சனிதோஷம் நீங்க...

தோஷம் இல்லாத ஜாதமகே இல்லை என்று வழக்கில் சொல்வார்கள். ஏனெனில், எல்லா ஜாதகத்திலும் ஏதாவது ஒரு குறைபாடு தென்படக்கூடும். அதன் பரிமாணம் அதிகமாக இருந்தால், வாழ்வில் பல்வேறு சிக்கல்கள், தடைகள் எதிர்ப்படும். அதனால்தான், ஜாதகம் பார்ப்பது போன்றவை நடக்கின்றன.
உதாரணமாக, சனிதோஷம் நீங்க வேண்டுமானால், திருநள்ளாறு சென்று வழிபடுகிறோம். திருமணத் தடை நீங்க திருமணஞ்சேரி சென்று பிரார்த்திக்கிறோம். இப்படி ஒவ்வொரு தோஷத்துக்கும் ஒவ்வொரு திருத்தலம் சென்று வழிபடுகிறோம். அந்த வகையில் சனி தோஷம், வித்யா தோஷம், நாக தோஷம், களத்திர தோஷம் போன்றவற்றை நீக்குபவர் ஸ்ரீகந்தர்வர்!
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், மரம்காட்டுப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ‘அந்தூர் கரா’ என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இந்த கந்தர்வர் திருக்கோயில்.
மிகவும் பழமையான கோயில். எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேலென்று கிராமத்துச் சூழல் கண்களுக்கு மனத்துக்கு நிறைவளிக்கிறது. சிறிய கோயில்தான் என்றாலும், முன்பகுதியில் ஒரு மண்டபம் உண்டு. கேரளத்துக்கே உரிய அழகான ஓடுகள் வேயப்பட்ட கூரை. மூலவரான கந்தர்வர், தனது இடது மடியில் (இது மிகவும் விசேஷமான அமைப்பு) யக்ஷி தேவியுடன் புன்னகை தவழக் காட்சி தருகிறார். இதுபோன்ற அமைப்பை வேறு எங்கேயும் காணமுடியாது. பிற சன்னிதிகளாக பகவதி அம்மனும், ஐயப்பனும் (சாஸ்தா) குருவும் கிழக்குப் பார்த்து, தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.
கந்தவர்கள் என்பவர்கள் எப்போதும் இசை, பாடல்கள் என்று மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருப்பவர்கள். அவர்கள் இருக்கும் இடம் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். கந்தர்வ லோகத்தை மட்டுமன்றி தேவலோகத்தையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துபவர்கள் இவர்கள் தான். கந்தவர்களை வழிபட்டால் நாமும் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது நம்பிக்கை.
திருமணம் என்பது நமது வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைவது. அந்த திருமண வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டுமென்று, இங்கு நடைபெறுவது சங்கராந்தி பூஜை. இதில், தொடர்ந்து பன்னிரண்டு பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால், கட்டாயம் திருமணம் கைகூடுகிறது.
கோயிலின் முன்பகுதியிலுள்ள சர்ப்பக்காவு பகுதியில் சர்ப்ப பூஜை மிகச் சிறப்பாக நடைபெறும். சர்ப்பதோஷம் நீங்க ஏராளமான பக்தர்கள் இப்பூஜையில் பங்கேற்கிறார்கள்.
தவிர, மண்டல பூஜை, நவராத்திரி பூஜை, பிரதிஷ்டாதின பூஜை... எனப் பல்வேறு வைபவங்களும் இங்கே நடை பெறுகின்றன.
இருப்பிடம்: Plala- vaikom பேருந்து வழித்தடத்தில், illickal tazhe நிறுத்தத்தில் இறங்கினால், 10 நிமிட நடையில் கோயில்.
தொடர்புக்கு: 04822-250633; 9744176444 / 9400059063

Comments