பாதை இனிது... பயணமும் இனிது!

இன்றைய இளைஞனின் வாழ்க்கை இடையறாத ஓட்டம் நிறைந்ததாக இருக்கிறது. கடும் போட்டிகளுக்கு இடையில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, வீடு, வாகனம் என அடுத்தடுத்த இலக்குகளை நோக்கிய நெடும் பயணமாக இருக்கிறது. எந்தச் சூழலிலும் நின்று நிதானிக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.
ஒருவாறு எல்லாவற்றையும் சமாளித்து அவர்கள் கால் ஊன்றுவதற்குள், நாற்பதுகளிலேயே நோய்கள் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிடுகின்றன. உடல் நலனை உதாசீனப்படுத்தி, கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைக் கொண்டே மீண்டும் உடல் நலனை மீட்க வேண்டியிருக்கிறது.
இதற்கு என்னதான் தீர்வு?
னிதருக்கு மனிதர் குறிக்கோள்கள் வேறுபடுகின்றன. பன்முகப்பட்ட குறிக்கோள்களே ஒரு மனிதனின் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன.
அப்படியான குறிக்கோள்கள் எத்தனைவிதமாக இருப்பினும்,  அதற்கான முயற்சிகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என, அவற்றை நான்காக வகுத்துக் கூறியுள்ளார்கள் நம் பெரியோர்கள்.  அவை... நற்செயல்களைச் செய்தல், முறையான வழியில் பணம் சம்பாதித்தல், ஒழுக்க நெறியில் புலன் இன்பங்களை அனுபவித்தல், பேரின்பத்தை உணர்தல்.
குறிக்கோளை நோக்கிய நமது பயணம், இப்படிப் பெரியோர் காட்டிய வழியில் அமைந்திருக்கிறதா?
ன்னும் சற்று ஆராய்ந்து பார்த்தால், தெரிந்தோ தெரியாமலோ மனிதனின் அத்தனை குறிக்கோள்களின் அடி நாதமாக இருப்பது இன்பம்தான்.
இன்பம் வேண்டும். பணத்தால் இன்பம் வேண்டும்; பதவியால் இன்பம் வேண்டும்; சொந்த வீடு கட்டி, அதில் குடிபுகும் இன்பம் வேண்டும்; திருமணத்தால் இன்பம், குழந்தைகளால் இன்பம் என மனிதனின் அனைத்துக் குறிக்கோள்களையும் இன்பம் என்ற ஒரு சொல்லுக்குள் அடக்கிவிடலாம்.
ஆக, ஆறுகள் அனைத்தும் கடலை நோக்கி ஓடுவதைப் போல, மனிதன் இன்பத்தைத் தேடி ஓடுகிறான். ஆனால் இன்பம் எனும் இலக்கை நோக்கிய அவனது பயணமும், அதற்கான பாதையும் இனிதானவையா?
இதற்கெல்லாம் பதில் தேடுவது எங்ஙனம்?
இங்குதான் திருக்குறள் முதலான அறநூல்கள், ஒரு தோழனைப் போன்று நமக்குத் தோள் கொடுக்கின்றன.
முற்பிறவி வினைப்பயன்கள், குடும்பச் சூழல், நட்பு வட்டம், வாழ்விடம் என எத்தனையோ விஷயங்களின் தாக்கத்தின் காரணமாக,   மனிதனுக்குப் பல்வேறு தனிப்பட்ட விருப்பங்களும் தேவைகளும் எழுகின்றன.

ஒவ்வொரு தனிமனிதனும், சமூகத்தின் ஓர் அங்கமாக விளங்கு கிறான். மனம் போன போக்கில் அவன் வாழ முடியாது. அவனது செயல்கள் சமூகத்தை பாதிப்பதால், அவனது ஆசைகளை அறநூல்களின் துணைகொண்டே அவன் சீர் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவை இன்பம் வேண்டும் என்ற நம் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு, உலக இன்பங்களை அனுபவிப்பது முதல், பேரின்பத்தை உணர்வது வரையிலான வழிமுறைகளைத் தெளிவுபடுத்தி, இருளடைந்த நம் வாழ்க்கைப் பாதையில் ஒளி பாய்ச்சுகின்றன.
ன்றைய இளைஞர்கள் கல்வியில், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறார்கள். குறிப்பாக, இந்திய இளைஞர்களின் அறிவுத் திறனை உலகமே போற்றும் காலம் இது.
அப்படியான நம் இளைஞர்கள், நம் தேசத்தின் செல்வமாக விளங்கும் மெய்யறிவுநூல் கருத்துக்களை அறிந்து, நம் ஆன்மிகத்தின் மேன்மையை உணர்ந்து அவற்றைக் கடைப்பிடிப்பதுடன், உலகுக்கும் வழங்க வேண்டும். இது, நம்முடைய பொறுப்பு மட்டுமல்ல, நம் தேசத்துப் பெரியோர்களுக்கு நாம் செலுத்தவேண்டிய கைம்மாறும்கூட!
ஆசை என்பது இயல்பானது. ஆசைப்படக்கூடாது என்று சநாதன தர்மம் கூறவில்லை. ஆசையை ஒழுங்குபடுத்திக் கொள்ளவே அது வழிகூறுகிறது.
'அறநெறி பிறழாத ஆசையின் வடிவம் நானே’ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறியிருக்கிறார். ஆசைகளைப் பற்றித் தெளிவாக அறிந்து, அவற்றை நெறிப்படுத்திக் கொண்டு செயலில் இறங்கினால், ஒருவன் செய்யும் செயலானது நற்செயலாக மலர்கிறது. இன்பத்தை வாரி வழங்குகிறது.
இதையேதான் திருவள்ளுவரும்,
'அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல’
என்று விளக்குகிறார்.
ஆமாம், நம் பெரியோர்களும் நமது அற நூல்களும் 'பணம் சம்பாதிக்கவே கூடாது’ என்று தடை செய்யவில்லை.
அர்த்த சாஸ்திரம் எனும் அறிவுநூல் களஞ்சியம், பொருளீட்டுவது குறித்து மிக அருமையாக விளக்குகிறது. வேறெங்கும் காண முடியாத பல நூறு நிர்வாகவியல் நுணுக்கங்களை மகாபாரதமும் திருக்குறளும் கூறுவதை அறிந்தால் நீங்கள் பிரமித்துப் போவீர்கள். அவற்றை அறிந்து முறையாகக் கடைப்பிடித்தால், பணம் உங்களை நாடி வரும்.
'செல்வம்’ என்பதற்குப் பணம் தாண்டி பல்வேறு அர்த்தங்கள் உண்டு என்பதை அறிந்தால், உங்கள் வாழ்க்கையில் அது தாராளமாக இருப்பதை நீங்கள் உணரலாம். அப்படி உணரும்போது உண்டாகும் நிம்மதிக்கு ஈடு இணையே இல்லை.
மொத்தத்தில், இன்பம் அல்லது ஆன்ம நலம் என்பது அறிவு நலம், மன நலம், சொல் நலம், செயல் நலம், உடல் நலம், உறவு நலம், பொருள் நலம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்தது.
இவற்றை அடைவது எப்படி?
'ஆன்ம நலம்’ எனும் அந்த இனிய இலக்கை நம்மாலும் எட்ட இயலுமா?

Comments