திருப்பாத தரிசனம்...

வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகில், கோவிந்தச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு மலையின்மேல் கல்வெட்டு ஒன்று காணப்பட்டதாக நாளேடுகளில் ஒரு செய்தி வெளியானது. 'காளிங்கராயன் என்பவன் இந்த ஞானமலைக்குப் படிகளை அமைத்தான்’ என்பதுதான் அந்தச் செய்தி. செய்தி வெளியான ஆண்டு 1998. மண்கொண்ட சம்புவராயர், முதலாம் ராஜநாராயணன், இரண்டாம் ராஜநாராயணன் ஆகிய அரசர்கள் காலத்தில் தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதிக்கு அதிகாரியாக இருந்தவன் இந்தக் காளிங்கராயன் (1322-1340).
1977ம் ஆண்டு தொடங்கி, இடைவிடாது நான்கு ஆண்டுகள் திருப்புகழ்த்தலங்களைப் பற்றித் தீவிரமாக ஆய்வு செய்தபோது, 'ஞானமலை’யின் இருப்பிடம் மட்டும் தெரியவரவில்லை. இந்த செய்தியைப் படித்த பின்னர்தான், ஞானமலை வெளிச்சத்துக்கு வந்தது. அதனை உறுதி செய்ய, கோவிந்தச்சேரி கிராமத்துக்குச் சென்றோம். மலை மீது பல்லவர் காலத்திய முருகன் கோயிலும், முருகனின் திருப்பாதச் சுவடுகளும் கண்டு பிரமித்துப் போனோம்.
'முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண...’ என்று முதலடி எடுத்துக் கொடுத்து அருணகிரிநாதரை ஆட்கொண்டான் கருணை முருகன். அங்கிருந்து புறப்பட்டு பல மலைகளையும், பல தலங்களையும் தரிசித்துவிட்டு, அருள் பெறும் நிலையில் ஞானமலைக்கு வருகிறார் அருண கிரியார். திருவண்ணாமலைக் காட்சிகள் அவரது நினைவுக்கு வருகின்றன. அங்கே உலகை வெறுத்து உயிரை விடத் தீர்மானித்தபோது, முருகப் பெருமான் திருவடி தரிசனம் தந்து ஆட்கொண்டான் அல்லவா? அந்தத் திருவடிக் காட்சிப் பேரருளை மீண்டும் ஞானமலையில் வேண்ட, அவ்வண்ணமே அவருக்கு யோகாநுபூதி அளித்து, பாத தரிசனம் அளிக்கிறான் ஞான பண்டிதன்.
'எமைமனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத
உமைபாலா எழுதரிய பச்சைமேனி
இமையவர் துதிப்ப ஞானமலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே’
என்று அந்த அருள் அனுபவத்தை ஞானமலைத் திருப்புகழில் பதிவு செய்கிறார் அருணகிரியார். ஞானமலை ஞானபண்டிதனை வழிபட்டு அவனது பாத தரிசன அனுபவத்தை நாமும் பெற வேண்டும் அல்லவா?

ஞானமலை அடிவாரத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் ஞானசக்தி கணபதியை தரிசனம் செய்துகொண்டு, 150 படிகள் ஏறினால், அருணகிரிநாதர் யோகாநுபூதி மண்டபத்தில், கல்லால மரத்தடியில் காட்சியளிக்கும் ஞான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். அங்கிருந்து கோயிலை அடைந்து, கொடிமரம் அருகில் வீழ்ந்து வணங்கி மகா மண்டபத்துக்குள் செல்லலாம். கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டித சுவாமி அருட்காட்சி வழங்குகிறார். ஒருமுகம், நான்கு கரங்களுடன் பின் இருகரங்களில் கமண்டலம் ஜபமாலை ஏந்தியும், முன் வலக் கரம் அபய முத்திரையிலும், முன் இடக் கரம் இடுப்பிலும் கொண்டு நின்ற கோலத் தில் மிக அற்புதக் காட்சி! சிற்ப ஆகம நூல்கள் குறிப்பிடும் 'பிரம்ம சாஸ்தா’ வடிவம். பிரணவத்துக்குப் பொருள் தெரியாத பிரமனைக் குட்டி, சிறையிட்டு, சிருஷ்டித் தொழிலைத் தாமே மேற்கொண்ட (பிரமசாத்தன்  பிரமனைத் தண்டித்தவன் என்று பொருள்) அருட்கோலம்.
பல்லவர் காலம் மற்றும் முற்காலச் சோழர்கள் காலத்தில் தொண்டை மண்டலத்தில் அமைந்த பெரும்பாலான திருக்கோயில்களில் பிரம்ம சாஸ்தா வடிவமே காணப்படுவது குறிப்பிடத் தக்கது. சிற்ப அமைப்பைக் கொண்டு ஞானமலை ஞானபண்டிதன் திருக் கோலம் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிய வருகிறது.
தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த 'குறமகள் தழுவிய குமரன்’ வடிவம், வேறு எங்கும் காண இயலாத அற்புத வடிவம். நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன், இடதுபுறம் மடிமீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் இன்ப வடிவம். அருகில், அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் இக் காட்சியைக் கண்டு இன்புறுவார். தெற்குச் சுவரில் ஞானமலைக்குரிய இரண்டு திருப் புகழ்ப் பாடல்கள் மற்றும் பதிகம், வரலாறு முதலான கல்வெட்டுகள் முருகன் புகழைப் பாடுகின்றன. வடக்குச் சுற்றில் சண்முக கவசம், குமாரஸ்தவம் மற்றும் படித்திருப்பணி நன்கொடையாளர்கள் பெயர் விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. மலையின் மேற்புறம் ஏறிச் செல்லும் வழியில் முருகன் உண்டாக்கிய 'வேற்சுனை’ உள்ளது.
சில படிகள் ஏறி மலையின் மேற்புறம் சென்றால், அங்குள்ள மண்டபத்தில் ஞானப்பூங்கோதை சமேத ஞான கிரீஸ்வரர் அருள் காட்சி வழங்குவார். அருணகிரிநாதரை பரமகுருவாகக் கொண்டு  இந்த ஞானமலையில் பல்லாண்டுகள் தவமியற்றியவர் ஞான வெளிச் சித்தர் என்னும் பாலசித்தர் ஆவார். முருகன் திருவடிகள் பதிந்த இவ்விடத்தில் தவமியற்றி, மக்களுக்கு கூன், குருடு, செவிடு, பேடு போன்ற குறைகளை நீக்கி, பல நோய்களுக்கு மருந்தளித்து, ஞானத்தை போதித்தவர். கார்த்திகை மாதம் மூல நட்சத்திர நாளன்று, இவர் ஞானமலை முருகன் திருவடிகளில் கலந்தார். இந்த அற்புதச் செய்தியை 2010ம் ஆண்டு அக்டோபர் நாலாம் நாள் நள்ளிரவில் உணர்த்தியதோடு, முருகன் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தூணில் ஞானவெளிச் சித்தரின் உருவத்தைக் காட்டி அருள்பாலித்தான் முருகன். அவர் சமாதி கொண்ட இடத்தில்தான் ஞானகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
இம்மலையில் இரண்டு குகைகள் உள்ளன. பாலசித்தருக்குப் பிறகு மற்றொரு சித்தர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தவமியற்றியுள்ளார். மலையின் அடி வாரத்தில் அவருக்கான சமாதி உள்ளது.
ஞானகிரீஸ்வரர் திருக்கோயிலின் பின்புறம், ஞானபண்டித சுவாமி திருவடி பதிந்துள்ள மகா புனிதமான இடத்தைத் தரிசிக்கும்போது, நமக்கு அருணகிரிநாதர் வரலாறு நினைவுக்கு வர, பரவசம் அடைகிறோம். அவருக்குத் திருவடி காட்சியளித்து, யோகாநுபூதி அளித்ததற்கான சான்று இங்கே பதிந்துள்ள முருகனின் பாதச் சுவடுகளே! வள்ளியை மணந்துகொண்டு இங்கு வந்தபோது, இம்மலையில் முருகன் உலவியதாக மக்கள் நம்புகிறார்கள். 'ஞானம்’ என்பதற்கு திருவடி என்றும் பொருள். எனவே, ஞானமலை என்பதை திருவடி மலை என்றும் கூறலாம். 'ஞானமலை முருகன் திருவடிப் பூங்கோயில்’ இங்கே அருமையாகக் காட்சியளிக்கிறது. வேதங்களும் காணாத வேலனின் திருப்பாதங்கள் பதிந்த பரம பவித்திரமான இந்தப் புண்ணியபூமியில் நாம் உடலால் வலம்வர (அங்கப் பிரதட்சணம் செய்ய) இம்மண்டபம் உருவாகியுள்ளது. இங்கே அமர்ந்து ஜபம், தியானம் செய்யும்போது அற்புதமான ஒலி அதிர்வுகளை பலரும் உணர்ந்து அனுபவித்துள்ளனர். இங்கு அங்கப் பிரதட்சணம் செய்தால் நோய்கள் நீங்கும்; மகிழ்ச்சியான இல்லற வாழ்வு அமையும் என்பதை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.
ஞானமலையில் மிகுதியாகக் காணப்படுவது, வெப்பாலை என்னும் அரிய வகை மூலிகை மரம். இதற்கு மலை மல்லிகை, குடசப்பாலை என்றும் பெயர். தோல் சம்பந்தமான நோய் (சொரியாசிஸ்) வெண்குஷ்டம், மூட்டுவலி முதலான உபாதைகளுக்கு இம்மரத்தின் இலை அரிய மூலிகை யாகும். இதன் மிகச் சிறிய விதை, பாதாம் பருப்பின் சுவையுடையது. இம்மரத்தின் காற்று, தம்பதியருக்கு இல்லற இன்பத்தையும், குடும்ப ஒற்றுமையையும் அளிக்கிறது என்பது சித்த மருத்துவம் கூறும் உண்மை. மேலும், இங்குள்ள எலுமிச்சை மணம் கமழும் புல் மூலம் முகத்துக்்கு வசீகரம் அளிக்கும் தைலம் தயாரிக்கலாம்.
வள்ளிமலையில் வள்ளியை மணந்து, தணிகைமலை செல்லும் வழியில் முருகன் முதலில் வள்ளியுடன் பொழுதுபோக்கிய பெருமையுடையது ஞானமலை. எனவே, இம்மலைக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு ஆனந்தமான வாழ்வையும், மன அமைதியையும் அளித்து மகிழ்விக்கிறான் அந்த வள்ளி மணாளன். இம்மலைக்கு வடமேற்கில் வள்ளிமலையும் வடகிழக்கில் தணிகை மலையும் சமஅளவு (35 கி.மீ) தூரத்தில் அமைந்துள்ளது. மூன்றும் ஒரு முக்கோண வடிவில் அமைந்திருப்பதும், இவற்றை முறையே காலை, பகல், மாலை என ஒரே நாளில் மூன்று வேளைகளில் தரிசிப்பதும் மிகவும் விசேஷம்!
மலை ஏறிச் செல்வதற்கு வசதியாகப்  படிகள் அமைத்துள்ளது ஞானாச்ரமம் அறக்கட்டளை அமைப்பு. நித்ய பூஜை ஏற்பாடு, மலையில் குடிநீர் வசதி முதலானவையும்  செய்யப்பட்டுள்ளன. ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலான விசேஷ நாட்களில் காவடி, பால்குடம் எடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகிறார்கள். கோயிலின் தென்புறம் வேல் பூஜை, லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை மற்றும் பொதுமக்கள் வசதிக்காக அன்னதானம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவும், தற்போது மிக பிரமாண்டமான 'ஞானவேல் மண்டபம்’ (2112 சதுர அடி அளவில்) உருவாகி வருகிறது. இம்மண்டபத் திருப்பணிக்கும், மேற் கொண்டு இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சிகளுக்கும் பொதுமக்களின் நன்கொடை பெரிதும் தேவைப்படுகிறது.
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 'ஞானாச்ரமம் திருமாளிகை’, 'செந்திலடிமை’ டாக்டர் எஸ்.சுந்தரம் அவர்களின் அரிய முயற்சியால் உருவாகியுள்ளது. இம் மாளிகையில் 'குறமகள்தழுவிய குமரன்’ அற்புதமான பஞ்சலோக வடிவம் தரிசித்து இன்புறத்தக்கது. ஆண்டுதோறும் அருணாகிரியாருக்கு காட்சி விழாவும், திருப்புகழ் திருப்படி விழா, லட்சார்ச்சனை போன்ற வைபவங்கள் ஞானாச்ரம அறக்கட்டளை மூலம் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோயிலில் பூஜை செய்து வரும் குமரேசன் குடும்பத்தார் ஞானாச்ரமம் திருமாளிகையில் வசித்து வருவதால், தரிசனத்துக்கு வரும் அன்பர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருகிறார். மலைமேல், தமிழ்நாடு வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டுப் பசுமையுடன் காட்சியளிக் கிறது. ஞானமலையின் ஒருபுறம் ஏரியும், மறுபுறம் வயல்களும் பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சியளிக்கின்றன. இந்தக் கிராமத்தில் கல்வி, மருத்துவம் போன்ற சமுதாயப் பணிகளிலும் ஞானாச்ரமம் அறக்கட்டளை ஆர் வமுடன் பங்கு கொண்டு செயலாற்றி வருகிறது.
திருப்புகழைப் பாடிப் பரப்பிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் போன்ற அருளாளர்கள் பலர் வழிபட்டு அருள்பெற்ற ஞானமலை முருகனை நாமும் சென்று வழிபடுவோம். உடலும் உள்ளமும் இன்புற்று மகிழ, ஞானபண்டித சுவாமியின் திருவருளை வேண்டுவோம்!

Comments