பகுத்தறிவு

உலக விஷயங்களிலிருந்து விடுபட்ட மனம் மோக்ஷத்துக்குக் காரணம்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் புலனடக்கத்தை இருவேறு விதங்களில் வேள்வியாகக் குறிப்பிட்டார். புலனடக்கம் மிக்கவன் கட்டுப்பாடு என்னும் நெருப்பில், கட்டுப்பாடற்றுத் திரிகின்ற பொறிகளை ஹோமம் செய்கிறான் என்று கூறினார். எல்லாவற்றிலும் மிதமாக இருத்தல் என்பது புலனடக்கத்தின் மற்றொரு பரிமாணம்.
அடுத்து, மன அடக்கத்தை வேள்வியாகக் குறிப்பிடுகிறார். கடவுள் நமக்கு அருளியுள்ள அற்புதமான கருவி மனம். மனமே மனிதனுக்கு நண்பனாகவும் பகைவனாகவும் விளங்குகிறது. வாழ்வின் இருமை அனுபவங்களில் சிக்கித் திணறும் அதே மனமானது, அவற்றிலிருந்து விடுபட்டு பேரின்பத்தை உணரவும் உதவுகிறது.
மனதை நெறிப்படுத்துவது பற்றி பகவானின் கூற்று :
ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி
சாபரே I
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி
ஜ்ஞாநதீபிதே II
(ஸ்ரீமத்பகவத்கீதை 4-27)
மேலும், வேறு சிலர் அனைத்து இந்திரியங்களின் செயல்பாடுகளையும், பிராணனின் செயல்பாடுகளையும், தியானம் முதலான சாதனைகளுடன் கூடிய, பகுத்தறிவினால் தூண்டப்பட்ட மனக்கட்டுப்பாடு என்ற நெருப்பில் ஹோமம் செய்கிறார்கள்.
கட்டுப்பாடு இல்லாத எண்ணங்களை, கட்டுப்பாடு என்கின்ற நெருப்பில் ஹோமம் செய்ய வேண்டும். தாறுமாறாகச் சென்று கொண்டிருக்கின்ற எண்ணங்களை நெறிப்படுத்த வேண்டும். அறிவுக்கருவிகள், செயற்கருவிகள் ஆகியவற்றின் செயல்பாடுகளையும், பிராணனின் செயல்பாடுகளையும் மனக்கட்டுப்பாடு என்ற நெருப்பில் ஹோமம் செய்ய வேண்டும்.
மனம்தான் பந்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் ஸாதனம். உலக விஷயங்களில் ஆழ்ந்துள்ள மனம் பந்தத்துக்குக் காரணம். உலக விஷயங்களிலிருந்து விடுபட்ட மனம் மோக்ஷத்துக்குக் காரணம்.
ஓயாமல் உள்ளத்தில் எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன. நிலையில்லாத பொருட்களில் மனம் பேயாய் உழலுகிறது.
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி -
ஏழைநெஞ்சம்
புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே!
என்று பாடுகிறார் தாயுமானவர். அனைத்து ஆன்மிக சாதனைகளும் மனதை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
‘மாநஸ ஸஞ்சரரே, மூட மதே’ என்று பெரியோர்கள் அனைவரும் மனதுக்குத்தான் உபதேசம் செய்கிறார்கள். மனதுக்குள் இறை நாமத்தை ஓதியபடியே, கோயிலுக்குச் செல்வதாக எண்ணிப் பழகுதல் ஒரு நல்ல சாதனையாகும். இவ்வாறு மனம் இறைவனைப் பற்றி நினைத்தல் ஒரு சிறந்த பயிற்சியாக அமைகிறது.
மனதைச் சரியானவற்றில் வைப்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் மிகப்பெரிய கற்றளிகளை எழுப்பியுள்ளனர். குழந்தைகள் பல்வேறு வடிவங்களில் இனிப்புப் பண்டங்களை விரும்புவதுபோல, இறைவன் ஒருவனாக இருந்தபோதிலும், நம் மனதுக்குப் பல்வேறு இறை வடிவங்கள் தேவைப்படுகின்றன.
நம்முடைய மனதில் நமக்கும், சமூகத்துக்கும் நலம் பயக்கும் தரமான, ஆரோக்கியமான எண்ணங்கள் இருக்க வேண்டும். மனதில் அளவான எண்ணங்கள் இருக்க வேண்டும். அவை சரியான திசையில் இயங்க வேண்டும்.
இவ்வாறு தரமான, அளவான, நெறிப்படுத்தப்பட்ட எண்ணங்கள் மனதில் இருக்க வேண்டும். மனக்கட்டுப்பாடு மிக்கவன் மிகுந்த பகுத்தறிவோடு நாள்தோறும் வாழ்வின் தன்மை பற்றி யோசிக்கிறான். எண்ணங்களை அழகாக ஒழுங்குபடுத்தி வைத்துக் கொள்கிறான்.
நதியில் நீர் சென்று கொண்டிருக்கிறது. அதன் குறுக்கே அணை கட்டி, தேவையான காரியங்களுக்குப் பயன்படுத்துகிறோம். அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம், விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறோம்.
தாறுமாறாகச் செல்கின்ற நீரை, எப்படித் தேக்கி முறையாகப் பயன்படுத்துகிறோமோ, அதுபோல, தாறுமாறாகச் செல்கின்ற எண்ணங்களை நெறிப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, பயனுள்ள செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்
என்கிறார் திருவள்ளுவர். எண்ணம் மிக முக்கியம். எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.
மிருகங்கள் போகப் பிறவிகள். அவற்றால் புண்ணிய, பாபங்களைச் செய்ய முடியாது. மனிதனால் தான் புண்ணிய, பாபங்களைச் செய்யவும், அவற்றின் பலன்களை அனுபவிக்கவும் முடியும்.
மனிதனால் நல்லார் இணக்கத்தை நாடி, தனது எண்ணங்களை நெறிப்படுத்திக் கொள்ள முடியும். எண்ணங்கள் சரியாக இருப்பதற்குத் தேவை, தெளிந்த பகுத்தறிவு. வாழ்க்கையைச் சரியாக நடத்துவதற்கு அது மிகவும் முக்கியம். பகுத்தறிவு மிக்கவன் மிகுந்த எண்ணங்கள் விஷயத்தில் கவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்கிறான்.
நம் புத்தி சரியான வழியில் செல்ல வேண்டும் என்பதே காயத்ரீ மந்திரத்தின் பிரார்த்தனை. தீய எண்ணங்களை நீக்க முயற்சி செய்வதைக் காட்டிலும், நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது.
நல்ல எண்ணங்களை வளர்க்க வளர்க்க, தீய எண்ணங்கள் தானாகவே விலகிவிடும். முதல் எண்ணம் நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், அதனை மீண்டும் மீண்டும் எண்ணுவதும், எண்ணாமல் இருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது.
தீய எண்ணங்கள் தோன்றினால், ஸத்ஸங்கத்தை நாடி, இறை நாமத்தை ஓதி, அந்த எண்ணம் செயல் வடிவம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களிலேயே மனம் ஊறியிருந்தால், தீய எண்ணங்கள் வலுவிழந்து விடும் என்பதை உணர்ந்து நல்லவற்றிலேயே உள்ளத்தைச் செலுத்த வேண்டும்.

Comments