொரு விரலும் ஒரு பஞ்சபூதத்தை இயக்குகிறது. பெருவிரல் நெருப்பு, சுட்டுவிடர் காற்று, நடுவிரல் ஆகாயம், மோதிரவிரல் நிலம், சுண்டுவிரல் நீர்.
எந்த பூதத்தை சமன்படுத்த வேண்டுமோ அதற்குரிய முத்திரையை தொடர்ந்து செய்து வந்தாலே அந்த பூதம் சமனாகி விடும். இந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும் முடியும்.
பண்டைய காலத்தில் முனிவர்கள் காலக்கணக்கின்றி கடும் தவம் புரிந்திருக்கின்றனர். அப்படித் தவம் இருந்த சமயத்தில் அவர்களை பசி, தாகம், நோய் என்று எதுவும் அணுகாமல், இருந்ததற்குக் காரணங்களுள் முத்திரைகளும் ஒன்று. நம் உடலை இயக்கும் உயிர் சக்தியானது 14 முக்கிய சக்தி ஓட்டப்பாதைகளின் வழியே உடல் முழுவதற்கும் கொண்டு செல்லப்படுகின்றது. இவற்றுள் மூன்று ஓட்டப்பாதைகள் கைவிரல் நகங்களின் அருகில் துவங்குகின்றன. மூன்று ஓட்டப் பாதைகள் விரல் நகங்களின் அருகில் முடிகின்றன. இந்தப ஆரம்பப் புள்ளிகள் அல்லது முடியும் புள்ளிகள் மிக மிக சக்தி வாய்ந்தவை. உரிய முத்திரைகளை முறையாகக் கற்றுச் செய்யும்போது இந்த சக்திப்புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதன்மூலம் உடலின் உள்ளுறுப்புகளில் பிராண சக்தியின் அளவு அதிகரிக்கிறது.
உடல் இயங்கத் தேவையான உயிர்ச்சக்தியை உற்பத்தி செய்து தருவன, நம் உடலிலுள்ள சக்கரங்களே. எனவேதான் இவற்றை உடலில் சக்தி மையங்கள் என்றும் அழைக்கிறோம். இந்தச் சக்கரங்கள் பிரச்னை இன்றி இயங்கும்போது உடலும் நலமாக இயங்கும். சக்கரங்களில் ஏதாவது ஆற்றல் தடைகளோ, சக்தித் தேக்கங்களோ ஏற்படும்போதுதான் நோய்கள் உருவாகின்றன. நோயினறி வாழ சக்கரங்கள் சீராக இயங்க வேண்டும். இந்தச் சக்கரங்களுக்கும் விரல்களுக்கும் உள்ள தொடர்பை அறிந்துகொண்டால் எளிய முத்திரைகள் மூலம் சீர் செய்து விடலாம்.
நமது உள்ளங்கைகளின் மத்தியில் ஒரு துணைச்சக்கரம் உள்ளது. முத்திரைகள் செய்யும்போது இந்தத் துணைச் சக்கரம் தூண்டப்படுகிறது. அதோடு விரல் நுனி, மூட்டுகள் இவற்றோட தொடர்புடைய பல சிறு சிறு சக்கரங்களும் தூண்டப்படுவதால் பலவிதமான நோய்கள் குணமடைகின்றன.
பெருவிரலை மையமாக இருத்தி தியானம் செய்துவந்தால் உடலிலுள்ள வெப்பம் சமநிலைப்படும்; அழுக்குகள் அகலும்; உடலும் மனமும் தூய்மையடையும்.
சுட்டுவிரலை மையமாகக் கொண்டு தொடர்ந்து தியானம் செய்து வந்தால் சிந்தனைகளில் தெளிவு பிறக்கும்; நல்ல எண்ணங்கள் மனதில் நிறையும்.
நடுவிரலை மையமாக வைத்து தியானம் செய்யும்போது உலக வாழ்க்கையின் பற்றுகளை- ஆசைகளைக் கடந்து ஞான வாழ்க்கையில் ஈடுபடும் ஆர்வமும், மனநிலையும் உண்டாகும்.
மோதிரவிரலை மையமாக வைத்து தியானம் செய்யும்போது சிந்தனைகள் தெளிவடையும். முன்கோபம், எரிச்சல் அடையும் தன்மை ஆகியவை மறையும்; மன அமைதி பிறக்கும்.
சுண்டுவிரலால் செய்யப்படும் முத்திரைகளால் நுண்ணுணர்வு; உள்ளுணர்வு இவற்றை வளர்த்துக் கொள்ள முடியும்.
வாழ்வியல் முத்திரைகள், பஞ்சபூத முத்திரைகள், நோய் நீக்கும் முத்திரைகள், ஆன்மிக முத்திரைகள் என வகை பிரித்து முத்திரைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
முத்திரைகளை எந்த நிலையிலும் செய்யலாம். அதேசமயம் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் செய்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும் என்கின்றனர். இந்த முத்திரைகளை குறைந்தது 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை செய்ய வேண்டும். இவற்றில் சில முத்திரைகளை இரு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். இரண்டு கைகளும் ஒன்றிணையும்போது உடலிலுள்ள பல்வேறு கூறுகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. அத்துடன், அவற்றின் இயக்கங்களும் ஒழுங்குப்படுத்தப்படுகின்றன.
1. ஞான முத்திரை (சின் முத்திரை): கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் ஒன்றயொன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு மெதுவாக அழுத்திப் பிடிக்கவேண்டும். மற்றவிரல்கள் நேராக இருக்க வேண்டும். இவ்வாறு கைவிரங்களை அழுத்திப் பிடிப்பதற்கு ஞான முத்திரை என்று பெயர். இந்த முத்திரைக்கு சின் முத்திரை என வேறு ஒரு பெயரும் உண்டு. ஞான முத்திரை செய்வதால் மூளைக்கு அதிக ரத்தம் பாயும், மூளையிலுள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறும், மூளையின் செயல்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கும் மனம் எளிதில் ஒருநிலைப்படும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை நீங்கும். தியானம் பழகுபவர்களுக்கு மிகவும் உகந்த முத்திரையாகும். கவனம் குன்றாது கற்று மனதில் இருத்த உதவும். கல்விக் கடவுளான தட்சிணாமூர்த்தி காட்டும் முத்திரை இதுவே.
2. அஞ்சலி முத்திரை: இறைவனை இரு கைகளையும் கூப்பி வணங்குகிறோமே, அப்படி கூப்பிய கரங்களே அஞ்சலி முத்திரை எனப்படுகிறது. இரு கரங்களையும் கூப்பும்பொழுது இரு கை விரங்களும் இணைகின்றன. இதனால் வலப்பக்கம் மூளையும், இடப்பக்க மூளையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. சிந்தனை, கற்பனா சக்தி, உடலின் செயல்திறன் ஆகியவை பன்மடங்கு அதிகரிக்கிறது.
3. குபேர முத்திரை: பெருவிரல், ஆள் காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளை அழுத்தி பிடிக்கவேண்டும். மோதிரவிரலையும், சுண்டு விரலையும் உள்ளங்கையைத் தொடுமாறு மடக்கிப் பிடிக்கவேண்டும். இவ்வாறு செய்யும் முத்திரைக்கு குபேர முத்திரை என்று பெயர். இந்த முத்திரையை நேரக்கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த முத்திரையைச் செய்தால் மனதில் உள்ள ஆசைகள் விரைவில் நிறைவேறும். பொருளாதார பற்றாக்குறைகள் விரைவில் நீங்கும். ஜோதிட சாஸ்திர ரீதியாக பெருவிரல் சக்கிரனையும், ஆள்காட்டி விரல் குருவையும், நடுவிரல் சனியையும் குறிக்கும். இந்த மூன்று விரல்களையும் சேர்த்துப் பிடிப்பதால் சனி, குரு, சுக்கிரன் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த கிரக சேர்க்கை, பொருளாதார வசதிகைளைப் பெருக்கும். ஹிப்னோ தெரபி தரும் பலனை இந்த குபேர முத்திரை செய்வதன் மூலம் பெற முடியும். குறிப்பாக சைனஸ் தொல்லையில் இருந்து விடுபட இந்த குபேர முத்திரை உதவுகிறது.
4. வருண முத்திரை: சுண்டுவிரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு மெதுவாக அழுத்திப் பிடிக்கவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இவ்வாறு கைவிரல்களை அழுத்திப் பிடிப்பதற்கு வருண முத்திரை என்று பெயர். வருண முத்திரை செய்பவர்களுக்கு, தோல் சம்பந்தமான நோய்கள் இருப்பின் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.
5. இதய முத்திரை: ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியை பெருவிரலின் அடிப்பாகத்தோடு, நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிப்பகுதிகளை பெருவிரலின் நுனிப்பகுதியோடு மெதுவாக அழுத்திப் பிடிக்கவேண்டும். இதற்கு இதய முத்திரை என்று பெயர். இந்த முத்திரைக்கு அபான வாயு முத்திரை, மிருத சஞ்சீவினி முத்திரை என்றும் வேறு பெயர்கள் உண்டு.
இந்த முத்திரையை தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் செய்து வந்தால் நிச்சயமாக மாரடைப்பு வராது. ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள் இம்முத்திரை தொடர்ந்து செய்து வந்தால், அவர்கள் மாரடைப்பு குறித்து பயமில்லாமல் இருக்கலாம் என்கிறார்கள்.
6. சங்கு முத்திரை: இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலதுகைட்டை விரலைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்தப் பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும். இது தொண்டை பாதிப்புகள், தைராய்டு பிரச்னைகள், ஜீரண கோளாறுகள் இவற்றைக் குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
7. மகா சிரசு முத்திரை: மோதிர விரலை மடித்து உள்ளங்கையைத் தொடுமாறு செய்ய வேண்டும். பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளை ஒன்றாக அழுத்திப் பிடிக்கவும். சுண்டு விரலை நேராக நீட்டியிருக்க வேண்டும். இதற்கு மகா சிரசு முத்திரை என்று பெயர். இந்த முத்திரை செய்தால் ஒற்றை தலைவலி உள்ளிட்ட தலைவலிகள் நீங்கும்.
8. பிராண முத்திரை: மோதிர விரல் நுனி, சுண்டு விரல் நுனி, கட்டை விரல் நுனி ஆகிய மூன்றும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு மெதுவாக அழுத்திப் பிடிக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இவ்வாறு கைவிரல்களை அழுத்திப் பிடிப்பதற்கு பிராண முத்திரை என்று பெயர். பிராண முத்திரை செய்வதால் கண் நோய்கள் நீங்கி, கண்கள் ஒளிபெறும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், களைத்த உடலை புதுப்பிக்கும் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஞானமுத்திரையுடன் சேர்ந்து செய்தால், தூக்கமின்மை நோய் குணமாகும். அபான மத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு நோய் குணமாகும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படுத்தும் முத்திரை இது.
9. லிங்க முத்திரை: இரண்டு உள்ளங்கைகளையும் இணைத்து விரல்களை ஒன்றோடொன்று பின்னி வைத்து, இடதுகையின் கட்டைவிரலை நேராக நிமிர்த்தி வைக்க ÷வ்டும். அவ்விரலை வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் வளைத்துப் பிடித்திருக்குமாறு வைத்திருக்க வேண்டும்.
லிங்கமுத்திரையின் பலன்கள்: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ஜலதோஷம் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கான எதிர்ப்புச் சக்தியையும், வெப்ப நிலை மாற்றத்தையும் எதிர்கொள்வதற்கான சக்தியையும் அளிக்கிறது. நுரையீரலுக்கு வலிமையைக் கொடுக்கிறது. உடலில் வெப்பத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்பை எரித்து விடுகிறது.
10. சூன்ய முத்திரை: நடு விரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து, கட்டை விரலால் மெதுவாக அழுத்திப் பிடிக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இவ்வாறு கைவிரல்களை "ழுத்திப் பிடிப்பதற்கு சூன்ய முத்திரை என்று பெயர். சூன்ய முத்திரை செய்பவர்களுக்கு காது சம்பந்தமான நோய்கள் குணமாகும். இதில் மிக முக்கியமான விஷயம், நன்றாக காது கேட்பவர்கள் யாரும் இந்த முத்திரையை செய்யக்கூடாது; செய்தால் காது மந்தமாகிவிடும். செவிக்குறைபாடு உள்ளவர்கள் மட்டுமே இந்த முத்திரை செய்தால் காது கேட்கும் திறன் அதிகரிக்கும்.
கடும் தவம், உடல் வருத்தும் பயிற்சிகள், கசப்பான மருந்து என எதுவும் இல்லாமலேயே மனித ஜீவன்கள் நலமாக வாழ அந்த சிவபெருமானே சித்தர்களுக்கு சொல்லித் தந்து உலகிற்கு அளித்தவைதான் முத்திரைப் பயிற்சிகள். முழுமையாக அறிந்து செய்தால் ஆரோக்யமும், நீண்ட ஆயுளும் பெறுவது நிச்சயம்.

Comments