ஞானானந்தம்

ஒரே நேரத்தில்
குருவும் கோவிந்தனும்
வந்து நின்றால்
யார் பாதத்தை முதலில்
பணிவேன்?
அந்த கோவிந்தனைக் காட்டியதே
என் குரு அல்லவா?
அவரையே அவரையே
முதலில் தொழுவேன் நான்!
- ‘குரு கோவிந்த தோவுகடே’
என துவங்கும் கீர்த்தனத்தில் கபீர்தாஸர்
சத்குரு எழுதிக் கொடுத்த பத்திரத்தை குறுகுறுப்புடன், ஆர்வப் படபடப்புடன் வாங்கிப் பார்த்தவர்கள் அதிர்ந்து ஏன் போக வேண்டும்?
இருக்கிறது? காரணம்!
பொதுவாக - எழுதப்படும் பத்திரத்தில் ‘இன்னார் மகன் இன்னார், இன்னாருக்கு எழுதிக் கொடுக்கும்’என்றுதானே பதிவு செய்யப்படும்! சத்குருவும் தன் பூர்வோத்திரத்தைப் பட்டவர்த்தனமாகப் பதிவு செய்து வெளிப்படுத்தி ஆக வேண்டும் அல்லவா? எதிர்பார்ப்பு எல்லோரிடமும்!
ஆனால், குருநாதர் தன் திருக்கையால் எழுதிக் கொடுத்த பத்திரம் - ஆர்வக் கோளாறுக்காரர்களின் மீது வலிக்காமல் எய்த அஸ்திரம்!
10.10.1945 அன்றுதான் சத்குரு இந்தப் பத்திரத்தை தன் திருக்கையால் எழுதிக் கொடுத்தார்! என்ன கம்பீரமாகத் துவங்குகிறது பாருங்கள் சுவாமியின் பிரகடனம்!
ஞானானந்த ஆஸ்ரமத்தில் வசிக்கும் ஸ்ரீமத் சங்கராச்சாரிய ஸ்வாமிகள் பரம்பரையின் ஜோதிர்மயி பீடத்தைச் சேர்ந்த சுவரத்னகிரி ஸ்வாமிகள் சிஷ்யர் ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் ஆகிய நான்...
இப்படிப் போனது பத்திரத்தின் முதல் பக்கம்... ஆட்டையாம்பட்டியில் சில ஆண்டுகள்(!)தன் படைவீடு அமைத்துத் தங்கி இருந்த காலத்தில் இது எழுதப்பட்டதாகச் சொல்கிறார்கள். எப்போதானால் என்ன? ஸ்வாமியின் பிரகடன வாசகத்தில் மிளிரும் குருபக்தியின் பிரகாசத்தைப் பாருங்கள்!
பெரியாழ்வார் பாசுரத்தில் ‘எந்தை தந்தை, தந்தை தம் மூத்தப்பன்... ஏழ்படி கால் தொடங்கி வந்து வழி வழியாட் செய்கின்றோம்!’ என்று கம்பீரமாக விளம்புவது போல் - தம் குரு அவரது குரு - அந்தப் பரம்பரை என்பதையே தம் முகவரியாக, தம் மூல வரியாக சத்குரு - தம் கையெழுத்திலேயே எழுதிப் பதிவு செய்து தந்துள்ளது நமக்குக் கிடைத்துள்ள பிரமாணமான ஆவணம்! பிரமாதமான ஆவணம்! பிரசாதமான ஆவணம்!
ஏனெனில், ஞானானந்தம் தொடரின் பதிவுகள் - பாமரத்தனமான பார்வையில் சொல்லப்படும் சராசரிகளின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமோ அல்லது தொகுப்போ அல்ல! ஞானானந்த சத்குரு என்ற முடிவிலாப் பேரியக்கத்தில், நாம் அறியத்தக்கதாய் அவர் காட்டிய உபதேசங்களின் மையச்சரடே - குருபக்திதான்!
‘ஞானானந்த தரிசனம்’, ‘ஞானானுபவம்’, ‘ஞானானந்த விலாசம்’, ‘ஞான இன்பவெளி’, 'GURU AND DISCIPLE' என்ற அற்புதமான நூல்களின் மைய வைர இழையாக - பரவி ஓடி வெளிச்சம் காட்டுவது ‘குருபக்தி’... ‘குருபக்தி’... குருபக்திதானே!
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் மகா ஆசார்யனான உடையவர் ராமானுஜரை 108 செந்தமிழ் மலர்களால் அந்தாதி பாடிய திருவரங்கத்தமுதனார் ‘நயவேன் ஒரு தெய்வம் நாநிலத்தே!’ என்றும் ‘வேறொன்று மற்றில்லை நின் சரண் அன்றி!’ என்றும் ‘வைப்பாய வான்பொருள்’ என்றும் தன் குருநாதரைப் போற்றிப்பாடுவது - நமக்கு குரு பரம்பரை மகத்துவத்தை உணர்த்தத்தானே! அது மட்டுமல்ல; ஆசார்யனைப் பாடும் 108 சேர்க்கப்படவில்லையெனில் நாரணனைப் பாடும் பிரபந்தம் நாலாயிரமாகப் பூரணமாகி இருக்காதே!
இருக்கிறது இன்னொரு சூட்சுமம் இராமானுஜர் நூற்றந்தாதியிலே! ‘அந்தாதி’ என்ற யாப்பு கடைசிச் - சீரை தொட்டு அடுத்தப் பாட்டின் முதல் சீர் என்று அமையும்! குரு, பரமகுரு பரமேஷ்டி குரு... என்று இந்த ஞானச் சங்கிலி - ஒளிக் கோர்ப்பு வட்டக் கோலமாக சுழன்று கொண்டே வந்தது; வருகிறது; வரும் என்பதை முரசறைந்து மொழிகிறது!
ஜோதி வழி நடந்து தன் குருவைப் பற்றிய இந்தத் தொடர் நாயகராம் ஞானானந்தரைப் போலவே - ஆழ்வார் திருநகரியில் புளிய மரத்தடியில் சன்னிதி கொண்டிருந்த சடகோபரை ஜோதி வழிகாட்ட நடந்து கண்டுகொண்ட மதுரகவியாழ்வார், மன்பதைக்கு உரைக்கும் அருட் செய்தியும் குருபக்திதானே!
‘தேவு மற்றறியேன்!’ என்று தண்டமிழ்ப் பிரகடனம் செய்து, தன் குருவையே தெண்டனிட்ட மதுரகவியாழ்வாரின் பாசுரங்களைப் படித்துச் சுவைத்தால் மட்டுமே - ஞானானந்தம் சொல்லும் செய்தியின் சுவையையும் முழுமையாய் ரசிக்கலாம்!
நாவில் எல்லோருக்கும் எச்சில்தானே ஊறும்? இல்லையாம்! அமுது ஊறியதாம்! எப்படி? மதுரகவி ஆழ்வார் சொன்னார்: தென்திருகூர் நம்பி என் ஆச்சார்யன் திருநாமத்தைச் சொன்னேன்; ஊறியது அமுதம் என் நாவில்!"
குருவின் திருமேனி கண்ணுக்குத் தெளிவு! குருவின் திருநாமம் செப்புதல் நாவுக்கு சுகம்!
ஆனால், குருவின் திருப்பெயரை எப்படிச் சொல்வது? சொல்லலாமா? மரபு மீறல் இல்லையா? நம் தமிழ்த் தாத்தா உ.வே.சா. ‘என் சரித்திரம்’ என்று பெயரிட்டு விட்டு, தன் குருவான திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மகிமையைத் தான் நெடுகப் போற்றி இருப்பார். ஆனால் ‘பிள்ளை அவர்கள்’ என்றுதான் குறிப்பிடுவார்- தன் குருநாதரைக் குறிப்பிட! ஓர் இடத்தில் தவிர்க்க முடியாமல் அவரது பெயரை எழுதியே ஆகவேண்டிய இடத்தில், ‘என் குருவின் பெயரை எழுத என் கை நடுங்குகிறதே’ என்று தழுதழுத்திருப்பார்!
நம் தொடர் நாயகர், ‘ஞானானந்த சத்குரு’, இந்த தயக்கத்தைக் கடக்க மிகமிக அற்புதமாக ஒரு உத்தியைக் கண்டுபிடித்தார். எதற்கு? ஒரு நாள் விடாது உச்சரித்தே மகிழ வேண்டும் குருநாதர் சிவரத்னகிரி சுவாமிகளின் பெயரை! என்ன செய்திருப்பார் குருநாதர் என்கிறீர்கள்?
சூனியத்தின் உட்பொருள் உணர, அருள் என்ற மானியத்தை சீடர்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கும் குருநாதர் பெயரையே, அரிசி என்ற தானியத்துக்குச் சூட்டி விட்டார்!
ப்ரக்ஞான ப்ரும்மச்சாரியாய் இருந்த தன்னை ‘ஞானானந்தகிரி’ என்று தீட்சாய் நாமம் சூட்டி அருளிய சிவரத்னகிரி என்ற குரு நாமத்தை அனுதினம் உச்சரிக்க தோதாக, பிட்சா பாத்திரத்தில் விழும் அரிசிக்கு ஞானானந்தர் சூட்டிய நாமம் ‘ஜீவரத்தினம்!’
உண்மைதானே! நேர்நிகர் உவமை இலாப் பெயர் பொருத்தம்தானே! ஜீவனுக்கு ரத்னமாய் விளங்கி ஆன்மப்பசி போக்கும் குருநாதர் பெயரைச் சூட்டிக் கொண்டது, ஜீவர்களின் வயிற்றுப்பசி போக்கும் ‘அரிசி’ என்கின்ற சாமான்ய தானியம்!
திருக்கோயிலூரில் தபோவனத்தில் நடந்த ஒரு அற்புதமான சம்பவத்தைப் பார்ப்போமா!
சத்குரு ஞானானந்தர் கல்மேடையில் அமர்ந்திருக்கிறார்! ஒரு அன்பர் சமஸ்கிருத வித்தகர், கவிப் புலமைமிக்க அறிவாளர் ஞானானந்தர் மேல் அழகான சுலோகங்களால் பாமாலை கட்டி வந்து - சத்குருவின் அனுமதி பெற்றுப் பாடி வழங்கினார்.
அருமையான வரிகள்! ஞானானந்தர் மகத்துவத்தை துல்லியமாய் பிரகடனம் செய்த பிளாட்டின வரிகள்! கேட்டவர்கள் சொக்கிப் போனார்கள்!
ஆனால், ஞானானந்தரின் திருமுகமோ, பரவச ஜொலிப்பின்றி இருந்தது.
பொறுக்க முடியாத ஒரு பேரன்பர் மிக அழகான குரு ஸ்துதி நம் ஸ்வாமிக்கு!" என்றார்.
புருவத்தைத் தூக்கி அவரை ஒரு பார்வை பார்த்த படி சொன்னார் ஞானானந்தர், எல்லாம் சரி; நம் குருநாதரைப் பற்றி இல்லாதபோது சீர் இல்லையே!"
பதறிப்போனார் சுலோகம் எழுதியவர்! ஆம்!
‘சிவரத்னகிரி’ என்ற குருவின் நாமத்தை பதிவு செய்யாது விட்டு விட்டோமே - என்று பதறி -
சிவரத்னகிரி ஸ்வாமிகளின் திருப்பெயரை பதிவு செய்து மீண்டும் சுலோகத்தைப் படித்தார்!
திருவிழாவில் காணாமல் போய்விட்ட அம்மாவைக் கண்டுபிடித்துக் காலை இறுக்கிக் கட்டிக் கொண்டுவிடும் ஒரு குழந்தையின் பிரகாசச் சிரிப்பு இப்போதுதான் சத்குரு முகத்தில்!
குமார சம்பவம் போல நடந்த இந்த ‘குரு சம்பவம்’ வையத்துக்கு உரைத்த செய்தி - கண்ணி நுண் சிறுத்தாம்பு போல் வரும் குரு பரம்பரைச் சங்கிலியின் மகத்துவத்தை அடித்துப் பதிய வைக்கிறதில்லையா நம் ஆழ்மனங்களில்?
‘குரு என்பவர் தேவையா? ஏன் தேவை?" - இப்படி ஒரு கேள்வி அடாவடித்தனமாக அல்ல; அப்பாவித்தனமாகவே ஞானானந்தரை நோக்கி ஒரு தடவை கேட்கப்பட்டது!
இதற்குக் கொஞ்சமும் கோபமே படாமல் உவமையால் உள்ளக் கோணலை நிமிர்த்தி கருத்துக் சுளுக்கை நீவிச் சரி செய்தார் சத்குரு!
பசுமாடு வளர்ப்பவன், அதன் மீதுள்ள அக்கறையால் நீண்ட கயிறினால் அதைக் கட்டி இடம் பார்த்து மேய விட்டு விடுவான். பாதுகாப்பாக ஒரு வட்டத்துக்குள், புல்வெளிக்குள் சுற்றி வந்து மேய்ந்து வயிறு நிரம்ப சாப்பிடும் மாடு!" - விளக்கத்தை இப்படி ஆரம்பித்த குருநாதர், பிள்ளைக்குறும்பு விழிகளில் பிரகாசிக்க - ஒரு நொடி நிறுத்திவிட்டு....
ஆனால் - அவிழ்த்துவிட்ட மாடோ - கண்டபடி மேயும். பிறர் வயல்களில் அக்ரமமாகப் பிரவேசித்து பயிர்களை மாறி மாறி மேயும்! அடி வாங்கும்! ஓடும்! அடி வாங்கவும், ஓடவும் மட்டுமே நேரம் போய் பாவம்! மாலையில் வயிறு நிரம்பாமல் பட்டினியோடு கொட்டிலுக்கு வரும்!" என்று உவமைப் புதிர்போட்டு முழுமை செய்தார் தன் முத்திரை விளக்கத்தை!
ஒரு ஆச்சரியம் பாருங்கள்!
மதுரகவியாழ்வார், தன் குரு நம்மாழ்வார் மீது பாடியபோது சொன்ன ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற கயிறு உவமையை, ஞானானந்தர் அப்படியே கையாண்டிருக்கும் சூட்சுமம் பரவசப்படுத்துவது மட்டுமல்ல; நம்மை குருவசப்படுத்துவதும்தானே!
‘நிற்காத அன்னதானம்!’ ‘தட்டாத பாதபூஜை’ - என்று ஞானானந்தர் இருவரிக் கோட்பாடுகளில் நிற்காத அன்னதானம் செய்யத் தேவைப்படும் அரிசிக்கு ‘ஜீவரத்தினம்’ என்று தன் குருநாதரின் பெயரைச் சூட்டின சத்குரு, தட்டாத பாத பூஜையை - வடிமைத்த அழகே - ஒரு கவிதாமயமான உத்தி! மனத்தில் வடிவெடுத்த பரம குருவை பரமேஷ்டி குருவை மரத்தில் வடிவெடுத்த பாதுகைகளில் ஆவாகனம் செய்து வழிபடச் சொன்னார் (இன்றுவரை திருக்கோவிலூர் தபோவனத்தில் பாதபூஜை ஒரு நாள் பிசகாமல் நடைபெறுகிறது!)
ஆஹா! பாதுகை என்றால் தூப்புல் தந்த துய்ய மணிச்சோதி கவிதார்க்கிக கேசரி - ஆறே மணி நேரத்தில் பாதுகை மீது ஆயிரம் பாட்டுப் போட்ட நிகமாந்த மஹாதேசிகர் உடனே நினைவுக்கு வருகிறார்!
‘ரத்னப் பாதுகையே’ என்று விளித்து ‘ரத்நஸாமாந்ய பத்ததி’ என்ற தலைப்பில் வேதாந்த தேசிகப் பெருமான் அருளிய அரைநூறு பாடல்கள் ஒவ்வொன்றும் ரத்னம் தான்! (இது நவரத்தினம்; அது சிவரத்தினம்!!)
‘மஹார்க்கை’ எனத்துவங்கும் பாதுகா ஸ்தோத்திரத்தில் பாதுகைகளின் காரேய் கருணையில் மெய்சிலிர்த்த தேசிகர் ஒரு கட்டத்தில் ‘பாதுகைத் தாயே’ என்று பரவசித்து உச்சஸ்தாயியில் சன்னதம் எடுத்துப் பாடுவது ஒரு ‘உன்னதப் பாட்டு!’
ஞானானந்தருக்கோ - பாதுகை தாய் மட்டுமல்ல; தந்தை! தந்தை மட்டுமல்ல; ஞானகுரு! ஞானகுரு மட்டுமல்ல; பரமேச்வரனே ஆகும் அந்தப் பாதுகைகள்!
அப்படிப் பிரபாவம் கொண்ட பாதுகைகளுக்கு - அபிஷேக, ஆரத்தி பூஜை நடந்து கொண்டிருந்தது தபோவனத்தில் ஒரு நாள்! குருநாதர் நடத்தினார் அதை!
‘ஊரிலேன் காணி இல்லேன்!’ எனப் பாடிய தொண்டரடிப் பொடியாழ்வாராய் விழிநீர் மல்க - பாதுகைகளுக்கு பூஜை ஆரத்தி செய்தார் பரமகாருண்ய சத்குரு!
அப்போதுதான் முதல் முறையாக தபோவனத்துக்கு, வேடிக்கைப் பார்ப்பது போல வந்திருந்த ஒரு ஆரம்ப நிலை அன்பர் மனசில் ஒரு சந்தேகம். ‘தெய்வ சன்னிதிகள் இத்தனை இருக்க, இந்த சுவாமி என்ன போயும் போயும் சாதா மரச்செருப்புகளுக்கு இப்படி பூஜை நடத்துகிறார்!’
விவரம் தெரியாததால் - அந்த அன்பருக்குள் இந்த வில்லங்கமான கருத்து ஓடிய அடுத்த நொடி - ஞானானந்த சத்குரு - ஜொலி ஜொலிக்கும் வாள் நுனிக் கூர்மையுடன் அவரை நோக்கி விழிகளைத் திருப்பி - கண்ணாலேயே பக்கத்தில் வரச் சொல்லி கட்டளை இட்டார்.
அந்த அன்பர் திடுக்கிட்டு, சத்குரு பக்கத்திப் போய் நடுங்கியபடியே நின்றார். அவர் மட்டுமா நடுங்கினார்; சுற்றிநின்ற பக்தர்களும்தான்!

Comments