குழுமியிருக்கும் பக்தர்கள், வரிசையாகத் தொங்கும் ஒற்றைக் கயிற்றைப் பிடித்து இழுக்க, 'டாண்... டாண்... டாண்...’ என்று ஒலிக்கிறது கோயில் மணியோசை. அந்த ஓசை மனதை ஒருநிலைப் படுத்துகிறது; சிந்தனையைத் தூய்மையாக்குகிறது. திரைக்குப் பின்னால் பூஜை தொடர்ந்துகொண்டிருக்க, வேல்முருகனிடம் நாம் கண் மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த இடம்... கதிர்காமம் முருகன் கோயில்.
''மறக்காம கதிர்காம முருகனை தரிசனம் பண்ணிட்டு வாங்க...'' கொழும்புவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், பலரும் முன் வைத்த வேண்டுகோள் இது.
''ஸ்ரீலங்கா போயிட்டு வந்தீங்களாமே? கதிர் காமம் முருகனை தரிசனம் பண்ணினீங்களா?''
சென்னை திரும்பியதும், பலரும் கேட்ட கேள்வி இது! கொழும்புவிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ளது கதிர்காமம். 'முருகனின் ஏழாவது படைவீடு’ என்று இதைச் சிலாகிக் கிறார்கள்.
'ஒவ்வோர் ஆண்டும் இங்கே கொடியேற்ற விழா அமர்க்களப்படும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். அந்த நேரத்தில் முருகனை தரிசிப்பவர்கள் அத்தனை பேருக்கும் அன்னதானம் உண்டு. இதற்கென்று பிரத்யேகமாக சென்னையிலிருந்து சமையற்கலை நிபுணர்கள் வருவார்கள்...'' என்று விவரம் சொல்லிக்கொண்டே நம்மை சந்நிதி வரை அழைத்துச் சென்றார் தில்லைநாதன். பல வருடங்களுக்கு முன், மட்டக்களப்பு பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து வந்து கதிர்காமம் கோயிலில் தங்கிவிட்டவர் இவர். இப்போது கோயிலின் நிர்வாகம் இவரது மேற்பார்வையில்தான்.
''இப்போது இந்தக் கோயிலைப் பரமாரித்து வருவது விஸ்வ இந்து பரிக்ஷத் அமைப்பு. அதன் இணைச் செயலாளர் சுவாமி விக்ஞானந்த்'' என்கிற கூடுதல் தகவலும் தில்லைநாதனின் உபயத்தில் கிடைக்கப் பெற்றோம்.
மற்ற முருகன் கோயில்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு வழிபாட்டு முறையை கதிர்காமம் முருகன் கோயிலில் காண முடிந்தது. முக்கியமாக, முருகனுக்கு இங்கே சிலை கிடையாது. யந்திரம்தான் பூஜிக்கப் படுகிறது. கருவறையின் நுழைவாயிலில் முருகனின் திருவுருவம் வரையப்பட்ட திரை. திரைக்குப் பின்னால்தான் யந்திரத்துக்குப் பூஜை. விசேஷ நாட்களின்போது, சப்பரப் பவனியும் காண்கிறது இந்த யந்திரம். அப்போதும் யந்திரத்தை துணியால் மூடியே திருவீதியுலாவில் எழுந்தருளச் செய்கிறார்கள்.
பூஜை முடிந்ததும், கற்பூரத் தட்டையும், விபூதி பிரசாதத்தையும் கையிலேந்தி வெளியே வருகிறார் பூசாரி. பக்தர்கள், கற்பூரத்தைக் கண்களில் ஒற்றிக் கொள்ள, அவர்களது நெற்றியில் பூசாரியே விபூதி இட்டுவிடுகிறார். அரோஹரா கோஷம் விண்ணை முட்டுகிறது.
இங்கே பூசாரிகள் வெள்ளை வெளேர் என்று கழுத்து மூடிய சட்டையும், வெள்ளை சராங்கும் அணிந்திருக்கிறார்கள். பூஜை செய்யும்போது வாயில் மஞ்சள் துணி கட்டிக் கொள்கிறார்கள்.
''இங்கே பூஜை செய்கிறவர்கள் வட இந்தியர்கள். தத்தாத்ரேய பீடத்தைச் சேர்ந்தவர்கள். பத்தொன்பது பீடாதிபதிகள் இங்கே இருந்திருக்கிறார் கள். அவர்களில் ஏழு பேர் இங்கேயே ஸித்தியடைந்ததால், அவர்களுடைய சமாதிகள் கோயில் வளாகத்திலேயே இருக்கின்றன'' என்றார் தில்லைநாதன்.
கதிர்காமம் முருகன் கோயிலின் தலவரலாறு சற்றே நீளமானது. சரித்திரப் பாடப் புத்தகத்துக்குச் சமமாக இதில் விவரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
கலியுக வரதன் என்று அழைக்கப் படுபவன், கந்தன். கால, தேச, வர்த்த மானங்களைக் கடந்தவன். பிறப்பு இறப்பு அற்றவன். ஆறு திருமுகங்கள் கொண்டவன். அழகு, வீரம், அன்பு, ஞானம், இளமை, மகிழ்ச்சி என ஒவ்வொரு முகமும் இறைவனின் பல்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது.
மாயையிலிருந்து விடுபட நமக்கு இருக்கும் ஒரே கருவி மனம். அது சுத்தப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி, கீழ்த்தரமான எண்ணங்களை அகற்றி, மேன்மையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதுதான். இறை வழிபாடு இதற்கு உதவும். புராணங்கள் இதற்கு வழிகாட்டும்.
கந்த புராணம் இவற்றில் முக்கியமான ஒன்று. உயர்வான தெய்விகச் சிந்தனைகளில் மனம் தோய, இது நமக்கு உதவுகிறது. கந்தனின் பிறப்பையும், லீலா விநோதங்களையும் விளக்கும் புராணம் இது.
அசுரர்களால் தேவர்களுக்கு நேர்ந்த துயரங்களை பிரம்மா விவரிக்க, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு ஒளிக்கதிர்கள் புறப்பட்டு வந்தன. அந்தக் கீற்றுகளை கங்கையிடம் வாயு எடுத்துச் செல்ல, கங்கை அவற்றை சரவணப் பொய்கை யில் கொண்டு சேர்க்க, ஆறு ஒளிக் கதிர்களும் அழகான ஆறு குழந்தைகளாக மிளிர, உமையவள் ஆலிங்கனம் செய்து கொள்ள, ஆறு முகங்களும் ஒரே உடலில் ஐக்கியமாகி, தீயவைகளை அழிக்கவும், நல்லவைகளைக் காக்கவும் கந்தன் அவதரித்தான்.
காக்கும் கடவுளான விஷ்ணு, அபூர்வ வகை பழத்துடன் கயிலாயத்துக்குள் நுழைய, விநாயகனும் கந்தனும் பழத்துக்காகப் போட்டியிட்டார்கள். 'முதலில் யார் உலகைச் சுற்றி வருகிறாரோ, அவருக்கே பழம்’ என்று பரமசிவன் அறிவிக்க, மயில் மீது ஏறி, உலகை வலம் வரத் தொடங்கினான் கந்தன். 'அவசரம் ஏனோ?’ என்று வழியில் நாரதர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கக்கூட அவகாசமில்லாமல் அவசரமாகப் பயணித்தான்.
கயிலாயம் சென்ற நாரதர், அங்கே தன் தொப்பையுடனும், தும்பிக்கையுடனும் சின்னஞ்சிறு மூஷிக வாகனமேறி எங்ஙனம் உலகைச் சுற்றி வருவது என்று ஆனை முகத்தான் கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். 'தந்தையும் தாயும்தானே உலகம்!’ என்று நாரதர் எடுத்துரைக்க, பெற்றோரை மூன்று முறை சுற்றி வந்து, பழத்தைப் பெற்றுவிடுகிறார் பிள்ளையார்.
உலகத்தைச் சுற்றி முடித்துக் கயிலாயம் திரும்பிய கந்தனுக்கு, தன் சகோதரனின் கையில் பழம் இருப்பது கண்டு ஏமாற்றம்... அதிர்ச்சி! கோபத்தில், தெற்கு நோக்கிச் சென்றுவிடத் தீர்மானிக்கிறான். அன்னை பார்வதி பின்தொடர்ந்து வந்து, கயிலாயத்துக்குத் திரும்பி வரும்படி கெஞ்ச, மறுக்கிறான்.
தெற்கு நோக்கிச் செல்லும் கந்தன் திருத்தணி, சுவாமிமலை, திருவாவினன்குடி, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் ஆகிய ஆறு வீடுகளுக்குச் செல்கிறான். வழியில், அசுரர்களை அழிக்கிறான். திருப்தியடைந்த இந்திரன், தன் மகள் தேவயானையை கந்தனுக்கு மணமுடித்துத் தருகிறான். இந்தத் தெய்விகத் திருமணம் நடைபெற்ற இடம் திருப்பரங்குன்றம்.
சூரபத்மனை வதம் செய்ய தென் இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கிப் பயணம் செய்யும் கந்தன், கதிர்காமத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதாக வரலாறு செப்புகிறது. இங்கேதான் வள்ளியை அவன் கரம் பிடிக்கிறான் (வள்ளி திருமணம் நிகழ்ந்த இடமாக, தமிழகத்தின் வேறு சில ஊர்களையும் குறிப்பிடுவார்கள்).
ஞானத்தைக் குறிக்கும் வேல், கந்தனுக்கு நிரந்தர துணையாகி விடுகிறது. கதிர்காமத்தில் கந்தனை ஜோதி ரூபத்தில் வழிபடுகிறோம். கர்ப்ப கிரகத்தில் ஷட்கோண யந்திரம் தவிர, வேறு மூர்த்தங்கள் கிடையாது.
திரிகோண வீதிகள் கொண்ட அழகான நகரம் கதிர்காமம். இங்கு பிள்ளையார் மலை, வள்ளி மலை, தேவயானி அம்மன் மலை என மூன்று மலைகள் உண்டு. மலைகள் ஏறி, நதியில் நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்பவர்களுக்கு உடலும் உள்ளமும் தூய்மையாகின்றன.
விடியற்காலை நேரத்தில், ஜில்லென்றிருக்கும் நதி நீரில் மூழ்கி எழுந்து, ஈரத்துணியுடன் கதிராமலை ஏறி, பிரதட்சணம் செய்து திரும்புவது கதிர்காமத்தில் வழக்கமாக வழிபடும் முறை. நதியில் ஸ்நானம் செய்யும்போதும், மலையேறும்போதும், பிரதட்சணம் செய்யும்போதும் பக்தர் களின் 'அரோஹரா’ கோஷம் அண்ட சராசரங்களிலும் எதிரொலிக்கும்.
அசுரனான சூரபத்மனை வதம் செய்த பின்னர், கதிர்காமத்திலேயே தங்கிவிடத் தீர்மானித்தார் கந்தக் கடவுள். விஸ்வகர்மா இங்கு ஒரு கோயில் நிர்மாணித்தார். இது 'சிந்தாமணி ஆலயம்’ என்று அழைக்கப்படுகிறது. மனித குலத்தின் அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் அபூர்வ ரத்தினம் சிந்தாமணி. அந்த வகையில் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் புனித இடமாகப் பிரபலமானது கதிர்காமம்.
கோயிலும் நகரமும் நிர்மாணித்து முடித்த பின்னர், தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, பக்தர்களைத் தூய்மைப்படுத்துவதற்காக ஒன்பது தீர்த்தங்களை ஏற்படுத்தினான் கந்தன்.
வேண்டுபவருக்கு விரும்பும் வரம் அளிக்கக்கூடியவன் கந்த பெருமான். கந்தனின் அருளைப் பெற காணிக்கை செலுத்துகிறார்கள் பக்தர்கள். 'நான்’, 'எனது’ என்கிற அகங்காரத்தை விட்டொழிப்பதே எந்த பக்தனும் கந்தனுக்குத் தரும் சிறந்த காணிக்கையாக இருக்க முடியும். எனவே, அவற்றை நிர்மூலமாக்கவேண்டும் என்று கந்தனிடமே மனமுருகப் பிரார்த்தனை செய்கிறார்கள் பக்தர்கள். அகங்காரம் என்னும் அசுரனை அழிக்கும் சக்தி கொண்டவன் முருகன். அதற்கான ஆயுதமே வேல். வேல் என்பது ஞானம். அது என்றும் தோற்பதில்லை. எனவே, வெற்றியின் சின்னமாகக் கருதப்படுகிறது வேல். அதனாலேயே அது வெற்றிவேல்!
கதிர்காமம் கோயில் பல்வேறு மன்னர்களின் ஆதரவைப் பெற்றிருக் கிறது. ஐந்தாம் மன்னர் மஹிந்தா வரை இது தொடர்ந்திருக்கிறது.
கதிர்காமம் கோயிலுக்குத் தனது எல்லையற்ற ஆதரவைக் கொடுத்தார் முதலாம் ராஜசிங்க மன்னர். பித்ருஹத்தி தோஷத்தால் (தந்தையைக் கொன்றதால் உண்டானது) இவர் மன நிம்மதி இழந்தார் என்றும், செய்வதறியாமல் கதிர்காமம் வந்து கல்யாண்கிரியைச் சந்தித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
வட இந்தியாவைச் சேர்ந்த சிறந்த தபஸ்வி கல்யாண்கிரி. கந்தனை இந்தியாவுக்குத் திரும்ப அழைத்துச் செல்லும் நோக்கத்துடன், தேவயானையின் தூதுவராக இவர் கதிர்காமம் வந்திருக்கிறார். இன்னொரு பக்கம், தவத்தைத் தொடர்வதற்காக இவருடைய குரு இவரை கதிர்காமத்துக்கு அனுப்பியிருக்கக்கூடும். பன்னிரண்டு வருட காலம் இவரது தவம் நீடித்தது. ஆயினும், கந்தனின் தரிசனம் கிடைக்கவில்லை. வருத்தத்துடன் நித்திரையில் ஆழ்ந்துவிட்டார் கல்யாண்கிரி. இவருக்குப் பணிவிடை செய்து வந்த சிறுவன் விளையாட்டாக இவரின் தூக்கத்தைக் கலைத்துவிட, எரிச்சலடைந்தார் கல்யாண்கிரி. சிறுவன் மன்னிப்புக் கேட்டு 'மாணிக்க கங்கை’ நதியை நோக்கி ஓட, நதியின் நடுப்பகுதி வரை கல்யாண்கிரியும் துரத்திச் செல்ல.. கிடைத்தது கந்த தரிசனம்! இருப்பினும், கந்தனை இந்தியா அழைத்துச் செல்லும் தன் நோக்கத்தை அவர் மறக்கவில்லை.
கந்தனிடம் கல்யாண்கிரி வரம் கேட்கும் நேரத்தில் வள்ளி குறுக்கிட்டாள். ''தயவு செய்து என் நாதனிடமிருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்'' என்று காலில் விழாதக் குறையாகக் கேட்டுக்கொண்டாள். அவள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. கதிர்காமத்திலேயே தங்குவதற்குத் தீர்மானித்துவிட்டார் கல்யாண்கிரி. தேவயானை அம்மனுக்கும் கோயில் எழுப்பினார். கல்யாண மண்டபம் கட்டப்பட்டது. சுவாமி கோயிலின் கர்ப்ப கிரகத்தில் ஷட்கோண யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தவம் காரணமாக கதிர்காமத்தில் ஏற்பட்ட கந்தனின் சாந்நித்யத்தின் பலனை எதிர்கால சந்ததியினர் அனுபவிக்கவே இத்தனையும் செய்யப்பட்டது.
கல்யாண்கிரியின் காலம் முடிவுக்கு வந்ததும், அவரது உடல் லிங்க ஸ்வரூபமாகி, சுத்தமான முத்தில் இருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் போன்று லிங்கத்திலிருந்து ஒளிக்கதிர்கள் புறப்பட்டு வந்தன. அது முத்துலிங்கம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், இதற்கென்று ஒரு கோயிலும் எழுப்பப்பட்டது.
இன்றுவரை கதிர்காமத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். வருடம் பூராவும் வருகிறார்கள். எந்தவித சாதி மத பேதமுமின்றி, ஏழை பணக்காரர் பாகுபாடின்றி, படித்தவர் பாமரர் என்ற வித்தியாசமின்றி, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஏற்றத் தாழ்வின்றி அனைத்து தரப்பினரும் வருகிறார்கள். சகோதர உணர்வுடன் கந்தனை வழிபடுகிறார்கள். கதிர்காமம் என்ற புண்ணிய தலத்தில் பாதம் பதித்து, பாவங்களை நீக்கிக்கொள்கிறார்கள்.
'கந்தன் செயலன்றோ யாவும்
வந்த வாழ்வும் வளர் புகழும்
சுந்தர ரூபன் சுகுமாரன் செந்தில்
கந்தன் செயலன்றோ!’
வந்த வாழ்வும் வளர் புகழும்
சுந்தர ரூபன் சுகுமாரன் செந்தில்
கந்தன் செயலன்றோ!’
லால்குடி ஜெயராமன் இயற்றிய பாடல் வரிகள் காற்றில் தவழ்ந்து வருகின்றன.
Comments
Post a Comment