எம்பார் கேட்ட கீதம்

ஸ்ரீரங்கத்தில் ஒருநாள் - வைகறைப் பொழுது. காவிரியில் நீராடி, இடுப்பிலே ஈரம் தோய்ந்த காவி உடை; கையிலே திரிதண்டம்; பக்தி சுலோகங்களை முணுமுணுத்தவாறு மடத்தினை நோக்கி வந்து கொண்டிருந்தார் ராமானுஜரின் சீடர் எம்பார்.
திருவரங்கத்தின் வீதியில் ஒரு வீட்டிலிருந்து வந்த பெண் குரலிலே இழைந்த கீதம் அவருடைய செவிகளில் பாய்ந்தது. மறுகணம் சுலோகத்திலே தோய்ந்திருந்த அவருடைய நெஞ்சு பாட்டின் லயத்திலே ஒன்றியது. வாய் சுலோகங்களைச் சொல்வதை விட்டது. அவரது கால்கள் இசை வந்த திசையில் அந்த வீட்டின் வாயிலில் அவரை நிறுத்தின. தன்னை மறந்தார். தான் ஒரு சன்னியாசி என்பதையும் மறந்தார். தான் யார் வீட்டின் முன்னால் நிற்கிறோம் என்ற சிந்தனையும் இல்லை. கண்களில் நீர் பெருக நின்றார்.
தான் எவ்வளவு நேரம் நின்றோம் என்பதும் அவருக்குத் தெரியாது. ஆனால், அந்தத் தெருவில் வந்து போவோருக்கு அது தெரியும். இவருடைய கோலத்தினையும், அந்த வீட்டுக்கு உரியவளையும், அவர் நின்ற நிலையையும் தொடர்புப்படுத்தி சிலர் முகம் சுழித்தனர். சிலர், ‘கருமம் கருமம்... இப்படியும் ஒரு வெளிவேஷமோ?’ என்று கூறிச் சென்றனர்.
சில வைணவ அடியார்கள் இக்காட்சிக் கண்டு துணுக்குற்று, காவிரிக்கு நீராடப் போவதையும் விட்டு, ராமானுஜருடைய மடத்துக்குச் சென்றனர்.
ராமானுஜர் அவர்களைப் பார்த்து, என்ன... அதிகாலையில்... இன்னும் நீராடக்கூட இல்லை போலிருக்கிறது?" என்றார்.
ஆம். ஒரு அபச்சாரச் செயல் நிகழ்ந்துவிட்டது. உம்முடைய பிரிய சீடர் எம்பார், குளித்து மடியாக ஒரு தாசியினுடைய வீட்டின் முன் கண்ணீர் பெருக நின்று தவம் கிடக்கிறார்" என்று ஒருவர் சொல்ல, உடன் வந்தவர்களும் எம்பாரைப் பற்றி பலவாறு இகழ்ந்து பேசினர்.
இவ்வாறு அவர்கள் சொல்லியும் ராமானுஜர் சஞ்சலம் அடையவில்லை. ‘எம்பாரா? ஒருக்காலும் இருக்கவே இருக்காது’ என்றது அவர் மனம். எம்பார் சன்னியாசம் பூணுவதற்கு முன்னால் ஒரு நாள் மடத்தில் நடந்த நிகழ்ச்சி அவர் மனத்திரையில் ஓடியது.
எம்பாரின் பழைய பெயர் கோவிந்தர். இவருடைய தாய்மடத்துக்கு வந்து கோவிந்தா! ராமானுஜர் சிறந்த மனிதர்; தெய்வத்தின் அவதாரம்தான்; அவரை குருவாக நினைத்து நீ கொண்டாடுவது எனக்கும் இஷ்டம்தான். ஆனாலும், முழுமையாக வீட்டை மறந்து விடலாமா? என்னை வேண்டுமானாலும் மறந்துவிடு. ஆனால் உன்னை நம்பி உன் கரம் பற்றினாளே - அந்த அபலை - அவளை மறக்கலாமா? அவள் வயிறு வாய்க்கப்பெற வேண்டாமா?" என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டிருந்தாள்.
தாயின் புலம்பலைக் கேட்ட ராமானுஜர் கோவிந்தா, நீ இன்று இரவு உன் வீட்டில் போய் மனைவியோடு தங்கி வரவேண்டும். இது என் கட்டளை" என்றார்.
ஸ்வாமி! தங்கள் கட்டளைக்குப் பணிகிறேன். ஆனால், இன்று ஒரு நாள் மட்டும்தான் - அதற்குமேல் இல்லை?" என்றார் கோவிந்தர்.
ஒருவேளை, ஒரு நாள் இரவின் ருசி தொடர்ந்து பிணைப்பினை உண்டாக்கும் என்ற நம்பிக்கையில் குரு சரி" என்றார்.
மறுநாள் காலை விடிந்ததும் விடியாததுமாக மடத்துக்கு வந்து குருவின் அடிபணிந்தார் கோவிந்தர்.
கோவிந்தா! நேற்றைய இரவின் தனிமை ருசித்ததோ?" குருவின் கேள்வி.
ஸ்வாமி! தனிமையா? ‘எங்கும் நீக்கமற அந்தர் யாமியாய் இறைவன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான்’ என்று தாங்கள் அடிக்கடி சொல்லுவீரே - அது நேற்று இரவுக்கு மட்டும் இல்லாது போகுமோ? அந்தர்யாமி பிரகாசிக்கின்றபொழுது அழிச்சாட்டம் கூடுமோ? நேற்றைய இரவு பாம்போடு வாழ்ந்த இரவு ஸ்வாமி! அது எப்படி ருசிக்கும்?" என்றார் கோவிந்தர்.
கோவிந்தரின் உலகியல் வாழ்க்கையில் சிறிதும் நாட்டமில்லாத தன்மையை உணர்ந்த ராமானுஜர் கோவிந்தருக்கு காஷாயமும் திரிதண்டமும் தந்து சன்னியாசி ஆக்கினார். சன்னியாசம் கொள்ளுகின்ற பொழுது இடப்படும் பெயராக, தம்முடைய பெயராகிய ‘எம்பெருமானார்’ என்பதையே ‘எம்பார்’ என்று சுருக்கி கோவிந்தருக்கு இட்டார்.
விரக்தியே வடிவான எம்பார் இன்று இந்நிலைக்கு ஆளானார் என்று அடியார்கள் சொல்லியதை ஏற்க மறுத்தது ராமானுஜர் உள்ளம்.
மடத்துக்குள் நீராடி வருகின்ற எம்பாரின் பக்தியில் தோய்ந்த சுலோகங்களின் முணுமுணுப்பு ராமானுஜரின் சிந்தனையைக் கலைத்தது.
எம்பாரே! இங்கே வாரும்."
சொல்லுங்கள் ஸ்வாமி?"
இன்று நீராடிவர இவ்வளவு நேரம் ஏன்?"
ஸ்வாமி! வருகின்ற வழியில் ஒரு வீட்டில் இருந்து வந்த பாட்டின் லயத்திலே ஈர்க்கப்பட்டேன். நேரம் போனதே தெரியவில்லை."
ஓகோ! சிருங்காரப் பாடல் லயத்திலே தோய்ந்தீரோ?" சற்று காரமாகவே கேட்டார்.
ஸ்வாமி! அதனினும் உயர்ந்தது அப்பாடல். அதற்கு இணை எவ்வுலகிலும் இல்லை. அதுவோ தாலாட்டுப் பாடல். அவ்வீட்டுக்குரியவள் தன் குழந்தையைத் தூங்க வைக்க எத்தனையோ கதைகளைத் தாலாட்டுப் பாடலாகப் பாடியிருக்கலாம். எல்லாவற்றையும் விட்டு, உம்முடைய பெருமைகளையே பாடல் பொருளாக அமைத்துப் பாடினாள். அப்பாட்டு என்னை ஈர்க்காமல் என்ன செய்யும்?" என்று அவள் பாடிய ஒரு பாடலை உணர்ச்சிப் பெருக்கோடு பாடிக் காட்டினார்.
சித்திரையில் ஆதிரைநாள்
சிறப்புறவே பிறந்தவனே
இத்தரையில் நான்மறையும்
விளங்க வைத்தாய்! மாறனடி
பக்தியுடன் பணிந்துய்ந்தாய்!
பெரும் புதூர்ப் புண்ணியனே
முத்திதரும் மழைமுகிலே!
மாமணியே! தாலேலோ!
எம்பாரே! என் மீது கொண்ட பற்றினால் - பக்தியினால் - என்னைப் பற்றிய பாடல் உம்மை ஈர்த்தது என்றீர். அது ஒருபுறம் இருக்கட்டும். நீர் நின்று பாட்டுக் கேட்ட வீடோ ஒரு தாசிக்குரியது. உம்முடைய கோலமோ சன்னியாசிக்குரியது. இந்நிலையில் பார்ப்பவர்கள் என்ன நினைப்பர்?"
குருவே யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். எந்தப் பிறப்பினராக இருப்பினும், எக்குற்றம் புரிந்தவராக இருப்பினும், எத்தகைய இயல்பினரானாலும் உம்முடைய பெயரை ஓதுபவர்களே எனக்கு நல்லவர்கள்; என்னால் வணங்கத் தக்கவர்கள்" என்று கூறி, குருவினை நமஸ்கரித்து மடத்தின் உள்ளே சென்று விட்டார் எம்பார்.
ராமானுஜர், குறைகூறி வந்தவர்கள் நின்ற இடத்தைப் பார்த்தார். அது வெற்றிடமாக இருந்தது.

 

Comments