ரதத்தில் ராதை

பத்துடை அடியவர்க்கு எளியவன்; பிறர்க்கு அரிய வித்தகன் என்று போற்றப்படும் பகவானுக்கு, எப்போதும் பக்தர்களின் தோத்திரங்களால் மட்டுமே திருப்தி ஏற்படுவது இல்லை. அதனாலேயே, தானும் கெஞ்சி, கொஞ்சி, விளையாடி, குறும்புகள் செய்து தன் லீலா விநோதங்களால் நம்மையும் மகிழ்விக்கிறான். குழந்தையை மகிழ்விக்க அம்மா முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு ‘அம்மா காணும்’ என்று விளையாடுவாளே, அப்படி இதுவும் அவனைப் பொறுத்தவரை ஒரு விளையாட்டுதான். நமக்குத்தான் அதிலெழும் ஆனந்தம் அத்தனையும்.
அப்படியொரு ஆனந்தத்தை அளித்தது, ஸ்ரீ கிருஷ்ணாவதாரம். அதிலும், ஆனந்தப் பிழிவாக அமைந்தது கோபியருடன் அவன் நிகழ்த்திய ராசலீலை. ஆனால், ஸ்ரீ கிருஷ்ணனின் பெருமையைப் பேசும் ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதம் மற்றும் ஹரிவம்சம் உள்ளிட்ட எதிலுமே குறிப்பிடப்படாதவள் ஸ்ரீ ராதை. அவள்தான், மிகப் பெருமளவில் அனைவராலும் அறியப்பட்ட கிருஷ்ண ஜோடியாயிருக்கிறாள் என்பது நிஜம்.
அஷ்டபதி என்று சொல்லப்படுகின்ற கீத கோவிந்தத்தில் நாதனாக கிருஷ்ணனே திகழ்கிறான் என்றாலும், அதில் பெருமிதமிக்க தலைவி ஸ்ரீ ராதைதான். அவளுடைய வர்ணனைக்கு அப்பாற்பட்ட அன்பை எதிர்பார்த்துக் குழைகிறான் பரமாத்வான கிருஷ்ணன். ‘என்மேனி கொதிக்கிறதே, உன்னுடைய திருவடிகளை என்னுடைய தலையில் சூட்டமாட்டாயா’ என்று தவிக்கிறான். இங்கே தென்படுவது, லௌகீகமாகச் சொல்லப்படும் காதல் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால், அப்படியல்ல.
பிருந்தாவனத்துக்கு வந்த பக்த மீரா, அங்கிருந்த சாது ஒருவரை தரிசிக்க முயன்றாள். அவருடைய சீடர்கள், ‘எங்கள் குரு பெண்களைப் பார்க்கமாட்டார்’ என்று தெரிவித்து விட்டனர். மறுகணம், ‘கிருஷ்ணனைத் தவிர இன்னொரு ஆண் இங்கிருக்கிறான் என்று உங்கள் குரு நினைக்கிறாரா? அப்படியானால், அவரை நான் தரிசிக்க வேண்டாம்’ என்று சொன்ன மீரா போய்விட்டாள். இந்த பாவம் புரிந்தால்தான், ராதையைப் புரிந்து கொள்ள முடியும். ராசலீலையைப் புரிந்து கொள்ள முடியும். வாழ்க்கையின் சூட்சுமத்தை புரிந்து கொள்ள முடியும்.
வியாசர் அருளிய பிரம்ம வைவர்த்த புராணத்திலும், அதையடுத்து கர்க்க சம்ஹிதையிலும் ஸ்ரீ ராதாகிருஷ்ண சரிதம் சொல்லப்பட்டிருக்கிறது. பரம பவித்ரமான, ‘தான்’ என்கிற எண்ணமற்ற, தூய அன்புப் பிரவாகமே ராதா. அவள் வேறு; கண்ணன் வேறு அல்ல. அவள் ஒரு உருவகம்.
நீரும் குளிர்ச்சியும், சந்தனமும் மணமும், நெருப்பும் உஷ்ணமும் எப்படி பிரித்தறிய இயலாதவையோ அப்படித்தான் கண்ணனும் ராதையும். அந்த பிரேம பாவத்தை அதியுத்தம நிலையை பவித்ரமான அன்பால் அடையுங்கள். அந்த அன்புக்குத்தான் கிருஷ்ணன் வயப்படுகிறான் என்று உணர்த்துகிறாள் ராதை. அந்த நுட்பத்தைத்தான், கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.
அமெரிக்காவில், டெக்சாஸ் மாநிலத்தில், ராதா மாதவ் தாமில் உள்ள ஸ்ரீ ராசேஸ்வரி ராதா ராணி ஆலயத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீமதி ராதைக்கு தேர்த் திருவிழாவும் நடக்கிறது. தேரின் முன்னால் உற்சாகத் தோடு ஆடியவண்ணம் வருகிற பக்தர்களையும் காண்கிறோம். இத்தகைய உற்சாகமும், தூய அன்பும் தானே கண்ணனையும் ஆட்கொண்டன. தன் அன்புக்குரியவளான ராதைக்கு நடக்கும் இந்த தேர்த்திருவிழாவை கண்ணன் கண்டு இன்புற வேண்டாமா? அவனை எங்கே காணவில்லை என்றொரு வினா எழுகிறது. மறுகணம், ‘ராதா அமர்கிறாள் என்றால், அது கண்ணனின் மனத்தேராகத்தானே இருக்க முடியும்’ என்பது புரிபடுகிறது. அதை ஆமென்று உணர்த்துவது போன்றே ‘ராதே கிருஷ்ண’ கோஷமும் வாத்திய முழக்கத்தோடு காற்றை நிரப்புகிறது.

 

Comments