காங்கேயநல்லூர் முருகனுக்கு வாரியாரின் வற்றாத காணிக்கை!


து 1929-ஆம் வருடம். சிவத்திரு மல்லையாதாஸ் பாகவதர் என்பவரின் முழு முயற்சியால் காங்கேயநல்லூர் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ராஜ கோபுரத் திருப்பணி வேலைகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன (வேலூருக்கும் காட்பாடிக்கும் இடையே சற்று உள்வாங்கிப் பய ணப்பட்டால் வருகின்ற ஊர் காங்கேயநல்லூர்!).
மல்லையாதாஸ் பாகவதர் பற்றி... இவர் ஓர் ஆன்மிகச் சொற்பொழிவாளர். வெண்கல சாரீர மும், நல்ல தேகமும் கொண்டவர் இவர். ஒலி பரப்பும் கருவி இல்லாத அந்தக் காலத்திலேயே நெடுநேரம் கம்பீரமாக விரிவுரை நிகழ்த்துவார். அதன் மூலம் கிடைத்து வந்த தனது சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு சொந்த ஊரில் ஸ்ரீசுப்ரமணியர் ஆலய ராஜ கோபுரத் திருப்பணியில் இறங்கினார். ராஜகோபுரக் கட்டட வேலைகள் மளமளவென முடிந்தன. அடுத்து, ராஜ கோபுரத்துக்குப் பூச்சு வேலைகள் பாக்கி.
1929-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி... மாலை சுமார் நான்கு மணி இருக்கும். ராஜ கோபுரப் பூச்சு வேலைகளில் மும்முரமாக இருந்த பணியாளர்களுக்குச் சிற்றுண்டி தருவதற்காக ஸ்ரீசைலவாசன் என்கிற சிறுவன், தற்காலிகமாகக் கட்டப்பட்டிருந்த மர ஏணிப் படிகளில் ஏறி ராஜ கோபுர உச்சிக்குச் சென்று கொண்டிருந்தான். இவன் மல்லையாதாஸ் பாகவதரின் ஆறாவது புதல்வன். சிற்றுண்டி தந்துவிட்டு இறங்க முற்படும்போது சுமார் ஐம்பதடி உயர ராஜ கோபுரத்தில் இருந்து தவறி, பொத்தெனக் கீழே விழுந்தான் ஸ்ரீசைலவாசன். அவன் கையில் வைத்திருந்த பொருட்கள் தரை எங்கும் விழுந்து சிதறின. ‘ஐயோ... நம்ம ஊரு புள்ளைக்கு இப்படி ஆயிடுச்சே!’ என்ற தவிப்புடனும் கூக்குரலுடனும் பணி யாளர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் ராஜ கோபுர வாயில் முன்பு கண்ணீருடன் திரண்டனர்.
விஷயம் அறிந்த மல்லையாதாஸ் பாகவ தர் கதறியபடி ஓடோடி வந்தார். பேச்சு மூச்சில்லாமல் கிடக்கும் மகன் ஸ்ரீசைலவாசனைத் தூக்கித் தன் மடியில் கிடத்திக் கொண்டார். அவனிடம் எந்த ஒரு சிறு உணர்வும் இல்லை. ‘முருகா... சுப்ரமண்யா! காப்பாத்துப்பா எம் பிள்ளையை’ என்று ஆலயத்தின் உள்பக்கம் பார்த்து நெக்குருகக் கூக்குரல் கொடுத்தார் மல்லையாதாஸ் பாகவதர். தன் இடுப்பில் வைத்திருந்த திருநீற்றை எடுத்து, சில மந்திரங்களை ஜெபித்து அவன் நெற்றியில் பயபக்தியோடு பூசினார். வாய்க்குள்ளும் சாப்பிடக் கொடுத்தார்.
பிறகு நடந்ததுதான் ஆச்சரியம். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மூர்ச்சை தெளிந்து, இயல்பாக எழுந்தான் ஸ்ரீசைலவாசன். உடலளவாலும் மனதளவாலும் அவன் துளிகூடப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தன்னைச் சுற்றி நிற்கும் கூட்டத்தினரை விவரம் புரியாமல் மலங்க மலங்கப் பார்த்தான். ‘என்னாச்சு எனக்கு... என்னைச் சுத்தி ஏன் இப்படிக் கூட்டம்?’ என்று வெகு சாதாரணமாகக் கேட்டான். அவனைச் சுற்றி நின்றிருந்த ஒட்டுமொத்தக் கூட்டத்தவரும் ‘முருகா.. காங்கேயநல்லூர் முருகா... உன் கருணையே கருணை!’ என்று வியந்து போற்றினர் அந்த முருகப் பெருமானை!
‘சரஸ்வதி கடாக்ஷ£ம்ருத’ என்றும் ‘64-வது நாயன்மார்’ என்றும் காஞ்சி ஸ்ரீமகா ஸ்வாமிகள், சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர், கி.வா.ஜ. போன்றவர்களால் பாராட்டப் பெற்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். இவரது இளைய சகோதரர்தான் மேலே சொன்ன ஸ்ரீசைலவாசன்.
வாரியார் சுவாமிகள், தமிழ் கூறும் இந்த நல்லுலகுக்குச் செய்த அறப் பணிகளைப் பட்டியலிட ஆரம்பித்தால், அதற்கு முடிவே இல்லை. இந்த காங்கேயநல்லூர் முருகன் கோயிலுக்குத் தன் தந்தையார் மாதிரி வாரியார் சுவாமிகளும் செய்துள்ள அறப் பணிகள் ஏராளம். இந்த ஆலயத்துக்கு 1958, 1990 ஆகிய ஆண்டுகளில் வாரியார் சுவாமிகள் திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்தி உள்ளார். 1958-ஆம் ஆண்டு திருப்பணியின்போது வாரியாரால் வட கோபுரம் அமைக்கப்பட்டது.
வேலூருக்கும் காட்பாடிக்கும் இடையே விளங்கும் இந்த ஊருக்கு காங்கேயநல்லூர் என்ற பெயர் எப்படி வந்தது?
சிவபெருமானின் ஆறு நெற்றிக் கண்களில் தோன்றிய ஆறு அருட்பெரும் ஜோதிகள் சிறிது நேரம் கங்கை ஆற்றில் தவழ்ந்து சரவணப் பொய்கை சேர்ந்து ஆறுமுகத் தெய்வமாக ஆயிற்று. அதனால், பரமனின் அந்தக் குமாரர் காங்கேயன் (கங்கையின் புதல்வன் என்பதைக் குறிக்கும் வகையில் காங்கேயன் என்பார்கள்) என்ற பெயர் பெற்றார். காங்கேயனுக்கு நல்ல ஊராக விளங்குவதால் இது காங்கேயநல்லூர் ஆயிற்று. ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. விசைத் தறிகளும் விவசாயமும்தான் இந்த ஊரின் வாழ்க்கை. பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ள வளமான பூமி, காங்கேயநல்லூர்.
காங்கேயநல்லூரைத் தனது சொந்த ஊராகக் கொண்ட வாரியார் சுவாமிகள், மல்லையாதாஸ் பாகவதரின் நான்காவது புதல்வர். ஆன்மிக மணத்தை உலகெங்கும் பரப்புவதற்காக இலங்கை, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு அடிக்கடி பய ணம் செய்துள்ளவர் வாரியார் சுவாமிகள். தனது வாழ்நாளில், தமிழ்நாட்டில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு ஏராளமான லட்சங்களைச் செலவழித்துத் திருப்பணிகள் மேற்கொண்டிருக்கிறார். காங்கேயநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பணிகள் செய்து இன்றும் ஆன்மிக உள்ளங்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார் வாரியார் சுவாமிகள் என்றால் அது மிகையல்ல.
வாரியார் சுவாமிகளாலும் அவர்தம் குடும்பத்தினராலும் போற்றிப் பாதுகாக் கப்பட்ட- இந்த ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி ஆலயத்துக்கு அருகே இன்றும் வாரி யாரின் வழித் தோன்றல்கள் வசித்து வரு கிறார்கள்.
சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டது இந்த சுப்ரமணியர் கோயில் என்கிறார்கள். ஓங்கி உயர்ந்து நிற்கும் ஐந்து நிலை ராஜ கோபுரம். கந்த புராணத்தை விளக்கும் சுதைச் சிற்பங்கள், அறுபடை நாயகர் களின் வடிவங்கள் போன்றவற்றால் ராஜ கோபுரம் நிரம்பி உள்ளது. உச்சியில், பொலிவான ஐந்து கலசங்கள்.
நுழைவதற்கு முன் வலப் பக்கம் ஸ்ரீசைல வாசன், ராஜ கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த நிகழ்வைக் குறிப்பிடும் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இறுதியாக, ஓட்டல் சரவணபவன் சார்பாக 1997-ஆம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் திருப்பணி நேரத்தில் வாரியார் சுவாமிகள் எப்போதும் தனது சொந்தப் பணத்தையே செலவழித்து வந்துள்ளார். இதுகுறித்து நெருங்கிய நண்பர்கள் எவரேனும் வாரியாரிடம் கேட்டால், ‘‘என் அப்பாவுக்கு வேஷ்டியோ, அம்மாவுக்குப் புடவையோ எடுத்துக் கொடுக்கணும்னா வேற யாராவது ஒருத்தரிடம் போய்க் கேட்க முடியுமா? நான்தானே எடுத்துக் கொடுக்கணும். எனக்குத்தானே அந்த உரிமையும் கடமையும் இருக்கு. அது மாதிரி இந்தக் கோயிலும் என்னுடன் கலந்த ஒன்று. இதுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நானேதான் செலவு பண்ணணும். அதுதான் முறை!’’ என்பாராம்.
இனி, ஆலய தரிசனம் செய்வோம். நுழைந்ததும் பலிபீடம். கொடிமரம். தேக்கால் ஆனது. செப்புத் தகடுகளால் கொடி மரம் சூழப்பட்டுள்ளது. மயில் வாகனம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. இடப் பக்கம் விநாயகர். இதை அடுத்து, கை கூப்பிய நிலையில் இருக்கும் வாரியார் சுவாமிகளின் சிலை. இதற்கு நேர் எதிரே ஸ்ரீஅருண கிரிநாதரின் அற்புத சிலா விக்கிரகம். ஒரு முறை அருணகிரிநாதர், வாரியார் சுவாமிகளின் கனவில் வந்து, ‘எனக்கு மிகவும் பசிக்கிறது. உணவு வேண்டும்!’ என்று கேட்டார். இதனால் மனம் உருகிய வாரியார் சுவாமிகள், காங்கேயநல்லூர் கோயிலில் உச்சிக் காலத்தில் அருணகிரிநாதருக்கு நைவேத்தியம் செய்வதற்கென்றே உச்சிக் காலக் கட்டளையை ஏற்படுத்தினார். அதன்படி, தினமும் இரண்டு படி அரிசி அன்னம் அருணகிரிநாதருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. பிறகு, அந்த அன்னம் முதலில் வரும் ஆறு துறவிகளுக்கு தானம் செய்யப்படுகிறது. எந்தக் காரணம் கொண்டும் இந்தக் கட் டளை தடைபடாமல் தொடர்ந்து நடந்து வருவதற்காக நான்கு ஏக்கர் நிலத்தை அப்போதே வாங்கி அர்ப்பணித்துள்ளார் வாரியார் சுவாமிகள். அதோடு, தாம் அணிந்திருந்த அணிகலன்கள் அனைத்தையும் காங்கேயநல்லூர் முருகனுக்கே அர்ப்பணித்துள்ளார். முருகனுக்கு மிக அழகான ரத்தின மகுட வைரமுடி செய்து வைத்துள்ளார்.
பிராகார வலத்தில் விநாயகர், நந்தி வாகனத்துடன் கூடிய காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சுமித்தேரேஸ் வரர், தண்டாயுதபாணி, சண்டிகேஸ்வரர், சைவ நால்வர், பாம்பன் ஸ்வாமிகள், நவவீரர்கள் (வீரவாகு, வீர கேசரி, வீரமகேந்திர, வீரமகேச, வீரபுந்தர, வீரராக்க, வீர மார்த்தாண்ட, வீரராந்தக, வீரதீர ஆகியோர்), லட்சுமி, சரஸ்வதி, வீரபத்திரர், நாகலிங்கம், பைரவர், சந்திரன், சூரியன், சண்முகர் என ஏகப்பட்ட சந்நிதிகள். உற்சவர்கள் மண்டபம். வாகன மண்டபம். பிராகார விதானம் முழுக்க கந்தபுராண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஸ்ரீசுப்ரமண்யர்- தேவசேனா ஆகியோர் வீற்றிருக்கும் பள்ளியறையில் தினமும் இரவு நேரத்தில் பால் நைவேத் தியம் செய்துவிட்டு, தாலேலோ பாட்டுப் பாடி தெய்வங்களை துயில் கொள்ளச் செய்வார்கள். மறு நாள் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி நடைபெறும்.
மாசி விசாக லட்ச தீப விழா, ஆடிக் கிருத்திகை, தைக் கிருத்திகை, கந்தசஷ்டி போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படும். இதில் மாசி விசாக லட்ச தீப விழா உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். வாரியார் சுவாமிகளால் துவக்கி வைக்கப்பட்ட இந்த விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து காங்கேயநல்லூரில் குவிவது பெரும் சிறப்பு. இந்த விழா ஒவ்வொரு வருட மும் கோலாகலமாக நடக்க வேண்டும் என்று விரும் பிய வாரியார் சுவாமிகள், இதற்கென நிரந்தர வைப்பு நிதியில் ஒரு தொகையை முதலீடு செய்து விட்டுச் சென் றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு, தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய வாரியார் சுவாமிகள், தன் கற்கண்டு தமிழாலும் அயராத ஆன்மிகப் பணியாலும் ஆயுள் முழுவதும் கைங்கரியம் செய்து அவன் அருளில் மூழ்கித் திளைத்தது அவரது தவப் பயன் அன்றி வேறென்ன சொல்ல முடியும்?!
வாரியார் சுவாமிகளின் ஞானத் திருவளாகக் கட்டுரை

Comments