குச்சனூர் கோமகன்

அனைத்துக் கோயில்களிலும் சனி பகவான் நவக்கிரக சன்னிதியில் இடம் கொண்டிருந்தாலும், தமிழகத்தில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிப்பது தேனி மாவட்டம், குச்சனூரில்தான். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுருளி ஆற்றின் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
‘செண்பகநல்லூர்’ என்னும் புராணப் பெயர் கொண்ட இத்தலத்தினை தினகரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இறைவனிடம் மனம் வருந்தி பிரார்த்தித்த போது, உன் வீட்டுக்கு பிராமண சிறுவன் ஒருவன் வருவான். அவன் வந்த பிறகு, உனக்கு புத்திரபாக்கியம் ஏற்படும்" என்றது அசரீரி.
அதன்படியே வந்த சிறுவனுக்கு ‘சந்திரவதனன்’ என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான் மன்னன். சில நாட்களில், அசரீரி வாக்கின்படியே அரசனுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்து, ‘சதாகன்’ எனும் பெயரோடு வளர்ந்து வந்தான். பிள்ளைகள் இருவரும் உரிய வயதை அடைந்தவுடன், புத்திசாலியான வளர்ப்பு மகன் சந்திரவதனனுக்கே மன்னன் முடி சூட்டினான்.
இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச் சனி பிடித்தது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று, இரும்பால் சனி பகவானின் உருவத்தை வடித்து வழிபட்டான். சனி பகவானே, வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்குத் துன்பம் தராதே. அத்துன்பத்தை எனக்குக் கொடு" என்று வேண்டினான். சந்திரவதனனின் வழிபாட்டில் மகிழ்ந்த சனீஸ்வரர், முற்பிறவியில் செய்த பாப வினைகளுக்கு ஏற்பவே, இப்பிறவியில் இத்தோஷம் வருகிறது. இக்காலங்களில் வரும் துன்பங்களுக்கு மத்தியிலும், யார் ஒருவர் தமது கடமையுடன் பிறருக்கு நன்மையைச் செய்து வருகிறார்களோ, அவர்களின் நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மை அளிக்கப்படும்.
ஆகவே, உனது வேண்டுகோளின்படி உனது தந்தைக்கு பதில் உனக்கு ஏழரை நாழிகை காலம் மட்டும் இத்தோஷம் பிடிக்கும். இது உனது முற்பிறவி வினையே. அதனால், இந்த ஏழரை நாழிகை காலத்தில் உனக்கு ஏற்படும் துன்பங்களை நீ தாங்கித்தான் ஆக வேண்டும்" என்றான்.
ஏழரை நாழிகை சந்திரவதனன் பல துன்பங்களை அனுபவித்தான். பிறகு, சனீஸ்வரரை வணங்கிய அவன், ‘இத்தலத்திலேயே இடங்கொண்டு மக்கள் நலம்பெற அருள்பாலிக்க வேண்டும்’ என்று வேண்டினான். அவனது கோரிக்கையை ஏற்ற சனிபகவான் அவ்விடத்தில் சுயம்பு முர்த்தியாக எழுந்தருளினார்.
பிறகு, சந்திரவதனன் இத்தலத்தில் குச்சுப் புல்லால் கூறை வேய்ந்து சனீஸ்வரருக்கு கோயில் எழுப்பினான். அதனாலேயே இவ்வூர் ‘குச்சனூர்’ என்று அழைக்கப்பட்டதாகத் தல வரலாறு. சனி பகவானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்திலேயே நீங்கியதாகவும் தல வரலாறு கூறுகிறது.
சனி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட, சோதனைகள் விலகி, சுபிட்சம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, புதிய தொழில்கள் தொடங்க, வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலன் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபடுகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து நேர்த்திக் கடன்களைச் செலுத்துவதையும் காண முடிகிறது.
சனி பகவானின் துணை தெய்வங்களாக சோணைக் கருப்பணசாமி, லாட சன்னியாசி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தவிர, நாகர் சன்னிதி, சப்த கன்னியர், பிள்ளையார், முருகன் சன்னிதிகளும் உண்டு.
எள் தானியம் இவருக்கு விசேஷம் என்பதால் நேர்த்திக்கடனாக எள் எண்ணெய் விளக்குப் போடுதல், காக்கைக்கு உணவிடுதல் ஆகியவற்றோடு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தல், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவையும் செய்கிறார்கள். இவையன்றி, சிறிய வடிவிலான காகத்தின் சிலைகளையும் கோயிலின் அருகில் வைக்கிறார்கள். தினசரி வழிபாடுகளுடன் சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பெருந்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.இரண்டரை வருடத்துக்கொரு முறை சனி பெயர்ச்சி வைபவம் இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. அச்சமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இறைவனை வழிபடுகின்றனர்.
வடகுரு
பொதுவாக, தென்திசை நோக்கியவராக அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, இங்கு வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அதனால் இவரை, ‘வடகுரு’ என அழைக்கின்றனர். செல்வ நிலையில் வாழ்ந்த இந்திரன் தாழ்ந்தபோது, மீண்டெழ சிவபெருமான் வடகுருவாகக் காட்சி தந்து அருள்பாலித்தார். இதனால், இழந்த ராஜயோக வாழ்க்கை மீண்டும் அவனுக்குக் கிடைத்தது. கடன் தொல்லை, படிப்பில் மந்தமானவர்கள், பிதுர் தோஷம் உள்ளவர்கள் இந்த வடதிசை நோக்கிய ஆதிகுருவை வியாழக்கிழமைதோறும் வழிபட, நல்ல பலன் கிடைக்கும்.
- , கம்பம்
செல்லும் வழி
தேனியிலிருந்து குச்சனூர் 30 கி.மீ. மதுரையிலிருந்து 100 கி.மீ. பேருந்து வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.
தொடர்புக்கு: +91-4554 247 285 / 97895 27068 / 94420 22281.
தாயாக வந்த தயாபரன்
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ளது ஸ்ரீபாலசுப்பிரமணியர் கோயில். இக்கோயிலில் முருகப்பெருமான் பன்னிருகரங்களுடன், வள்ளி, தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். ஒருமுறை ராஜேந்திர சோழன் மலைக்காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, குட்டிகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாய்ப் பன்றியை அறியாமல் கொன்றுவிட்டான். குட்டிகளின் மீது இரக்கம் கொண்ட முருகப்பெருமான் தாமே தாய்ப் பன்றியாக வந்து குட்டிகளுக்குப் பாலூட்டினார் என்பது தல வரலாறு. அதனாலேயே இத்தலத்தில் ஓடும் நதிக்கு ‘வராக நதி’ என்று பெயர்.
- சாந்தி, திருவாரூர்
வியர்வையில் நனையும் அம்மன்
தேனி மாவட்டம், சின்னமனூரில் அமைந்துள்ளது பூலாநந்தீஸ்வரர் கோயில். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சிவகாமி அம்மனுக்கு முகம் எப்போதும் வியர்த்துக்கொண்டேயிருக்கிறது. மேலும், இவ்வாலயத்தில் உள்ள சிவலிங்கம் பார்ப்பவர்களின் பார்வை எந்த உயரமே, அந்த அளவுக்கு உயரமாகக் காட்சி தருவது அதிசயமாகும்.
-
விநாயகர் கோயிலில் ஆஞ்சநேயர்
தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் வழியில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது பெத்தாக்ஷி விநாயகர் கோயில். இக்கோயிலின் வடக்கு பிராகாரத்தில் ஆஞ்சநேயர் மற்றும் அவரது அன்னை அஞ்சனா தேவிக்கு சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயர் சூரிய பகவானிடம் வியாகரண சூத்திரம் பயின்று அஞ்சனா தேவிக்கு நற்பெயர் வாங்கித் தந்தவர் என்ற காரணத்தால், மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்முன் அஞ்சனா தேவிக்கு பூஜை செய்கிறார்கள். இருவருக்கும் அமாவாசை அன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
-
மூலிகை பிரசாதம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்த தேவதானப்பட்டி பகுதியில் உள்ள மலைக் கிராமங்களான ராசி மலை, பூலத்தூர், பன்னைக்காடு, சின்னூர், பெரியூர் ஆகிய பகுதிகளில் காகங்கள் பறப்பதில்லை. அதனால் இப்பகுதியினை ‘காகங்கள் பறக்காத கருங்குறிஞ்சி நாடு’ என அழைக்கின்றனர். இப்பகுதியில் வாழ்பவர்களுக்கு சனி பகவானின் தோஷம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் வழிபாட்டில் வன தேவதைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தங்கள் வழிபாட்டில் வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய்க்குப் பதில், அங்குள்ள மூலிகைகளைச் சமர்ப்பித்து வழிபடுவது வழக்கம். இங்குள்ள கோயில்களில் மூலிகைத் தீர்த்தமே பிரசாதமாக வழங்கப்படுவது விசேஷம்.
-
கல்வி, கேள்விகளில் சிறக்க...
தேனியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது முத்துதேவன் பட்டி. இங்கு உள்ள கோயிலில் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கிறாள் ஸ்ரீ நாக காளியம்மன். சரஸ்வதி பூஜை நாளில், குழந்தைகளின் நாவில் தாமரை மொட்டினால் எழுதும் வழிபாட்டு நிகழ்ச்சி இங்கு விசேஷம். இவ்வழிபாட்டைச் செய்தால், குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை.
-
இராமக்கல் மெட்டு
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கோம்பை தலத்தில் உள்ளது திருமலைராயப் பெருமாள் கோயில். இக்கோயிலின் முகப்பின் அருகே உள்ள மலையில் மூன்று நாமங்கள் போல் கல்லின் மீது காணப்படுகிறது. இதை, ‘இராமக்கல் மெட்டு’ என்கிறார்கள். இந்த இராமக்கல்லை இடையர் ஒருவர் சேதப்படுத்த அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாம். அங்கு படிந்த ரத்தக் கறை, மழையிலிலும், வெயிலிலும் அழியாமல் காட்சியளிக்கிறது. எதனால் இப்படி ஏற்பட்டது என்று ஆய்வாளர்களுக்கும் தெரியவில்லை என்கிறார்கள்.
-
விநோத வழக்கம்
தேனி மாவட்டம், கோட்டூர் கிராம மக்கள் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கல் செய்து கொண்டாடுவதுடன், அயிரை மீன் குழம்பும் செய்வது வழக்கம். தை தினத்தில்தான் மீன் பிறந்ததாகக் கருதும் அவர்கள், அன்று வாய்க்காலில் மீன் பிடித்து வந்து, அறுவடை செய்த நெல்லைக் குத்தி பச்சரிசியால் சாதம் சமைத்து அதனுடன் அயிரை மீன் குழம்பை சேர்த்து ருசிக்கிறார்கள்.
-
வீரபாண்டி கௌமாரியம்மன்
தேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ளது வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில். இக்கோயிலை, மதுரையை தலைமையிடமாகக் கொண்ட பாண்டிய மன்னர் வீரபாண்டியன், 14ஆம் நூற்றாண்டில் கட்டினான். ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழா முடியும் நாளில் ஸ்ரீவீரபாண்டி கோயில் திருவிழா ஆரம்பமாகி எட்டு நாட்கள் நடைபெறுகிறது.
-
மாவூத்து வேலப்பர்
தேனி மாவட்டம், தெப்பம்பட்டியில் வருச நாட்டின் குன்றடுக்கில் அமைந்துள்ளது மாவூத்து வேலப்பர் கோயில். இக்கோயிலுக்கு தெற்கே உள்ள ஒரு மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர் ஊற்றாய் பொங்கிக் கொண்டிருப்பதால் இதை ‘மாவூத்து’ என்றும், இத்தல முருகனை ‘மாவூத்து வேலப்பர்’ என்றும் அழைக்கின்றனர். இவ்வூற்று நீர் தோல் நோய்கள் முதற்கொண்டு பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

திருக்காளத்தீஸ்வரர்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஞானாம்பிகை உடனுறை திருக்காளத்தீஸ்வரர் கோயில். ‘தென்காளத்தி’ எனவும் அழைக்கப்படும் இத்தலம், ராகு, கேது தோஷ நிவர்த்தித் தலமாக விளங்குகிறது.
இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், படை நிர்வாகப் பொறுப்பை கொண்டம நாயக்கர் என்பவர் ஏற்றிருந்தார். காளத்தீஸ்வரர் மீது தீவிர பக்தி கொண்டிருந்த இவர், அடிக்கடி காளஹஸ்திக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதானபோது, சுவாமியை தரிசிக்க அவரால் செல்ல முடியவில்லை. அதனால் அவர் சுவாமியை நினைத்து மனம் உருக, ‘இருக்குமிடத்திலேயே கோயில் கட்டி வழிபட்டால், தாம் அங்கு அருள்பாலிப்பதாக’ சுவாமியின் உத்தரவு கிடைத்தது. அவருக்காக, பாளையக்காரர் பூஜையா நாயக்கர் நிர்மாணித்த ஆலயம் என்பதால், இறைவன் ‘காளத்தீஸ்வரர்’ என்றும், தலம் ‘தென்காள ஹஸ்தி’ என்றும் பெயர் பெற்றதாகத் தல வரலாறு.
காளத்திநாதர் இங்கு எழுந்தருளிய பின்பு, அம்பிகைக்கு சன்னிதி அமைக்க பக்தர்கள் விரும்பினர். இதற்காக பல சிலைகள் அமைத்தும், சரியாக அமையவில்லை. ஒருசமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘அம்பிகை முல்லைப் பெரியாற்றில் வருவாள்’ என்றார். அதன்படி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்தபோது, ஒரு கூடை மிதந்து வந்தது. அதில் அம்பிகையின் சிலை இருந்தது. காளஹஸ்தியில் அருளும் அம்பிகையின் பெயரால் ‘ஞானாம்பிகை’ எனப் பெயர் சூட்டி இங்கு பிரதிஷ்டை செய்தனர். இந்த அம்பிகையின் முகத்தில் ஆற்றில் அடித்து வரப்பட்டபோது ஏற்பட்ட தழும்புகள் இருப்பதை தற்போதும் காணலாம்.
இறைவன் காளத்தீஸ்வரருக்கும், இறைவி ஞானாம்பிகைக்கும் இடையே சண்முகப் பெருமான் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். தாய், மகனின் ஒற்றுமைக்கான பிரார்த்தனைத் தலமாக இது திகழ்கிறது. மகனைப் பிரிந்துள்ள தாய், இக்கோயிலில் வேண்டிக்கொள்ள, அவர்கள் ஒன்று சேர்வர் என்பது நம்பிக்கை.
ஈசன் சன்னிதிக்கு முன் மண்டப மேற்சுவரில் ராசி, நட்சத்திரக் கட்டத்தின் மத்தியில் வாஸ்து பகவான் காட்சியளிக்கிறார். அவர் தலைக்கு மேலே உள்ள சிவலிங்கத்தை பிரம்மா, அம்பிகை ஆகிய இருவரும் பூஜிக்கும் சிற்பம் காணப்படுகிறது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியுள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலியும் உள்ளனர்.
சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஜாதகத்தில் நட்சத்திரம், ராசி தோஷம் உள்ளவர்கள் மற்றும் நிலம், பூமி தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் வாஸ்து, சூரிய ராசி சக்கரங்களின் கீழ் நின்று சிவனை தரிசித்துச் செல்கிறார்கள்.
இத்தல விநாயகர் ராஜ கணபதி என்று அழைக்கப்படுகிறார். சிவன் சன்னிதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, கல்லால மரம் இல்லாமல் காட்சியளிக்கிறார். லிங்கோத்பவர், பிரம்மா, பெருமாள், விசாலட்சியுடன் காசிவிஸ்வநாதர், மீனாட்சி சொக்கநாதர், நடராஜர் மற்றும் பராசக்தியுடன் சகஸ்ரலிங்கத்துக்குத் தனிச் சன்னிதி கள் உள்ளன.
சிவபெருமான் இங்கு வாயு அம்சமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, இவருக்கு ‘வாயுலிங்கேஸ்வரர்’ என்றபெயரும் உண்டு. இங்கு வேடன் கண்ணப்பருக்கும் தனி சன்னிதி உண்டு. சிவராத்திரியன்று காளத்தீஸ்வரர், கண்ணப்பர் ஆகியோருக்கு விசேஷ பூஜை நடக்கும். கண் தொடர்பான நோய் உள்ளவர்கள் இவ்விருவரையும் வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.
பொதுவாக, கோயில்களில் சப்த மாதர்களையே தரிசித்திருப்போம். ஆனால், இக்கோயிலில் சப்த மாதர்களான பிராமி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோருடன், காளிதேவியும் சேர்ந்து அஷ்டமாதர்களாகக் காட்சி தருகின்றனர். மேலும், வலது கையில் அட்ச மலையை வைத்துக்கொண்டு, இடது கையில் வீணையைப் பிடித்த கோலத்தில் சரஸ்வதியும் காட்சி தருகிறாள்.
நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு தாலி அணிவித்து, மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். கோபுரத்தின் கீழே நந்திதேவர் மனைவியுடன் காட்சியளிக்கிறார். வீணா தட்சிணாமூர்த்தியை இங்கு உற்சவமூர்த்தியாக தரிசிக்கலாம். சித்திரையில் திருக்கல்யாணம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகியவை விசேஷ நாட்கள்.
நவக்கிரகங்களில் சனீஸ்வரருக்கு கறுப்பு நிறம் உகந்தது. ஆனால், இக்கோயிலில் சனீஸ்வரருக்கு பச்சை நிற வஸ்திரத்தை அணிவிக்கிறார்கள். கல்வியில் சிறக்க இந்த வழிபாடாம். கோயிலுக்கு வெளியே விஷ ராஜா அருள்பாலிக்கிறார். பாம்பு மற்றும் விஷப் பூச்சிகளால் கடிபட்டவர்கள் பௌர்ணமியன்று இவருக்கு வஸ்திரம் சாத்தி, பாலபிஷேம், அங்கப் பிரதட்சணம் செய்து வேண்டிக்கொள்ள நிவர்த்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முருகன் சன்னிதி எதிரில் நவ வீரர்கள் உள்ளனர். நரசிம்மர் இல்லாத சரபேஸ்வரரை இங்கு தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் இவரை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
செல்லும் வழி
தேனியிலிருந்து 31 கி.மீ. உத்தமபாளையம். பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகிலேயே கோயில்.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 11.30 வரை. மாலை 5 மணி முதல் 8 வரை.
தொடர்புக்கு +91 - 4554 - 265 419 / 93629 93967.

Comments