கனவில் ஒலித்த குரல்!

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாரு கமிவபந்தனாத்
ம்ருத்தியோர் முஷியமாம்ருதாத்
- மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்
அது 2001ம் வருடம். மேற்கு இந்தியத் தீவு ஜமைக்கா நகரத்தின் வெஸ்ட்இண்டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனை பரபரப்பாக இருந்தது. மேற்கு இந்தியத் தீவின் பிரபலமான கண் மருத்துவர் டாக்டர் சார் (Dr.Chaar) சிகிச்சைக்காக அங்கு அனுமதிக் கப்பட்டிருந்தார்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இவர். மாஸிவ் அட்டாக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடலின் பல பாகங்கள் செயலிழந்த நிலையில் இருந்தார். ஆறு மாத காலமாகத் தொடர்ந்த சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால், அவரின் மனைவி டாக்டர் குரேந்திரா, மகள் வந்தனா இருவரும் கவலையில் ஆழ்ந்தனர்.
அன்றைக்கு, குடும்ப நண்பர்களான ஓம்கார் பர்சாத் தம்பதி, ராமச்சந்திரன் தம்பதி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். டாக்டரின் மனைவி வங்கிக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆகவே, வந்த நண்பர்களை மருத்துவமனையில் கணவருக்குத் துணையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு, வங்கிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், வேறு ஏதோ வேலையாக அந்த மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு ஓம்கார் பர்சாத், ராமச்சந்திரன் இருவரையும் நன்கு தெரியும். அவர்கள் அங்கே கவலையுடன் இருப்பதைக் கண்டு, அருகில் சென்று விசாரித்தார். அவர்கள் தங்கள் குடும்ப நண்பரான டாக்டர் சார் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சையில் இருக்கும் விஷயத்தைத் விவரித்தார்கள்.
வெங்கட்ராமன், வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழத்தில் ஃபைனான்ஸ் துறையில் பணியாற்றியவர். 1998 முதல் அமெரிக்காவில் தங்கி, தனது ஃபைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் தொழிலை கவனித்து வந்தார். ''அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது. விரைவில் அவர் நலம்பெற்று வருவார். நானும் அவருக்காகப் பிரார்த்திக்கிறேன்'' என்று டாக்டரின் மகள் வந்தனாவுக்கு ஆறுதல் கூறி விடைபெற்றார். பிறகு, தனது வேலை விஷயமாக வங்கிக்குச் சென்றவர், அங்கே டாக்டரின் மனைவியையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவருக்கு அப்போது தெரியாது... அந்தக் குடும்பத்தாருக்கு அருள்புரிய திருவுளம் கொண்டுவிட்ட பரம்பொருள், அதற்கு தன்னையே கருவியாக்கப் போகிறது என்று! வெங்கட்ராமன் அமெரிக்காவுக்கு திரும்பிய மூன்றாவது நாள்... அவரது கனவில் ஒரு தெய்விகக் குரல் ஓங்கி ஒலித்தது.
''திருமதி குரேந்திராவும் அவருடைய மகள் வந்தனாவும் தினமும் நீராடி முடித்து, மடியாக காலை மாலை இரு வேளையும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தைப் பாராயணம் செய்யச் சொல். அடுத்து வரும் பத்து நாட்களும் டாக்டர் சார்க்கு சோதனையான காலம். அதைக் கடந்துவிட்டால், அதன்பின் யாவும் நலமாகவே நடைபெறும். அவர் பூரண குணம் பெற்றதும், திருக்கடையூருக்குச் சென்று இறை தரிசனம் செய்யச் சொல்'' என்று உத்தரவு போல் ஒலித்த அந்தக் குரல், வேறொரு கட்டளையையும் பிறப்பித்தது.
காலையில் கண்விழித்தபோதும், அந்தக் கனவுக் குரலின் கட்டளையை வெங்கட்ராமனால் மறக்க முடிய வில்லை. அந்த அளவுக்குத் துல்லியமாக ஒலித்த உத்தரவு அது.
இதை ஏதோ ஒரு கனவு என்று விட்டுவிட வெங்கட்ராமனுக்கு மனம் இல்லை. டாக்டர் சார் அவர்களின் மனைவியிடம் சொல்லலாமென்றால், அவரைத் தொடர்பு கொள்வதற்கு போன் நம்பரோ, இமெயில் முகவரியோ வெங்கட்ராமனிடம் கிடையாது. சரி, நண்பர் ஓம்கார் பர்சாத் மூலம் தெரிவிக்கலாம் என்றாலும், அவர்கள் இதை நம்புவார்களா? அப்படியே நம்பினாலும், பஞ்சாபைச் சேர்ந்த டாக்டர் குரேந்திரா, மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லி வழிபடுவது என்பதெல்லாம் சாத்தியமா? இப்படிப் பல கேள்விகள் வெங்கடராமனின் மனதில் எழுந்து, அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தின.
எனினும், இதுகுறித்து நண்பர் ஓம்கார் பர்சாத்துக்கு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தார். அதில், கனவுக் குரல் குறித்த விவரத்தை விளக்கியவர், மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை உரிய முறையில் உச்சாடனம் செய்ய, ராமச்சந்திரன் தம்பதி உதவி செய்யலாமே என்ற தனது கருத்தையும் தெரிவித்தார். மற்றபடி, இதை ஏற்பதும் ஏற்காததும் டாக்டர் சார் குடும்பத்தாரின் விருப்பம் என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார் வெங்கட்ராமன்.

ஓரிரு நாட்களில் ஓம்கார் பர்சாத்திடம் இருந்து, 'டாக்டரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது. தங்களின் தகவலை திருமதி குரேந்திராவிடமும் மகள் வந்தனாவிடமும் தெரிவித்துவிட்டேன். தாங்கள் கூறியபடியே, டாக்டர் குரேந்திராவும் அவர் மகளும் தினமும் நீராடி, மடியுடுத்தி, மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடவுள் அனுக் கிரஹம் செய்யட்டும்’ என்று பதில் வந்தது..
ரியாக பத்தாவது நாள்...
வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சுமார் ஆறு மாத காலம் எந்தவித முன்னேற்றமும் இன்றி, பிழைப்பது கடினம், எது வேண்டுமானா லும் நடக்கலாம் என்று கைவிடப்பட்ட நிலையில் இருந்த டாக்டர் சாரின் உடல் நிலையில் அதிசயிக்கத்தக்க முன்னேற் றம் காணப்பட்டது. அடுத்த சில நாட் களில் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்ட டாக்டர் சார், விரைவில் பூரண குணம் பெற்றார்.
திருமதி குரேந்திராவும் மகள் வந்தனாவும் செய்த பிரார்த்தனை பலித்தது. மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் வல்லமையால் மரணத்தை வென்றார் டாக்டர் சார். அவர் குணம் அடைந்த தகவல் வெங்கட்ராமனுக்கும் நன்றியுடன் தெரிவிக்கப்பட்டது.
சில வருடங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக் கழகத்துக்குச் சென்றிருந்த வெங்கட்ராமன், நண்பர் ஓம்கார் பர்சாத் வீட்டுக்கும் சென்றிருந்தார். அங்கே டாக்டர் சாரையும் சந்தித்தார். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் இருப்பதைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி வெங்கட்ராமனுக்கு. வெங்கட்ராமனின் கரம் பற்றி நெஞ்சம் நெகிழ நன்றி சொன்ன டாக்டர் சார், அவருக்குப் பிரதியுபகாரமாக தான் ஏதேனும் செய்ய விரும்புவதாகச் சொன்னார். 'என்ன செய்ய வேண்டும்? உத்தரவிடுங்கள்’ என்றும் வற்புறுத்தினார்.
வெங்கட்ராமன் மிகுந்த தயக்கத்துடன், ''நான், சென்னை சங்கர நேத்ராலயாவின் சேவைகளுக்காகவும், அதன் தேவைகளுக்காகவும் இந்திய
வம்சாவளியினரிடமும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் நன் கொடைகள் பெற்று வழங்கும் 'ஓம் டிரஸ்ட்’ என்ற அமைப்பின் (அமெரிக்காவில் உள்ளது) துணைத் தலைவராக இருக் கிறேன். நீங்கள் பிரதியுபகாரமாக எனக்கு ஏதேனும் செய்ய விரும்பி னால், சென்னையில் உள்ள சங்கர நேத்ரால யாவுக்கு 2,500 யு.எஸ். டாலர்கள் வழங்குங்கள்'' என்றார். அவர் சொன்னபடியே அந்தத் தொகைக்கு உடனடியாக காசோலை வழங்கினார் டாக்டர் சார். அந்த காசோலையை வெங்கட்ராமன் சென்னைக்கு அனுப்பி வைக்க, அதற்கு நன்றியாக இங்கே சங்கர நேத்ராலயாவின் இலவச சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு படுக்கைக்கு டாக்டர் சார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.
டாக்டர் சாரிடம் நன்றி தெரிவித்துக்கொண்ட வெங்கட்ராமன், ''ஒருமுறை நீங்கள் திருக்கடவூருக்கு வந்து கால சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், பல்வேறு காரணங்களால் அவரால் இந்தியா வர இயலவில்லை.
இவையனைத்தும் நடைபெற்றது 2001ம் ஆண்டில்! அதன் பிறகு 12 வருடங்கள் எந்தக் குறையுமின்றி, சிறப்பாக மருத்துவ சேவையை தொடர்ந்த டாக்டர் சார், கடந்த 2013ல் தான் காலமானார். அதற்குப் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் டாக்டரின் மனைவியைச் சந்தித்த வெங்கட்ராமன், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், கனவில் ஒலித்த உத்தரவின்படி வாய்ப்பு கிடைக்கும்போது ஒருமுறை திருக்கடவூருக்கு வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.
2014ல் பெங்களூரு வந்த திருமதி குரேந்திரா, சென்னைக்கும் வந்தார். அவர் வந்ததற்கான நோக்கங்கள் இரண்டு. ஒன்று, திருக்கடவூர் தரிசனம். மற்றொன்று சென்னைசங்கர நேத்ராலயாவைப் பார்வையிட! வெங்கட்ராமனின் உதவியுடன் இரண்டும் திருப்தியாக நிறைவேறின. சென்னை சங்கர நேத்ராலயாவுக்கு வந்தவர், தனது மகள் வந்தனா மூலமாக 11 ஏழை நோயாளிகளுக்கு மேஜர் ஆபரேஷன்களை இலவசமாகச் செய்வதற்காக 2,500 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தார். மேலும், இந்தச் சேவையை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அன்று, காலனிடம் இருந்து பக்த மார்க்கண்டேயனைக் காத்தருளிய காலகாலனின் பேரருள், இன்றைக்கும் தன் அடியவர்களைக் காத்து நிற்கிறது என்பதற்கும், மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் மகிமைக்கும் இந்தச் சம்பவம் ஒரு சாட்சி!

Comments