சுக்ரேஸ்வரர்

நவக்கிரக நாயகர்களில் ஒருவரான அசுரகுரு சுக்ராச்சாரியார் மாண்டவரையும் மீட்டெழுப்பும் வல்லமை மிக்கவர். அழகு, வசீகரம், ஈர்ப்பு, ரசனை, நுண்கலைகள் இவற்றுக்கெல்லாம் இவருடைய அருள் மிக முக்கியம். தமிழகத்தில் சுக்ரனுக்கான தலமாக கஞ்சனூர் சொல்லப்பட்டாலும், இறைவன் அங்கு அக்னீஸ்வரர் என்ற பெயருடன்தான் எழுந்தருளியிருக்கிறார். மாறாக, சுக்ரேஸ்வரர் என்ற பெயரிலேயே சிவபிரான் அருள்பாலிக்கும் இடம் கௌஹாத்தியில் உள்ள சுக்ரேஸ்வரர் ஆலயம்.
இது அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரான கௌஹாத்தியில் ‘பான் பஜார்’ என்னும் இடத்தில் அமைந்துள்ளது. ‘அஹோம்’வம்ச அரசர் பிரம்மத்த சிங்காவினால் கி.பி.1744-51 காலகட்டத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரம்மபுத்ரா நதியின் தென்புறத்தில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலுக்கு நதிக் கரையிலிருந்து கருங்கல் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. சைவ சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பிரம்மத்த சிங்காவும் அவனுக்குப் பின் அரியனைக்கு வந்த மன்னர்களும் கோயிலைப் புதுப்பித்தும், கோயில் நிர்வாகத்துக்காக நிறைய மான்யங்களையும் அளித்துள்ளார்கள்.
ஆலயத்துக்குச் செல்லும் வழியில் படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டு சுற்றிலும் பார்த்தால் மலைப் பிரதேசத்தின் அழகு, கௌஹாத்தியின் அமைப்பு, துள்ளிச் சுழித்தோடும் பிரம்மபுத்ராவின் நீரில் பயணிக்கும் படகுகள் என ரம்மியமான காட்சிகள் தென்படுகின்றன.
இடாஹுலி(Itakhuli)மலைமீது கோயில் அமைந்துள்ள இடத்தில்தான், சுக்ராச்சாரியார் தவமிருந்து சிவபிரானை வழிபட்டார் என்கிறது தல புராணம். இந்தியாவில் காணப்படும் பெரிய லிங்கத் திருமேனிகளுள் இதுவும் ஒன்று. இந்த மலையை ‘ஹஸ்திகிரி’ என்று குறிப்பிடுகிறது காளிகா புராணம். மறைந்த முன்னோர்களுக்கு பிண்டம் அளிப்பது, தர்ப்பணம் செய்வது உட்பட பித்ரு பூஜைகளை இங்கு பிரம்மபுத்ராவில் செய்கிறார்கள் பக்தர்கள். தவிர, சூர்யோதயம் மற்றும் சூர்ய அஸ்தமனக் காட்சிகளின் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளும் அநேகர்.
செல்லும் வழி
அருகில் உள்ள விமான தளம் மற்றும் ரயில் நிலையம்: கௌஹாத்தி. அருகிலுள்ள இடங்களிலிருந்து பிரம்மபுத்ரா நதியில் படகின் மூலமும் வரலாம்.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் இரவு 9 வரை.

Comments