ஷஷ்டியப்த பூர்த்தியை கொண்டாட வேண்டுமா?

ஷஷ்டியப்த பூர்த்தியை கொண்டாட வேண்டுமா?

‘ஷஷ்டி’ என்றால் அறுபது, ‘பூர்த்தி’ என்றால் நிறைவு. அறுபது ஆண்டுகள் நிறைவடையும் நாளை ‘ஷஷ்டியப்த பூர்த்தி கல்யாணம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தவனுக்கு அறுபது ஆண்டுகள் (வயது) முடிந்து அறுபத்தி ஓராவது ஆண்டு (வயது) ஆரம்பமாகும் நாள் அவனது வாழ்க்கையில் முக்கியமான நாள். அதாவது, அன்றுதான் அவன் பிறந்த நாளன்று எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த ராசிகளில் இருந்ததோ அந்த ஒன்பது கிரகங்களும் அதே ராசியில் நிற்கும் நாள்.
அந்த நாளில் அவனது கண், காது, மூக்கு, நாக்கு, தோல் முதலான இந்த்ரியங்களின் செயல்பாடுகள் வலுவிழந்து விடும். அத்துடன் அவனது உடலில் ஒருசில மாற்றங்கள் ஏற்படும். ஆகவே, அந்த தோஷங்களைப் போக்கி மறுபடியும் பஞ்ச இந்த்ரியங்களுக்கும், மனதுக்கும் சக்தியைக் கூட்டி அவனது ஆயுளை நீட்டிக்கச் செய்ய வேண்டும். அந்த (61ஆவது) ஆண்டில் நுழையும் மனிதனின் உடலில் சிற்சில கெடுதல்களை உண்டாக்கும் காலயவனன், ஸுதூம்ரன் என்னும் நமது கண்களுக்குத் தெரியாத ஒருசில துஷ்ட தேவதைகளின் உபாதைகளிலிருந்து பாதுகாப்பு வேண்டும். 61ஆவது வயது ஆரம்பமாகும் நாளன்று, ம்ருத்யுஞ்ஜயன் (சிவன்) மற்றும் அஸ்வத்தாமா, மஹாபலி, வேத வியாஸர், ஹனுமான், விபீஷணன், கிருபாசார்யார், பரசுராமர் ஆகிய ஏழு சிரஞ்சீவிகளையும், மார்க்கண்டேயர் முதலானவர்களையும், நவகிரகம் முதலான தெய்வங்களையும் பூஜை (ஜபம், ஹோமம்) செய்து திருமாங்கல்ய தாரணம் செய்ய வேண்டும்.
இதுவே ‘ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி’ எனப்படுகிறது. ஆகவே, இவ்விதமான சாந்தியை ஒவ்வொருவரும் அந்தக் குறிப்பிட்ட (61ஆவது வயது ஆரம்பமாகும் ) நாளன்று கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார் சௌனகர் என்னும் மஹரிஷி தனது ‘சதுர் வர்க்க சிந்தாமணி’ என்னும் புத்தகத்தில். மேலும்,ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியை முறையாகச் செய்து கொள்வதால் அவரது ஆயுள் நீடிப்பதுடன், அவரது குடும்பத்தில் அவரது மகன், மகள், பேரன், பேத்தி முதலிய அனைவருக்கும் இது ஒரு பரிகாரமாகவும் அமைகிறது.


சுயம்பு மூர்த்தி’ என்பதன் பொருள் என்ன?

ஸ்வயம்: தானாகவே, பூ : உருவானது. ஸ்வயம்பூ என்றால் தானாகவே உருவானது என்று பொருள். ஆலயங்களில் கருவறையில் அமைக்கப்பட்டிருக்கும் மூலவர் சிலைகள் (லிங்கங்கள்) அனேகமாக யாரோ ஒரு சித்த புருஷரால் அல்லது மஹரிஷிகளால் அல்லது ஒரு மஹானால் முறையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால், மிகவும் அரிதாக சில ஆலயங்களில் மட்டும் எந்தஒரு மனிதனாலோ மகரிஷிகளாலோ பிரதிஷ்டை செய்யப்படாமல் பக்தருக்கு அருள் செய்வதற்காக, இறைவன் தானாகவே மூல சிலைகளாக (லிங்கங்களாக) தோன்றியிருப்பார். இப்படிப்பட்ட தெய்வ (மூர்த்திகள்) லிங்கங்கள், ‘ஸ்வயம்பூ மூர்த்திகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
திருநள்ளாறு, தர்ப்பாரண்யேஸ்வரர் என்னும் திருநள்ளாற்றீஸ்வரர், திருச்சி மலைக்கோட்டையிலுள்ள தாயுமானவர் என்னும் மாத்ரு பூதேஸ்வரர், கும்பகோணம் அருகில் கஞ்சனூரிலுள்ள அக்னீஸ்வரர், திருக்கருகாவூரிலுள்ள மாதவி வனேஸ்வரர் என்னும் முல்லை வனநாதர் போன்ற மூர்த்திகள் ஸ்வயம்பு மூர்த்திகள் எனப்படும். ஆகவே, மற்ற ஆலயங்களில் ரிஷிகளால், சித்தர்களால், பக்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இறைவனை, மூலவரைவிட இப்படிப்பட்ட ஸ்வயம்பூ மூர்த்திகளான இறைவனுக்கு அருட்சக்தி மிகவும் அதிகம்.

எள் (கறுப்பு) அசுப காரியங்களுக்குப் பயன்படுத்துவதும், அதைக் கையில் கொடுப்பதும், வாங்குவதும் கூடாது என்கிறார்களே, ஏன்?


ஒரு கல்பத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் உடலிலிருந்து தோன்றியது எள் தானியம். ஒருவர் செய்த அனைத்துப் பாபங்களையும் போக்கடிக்கும் தன்மையுடையது இது. செடிகளில் காக்கும் எள், தோலுடன் கூடினதாக இருக்கும்போது கறுப்பு நிறத்தில் காணப்படும். அதன் தோலை உரித்த பின்னர் அது வெண்மை நிறமாகக் காணப்படும். ஆக, கறுப்பு எள் என்றும் வெளுப்பு எள் என்றும் இருவகைப்படும்,
கருப்பு நிறமுள்ள எள் மறைந்த முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) மகிழ்ச்சியைத் தரவல்லது. ஆகவேதான், பித்ருகளுக்கு நாம் அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணம் செய்யும்போதும், வருஷா வருஷம் சிராத்தம் (திதி) செய்யும்போதும், கறுப்பு எள்ளை உபயோகிக்கிறோம். கருப்பு எள் இல்லாமல் பித்ருக்களுக்கான காரியங்கள் செய்யப்படுவது இல்லை.
அதைப்போலவே வெளுப்பு நிறமுள்ள எள் தானியம் சிவன், விஷ்ணு, அம்மன் போன்ற அனைத்து தெய்வங்களுக்கும் மகிழ்ச்சியைத் தர வல்லது. ஆகவேதான், தெய்வங்களுக்காகச் செய்யப்படும் பல்வேறு ஹோமங்களிலும் வெளுப்பு எள் உபயோகிக்கப்படுகிறது. கணபதி ஹோமத்தில் உபயோகிக்கும் அஷ்ட திரவியங்களுள் (எட்டு விதமான ஹோமப் பொருட்களுள்) ஸ்வேத திலம் என்னும் வெளுப்பு எள்ளும் ஒன்று. அம்மனுக்காகச் செய்யப்படும் சண்டீ ஹோமம் மற்றும் விஷ்ணுவுக்காகச் செய்யும் ஸுதர்சன ஹோமங்களிலும் வெளுப்பு எள்ளே முக்கிய திரவியமாக உபயோகிக்கப்படுகிறது.
பொதுவாக, சுப காரியம் என்றால் தெய்வ வழிபாடு என்றும், அசுப காரியம் என்றால் பித்ருக்களின் வழிபாடு என்றும் கருதப்படுகிறது. ஆனால், தெய்வ வழிபாடு, முன்னோர்கள் (பித்ரு) வழிபாடு ஆகிய இரண்டுமே மங்கலகரமான செயல்கள்தான். அவற்றால் நன்மையே கிடைக்கும். மேலும், ஒருவரிடமிருந்து எள்ளு தானியத்தைப் பெற்றுக் கொள்வதும், மற்றவருக்குத் தருவதும் தவறல்ல. சாஸ்திரம் இதைத் தடுக்கவில்லை. மாறாக, மற்றவரிடமிருந்து கடனாக எள்ளை வாங்கக் கூடாது என்றும், கடனாக எள்ளை தரக் கூடாது என்றும்தான் தெரிவிக்கிறது.
 

Comments