வாமன ஜயந்தி

பகவானின் அனுக்ரகம் எல்லையற்றது; எந்தச் செயலையும் செய்யும் ஆற்றலைக் கொடுப்பது என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நிஜம். ஆனால், அந்த அனுக்ரக பலம் பெற்றதாலேயே, ஒருவர் தவறுகளைச் செய்ய முற்பட்டால், பகவான் அதை அனுமதிக்க மாட்டான். தாமே முன்வந்து தண்டனையும் தருவான்; மனம் திருத்தி ஆட்கொள்வான். அதுதான், மகாபலிச் சக்ரவர்த்தியின் சரிதம்; வாமன அவதாரத்தின் தத்துவம்!
பக்த பிரகலாதனின் பேரனான மகாபலிக்கு, தாத்தாவின் பூர்வபுண்ணியம் பெரும் அருளைக் கொடுத்திருந்தது. அவனும் தவமிருந்து பெரும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இருந்தும், அசுர சுபாவம் அவனையும் பீடித்தது. தேவலோகத்தையும் பிடித்து, தானே இந்திரனாகவும் ஆசைப்பட்டான். அதற்கு குலகுரு சுக்ராச்சாரியார் வழிகாட்டினார்: 100 அஸ்வ மேத யாகங்களைச் செய்தால், இந்திர பதவியை அடையலாம்!"
அதன்படியே செய்ய ஆரம்பித்தான். 99 வேள்விகள் முடிந்தன. 100வது வேள்வி நடக்கின்ற சமயம். அதற்குள் தேவர்களை அழைத்துக் கொண்டு பகவானைச் சரணடைந்தான் இந்திரன். அதேநேரம், தேவ மாதாவான அதிதி, கணவர் கஸ்யப ரிஷியிடம் வேண்டினாள்: என் குழந்தைகளான தேவர்களுக்கு ஆபத்து நேரிடாமல் காப்பாற்ற என்ன செய்வது?" அதற்கு கஸ்யபர் சொன்ன வழி, ‘பயோவிரதம்.’ அதாவது, 12 நாட்கள் மேற்கொள்ள வேண்டிய விரதம்!
அதிதி தேவி பூமியில் விரதமிருக்க, தேவர்களுக்குக் காட்சி தந்த பகவான் சொன்னான்: கவலையை விடுங்கள். அதிதி தேவி மேற்கொண்டுள்ள பயோ விரதத்துக்குப் பலனாக, நாமும் அவதரிக்கப் போகிறோம். உங்கள் அச்சம் தேவையற்றது." அதன் படியே கஸ்யபர் - அதிதி தம்பதியரின் மகனாக அவதரித்தான். குள்ளமாக வெளிப்பட்டதால் ‘வாமனன்’ என்று குறிப்பிடப்பட்டான். முறைப்படி உபநயனம் நடந்தபின், குடையும் கமண்டலமும் தாங்கி, மகா பலியின் வேள்வித் தலத்துக்குச் சென்றான்.
பாலசூரியனாக ஜொலித்த பாலனைப் பார்த்த மாத்திரத்தில் பரவசப்பட்ட மகாபலி வரவேற்றான்; வணங்கி உபசரித்தான். ‘என்ன வேண்டுமானாலும் தருகிறேன்’ என வாக்களித்தான். அவனிடம் மூன்றடி நிலம் கேட்டான் வாமனன். அவன் யாரென்று அறிந்து தடுக்க முற்பட்ட சுக்ராச்சாரியாரின் கண்ணையும் கிளறினான். மகாபலி அர்க்கியம் தர, வாங்கிய வாமனன், ஓங்கி திரிவிக்ரமனாக வளர்ந்தான்; உலகளந்தான்.
இங்கே சூட்சுமமான ஒரு செய்தி விவரிக்கப்படுகிறது. கொடுத்த மகாபலி அப்படியே இருந்தான். அதைப் பெற்ற பகவான் திரிவிக்ரமனாக வளர்ந்தான் என்றுதான் வழக்கமாகச் சொல்வார்கள். ஆனால், பகவானுக்குக் கொடுக்கப்பட்டதால், மகாபலியின் தானம் விஸ்வரூபம் எடுத்தது. அந்த மூன்றடி மண்ணில், இரண்டடியிலேயே சகலமும் அடங்கி விட்டன. மூன்றாம் அடியையும் அளித்தால்தான், தான பலன் மகாபலிக்குக் கிடைக்கும். அதை அவன் அடைய வேண்டும் என்பதற்காகத்தான், அவனுக்குள் இருந்த ‘நான்’ என்னும் எண்ணத்தை மூன்றாம் அடிக்கு ஏற்றான் பகவான். என்ன பொருள்?
‘நான்’ என்கிற எண்ணம் அற்றுப்போனால், அவனுக்கு பகவான் பாதுகாவலாகிறான். மாற்றிச் சொன்னால், அவனுக்கு பகவானைத் தவிர வேறில்லை. இப்படியொரு நுட்பத்தைத்தான் விவரிக்கிறது வாமனாவதாரம்!
பகவானின் இந்த அற்புதத்தைக் கொண்டாடும் விதத்தில், பெங்களூரில் உள்ள ‘இஸ்கான்’ ஆலயத்தில் வாமன ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வாமன மூர்த்தியாக அலங்காரம் செய்யப்பட்டு, குடையும் கமண்டலத்தோடும் காட்சி தருவார்.
இந்த நாளில் பாகவதத்தின் எட்டாவது ஸ்கந்தத்தில் உள்ள வாமன அவதார ஸ்லோகங்கள் பக்தர்களால் பாடப்படும். குறிப்பாக, பிரகலாதன் வாமனரைத் துதிப்பதுபோல் அமைந்த ஸ்லோகங்களை பக்தியுடன் பாடுவார்கள்.
‘பகவானே... மகாபலியை மன்னனாக்கியவனும் நீதான்; அவன் அரசுரிமையை நீக்கியவனும் நீதான். கொடுத்த நீயே அதை எடுத்துக் கொண்டாய். மன்னன் என்பதால் அறியாமையின் வசப்பட்டு பிழை புரிந்த அவனையும் உன் அபார கருணையால் ஆட்கொண்டு அருளினாய்... நாராயணா, உனக்கு என் நமஸ்காரங்கள்’ என்கிறான் பக்த பிரகலாதன்.
இந்த வாமன ஜயந்தி நம்முடைய எண்ணங்களில் தயையை நிரப்பட்டும்; அது, பகவானுக்கு பிரியத்தை ஏற்படுத்தும். நம்முடைய செயல்களில் கொடையை ஏற்படுத்தட்டும்; அது பரமனுக்கு திருப்தியை உண்டாக்கும். நம்மில் தோன்றும் அறியாமை என்னும் இருளைப் போக்கட்டும்; அது பரந்தாமனின் கருணையை நிரப்பும். நம்முள் நிலவும் ஆணவமாகிய அழுக்கைக் களையட்டும்; அதுதான் பகவானின் அருளில் என்றும் நிலைத்திருக்கச் செய்யும்.
அதே நினைவோடு, நாம் வாமன மூர்த்தியை வழிபடுவோம்; நமக்கும் அவனுடைய பேரருள் நலம் பயக்கும்.

Comments