கஜேந்திர மோட்சம்

பகவானின் தன்னிகரற்ற கருணைப் பெருக்கை உணர்த்துகிற சம்பவம் கஜேந்திர மோட்சம். ‘ஆதிமூலமே’ என்று யானையான கஜேந்திரன் அலறியதும், வெகுவேகமாக பதறிப்போய் ஓடி வந்தானாம் பகவான். எங்கே சென்றாலும் கருடனின் மீதேறித்தானே செல்வான் பகவான். அந்த கருடன் அருகிலேயே காத்திருக்கும்போது, அவன் ஏன் ஓடி வரவேண்டும்?
இப்படி ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு ஒரு வியாக்யானமும் செய்திருக்கிறார்கள் பெரியவர்கள்.
‘பகவான் என் மீது ஏறித்தானே வரவேண்டும். நான்தானே வேகமாகப் பறந்து வரவேண்டும்’ என்று நினைத்தானாம் வைனதேயனான கருடன். அந்த எண்ணத்தை உணர்ந்ததால், அவனை அழைக்காமல் ஓடி வந்தானாம் பகவான். அது மட்டுமல்ல; தன் பிழையுணர்ந்து பின்னாலேயே வந்த கருடன் மீது ஏறினான் என்றாலும், கீழே வந்து இறங்காமல் வானிலிருந்தே தன் சக்கராயுதத்தை வீசி முதலையைக் கொன்றொழித்து கஜேந்திரனைக் காத்தான். ஏன்? சக்கராயுதத்தைவிட, வேகமாக உன்னால் செல்ல முடியாது என்று கருடனுக்கு உணர்த்தவும்தான். இப்படி, ஒரு அனுக்ரகத்தில் சில படிப்பினைகளும் ஒளிந்திருக்கின்றன.
கஜேந்திர மோட்சத்தின் தத்துவம் என்ன? தன்னைச் சரணென்று அடைந்தவர்களை எந்தச் சூழலிலும் பகவான் காப்பாற்றுவான் என்பது ஒன்று. ‘சரணடைந்தவர்களின் யோக கே்ஷமத்தைக் காப்பேன்’ என்று பின்னால் கிருஷ்ணாவதாரத்தில் இதைத்தான் சொல்கிறான் பகவான். ஆக, முதலில் செய்துகாட்டி விட்டு பிறகு உபதேசிக்கிறான். இது இரண்டாவது.
நம்முடைய மனம்தான் அந்த ஏரி. அதிலே நற் குணமான யானையும் இருக்கிறது. தீய குணங்களான முதலைகளும் இருக்கின்றன. அவைதான் எப்போதும், நம்மை தவறை நோக்கிச் செலுத்தி ஆபத்தில் சிக்க வைக்கின்றன. அவற்றில் இருந்து காப்பாற்றப்பட, பகவானை நோக்கி எப்போதும் நம் எண்ணம் இருக்க வேண்டும் என்பது மூன்று... இப்படியெல்லாம் சொல்லலாம்.
இந்த கஜேந்திர மோட்ச வைபவத்தை கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள் பிருந்தாவனத்தில் உள்ள ரங்காஜி திருக்கோயிலில். அநேகமாக பல ஆலயங்களில் மறந்தே போய்விட்ட இந்த வைபவம், இங்கு மிகச் சிறப்பாக நடக்கிறது. குறிப்பாக, வைகுண்ட ஏகாதசியன்று காலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது என்றால், அன்று இரவு இந்த கஜேந்திர மோட்சம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மிகப்பெரிய வடிவில் யானை மற்றும் முதலை உருவங்கள் செய்து வைத்து இந்த வைபவத்தைக் கொண்டாடுகிறார்கள்.
வடஇந்தியாவில் ஸ்ரீ ராமானுஜருடைய சம்பிரதாயமான வைஷ்ணவ சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகவும் புனிதமானதும் முக்கியமானதுமாகக் கருதப்படுவது இந்த ‘ரங்காஜி மந்திர்’ என்னும் ஸ்ரீ கோதா ரெங்கனாத்ஜி ஆலயம். இந்த ஆலயம் கி.பி. 1843ல் கட்ட ஆரம்பித்து, கி.பி. 1850ல் முடிக்கப்பட்டது. இதை எழுப்பியவர் ஸ்ரீ ரெங்க தேசிகன்.
ஸ்ரீபெரும்பூதூருக்கு அருகில் உள்ள அகரம் கிராமத்தில் 1809ல் பிறந்தவர் ரெங்கதேசிகன். இளம் வயதிலேயே பாத யாத்திரையாகவே வடக்கு நோக்கிச் சென்ற இவர், கோவர்த்தனத்தை அடைந்தார். அச்சமயம் கோவர்த்தனத்தின் மடாதிபதியாக இருந்த ஸ்ரீநிவாசாச்சார்யார், இவரை தமது சிஷ்யராக ஏற்றுக் கொண்டு, அனைத்து வேதக் கலைகளையும் உபதேசித்தார். வேதம் அனைத்தையும் கற்றுணர்ந்த ரெங்க தேசிகரிடம் சமண மதத்தைச் சார்ந்த அந்நாட்டு அரசன் வாதம் செய்து தோற்க, அவனும், அவனது அமைச்சர்களும் இவரது சிஷ்யர்கள் ஆனார்கள். அரசர்கள் மடத்துக்குத் தந்த மானியங்களிலேயே இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டது.
ஆலயத்தை தென்நாட்டில் ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் அமைக்க வேண்டும் என்று விரும்பி, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் ஆகிய ஊர்களின் சிறந்த ஸ்தபதிகளையும், கலை விற்பன்னர்களையும் கொண்டு தென்னாட்டு பாணியும், வடநாட்டு பாணியும் கலந்த ஒரு கலவையாக ‘கோதா ரெங்கனாத்ஜி’ ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் ஸ்ரீரங்கமன்னார், சுதர்சனர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவெங்கடாஜலபதி, வேணுகோபாலன், ஆழ்வார்கள், ராமானுஜர், நாதமுனிகள், காஞ்சி வரதராஜன் என பல சன்னிதிகள் உள்ளன. புஷ்கரிணியும் உள்ளேயே அமைந்துள்ளது. ஸ்ரீ வைஷ்ணவ கோயில்களில் நடத்தப்படும் எல்லா உற்சவங்களும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன என்றாலும், இந்த கஜேந்திர மோட்ச வைபவம் உண்மையிலேயே கண்டு இன்புற வேண்டிய ஒன்று.

Comments