உலகுக்கே வழிகாட்டும் உத்தம காவியம் மகாபாரதம். ஆனால், திரௌபதியின் கதை நெருடலாக உள்ளதே! ஒரு பெண் ஐவரோடு இணைவது பொருத்தமாக தெரியவில்லை. பாரதத்தில் திரௌபதியின் இணைப்பு ஒரு களங்கம். அதைத் தவிர்த்திருந்தால், பண்பாடு காப்பாற்றப்பட்டிருக்கும் என்று கருதுகிறோம். இதுகுறித்து தங்களின் பாணியில் விளக்குங்களேன்.
முதல் கோணம்...
பொது அறத்தில் ஆண் பெண் என்கிற பேதம் இல்லை. ஒருத்திக்கு ஒருவன் என்றால், ஒருவனுக்கும் ஒருத்திதான். மனைவியை இழந்தவன் இன்னொரு பெண்ணை மனைவியாக ஏற்கிறான். 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற நீதியை அலட்சியப்படுத்துகிறான்.ஆனால், கணவனை இழந்த மனைவி இன்னொருவனைக் கணவனாக ஏற்பதில்லை. அவள் சட்டத்தை மதிக்கிறாள். மற்றொரு கணவனை ஏற்க மனம் விரும்பினாலும், சிந்தனையை ஆன்மிகத்தில் திருப்பி, தனது வாழ்க்கையை துயரம் தொடாமல் செய்கிறாள். அவளுக்கு மனதை அடக்கவும், சட்டத்தை ஏற்கவும் தெம்பு இருக்கிறது. இதை ஆராயும்போது ஆண்மையைவிட பெண்மை உயர்ந்தது என்பதை அறியமுடிகிறது. 'பெண்ணானவள் பொறுமையை ஏற்று சமுதாயக் கட்டுக்கோப்பைக் காப்பாற்றுகிறாள்’ என்று வராஹமிஹிரர் ப்ருஹத் ஸம்ஹிதையில் கூறுகிறார்.
அதற்காக... மாற்றுக்கண்ணோட்டத்துடன், ஆண் சட்டத்தை மீறி சுயநலத்தில் இணைந்தது போன்று, பெண்மையும் சட்டத்தை மீறி செயல்படுவது தகும் என்றும், இந்த விஷயத்தில் பெண்மைக்கும் சம உரிமை உண்டு என்றும் சொல்வது பொருந்தாது. மனித நாகரிகத்தில் இருந்து விலங்கினத்துக்குச் சமமாக கீழிறங்கும் செயலை
உரிமையாக ஏற்பது சிந்தனையாளர்களுக்கு அழகல்ல.
? சரிதான்! ஆனால் அப்படியொரு சிந்தனைக்கு புராணக் கதாபாத்திரங்கள் உதாரணமாகிவிடக் கூடாது அல்லவா?
இதற்கு பதில் அறியுமுன், முற்காலத்தையும் சமகாலத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை ஏற்கும் அரசர்கள் அந்நாளில் இருந்தார்கள். செல்வந்தர்களிலும் இதை பின்பற்றுபவர்கள் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருப்பதை, ஆண்மையின் அடையாளமாக, பெருமையாகக் கருதியது உண்டு. பிற்காலத்தில் சாதாரணக் குடிமகன்களிலும்... சின்ன வீடு என ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைத் தேர்ந்தெடுக்க துணிந்தவர்களும் உண்டு. சிற்றின்ப சபலத்தை அடக்க முடியாமல் தவிப்பதில் பெண்மையைவிடவும் ஆண்மை அதிகம் தவித்தது. பெண்மையின் சபலத்தைக் கண்ட ஆணாதிக்கம், கற்பின் பெருமையை விளக்கி பெண்மைக்கு வேலி அமைத்தது. இங்கு இருவேறு கண்ணோட்டத்தில் ஆண்மை விளையாடியது.
தற்போது கற்பின் பெருமை சரிந்து, சம உரிமை வென்றது. காதலியும் மனைவியும் ஒன்றாக இல்லாதவர்களும் தென்படுகிறார்கள். கணவனை இழந்தவர்களும், இழக்காதவர்களும் வேறொரு கணவனைத் தேடுவதில் சுணக்கம் காட்டுவது இல்லை. கலப்புத் திருமணம் அரங்கேறிய பிறகு, விவாஹரத்து தலைதூக்கியதும், ஒருவனுக்கு ஒருத்தி என்பதுவும் மறைந்தது.இந்த நிலையை 'சமுதாய நீதி இருவருக்கும் கிடைத்துவிட்டது’ என்று முன்னேற்றத்தின் அடையாளமாக, தங்களின் வெற்றியாக சீர்திருத்தவாதிகள் சிலர் எடுத்துரைப்பார்கள்.
தங்களது சபலத்துக்கான இடையூறுகளை விலக்க, கொலையில் ஈடுபடும் அளவுக்கு மனக் கொந்தளிப்பை எட்டியவர்களை நாளேடுகளில் பார்க்க முடிகிறது. முன்னோர் வகுத்துவைத்த ஒரு சட்டம் தகர்ந்துபோனதும், அதன் விளைவாக சங்கிலித்தொடராக ஏற்படும் பாதிப்புகள், சீர்திருத்தவாதிகளின் சிந்தனையில் எட்ட வேண்டும்.
? எனில், இன்றைய நிலைக்கு புராணச் சம்பவங்கள் உதாரணமாக திகழ்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
அவசரம் வேண்டாம்! நமது சிந்தனையிலும் செயல்பாட்டிலும் எண்ணற்ற மாற்றம் நிகழ்ந்திருக்க, புராணங்களை ஆராயாமல் குறைகூறக் கூடாது என்பதற்காகவே இவ்வளவு விளக்கங்களும்.
ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்வோம்... அந்நியர் ஆட்சியின்போது பட்டாளத்தில் இணைந்த சிப்பாய்களுக்கு ஏற்படும் சபலத்தைத் தீர்த்துக்கொள்ள, சிவப்பு விளக்குப் பகுதி என்று ஒன்று இருந்தது. அவர்களுடைய சபலம் சமுதாயத்தில் ஊடுருவாமல் அது தடுத்தது. ஆனால், தற்போது சபலம் சமுதாயத்தில் ஊடுருவுவதில் தடையே இல்லை. இந்த நிலைமை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லொணாத் துயரத்துக்கு வழி வகுக்கிறது. இது மேல்தட்டு மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. பாமரர்களுக்குப் பரிந்துரைத்து அறிவுரை சொல்லும் தகுதியையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். விளைவு... தற்போது மூன்றாவது விவாஹரத்து வரை நீளுகிறது.
மகன், தகப்பன், பாட்டனார், முப்பாட்டனார் என்ற குலப் பெருமை மறைந்துவிட்டது. மாறி மாறி விவாஹரத்தில் பிறந்த குழந்தைகளின் வம்சத்தை சுட்டிக்காட்ட இயலவில்லை. ஆனால் இதையும், 'சமூகநீதி வென்றுவிட்டது’ என்று எண்ணி மெச்சுபவர்களும் உண்டு. விந்து வங்கியை அணுகி குழந்தையைப் பெற்றெடுக்கும் முறையில் விஞ்ஞான மருத்துவம் வெற்றி அடைந்திருக்கிறது. அங்கு நம்மை அறியாமல் பண்பு பறிபோய்விட்டது. ஆசையை நிறைவேற்றும் ஆர்வத்தில் பண்பு அலட்சியப்படுத்தப்படுகிறது. இப்படி, நமது சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதை ஏற்றுப் பெருமையும் அடைகிறோம்.
இப்படியிருக்க, திரௌபதி ஐந்துபேருக்கு மனைவியானது நம் பண்பை சிதைக்கிறது; அருவருப்பாக இருக்கிறது என்ற பட்டிமன்ற வாதம் எப்படிப் பொருந்தும்? அடுக்கடுக்கான விவாஹரத்தில் கணவனை மாற்றும் சூழல் இன்று! விவாஹரத்தின் மூலம் படிப் படியாக மூன்று கணவனை ஏற்கலாம் எனும்போது, வருடத்துக்கு ஒருவராக ஐந்துபேரை ஏன் ஏற்கக்கூடாது என்று வாதிடலாம் அல்லவா? ஆண்மை பல பெண்களை ஏற்கலாம் எனும்போது, பெண்மையும் பல ஆண்களை ஏன் ஏற்கக் கூடாது? சம உரிமைக்குக் குரல் கொடுக்கும் இன்றைய சமுதாயம் திரௌபதி மீது மட்டும் களங்கம் சுமத்துவது ஏன்?
? பதில் கேள்விகளை அடுக்காமல் தேவையான விளக்கத்தைத் தெளிவாக்கினால் நன்றாக இருக்கும்.
கிடைத்தது பெண் என்று அறியாமல், 'ஐந்துபேரும் உரிமை கொண்டாடலாம்’ என்ற குந்தியின் அதாவது தாயின் சொல்லைத் தட்ட முடியாமல், எச்சரிக்கையுடனும் அடக்கத்துடனும் பாண்டவர்கள் அவளை ஏற்கவேண்டி வந்தது; குதூகலமாக ஏற்கவில்லை. ஆனால், தற்கால விவாஹரத்துகளில் குதூகலத்துடன் தன்னிச்சையாக அல்லவா நாம் செயல்படுகிறோம்! அப்படி ஒன்றை ஏற்ற பிறகும் விருப்பம் நிறைவேறாவிட்டால், அடுத்த விவாஹரத்துக்கும் துணிந்துவிடுவோம். இப்படி, பண்பைப் பற்றிக் கவலைப்படாத நாம், திரௌபதியின் பண்பை விமரிசிப்பது ஆச்சரியம்!
? எனில், ஒன்றுக்கு மேற்பட்ட மணத்தை சாஸ்திரம் அனுமதிக்கிறதா?
துரதிருஷ்டவசமாக மனைவி அகால மரணம் அடைந்தாள். கணவன் புலம்பினான். 'எனது இறுதிச் சடங்கை நிறைவேற்ற ஒரு மகன் இல்லையே. எனது பிறப்புரிமை அல்லவா அது. சமுதாயம் அதை எப்படி பறிக்கலாம்?’ என்றான். தர்மசாஸ்திரம் குழந்தைச் செல்வத்தை பெற மறுமணத்துக்கு அனுமதி அளித்தது.
'என் மனைவி இறந்துவிட்டாள். நான் வேள்வியில் ஈடுபட்டு உலகத்தை செழிப்பாக்க, உலக இயக்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். அந்த அறத்தை, சேவையை ஏற்பதற்கான தகுதியை இழந்துவிட்டேனே’ என்று மனம் வருந்தினான். அவனுடைய மறுமணத்துக்கு தர்ம சாஸ்திரம் அனுமதி அளித்தது.
ஆனால் தற்போது குழந்தை இருப்பவனும், அறத்தில் ஈடுபடாதவனும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை ஏற்று சட்டத்தை மீறுகிறான். இப்படி தன்னிச்சையாக செயல்படும் நாம், திரௌபதியும் பாண்டவர்களும் அறம் காக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்வதை, உள்நோக்கம் கொண்டதாகவே கருதவேண்டியது உள்ளது.
அந்த காலத்தின் சமுதாய சூழலுக்கு உகந்தது என்பதை, அன்றைய அறிஞர்களும் பெரியோர்களும் ஏற்றுக் கொண்ட தகவலை, நமது சிந்தனையின் அளவுகோலின்படி அளந்து களங்கம் கற்பிப்பது, அசூயையில் விளைந்த அறிவுரை ஆகும்.
சிற்றன்னையின் துன்புறுத்தலில் வாழ்வை இழந்த புதல்வர்கள் ஏராளம் இருந்தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்காத தகப்பனார்கள் நிறையப்பேர் உண்டு. இப்படி, தன்னைத் திருத்திக்கொள்ள இயலாதவர்கள் இதிஹாச புராணக் கதாபாத்திரங்களின் தரம் தெரியாமல், அதை விமர்சிப்பது தவறு. அற நுணுக்கங்களை அறிந்தவர்கள், திரௌபதியின் செயல்பாட்டை ஏற்பார்கள்.
இரண்டாவது கோணம்...
அறவழியில் இருந்து விலகியவளைக் காப்பாற்றுவதற்காக சப்பைக் கட்டு கட்டக் கூடாது. அர்ஜுனன் வென்றான். அவனுக்கே திரௌபதி என்று இருக்கும்போது, குந்திதேவிக்கு விளக்கம் அளித்து, 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற அறத்தைக் காப்பாற்றி இருக்கலாம். அதை விடுத்து, அறத்தின் பாதுகாவலர்களான பாண்டவர்கள் சட்டத்தை மீறினார்கள் என்பதை மறுக்க இயலாது.
? பாண்டவர்கள் அறத்தை மீறினார்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
பந்தயத்தில் வெற்றி பெற்று அழைத்து வந்த கன்னிகைகளில் ஒருத்தி, பீஷ்மரிடம் அறத்தைச் சுட்டிக்காட்டி தன்னை ஏற்கும்படி வற்புறுத்தினாள். அவர் மறுத்துவிட்டார். அவள், தன்னுடைய பழைய காதலனை அணுகினாள். அவனோ, 'நீ பீஷ்மரால் பந்தயத்தில் ஜெயிக்கப்பட்டவள். உன்னை ஏற்கமுடியாது’ என்றான். இதுவும் மகாபாரதத் தகவல்தான். அப்படியிருக்க பாண்டவர்கள் மட்டும், 'பிறர் உரிமையில் நாம் பங்கு பெற இயலாது’ என்பதை ஏன் உணரவில்லை? அறத்துக்குப் புறம்பான ஆணையை ஏற்பதில் அவர்களுக்கு ஏன் ஆர்வம்?
'அறத்தைக் காக்க மனைவியையும் துறக்கத் தயார்’ என்றார் ராமன். அது அறத்தின் நுணுக்கம் என்பது ஏன் அரங்கேறவில்லை? அறத்தைக் காக்க கர்ப்பிணியைக் காட்டுக்கு அனுப்பினார் அவர். கௌதமரோ அறத்தைக் காக்க, தன்னுடைய மனைவியை உலகத்தின் கண்களில் இருந்து மறைத்தார். தவ வலிமை பெற்ற ரிஷிகளும், முனிவர்களும் ஒருத்தியோடு நிறுத்திக்கொண்டார்கள். தானாக வந்த சூர்ப்பணகையை லட்சுமணன் ஏற்கவில்லை. ஒவ்வொரு அவதாரத்திலும் மந் நாராயணனுக்கு, அவருடைய மனைவி லட்சுமியே இல்லாளாக வந்தாள். 'அடுத்த பிறவியில் நீயே எனக்குக் கணவனாக வர வேண்டும். நீயே எனக்கு மனைவியாக வர வேண்டும்’ என்ற வேண்டுகோளானது, மறுபிறவியிலும் 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது தொடரவேண்டும் என்ற தத்துவ வலிமையுடன் விளங்கியிருக்கிறது. தாட்சாயினி மறுபிறவியில் பார்வதியாக ஈசனை இணைந்தாள். அங்கும் அந்த தத்துவம் விளங்கியது. 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கோட்பாடு பல பிறவிகளிலும் தொடரவேண்டும் என்ற எண்ணம் அதன் தரத்துக்கு எடுத்துக்காட்டு. வெற்றி பெற்றவருக்கு வெகுமதி பொருந்தும். வெற்றி பெறாதவர்களும் வெகுமதியின் பங்களிப்பை எப்படி ஏற்க இயலும்?
? தங்களின் விளக்கம் மகாபாரதத்தைக் குறை காண்பதாக உள்ளது!
இல்லை! பாரதத்துக்குக் குறை சேர்க்கும் எண்ணமல்ல. தங்கம் போன்று களங்கமற்று திகழும் பாரத இதிஹாசத்தை, மாசு படிந்ததாக எவரும் பார்க்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்திலேயே இந்த விமர்சனம் உதயமானது. கரும்புக்கு, 'கணு’ போன்று, திரௌபதியின் செயல்பாடு மாறா வடுவாக இருப்பதில் ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடு இந்த விமர்சனம். ஆக, உலகுக்கு வழிகாட்டும் மகாபாரதம், பாமரரும் சுட்டிக்காட்டும் குறையைத் தாங்கி இருப்பது பெருமை அல்ல.
மூன்றாவது கோணம்...
பாண்டவர்கள் ஐந்து பேர். மகிழ்ச்சியிலும், துயரத்திலும் ஐந்து பேருக்கும் பங்கு இருக்கும். சண்டையிலும் சமாதானத்திலும் ஐந்து பேரிலும் பங்கு பரவியிருக்கும். சண்டை மூண்டால், நாங்கள் ஐவரும் ஒரு பக்கம், கௌரவர்கள் நூறுபேர் மறு பக்கம் என்பார்கள் (வயம் பஞ்ச சதம்சதெ). சூதாடித் தோற்றது தருமர். ஆனால், தோல்வியின் துயரத்தை ஐவரும் பங்குபோட்டுக்கொண்டனர். அரக்கு இல்லத்தில் ஐவரும் சிக்கினார்கள். வெளியேறும்போதும் ஐவரும் இருந்தனர். வன வாசத்தை ஐவரும் ஏற்றார்கள். நல்லதோ, கெட்டதோ எடுக்கும் முடிவு ஐவரிலும் ஒரே குரலாக ஒலிக்கும்.
? ஆக, ஐவரும் பாஞ்சாலியை ஏற்றது சரி எனச் சொல்ல வருகிறீர்களா?
உங்கள் கண்ணோட்டத்தில்தான் ஐவரும் வேறு வேறாகத் திகழ்கிறார்கள். முனிவர்கள், ரிஷிகள் ஆகியோரின் அருளும் ஐவரையும் ஒன்றாக ஆட்கொள்ளும். அவர்களுடைய கண்களுக்கு இந்த ஐவரும் ஒருவராகவே தெரிவார்கள்.
அவர்கள் ஒன்றாகப் பிறந்தவர்கள். அவர்கள் தனிப் பிறவிகள். நம்மைப் போல் சுக்கில சோணிதத்தின் கலவையில் தோன்றாதவர்கள். மந்திர சக்தியின் பெருமையில் வெளி வந்தவர்கள். இந்திரன், யமதருமன், வாயு, அச்வினி தேவர்கள் ஆகியோரின் பங்கில் வெளிவந்தவர்கள். இதில் இந்திரனின் பங்கை ஏற்ற மற்ற நால்வரும் இணைந்து, ஐவராக வெளிவந்தார்கள். இந்திரன் ஒருவன், தன்னையும் சேர்த்து ஐந்து வடிவங்களை ஏற்க, பாண்டவர்கள் தோன்றினார்கள். 'ஐவரின் ஜீவாத்மா ஒன்று; உருவங்கள் ஐந்து’ என்று சொல்லலாம்.
அச்வினி தேவர்கள் மாத்ரி வாயிலாக நகுல சகதேவர்களாக தோன்றினர். பின்னோதரத்தில் தோன்றினாலும் இந்திரனின் பங்கு அங்கும் இருந்ததால் தர்மர், அர்ஜுனன், பீமன் ஆகியோருடன் இருந்த இந்திர சம்பந்தம் அவர்கள் இருவரையும் இணைத்து ஐந்தாக மலர்ந்தது. இந்த நுணுக்கத்தை அறிந்த கண்ணன் அவர்களுக்குத் தேவையான வேளையில் ஒத்துழைப்பை அளித்து வந்தார்.
? எனில், ஐவரும் ஒருவரே என்று சொல்ல வருகிறீர்களா?
ஆமாம்! திரௌபதியாக வேள்வியில் தோன்றியவள் தனிப்பிறவி. இங்கு தனிப் பிறவிகளுக்கு இடையில் இணைப்பு ஏற்பட்டது. முற்பிறவியில் ஈசனிடம் ஐந்து தடவை 'கணவன் வேண்டும்’ என்று வேண்டினாள். ஈசன் 'நீ வேண்டியபடி, ஒருவனே ஐந்து வடிவில் ஐந்து கணவனாகக் கிடைப்பான்’ என்று அருளினார்.
சிக்கலில் மாட்டிக்கொண்ட திரௌபதிக்கு ஆடை அளித்துக் காப்பாற்றினார் கண்ணன். விருந்தோம்பலுக்கு அக்ஷய பாத்திரத்தைப் புதுப்பித்தார். நெருப்பில் குதிக்கக் காத்திருந்த அர்ஜுனனை, தனது சக்கரத்தின் செயல்பாட்டின் மூலம் காப்பாற்றினார். அச்வத்தாமா பாண்டவர்களின் வம்சத்தை ஒழிக்க முற்பட்ட தருணத்தில், கருவில் இருக்கும் வம்சக் கொழுந்தைக் காப்பாற்றினார் கண்ணன். போருக்குப் பின் அமைதி நிலவியபோது ஐவரும் சுவர்க்கத்துக்குப் பயணமாவதை ஆதரித்தார். இந்திரன் சுவர்க்கத்தின் அதிகாரி. ஐந்து வடிவங்களில், வாடிய அறத்தை நிலைநாட்டிய பிறகு, தனது இருப்பிடத்துக்குத் திரும்பினான் இந்திரன்.
ராவணனை அழிக்க மனித சக்தி போதாது. தெய்விக சக்திதான் வெற்றி பெறும். மந் நாராயணன் ராமனாகத் தோன்றினார். அதேபோன்று கௌரவக் கூட்டத்தை அழிக்க தெய்வ சக்தி இணையவேண்டும். ஆகவே, இந்திரன் ஐந்து வடிவங்களில் பாண்டவர்களிடம் இணைந்தான். அது, அவர்களது வெற்றிக்கு ஒத்துழைத்தது. அறம் ஐந்து வடிவில் தோன்றி அதர்மத்தை வென்றது. அதற்கு அந்த ஐந்து வடிவம் ஒன்றாக செயல்பட வேண்டும். துயரத்தை ஐந்துபேரும் ஒன்றாக உணரும்போது, இன்பத்தின் உணர்வும் ஐவரிலும் ஒன்றாக இருப்பது இழுக்கல்ல; பெருமைக்கு உரியதுதான்.
தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...
தர்மம் அதர்மத்தோடு மோதும் வேளையில் தர்மம் வலிவு பெற்று இருக்க வேண்டும். எண்ணிக்கையில் அதிகமான கௌரவர்களை பூண்டோடு அழிக்க, வலிமையான தர்மத்தின் ஐந்து வடிவங்களின் இணைப்பு வெற்றிக்குத் தேவைப்பட்டது. தர்மம் அதர்மம் இரண்டையும் மோதவிட்டு, 'அறமே வெற்றி பெறும்’ என்று செயல்வடிவில், பாரதம் வாயிலாக வெளிப்படுத்தினான் கண்ணன். அது வெற்றி பெற எடுக்கும் முடிவுகள் அத்தனையும் அறத்தில் அடங்கிவிடும். அதுபோல், நமக்குக் கோணலாகத் தோன்றினாலும் தர்மம் அதை நேராகப் பார்க்கும். ஆகையால் இதிஹாசங்களின் நிகழ்வுகளை ஆராய்ந்து விமர்சனம் செய்யவேண்டும்.
Comments
Post a Comment