அடிலெய்ட் கணேஷ் மந்திர்

ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகரில் அமைந்திருக்கும் விநாயகர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமலை திருப்பதியில் உள்ளது போன்றே ‘ஹெலன்ஸ்பர்க்’கில் அமைந்த வேங்கடாசலபதி ஆலயத்துக்கு அடுத்து, ஆஸ்திரேலியாவில் அரும்பிய இந்துக் கோயில் இதுதான். இந்த ஆலயத்துக்கான தொடக்கம் 1989ஆம் ஆண்டு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் உருவான பிள்ளையார் விக்ரகம் கொண்டுவரப்பட்டு, இங்கு வழிபாடு தொடங்கியது. பிறகு, 2000ஆம் ஆண்டு, தமிழக பாணியில் ராஜ கோபுரத்துடன் கூடிய ஆலயம் அமைந்து கும்பாபிஷேகம் நடந்தேறியது. இதற்காக, ஆறு மாதங்கள் இங்கேயே தங்கியிருந்து தங்கள் உழைப்பைச் செலுத்தினார்கள் தமிழகத்திலிருந்து வந்த ஸ்தபதிகள்.
பிரதான மூர்த்தி விநாயகர்தான் என்றாலும், பல்வேறு தெய்வ மூர்த்திகளும் இங்கே எழுந்தருளியுள்ளனர். மிகத் தூய்மையுடன் துலங்குகின்ற இந்த ஆலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை. இதனால் பகல் வேளையில் கதிரொளியும், இரவில் நிலவொளியும் ஆலயத்தை நிரப்புகின்றன. அதனாலேயே, ஆலயத்தின் தெய்வீக அழகு மேலும் பரிமளிக்கிறது.
விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, சிவராத்திரி, கந்த சஷ்டி, சரஸ்வதி பூஜை, துர்கா பூஜை உள்ளிட்ட திருநாட்களும், விளக்கு பூஜை வைபவங்களும் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றன. தவிர, வழிபாடு மட்டுமே நடக்கின்ற ஆலயமாக மட்டுமின்றி; கலை நிகழ்ச்சிகள், ஹிந்தி மற்றும் தமிழ் வகுப்புகள், பரத நாட்டியம், யோகா மற்றும் திருமணம் என்று பல்வேறு அம்சங்களும் இந்த ஆலயத்தை மையப்படுத்தி நிகழ்கின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் பஜன்கள் பாடப்படுவது, செவ்வாய்க்கிழமைகளில் ஹனுமான் சாலிசா பாராயணம் என்று ஆன்மிக மணம் கமழ்கிறது அடிலெய்ட் கணேஷ் மந்திரில்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, சமையலறை ஷெல்பில் இரண்டொரு ஸ்வாமி படங்களை மட்டுமே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு, இன்றைய வரப்பிரசாதமாகத் திகழ்வது இந்த கணேஷ் மந்திர் என்றால், அது மிகையில்லை.

Comments