ஒருநாள் வைபவம் என்பது அந்த ஒருநாளில் மட்டும் நடைபெறும் நிகழ்வாக இருந்தால், அந்த வைபவம் எப்படி ஓர் ஆண்டு முழுமைக்குமான பரவசத்தை நமக்குத் தந்திட முடியும்? இந்தக் கேள்விக்கான விடையாக அமைந்திருப்பதுதான், இதோ இப்போது நாம் தரிசிக்க இருக்கும் திருவிழா!
'லட்ச தீபத் திருவிழா’ என்ற பெயரிலும், 'மார்கழி மகோற்ஸவம்’ என்ற பெயரிலும் மாரியம்மன் கோயிலில் மார்கழி மாதம் முதல் பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் திருவிழாவையே நாம் தரிசிக்க இருக்கிறோம்.
'மாரியம்மன் கோயில் என்றால், எந்த ஊர் மாரியம்மன் கோயில்? எங்களுக்குச் சமயபுரம் மாரியம்மன் தெரியும்; புன்னைநல்லூர் மாரியம்மன் தெரியும்; இன்னும் பல ஊர்களில் உள்ள மாரியம்மன் கோயில்களையும்கூட எங்களுக்குத் தெரியும். நீங்கள் சொல்வது எந்த ஊர் மாரியம்மன் கோயில் விழாவைப் பற்றி?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் இப்போது தரிசிக்க இருப்பது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நடந்த மார்கழி மகோற்ஸவ விழாவைத்தான்!
அதிகாலை 5 மணி. திருப்பள்ளியெழுச்சியுடன் கோயிலில் தனுர்மாத பூஜை தொடங்கியது. மார்கழி மாதம் முழுவதும் தனுர்மாத பூஜை நடைபெறும் என்றாலும்கூட, முதல் 10 தினங்கள் நடைபெறும் திருவிழாவே 'லட்ச தீபத் திருவிழா’வாகக் கோலாகல மாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி என்ன தனுர்மாத பூஜைக்கு மட்டும் தனிச்சிறப்பு? கோயிலின் தலைமை அர்ச்சகரான சுரேஷ் சிவாசார்யாரிடம் விவரம் கேட்டோம்.
''மார்கழி மாதம் என்பது தட்சிணாயனத்தின் கடைசி மாதம். இந்த மாதம் தேவர்களுக்கு அதிகாலை வேளையாகும். இந்த மாதம் முழுவதுமே இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் பூமிக்கு வந்து, இங்கே அர்ச்சாரூபமாக எழுந்தருளி இருக்கும் இறைவனையும் இறைவியையும் வழிபடுவதாக ஐதீகம். எனவே, இந்த மாதத்தில் நாம் கோயிலுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்தோமானால், தெய்வ அருளுடன், தெய்வ வழிபாட்டுக்காக வந்திருக்கும் தேவர்களின் அனுக்கிரஹமும் கிடைக்கப் பெறலாம்'' என்றார்.
முதல் நாள் நிகழ்ச்சி காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பால்குடம் எடுத்தல், 10000 தீபம் ஏற்றுதல், அம்மனுக்கு விசேஷ அலங்காரம், இசை நாட்டிய நிகழ்ச்சிகள், நிறைவுநாளில் முளைப்பாரி எடுத்தல் போன்ற வைபவங்கள் நடைபெற இருப்பதாகத் தெரியவந்தது. இந்த வைபவங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, கணபதி ஹோமத்தின்போது, ஹோமத்துக் கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்துக்கொண்டிருந்த லட்ச தீபத் திருவிழா கமிட்டியின் தலைவரான முருகேசனிடம் விவரம் கேட்டோம்.
''ஒவ்வொரு கோயிலிலும் வருஷம் தோறும் பல சிறப்புத் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த மாரியம்மன் கோயிலிலும் பால்குடம் எடுத்தல், பல்லக்குத் திருவிழா, நவராத்திரி வைபவம், தேர்த்திருவிழா போன்ற பல விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட விழாக்களில் பால்குடம் எடுத்தல், முளைப்பாரி சமர்ப்பித்தல், நவராத்திரியைப் போலவே ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு அலங்காரம் என்று, மாதங்களில் சிறந்த மாதமான மார்கழியில் இந்தக் கோயிலில் நடைபெற்று வருகின்றது. இந்த வைபவத்தில் பால்குடம் எடுப்பவர்கள், கார்த்திகை மாதம் கடைசி வாரம் மாலை போட்டு விரதம் இருந்து பால்குடம் எடுக்கவேண்டும் என்பதால், பால்குடம் எடுக்கும் வைபவம் மட்டும் மூன்றாவது நாளில் இருந்தே நடைபெறும். கூடவே, ஒவ்வொரு நாளும் 10000 தீபம் என 10 நாளுக்கு மாரியம்மனுக்கு லட்ச தீபம் ஏற்றலாமே என்று பல வருஷங்களுக்கு முன் கோயிலுக்கு வந்திருந்த ஒரு பெண்மணி ஆலோசனை கூறினார். ஏனோ, மாரியம்மனே மனித உருவில் வந்து அப்படிச் சொன்னதாக எங்களுக்குத் தோன்றியது. உடனே ஒரு கமிட்டி அமைத்து, அதேபோல் தீபம் ஏற்றத் தொடங்கினோம். இந்த வருஷம் பத்தாவது ஆண்டு லட்ச தீபத் திருவிழா நடைபெற இருக்கிறது'' என்று கூறினார்.
அவரிடம் விவரம் கேட்டுவிட்டுத் திரும்பிய நாம், ஒரு பெண்மணி கோயில்வளாகத்துக்குள் இருந்த குளத்தில் எதையோ கரைத்துவிட்டு மேலேந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். அவர் குளத்தில் என்ன கரைத்து விட்டு வந்தார் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டி, அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு விவரம் கேட்டோம்.
புவனேஸ்வரி ஜெய்சதீஷ் என்னும் அந்தப் பெண்மணி, ''நான் இந்தக் குளத்தில் வெல்லத்தைக் கரைத்துவிட்டு வந்தேன். நமக்கு உடலில் கட்டியோ அல்லது மருவோ தோன்றி கஷ்டப்படுத்தினாலும் சரி, வேறு ஏதேனும் கஷ்டங்கள் இருந்தாலும் சரி... கொஞ்சம் உப்பும் மிளகும் வாங்கி, கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, கொஞ்சம் வெல்லத்தை வாங்கி இந்தக் குளத்தில் கரைத்துவிட்டுப் பிரார்த்தனை செய்துகொண்டால், எப்படிப்பட்ட துன்பமும் கரைந்து காணாமலே போய்விடும்'' என்றார். அவருடைய பிரார்த்தனை நிறைவேற, நாமும் அம்மனிடம் வேண்டிக்கொண்டோம்.
அதே நேரம், மந்திர ஒலியுடன் கெட்டி மேளம் ஒலிக்க, திரும்பிப் பார்த்தோம். காலை 8 மணியளவில் தொடங்கிய கணபதி ஹோமம் பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றுக்கொண்டிருந்தது. ஹோமத்தை தரிசித்த நிறைவுடன், பிராகாரத்தை வலம் வந்தோம். ஓரிடத்தில் புற்று போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன்மேல் அம்மனின் விக்கிரஹம் வைக்கப்பட்டிருந்தது. அதன் எதிரில், ஒரு வட்டத்தின் நடுவில் 'ஓம்’ என்ற எழுத்தும், வேலும் தோன்றும்படியாக அகல் விளக்குகள் அழகாக வைக்கப்பட்டிருந்தன. கோயில் பிராகாரம் முழுவதும் வரிசையாக இரும்பினால் அடுக்கு பெஞ்சுகள் வைக்கப்பட்டு அவற்றின்மேல் அகல் விளக்குகள் இடம் பெற்றிருந்தன. அவற்றைப் பார்த்தபடியே அம்மனின் சந்நிதிக்குச் செல்கிறோம். மார்கழி மாதத்தின் முதல்நாள் என்பதால், அம்மன் தங்கப் பாவாடையில் தகத்தகாயமாக ஜொலித்துக் கொண்டிருந்தாள். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்தான் இந்த மாரியம்மன் கோயில் என்பதால், அம்மனின் ஜொலிப்புக்குக் கேட்கவாவேண்டும்?! இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இருக்கும் இந்தக் கோயிலுக்கு இப்போது பரம்பரை அறங்காவலராக இருப்பவர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆவார்.
அம்மனை மனம் குளிர தரிசித்து விட்டு வெளியில் வந்த நாம், ஓரிடத்தில் பெண்கள் வரிசையில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து, அருகில் இருந்தவரிடம் விவரம் கேட்டோம். அவர்கள் அன்று மாலை கோயிலில் விளக்கேற்றுவதற்காக டோக்கன் வாங்கக் காத்திருப்பவர்கள் என்று சொன்னார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கோயிலில் விளக்கேற்றுவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை என்பதுதான். இந்த பத்து நாள் விழாவுக்கான செலவுகள் மொத்தத்தையும் உபயதாரர்களின் துணையுடன் லட்ச தீபத் திருவிழா கமிட்டியினரே ஏற்றுக்கொள்கிறார்கள்.
இனிமேல், மாலை 4 மணிக்குதான் விழா தொடங்கும் என்பதால், முளைப்பாரி வைபவம் பற்றி அறிந்துகொள்வதற்காக விழாக் கமிட்டியைச் சேர்ந்த சாவித்திரி மகாலிங்கத்தைச் சந்தித்தோம். அவர் முத்துமாரி என்ற பெண்மணியிடம் நம்மை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். முளைப்பாரி சமர்ப்பிக்கும் வைபவத்தைப் பற்றிய விவரங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
முளைப்பாரி சமர்ப்பிப்பது லட்ச தீபத் திருவிழாவின் நிறைவு நாளான பத்தாவது நாளில்தான் நடைபெறுமாம். மார்கழி மாதப் பிறப்புக்கு முன்தினம், பெண்கள் விரதம் இருந்து, கூடைகளில் மஞ்சள் நீர் தெளித்து, அம்மன் சந்நிதிக்கு முன்னால் கொண்டுவந்து வைப்பார்கள். பிறகு, அவற்றில் தானியங்களைத் தூவி, அம்மனைப் பிரார்த்தனை செய்தபடி நீர் தெளிப்பார்கள். இதுவரையிலான நிகழ்ச்சிகளில் ஆண்கள் பங்கேற்கலாம். அதன் பிறகு, அந்தக் கூடைகள் ஒரு வீட்டிலோ அல்லது ஒரு மண்டபத்திலோ சூரிய வெளிச்சம் படும்படியாக வைக்கப்பட்டு, பூட்டப்பட்டுவிடும். பெண்கள் மட்டும்தான் தினமும் அதைத் திறந்து, தண்ணீர் தெளிப்பார்கள். இரவுகளில் முளைப்பாரி கூடைகளைச் சுற்றி வந்து கும்மி அடித்துப் பாட்டுப் பாடுவார்கள். 10வது நாளில் பார்த்தால், மண்ணில் தூவிய விதைகள் எல்லாம் இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து பசுமையாகக் காட்சி தரும். அந்த முளைப்பாரிகளைத்தான் பெண்கள் எடுத்துவந்து அம்மனுக்குச் சமர்ப்பிப்பார்கள். முளைப்பாரி நன்கு வளர்ந்திருந்தால், அந்த ஆண்டு பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
மாலை 4 மணிக்கே நாம் மீண்டும் கோயிலுக் குச் சென்றுவிட்டோம். விளக்கேற்றுவதற்காக டோக்கன் வாங்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கூடி இருந்தனர். கூட்டம் அதிகம் இருந்தாலும்கூட, அந்த இடத்தில் கொஞ்சம்கூட சலசலப்போ தள்ளுமுள்ளோ இல்லை. இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் எண்ணெயைக் கொண்டு வந்து அகல் விளக்குகளில் நிரப்பிக்கொண்டிருந்தனர். இன்னும் சில பெண்கள், டோக்கன் பெற்று வரும் பெண்களை வரிசையாக அவரவர் இடத்தில் அமரச்செய்தபடி இருந்தனர். மாலை 5.30 மணிக்கு, கோயிலின் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே வந்தபிறகுதான் விளக்கேற்றும் வைபவம் நடைபெறும் எனத் தெரிந்துகொண்டோம்.
கோயிலின் ஒருபுறத்தில் அமைந்திருந்த மண்டபத்தில் திரை போடப்பட்டு, இரண்டு சிவாச்சார்யர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். திரைக்குப் பின்னால் என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நம் மனமும் பரபரத்தது. அப்போது, காலையில் கணபதி ஹோமத்தை முன்னின்று நடத்திய ஞானசேகர சிவாசார்யார் அந்த வழியாக வந்ததைப் பார்த்து, அவரிடம் விவரம் கேட்டோம்.
''உள்ளே மாரியம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நவராத்திரியின் போது அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம் நடைபெறுவது போலவே இந்த லட்ச தீபத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருவாள். முதல் நாளான இன்று அம்மன் மீனாட்சி திருக்கோலத்தில் அருட்காட்சி தரப்போகிறாள்'' என்று கூறினார். தொடர்ந்து அவரிடமே, கோயில் தோன்றிய வரலாறு பற்றிக் கேட்டோம். நம்மை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, தல வரலாறு புத்தகம் ஒன்றைப் பெற்றுத் தந்தார்.
அந்தப் புத்தகத்தில் இருந்த வரலாறு...
தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மன்னர் ஒருநாள் இரவு சமயபுரத்துக்கு மேற்கில் உள்ள கண்ணபுரம் ஆதி மாரியம்மனை வழிபட்டுவிட்டு, உறங்கும்போது மன்னரின் கனவில் தோன்றிய அம்மன், தஞ்சைக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள புன்னைவனத்தில் தான் புற்று வடிவில் உள்ளதாகவும், அங்கே வந்து தன்னை வழிபடும்படியும் உத்தரவு கொடுத்தாள். அதேபோல், மன்னரும் புன்னைவனத்துக்கு வந்து, புற்று வடிவத்தில் இருந்த அம்மனுக்குக் கூரை அமைத்து வழிபட்டார். அந்த இடத்தில் புன்னைநல்லூர் என்ற பெயரில் ஒரு கிராமத்தை ஏற்படுத்தி, கோயிலுக்கே தானமாக வழங்கினார்.
பின்னர், தஞ்சையை ஆண்டு வந்த துளஜா மன்னரின் மகளுக்கு அம்மை நோயினால் ஏற்பட்ட பார்வைக்குறையைப் போக்கியதால், மகிழ்ச்சி அடைந்த மன்னர், மாரியம்மனுக்குச் சின்னதாக ஒரு கோயிலையும், சுற்றுப் பிராகாரத்தையும் கட்டினார். ஒருமுறை தஞ்சைப் பகுதிக்கு வந்த நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளிடம் மன்னரும் மக்களும் புற்றுவடிவில் இருக்கும் அம்மனுக்கு ஓர் வடிவம் தருமாறு வேண்ட, சுவாமிகளும் புற்று மண்ணை எடுத்து, அதில் சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி போன்ற எட்டு பொருள்களைச் சேர்த்து, இப்போதுள்ள மாரியம்மன் திருவுருவத்தை வடிவமைத்தார். அம்மனின் திருவுருவத்துக்கு மேலும் சக்தி தரச் சித்தம் கொண்ட சுவாமிகள், அம்மனுக்கு முன்பாக ஜனாகர்ஷண சக்ரம் ஒன்றையும் ஸ்தாபித்தார். இதுவே, புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கொண்ட வரலாறு.
கோயில் தோன்றிய வரலாற்றை நாம் படித்து முடிக்கும் நேரத்தில், கோயிலுக்கு முன்பாக ஏதோ பரபரப்பு ஏற்பட்டது. பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே வந்துவிட்டதாகக் கூறினார்கள். அவர் வந்து சேர்ந்ததும், அம்மனின் சந்நிதியில் ஏற்றிவைக்கப் பட்டிருந்த அகல்விளக்குகளை ஒரு பெண்மணி எடுத்துக் கொண்டு, புற்று வடிவம் அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்து ராஜாவிடம் கொடுக்க, ராஜா முதல் தீபத்தை ஏற்றினார். அதே நேரத்தில், ஆங்கங்கே இருந்த பெண்களும் தீபங்களை ஏற்ற, கோயிலே ஜெகஜ்ஜோதியாகப் பிரகாசிக்கத் தொடங்கியது.
இப்படி தீபம் ஏற்றும் பெண்கள், ஏதேனும் ஒரு வேண்டுதலை மனதில் நினைத்தே தீபம் ஏற்றுகிறார்கள்; அவர்களின் வேண்டுதல் அப்படியே நிறைவேறவும் செய்கிறது என்பதுதான் மாரியம்மனின் அருள்திறம்!
கோயிலில் விளக்கேற்றி விட்டு வந்த பாமா சிவகுமார் என்பவர், கணவருடன் போபாலில் வசித்தவர். பிள்ளைகள் தமிழில் படிக்கவேண்டும் என்பதற்காகவும், தமிழகத்திலேயே இனி தாங்கள் வசிக்கவேண்டும் என்பதற்காகவும் அம்மனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு கடந்த வருடம் தீபம் ஏற்றி வழிபட்டதாகவும், உடனே தன் கணவருக்கு ஹோசூருக்கு மாற்றல் கிடைத்ததாகவும் தெரிவித்தார். அதற்கு நன்றிக் காணிக்கையாகவே இந்த ஆண்டும் லட்ச தீபத் திருவிழாவில் கலந்துகொண்டு தீபம் ஏற்றியதாகவும் சொன்னார்.
லட்ச தீபங்கள் ஏற்றப்பட்டதும், அலங்கார மண்டபத்தில் இருந்த திரை விலக, அங்கே மாரியம்மன் மீனாட்சி கோலத்தில் அதிஅற்புதமாகத் திருக்காட்சி தந்தாள். அம்மனுக்கு அர்ச்சனை ஆராதனைகள் முடிந்தபிறகு, கிடைத்த இடைவெளியில் கோயிலின் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லேவிடம் லட்ச தீபத் திருவிழா பற்றிக் கேட்டோம்.
''கடந்த 10 வருஷமாக இந்தக் கோயிலில் லட்ச தீபத் திருவிழா நடந்துவருகிறது. பல ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் தங்களின் சொந்த முயற்சியின்பேரில் இந்த விழாவை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தி வருகிறார்கள். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்த விழாவை முன்னிருந்து நடத்துபவர்களுக்கும், ஆர்வத்துடன் பங்கேற்கும் பக்தர்களுக்கும் மாரியம்மன் எல்லாவிதமான நன்மைகளையும் அருளட்டும் என்று பிரார்த்தித்துக்கொள்கிறேன்'' என்றார்.
ஆதியில் புன்னைவனத்தில் புற்று வடிவில் சுயம்புவாகத் தோன்றி, வெங்கோஜி மன்னரின் மூலமாகக் கோயில் கொண்டு, நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் உருவமும் கொண்டு, இன்றைக்கு நாடிவரும் பக்தர்களுக்கு நாளும் சுகவாழ்வு தரும் சுந்தரியாம் அந்த மாரியம்மனைக் கொண்டாடும் வகையிலும், அவளுடைய அருள்திறத்தைப் போற்றி நன்றி செலுத்தும் வகையிலும் நடைபெற்ற லட்ச தீபத் திருவிழாவின் ஒரு நாள் வைபவத்தை தரிசித்த நம் மனதில் ஓராண்டுக்கான பரவசம் நிறைந்திருக்க... மனநிறைவுடன் அங்கிருந்து புறப்பட்டோம்.
Comments
Post a Comment