பஞ்ச யக்ஞம்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பல்வேறு ஆன்மிக சாதனைகளை யக்ஞங்களாகக் குறிப்பிடுகிறார்.
த்ரவ்யயக்ஞாஸ்தபோயக்ஞா:
யோகயக்ஞாஸ்ததாபரே I
ஸ்வாத்யாயக்ஞாநயக்ஞாஸ்ச யதய:
ஸம்ஸிதவ்ரதா: II
(ஸ்ரீமத்பகவத்கீதை 4-28)
தானம் செய்வதான யக்ஞத்தைச் செய்பவர்கள், தவம் செய்வதான யக்ஞத்தைச் செய்பவர்கள், யோகமாகிய யக்ஞத்தைச் செய்வோர், ஓதுவதாகிய யக்ஞத்தைச் செய்பவர்கள் மேலும் மெய்யறிவைப் பெறுதலாகிய யக்ஞத்தைச் செய்பவர்களாக இம்முயற்சியுடையவர்கள் தங்கள் உள்ளத்தை நெறிப்படுத்திப் பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள்.
மனதை நெறிப்படுத்த பதஞ்சலி மகரிஷி அருளிய யோகஸூத்திரத்துக்கு நிகராக ஒரு நூலும் உலகில் இல்லை. அதில் அவர் பல்வேறு யோக சாதனைகளைக் கூறியுள்ளார். யோக யக்ஞம் என்றால் யமம், நியமம், ஆஸநம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணா, தியானம், ஸமாதி எனப்படும் அஷ்டாங்க யோகத்தைக் கடைப்பிடித்தல்.
யமம் எனப்படும் செய்யக் கூடாதவை - அகிம்சை (கொல்லாமை, இன்னா செய்யாமை), ஸத்யம் (வாய்மை), அஸ்தே யம் (கள்ளாமை), அபரிக்ரஹம் (பொருள்மிகப் படையாமை), பிரம்மசர்யம் (புலன்வழிச் செல்லாமை).
அறங்களின் சிகரமாக விளங்குவது அகிம்சை - பிற உயிர்களைத் துன்புறுத்தாமையாகும்.
அகிம்சை என்பது பிறரை உடலளவில் அடித்துத் துன்புறுத்துவது மட்டுமல்ல; சொற்களால் பிறரைக் காயப்படுத்தாமல் இருப்பதும் அகிம்சையின் முக்கியமான பரிமாணமாகும்.
நாவினால் சுட்ட வடு எளிதில் ஆறுவதில்லை என்பதை நினைவில் கொண்டு, மிகுந்த விழிப்புணர்வோடு சொற்களைக் கையாளுதல் வேண்டும்.
நம்மைப் போன்றே ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து, பிற உயிர்களை மதித்து நடத்தல் அகிம்சையாகும்.
மனதளவில்கூட பிறருக்குத் தீங்கு நினையாமல் இருத்தல் வேண்டும். நம் தேசத்தின் சுதந்திர வரலாற்றின் அடித்தளமாக விளங்குவது அகிம்சை.
உடல், வாக்கு, மனதால் பிறரைத் துன்புறுத்தாமல் அகிம்சையைக் கடைப்பிடித்தல் ஒரு சிறந்த ஆன்மிகப் பயிற்சியாகும். அதனை ஓர் யக்ஞமாகவே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.
அடுத்து, வாய்மை என்ற பண்பு மிக முக்கியமானது. உண்மை பேசுவதைக் காட்டிலும் பொய் பேசாமல் இருப்பதைத்தான் இந்தப் பண்பு வலியுறுத்துகிறது.
உண்மை பேசுதல் என்ற உயர்பண்பு உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. நீரானது புறத்தைத் தூய்மைப்படுத்துகிறது. வாய்மையோ அகத்தைத் தூய்மைப்படுத்துகிறது. அதனால்தான் அதனைத் தவத்தைக் காட்டிலும், தானத்தைக் காட்டிலும் உயர்ந்ததொரு பண்பாகக் கூறுகிறார் திருவள்ளுவர்.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை (குறள் : 295)
ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானாயின், அவன் தவமும் தானமும் ஒருங்கே ஆற்றுவோரை விடச் சிறந்தவன் ஆவான் என்கிறார்.
மூன்றாவது, கள்ளாமை - அதாவது பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளாமை. நவீன யுகத்தில் மனிதனின் பேராசை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிறரது பொருளைக் கவர வேண்டும், எல்லாவற்றையும் தாமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பை சமூகத்தில் பரவலாகக் காண முடிகிறது. தன் கடமையைச் செய்வதற்கே லஞ்சம் கேட்போர், மறைமுகமாகப் பிறர் பொருளை தனக்கு உரிமையாக்கிக் கொள்ள முயலுகிறார்கள்.
மனதால்கூட பிறர் பொருளை அபகரிக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. தனக்கு உரிமையல்லாத பொருளில் ஆசை வைத்தல், மனிதனை மிகப்பெரும் துன்பத்தில் ஆழ்த்திவிடும் என்பதை உணர்ந்து, இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இக்கருத்தை உணர்த்தவே திருவள்ளுவர்,
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் (திருக்குறள் : 282)
என்கிறார்.
அடுத்து, ஒரு முக்கியமான பண்பு - பொருள் மிகப் படையாமை. எல்லோரது வீட்டிலும் தேவைக்கு அதிகமாகப் பல்வேறு பொருட்கள் இருக்கின்றன.
ஏதோ ஓர் ஆசையில் வாங்கியது, ஆர்வக் கோளாறில் சேர்த்தது எனப் பொருட்களுக்குப் பஞ்சமிருப்பதில்லை. ஆனால், பல பொருட்கள் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. பிறருக்குக் கொடுக்கவும் எளிதில் மனம் வருவதில்லை. விளைவு, வீடு முழுவதும் பொருட்கள் சேர்ந்துவிடுகிறது. தான் பயன்படுத்தாதவற்றைப் பிறருக்குக் கொடுத்து, தன் உடைமைகளைச் சுருக்கிக் கொள்ளுதல், வாழ்க்கைப் பயணத்தை அழகாக்கும்.
ஐந்தாவதாகக் கூறப்படும் பண்பு, புலன்வழிச் செல்லாமை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இன்றைய இளந்தலைமுறையினர் சிலர், குடும்பம் என்ற அமைப்பின் முக்கியத்துவத்தை உணராமல் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சமூக ஒழுக்கம், தனி மனித ஒழுக்கத்தைச் சார்ந்திருக்கிறது. தனி மனித ஒழுக்கம் பிரம்மசர்யம் என்ற உயர்ந்த பண்பில் நிலைபெற்றிருக்கிறது. ஆண் - பெண் உறவு ஒழுக்கத்தின் அடிப்படையில், குடும்பம் என்ற அமைப்பின் துணையோடு அமையும்போது, சமூகம் நலம் பெறும். அதனால்தான் பிரம்மசர்யம் முதலான ஒழுக்கங்கள் யக்ஞங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன

Comments