வேதம் சொல்லும் பாடம்

இந்த உலகத்தை சிருஷ்டிக்கணும் என்று சங்கல்பித்த உடனேயே, எம்பெருமான் தனது நாபிக் கமலத்திலிருந்து பிரும்ம தேவரை உருவாக்கினார். அவருக்கு வேதத்தையும், சிருஷ்டி பண்ணக்கூடிய க்ரமத்தையும் சொல்லித் தந்து, சிருஷ்டி பண்ணச் சொன்னார். இதைத்தான் வேதங்களும் புராணங்களும் சொல்கின்றன" என்றார் தம் சொற்பொழிவில் செங்காலிபுரம் கேசவ தீக்ஷிதர்.
நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமேதான் பகவான் வேதத்தை பிரும்ம தேவனிடம் கொடுத்தார். அதன் வழியாகத்தான் இன்றுவரை பிரும்மா இந்த லோகத்தை சிருஷ்டி செய்துக் கொண்டிருக்கிறார். பிரும்மா வந்ததற்குப் பிறகு வேதம் உண்டானதா அல்லது வேதம் உண்டான பிறகு பிரும்மா வந்தாரான்னு பார்த்தால் முதலில் உண்டானது வேதம் தான். யாராலும் எழுதப் படாமலேயே உண்டான ஒன்றுதான் வேதம். தமிழில் வேதம் என்று சொல்கிறோம். சமஸ்கிருதத்தில், ‘வேத’ என்று சொல்லுவோம். ‘வேத’ என்றால் அறிவு, ஞானம் என்று அர்த்தம். யாருடைய அறிவு? ஸ்ருஷ்டியே இன்னும் நடக்கல. பிரும்மாவே இனிமேல்தான் வரப்போறார் அப்படீங்கும்போது, ஈஸ்வரனின் ஞானம் எதுவோ அதுதான் வேதம்னு முடிவு பண்ணி, அதையேதான் பிரும்மாவுக்கு கொடுக்கப்பட்டு பகவானின் ஞானத்தால், அறிவால்தான் இவ்வுலகையே சிருஷ்டி செய்ய ஆரம்பித்தார் பிரும்மா.
வேதத்தில், சிருஷ்டி க்ரமம் மட்டுமல்லாமல், சிருஷ்டிக்கப்பட்ட ஜீவகோடிகள் நன்றாக இருப்பதற்கான க்ரமங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘நான் இன்னிக்கு கஷ்டப்படறேன்’ அப்படீன்னு சொன்னா, அதற்கு சிம்பிளான பதில், ‘சௌக்கியமாக இருப்பதற்கான வழியை நான் இன்னும் தேடிக்கல’ அப்படீன்னுதான் சொல்லிக்கணுமே தவிர, ‘ஈஸ்வரன் என்னை சோதிக்கறார், தெய்வம் எனக்கு எப்பப்பாரு கஷ்டத்தைக் கொடுத்துண்டே இருக்கு, நானும் 30 வருஷமாய் கோயில்களுக்குப் போயிண்டு இருக்கேன். நான் போகாத உற்சவம் கிடையாது, ஆனாலும், எனக்கு எப்போதும் வாழ்க்கையில் குறை. இதைவிட ஒரு சிரமம், கோயிலுக்கு வராதவா எல்லாம் ரொம்ப சௌக்கியமா இருக்காளே... தெய்வ வழிபாடு பண்ணாதவா எல்லாரும் நன்னா இருக்கும்போது, நான் கஷ்டப்பட்டுண்டே இருக்கேனே’ன்னு சொல்றது முழு அஞ்ஞானம்.
கஷ்டத்தைக் கொடுப்பவன் ஈஸ்வரனாக இருந்தால் இத்தனை காலமும் அவரை வழிபட்டுக்கொண்டு வருவார்களா? கஷ்டத்தைக் கொடுப்பதுதான் பகவானின் ஒரு செயல்னு சொன்னா, ஈஸ்வர வழிபாடே வேண்டாமே. தலைமுறை தலைமுறையா நம்ம பெரியவா எல்லாரும் பண்ணிக்கொண்டு வந்ததைத்தானே நாம பண்ணிக்கொண்டு இருக்கோம்?
‘வேதம் என்ன சொல்கிறதோ அதைச் செய். பெரியவர்கள் எல்லாம் என்ன பண்ணினார்களோ அதை நீ பண்ணு’ன்னு சொல்லி சொல்லித்தானே நாம் பண்ணிண்டு வர்றோம்? ஈஸ்வர ஆராதனைக்கு உள்ள தனிப்பெருமை என்ன தெரியுமா? அதுல quantity முக்கியமில்லை, Consistencyதான் முக்கியம். தொடர்ந்து செய்வதுங்கறதுதான் முக்கியம். சந்தியா வந்தனம் துவங்கி, பகவானுக்குச் சொல்ற ஸ்லோகம் வரைக்கும் தொடர்ந்து பண்ணினா மட்டுமேதான் ஈஸ்வர ப்ரீத்தியாகும். கோயிலுக்குப் போறோம், லட்சார்ச்சனை பண்றோம். நாளைக்கு சிவன் கோயில் எங்க இருக்குன்னே எனக்குத் தெரியாது அப்படீன்னா, இன்னிக்கு ரொம்ப பேருக்கு அந்த தெய்வ ஆராதனம் என்பது பலிக்காமல் போவதற்கான காரணம் இதுதான்.
ஒரு காரியம் ஆகறதுக்காக மனுஷாளேயே உபயோகப்படுத்தக் கூடாதுன்னு இருக்கும்போது, தெய்வத்தை உபயோகப்படுத்தலாமோ? மனுஷாக்கிட்டேயே காரியமாகப் பழகக் கூடாதுன்னால், தெய்வத்தை எனக்கு ஸ்ரம நிவர்த்திக்கான தெய்வம்னோ, என்னோட ஒரு வியாதி நிவர்த்திக்கான தெய்வம்னோ பழகினால், அல்ப பலன்தான் கிடைக்கும். இல்லாட்டா பலனே கிடைக்காமலும் போகலாம். தெய்வத்துக்கும் நமக்கும் உள்ள உறவு என்பது பிரிக்க முடியாதது. தெய்வத்தை வழிபடத்தான் இந்த மனித ஜென்மமே இருக்கு. தெய்வதை வழிபடணும்னு சொல்லிக் கொடுக்கத்தான் வேதம். அதை அனுஷ்டித்து கொண்டு வந்தவர்கள்தான் பெரியவர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கணும். அதுதான் இந்த மனித ஜென்மத்தோட பிரயோஜனம் என்பதைத் தெரிஞ்சு, இடைவிடாமல் செய்யணும்.
இப்படி இடைவிடாமல் பரம்பரையாகச் செய்யற தர்மத்துக்குதான் ‘ஆசாரம்’ என்றே பெயர். சாஸ்திரம் சொன்ன முறையில் பெரியவர்கள் எல்லாம் எப்படி எல்லாம் வாழ்ந்தார்களோ, அந்த முறையில் வாழ்வதற்குத்தான் ஆசாரம் என்று பெயர். இப்போ என்ன சொல்றா, எல்லாத்தையும் தெரிஞ்சுக்கோ. அப்புறம் பண்ணுங்கறா. தெரிஞ்சுண்டு எல்லாம் பண்றதுங்கறதுதான் முடியுமா? அவ்ளோ ஆயுசு நமக்கு உண்டா? அதைத் தெரிஞ்சுக்கற புத்தி உண்டா? வேதத்தை நம்மால் ஆழம் பார்க்க முடியுமா? பின்ன என்ன செய்யணும் என்றால், செஞ்சுண்டே இருக்கணும். ஒரு நாள் தானாகப் புரியும். கட்டாயம் ஒரு நாள் பகவான் நாம செஞ்சுண்டு இருக்கறதைப் புரிய வைப்பார்.
நன்கு சாஸ்திரங்கள் படித்து, விடாமல் குருவாயூர் சன்னிதிக்கு வந்துண்டே இருந்தவர்தான் நாராயண நம்பூதிரி. சமஸ்கிருத சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர் அவர். தனது 27வது வயதில் வாத ரோகம் அவருக்கு வந்துடுத்து. வைத்தியர்கள் அவரை கை விட்டுட்டா. சிலதுக்கு பரிகாரம் உண்டு, சிலதுக்கு பரிகாரம் இல்ல. இந்த வாத ரோகத்துக்குப் பரிகாரம் இல்லைனு ஜோசியர்கள் கைவிட்டுட்டா. ‘நான் என்ன பண்ணுவேன்? வேறு வழியே இல்லை. தெய்வம்தானே கதி’ங்கறார் நம்பூதிரி. சிரமம்னு ஒண்ணு வந்துட்டா ஏகப்பட்ட பைசாவைக் கொட்டி அங்க, இங்கன்னு வைத்தியம் பார்க்கறோம். எதுவுமே சரியாகலன்னாதான் குல தெய்வத்துக்கு வேணா ஒரு அபிஷேகம் பண்ணலாமான்னு, காசெல்லாம் தீர்ந்தப்பறம்தானே தெய்வத்தையே நாம நினைக்கறோம்? வெளியில் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதைபோல சிரிக்கறோம். ஆனா, உள்ளுக்குள்ள எல்லாருமே, ஏதோ ஒருவிதத்துல கஷ்டத்துல இருந்துண்டுதான் இருக்கோம்.
‘குருவாயூரப்பா இந்த சிரமத்துக்கு நீதான் காரணம். நீ சிருஷ்டி பண்ணதால்தான் சிரமம் வந்தது’ங்கறார் நாராயண நம்பூதிரி. நாராயணீயம் சொல்லி அவருக்கு அந்த வாதம் சரியாயிடுத்து.
‘உனக்கு கண்ணே இல்லேயா? காது கேட்கலியான்னு’பகவானையே சமயத்துல சிலபேர் கேட்கறோம். நாம நன்றாக இருப்பதற்கு, வேதத்தில் லட்ச வழிமுறைகள் சொல்லி இருக்கு. வேதத்தில் இல்லாத பரிகாரங்களே கிடையாது. வேதத்தை விட்டுவிட்டோம், அது சொல்லித் தந்த வழியையும் விட்டுட்டோம். அதான் நம்ம கஷ்டத்துக்குக் காரணம். ஸ்ரீ ருத்ரம் சொன்னோம்னா, ஈஸ்வர ஆராதனம் பண்ணோம்னா பகவான் நல்லதை மட்டுமே நமக்குத் தருவார். குட்மார்னிங் சொன்னா மட்டும் நல்ல நாளாய் மாறிடாது. ஈஸ்வர ஆராதனம் பண்ணிணால் மட்டுமேதான் எல்லா நாளும் நல்ல நாளாக அமையும். நாமம் சொல்றவாளை நிந்தனை செய்யக் கூடாது. குருவிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். சாஸ்திரங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வேதத்தை நாம் காப்போம். வேதம் நம்மைக் காக்கும்."

Comments