மண்ணில் புதைந்திருந்த மகேஸ்வரன்

தேவ முனி ப்ரவரார்ச்சித லிங்கம்... காம தஹனம் கருணாகர லிங்கம்...
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்... தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்...
சிவலிங்க வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு! சில புராதனமான சிவாலயங்களில், அபூர்வமான முக லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பெற்று வழிபடப்படுகின்றன. ஒரு முக லிங்கம் ஏகமுக லிங்கம் என்றும், இரண்டு முக லிங்கம் துவிமுக லிங்கம் என்றும், மூன்று முக லிங்கம் திரிமுக லிங்கம் என்றும், நான்கு முகங்களைக் கொண்ட லிங்கம் சதுர்முக லிங்கம் (இது பிரம்ம லிங்கம் என்றும் அழைக்கப்படும்) என்றும், ஐந்து முக லிங்கம் பஞ்சமுக லிங்கம் (இது சதாசிவ லிங்கம் என்றும் அழைக்கப்படும்) என்றும் அழைக்கப்படுகின்றன.  
ஸ்ரீகாளஹஸ்தி, நேபாளம் பசுபதீஸ்வரர் போன்ற சில குறிப்பிடத்தக்க கோயில்களில் பஞ்சமுக லிங்கத்தை தரிசிக்கலாம். இந்தப் பஞ்சமுக லிங்கத்தை வழிபடுவதால், அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம். சிவபெருமானுக்கு ஐந்து முகங்களும் ஐந்து மந்திரங்களும் ருத்ர மஹாமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
கிழக்குப் பார்த்திருக்கும் முகம் தத்புருஷம். இது ரிக் வேதத்துக்கு உரியது. தெற்கு பார்த்திருக்கும் முகம் அகோரம். இது யஜுர் வேதத்துக்கு உரியது. மேற்கு பார்த்திருக்கும் முகம் ஸத்யோஜாதம்; ஸாம வேதத்துக்கு உரியது. வடக்கு பார்த்திருக்கும் முகம் வாமதேவம்; அதர்வண வேதத்துக்கு உரியது. ஐந்தாவது ஈசானம். ஆகாயத்தை நோக்கி ஜோதிர்மயமாக உருவமில்லாமல் காணப்படுவதாக புராணங்கள் விவரிக்கின்றன.
இப்படி அளவற்ற மகிமைகள் கொண்ட பஞ்சமுக லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஒரு திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம் பன்றக்குடிவயல் என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது. இங்கே அருள் புரியும் இறைவனுக்கு சோழீஸ்வரர் என்றும், இறைவிக்கு ஆனந்தவள்ளி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. மிகப் பெரிய பரப்பளவில் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயிலில் தற்போது சிவலிங்கம், அம்பிகை, நந்தி, விநாயகர் ஆகிய தெய்வமூர்த்தங்களின் சிலைகள்தான் உள்ளன. ஆனால், இன்னும் பல தெய்வமூர்த்தங்கள் இருந்ததற்கான அடையாளமாக இடிந்த மண்டபங்கள் இருக்கின்றன. பஞ்சமுக லிங்கத் திருமேனியனாக இங்கே இறைவன் காட்சி தருவது, காண்பதற்கு அரிய திருக்காட்சி.
தற்போது கோயில் அமைந்திருக்கும் இடம் முழுவதும் பத்து வருடங்களுக்கு முன்பு வெறும் மணல் மேடாகவே இருந்திருக்கிறது. 2004ம் வருடம், மணல் எடுப்பதற்காக பொக்லைன் இயந்திரம் கொண்டு இந்த இடத்தைத் தோண்டும் போது ஏதோ கல்லில் இரும்பு பட்ட சத்தம் கேட்கவே, ஊர் மக்கள் ஒன்று கூடி, அந்த மணலை அப்புறப் படுத்திப் பார்த்தபோதுதான் தெரிந்திருக்கிறது, எம்பெருமான் அங்கே கோயில் கொண்டிருப்பது!
ஊர் மக்கள் உடனடியாக அந்தக் கோயிலைச் சுத்தப்படுத்தி, பெரியவர்களைக் கொண்டு முறையான பூஜைகளைச் செய்து, 10 வருடங்களாக வழிபட்டு வருகிறார்கள்.
கருங்கற்களால் ஆன அந்தக் கோயில் முழுவதும் சிதிலம் அடைந்திருப்ப தால், அதைப் பாதுகாப்பாக அப்படியே விட்டுவிட்டு, அந்தக் கோயிலுக்கு அருகிலேயே புதிய கோயில் கட்டும் முயற்சியில் ஊர் மக்கள் இப்போது ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தக் கோயிலில் பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்பதால்தான் இங்கு எம்பெருமானுக்கு சோழீஸ்வரர் என்ற திருநாமம் வந்ததாம். கோயிலுக்கென நிலங்களும் இருந்ததையும், அவற்றை நிர்வகிக்க சிலரை மன்னர்கள் நியமித்ததையும் கல்வெட்டுகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரு கல்வெட்டில், 'தர்மத்தைச் சிதைப்பவன், கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தைச் செய்தவனுக்குச் சமம்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. நாயக்கர் கால சித்திரங்களும் கல்தூணில் இடம் பெற்றிருக்கின்றன.
சுமார் 300 வருடங்களுக்கு முன், ராமேஸ்வரத்துக்குப் பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பஞ்சமுக ஈசனை தரிசித்து விட்டுத்தான் ராமேஸ்வரம் சென்றிருக்கிறார்கள்.
பக்தர்களுக்காகவே இங்கு பல அன்னதான சத்திரங்கள் இருந்தன என்றும், அவை நாயக்கர்கள் காலத் தில் கட்டப்பட்டவை என்றும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
ஆற்றில் ஒருமுறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, இந்தக் கோயில் மணலுக்குள் புதைந்து போனது. அதன் பின்னர், வெகு காலம் அங்கு கோயில் இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் மணல் மூடிப் போனது. தற்போது, சிவபெருமானின் திருவருளால் கோயில் கண்டெடுக்கப்பட்டு, பிரதோஷ வழிபாடு, நவராத்திரி வழிபாடு என வழிபாடுகள் நடந்தாலும், பல சிலைகள் சிதிலமடைந்து இருப்பதால், திருப்பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.
''கருங்கல் கோயிலை அப்படியே விட்டுவிட்டு, அதன் அருகிலேயே புதிய கோயில் கட்டும் முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளோம். ஸ்வாமி, அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வ மூர்த்தங்களை முதலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். பின்னர் கோயிலை விரிவுபடுத்தி தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை போன்ற தெய்வங்களை பிரதிஷ்டை செய்யவிருக்கிறோம்'' என்கிறார், கும்பாபிஷேக வேலைகளை கவனித்துவரும் சிவத்தொண்டர் கந்தசாமி.
தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்திருக்கின்றன. இன்னும் கோயிலுக்கு விமானம் அமைத்து, வர்ணம் பூசி கோயிலை கும்பாபிஷேகத்துக்குத் தயார் செய்யவேண்டும். எத்தனையோ வருடங்கள் மணலில் புதையுண்டு இருந்த எம்பெருமானுக்கு கூடிய விரைவில் கும்பாபிஷேகம் செய்விக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை! நம்மால் இயன்றதைச் செய்வோம்; சோழீஸ்வரரின் பேரருளுக்குப் பாத்திரமாவோம்!
எங்கே இருக்கிறது?
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில், கீரனூரில் இருந்து திருவரும்பூர் செல்லும் வழியில், 10 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது பன்றக்குடிவயல். இங்கே, பேருந்து நிறுத்தம் அருகிலேயே கோயில் அமைந்திருக்கிறது.

Comments