ராமனின் பெருமை!

இருபத்தோரு தலைமுறை அரச குலத்தவரைக் கொல்வதாக உறுதியெடுத்துக் கொண்டவர் பரசுராமர். காரணம், அவருடைய தகப்பனாரான ஜமதக்னி முனிவரை, கார்த்த வீர்யனின் புதல்வர்கள் வெட்டிக் கொன்றதுதான்.
அந்தப் பரசுராமனைக் கண்டு அஞ்சியவர்களுள் அயோத்தி மன்னர் தசரதனும் அடக்கம். தசரதனின் பிள்ளையான ஸ்ரீராமன் சிவதனுசை முறித்துப் புகழ்பெற்ற பிறகு, பரசுராமனின் கவனம் திசை மாறியது.
தன்னிடமுள்ள விஷ்ணு தனுசை வளைத்து நாணேற்றுமாறு பரசுராமன் கேட்க, ஸ்ரீராமன் அந்தச் சோதனையிலும் வெற்றி கண்டார். அத்துடன் தம்முடைய பாணத்துக்கும் இலக்குத் தேடினார். தம்முடைய எதிரியே ஆனாலும், பரசுராமரைக் கடுமையாக தண்டிக்க ஸ்ரீராமன் விரும்பவில்லை. அவரே விரும்பியவாறு சுவர்க்கம் புகுவதற்குத் தேவைப்படும் புண்ணியங்களை மட்டும் வாரிச் சென்றது இராமபாணம்.
உன்னிடம் தோற்றுப் போவதே எனக்குக் கிடைத்த வெற்றி" என்று சொல்லி மகிழ்ந்தார் பரசுராமர். அவருடைய கர்வம் முற்றிலும் அடங்கிப்போனது. தாய் ரேணுகையிடமிருந்து பெற்ற ராஜஸ குணம் நீங்கி, தகப்பனார் ஜமதக்னியிடம் இருந்த சத்வ குணம் சேர்ந்து கொண்டது.
அந்த நிலையில் பரசுராமர் என்னும் ‘தபோநிதி’யின் பாதங்களில் தம்முடைய தலையைப் பதித்து ‘ஷம்யதாம்’ (எனது குற்றத்தை மன்னித்து அருளுங்கள்) என்று சொல்லி வணங்கினாராம் ஸ்ரீராமன்!
‘தம்மால் வெல்லப்பட்டவர்கள் விஷயத்தில் விநயத்துடன் நடந்து கொள்வதே உத்தமமான வீரனுக்குப் புகழ் சேர்க்கும்’ என்பதால் அவர் அப்படி நடந்து கொண்டாராம்.
ஸ்ரீராமனால் வணங்கப்படக்கூடிய பெருமையுடையவர் பரசுராமர் என்பதால், ‘ரகுவம்ச’த்தில் இந்தக் கட்டத்தை விவரிக்கும் மகாகவி காளிதாஸர், ‘சரணோ தபோநிதே’ என்னும் பவித்ரமான சொற்களை மிகப் பொருத்தமாகப் பயன்படுத்துகிறார்

Comments