சார்தாம்

‘மஹதோ மஹியான்’ என இறைவனின் வியாபகத் தன்மையை விவரிக்கிறது வேதம். அப்படிப் பெரிதினும் பெரிதான பெருமான், பெரிய திருவுருவம் துலங்கக் காட்சி தருவது சிக்கிம் மாநிலத்தில்!
உக்கிம் மாநிலம், ‘நம்சி’ நகரத்தின் ‘சோலோ பாக்’ மலைச்சிகர உச்சியில் கிட்டத்தட்ட 30 ஹெக்டேர் நிலப் பரப்பளவில், ரூபாய் 57 கோடி செலவில் அமைந்துள்ளது சார்தாம் சிவன் கோயில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில், அமர்ந்த நிலையில், 108 அடி உயர சிவபெருமானின் வானளாவிய திருச்சிலை காண்போரை பிரமிப்புற வைக்கிறது. ‘நம்சி’ என்றால் பூட்டான் மொழியில் ‘வானளாவிய’ என்று பொருள். பெயருக்கேற்றார்போல் இந்நகரம் சோலோபாக் மலை உச்சியில் அமைந்துள்ளது. அமைதியான சூழலில், மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் சார்தாம் திருக்கோயிலைக் கண்ட மாத்திரத்தில் தானாக மனதில் பக்தி பெருக்கெடுக்கிறது.
இந்து மதக் கோட்பாடுகளின்படி, ஜகந்நாத், துவாரகாநாத், பத்ரிநாத், ராமேஸ்வரம் ராமநாத் ஆகிய நான்கு (சார்தாம்) தலங்களையும், பன்னிரு ஜோதிர் லிங்கங்களைத் தரிசித்தவர்களுக்கு பாவங்கள் நீங்கி, மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். ஆனால், இந்த கே்ஷத்திரங்கள் இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளதால் எல்லா மக்களும் நினைத்தவுடன் சென்று தரிசிக்க இயலாது.
‘இப்புண்ணிய கே்ஷத்திரங்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் அமைந்திருந்தால் மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்யலாம்’ என்ற எண்ணம் சிக்கிம் மாநில முதல்வர் ஸ்ரீ பவான் சாம்லிங்குக்கும், அவரது மனைவி டிகா மாயா சாம்லிங்குக்கும் ஏற்பட்டதன் விளைவாக உருவானதே இந்த சார்தாம் கோயில்.
சார்தாம் சிவன் கோயிலின் அமைப்பு நான்கு பிரிவுகளைக் கொண்டது. 1. சிவனுடைய சிலாரூபம் மற்றும் ஜோதிர் லிங்கங்கள், 2. நான்கு தாம்கள், 3. சாயி பாபா ஆலயம், 4. கீர்த்தேஸ்வர் சிலை, நந்தி, சாயிதுவார், சாயி கோயில், கிரத்துவார், கிரட்டேசுவரர் சிலை மற்றும் சிவத்துவார்.
கிழக்கே பூரி ஜகந்நாத், மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத், தெற்கே உள்ள ராமேஸ்வரம் ஆகிய நான்கு திசை ஸ்தலங்களில் உள்ள இறைவனின் சிலாரூப பிரதிஷ்டைகள் இக்கோயிலில் அமைந்துள்ளன. இவையன்றி, சோம்நாத், மல்லிகார்ஜுனர், மகா காளேஸ்வரர், ஓம்காரேசுவரர், கேதார்நாத், பீமா சங்கர், விஸ்வநாத், திரயம்பகேசுவரர், வைத்தியநாதர், நாகேஸ்வர், ராமேஸ்வர் மற்றும் கிரிஷ்னேஸ்வரர் என்ற பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களும் இங்குள்ள பிரம்மாண்ட சிவபெருமான் சிலையைச் சுற்றி வட்ட வடிவில் அமைந்துள்ளன.
மாலை வேளைகளில் நடக்கும் சந்தியா ஆரத்தியின் போது, அனைத்துக் கோயில்களின் குருமார்களும் சிவன் கோயில் கர்ப்பக்கிரகத்தில் வேத மந்திரங்கள் ஓத, அம்மந்திர ஒலி சுற்றியுள்ள அனைத்துக் கோயில்களிலும் ஒரே நேரத்தில் ஒலிக்கும்படி இணைக்கப்பட்டுள்ளது. பகலிலும் பனி படர்ந்த மலைச் சூழல், திருக்கோயிலைத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டம் ஆகியவை நம் மனதில் தெய்வீக உணர்வைத் தூண்டுவதாக உள்ளன.
இரவு வேளையில் மின் விளக்குகளின் அலங்காரத்தில் இக்கோயில் சோர்க்க பூமியாகவே காட்சி தருகிறது. இச்சிவன் கோயில் அமைந்த நம்சி நகரம் பல சிறிய கோயில்களையும், பௌத்த மடாலயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவையன்றி, பறவைகள், மிருகங்களின் சரணாலயமும் உள்ளது. சமீப காலமாக சிக்கிம் மாநில அரசின் தனிக் கவனத்தில் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், புண்ணியத் தலமாகவும் விளங்கி வருகிறது சார்தாம்.

Comments