தஞ்சாவூர் குருசாமியின் அறிவுரை

கார்த்திகை மாதம் பிறந்ததுமே, களைகட்டத் துவங்கிவிடும். எங்கும் ஐயப்ப பக்தர்கள்; தினமும் கோயில்- குளங்களுக்குச் சென்று வழிபட்டு, பக்தியுடன் விரதமிருப்பார்கள். தஞ்சாவூரில் உள்ள அம்மன் கோயிலின் குருக்கள் ராஜேந்திர சர்மா, தீவிர ஐயப்ப பக்தர். தற்போது 34-வது வருடமாக, ஸ்ரீஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதமிருந்து வருகிறார்.
 
''தஞ்சாவூர் கொடிமரத்து மூலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 40 வருஷமா அர்ச்சகரா கைங்கர்யம் பண்ணிட்டிருக்கேன். எனக்கு, அம்பாளைப் போலவே ரெண்டு பெண் குழந்தைகள். கூடவே, ஆண் குழந்தையும் பொறந்தா நல்லாருக்குமேன்னு வேண்டாத தெய்வம் இல்லை. என் வருத்தத்தை குருநாதர் சுவாமிநாதன்கிட்ட சொன்னப்ப, 'சபரிமலைக்கு மாலை போடு; மணிகண்டன் பிறப்பான்’ன்னு சொன்னார். அதன்படி, மாலை போட்டு, ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வந்த அடுத்த வருஷமே ஜம்முன்னு பொறந்தான் பையன். அன்னிலேருந்து ஐயப்பன்தான் எங்க கண்கண்ட தெய்வம், குலதெய்வம் எல்லாமே!'' என்று ஆனந்தக் கண்ணீர் மல்கச் சொன்னவர், சபரிமலையில் தங்கள் குழுவுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவம் ஒன்றையும் விவரித்தார்.
ஒருமுறை, மலைப் பகுதியில் தூங்கிக்கொண்டிருக்கும்போது, இவர்களது பையைத் திருடவந்தானாம் ஒருவன். அப்போது, சிறுவன் ஒருவன் இவர்களைக் கூப்பிடுவது போல் தோன்றவே, சட்டென்று கண்விழித்தவர்கள், திருடனைப் பார்த்துச் சத்தமிட்டார்களாம். உடனே, அந்தத் திருடன் ஓடிப் போய்விட்டானாம். ''சிறுவனைப் போல் குரல் கொடுத்து, எங்களது இருமுடிப் பையையும் பணப்பையையும் காத்தது அந்த ஐயப்ப ஸ்வாமி தான்!'' என்று நெக்குருகிச் சொல்கிறார் ராஜேந்திர சர்மா.

இவர் பணிபுரியும் கோயிலில் ஸ்ரீஐயப்பனுக்கும் சந்நிதி உள்ளது. மார்கழி 11-ஆம் நாள், அரசூர் முருகன் கோயிலிலிருந்து திருவாபரணப் பெட்டி எடுத்துவரப்பட்டு, ஸ்ரீமணிகண்டனுக்கு சிறப்பு அலங்காரமும் பூஜைகளும் செய்யப்படுமாம். ''முன்னெல்லாம் மலைக்கு மாலை போட்டு, 48 நாட்கள் விரதம் இருப்பாங்க. இப்ப, மாலை போட்டுக்கிட்ட நாலாம் நாளே, சின்னப் பாதை வழியா மலைக்குப் போயிட்டு வந்துடறாங்க. 48 நாட்கள் விரதமிருந்து, பெரிய பாதை வழியா போகும்போது, உடம்பாலயும் மனசாலயும் ஏற்படுற மாறுதல்கள் இருக்கே... அதுதான் நம்மை அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டுப் போகும்!'' என இன்றைய கன்னிசாமிகளுக்கு அறிவுறுத்துகிறார் ராஜேந்திர சர்மா குருசாமி

Comments