திருவெண்காடர்

விரிசடை கடவுளான ஈசன், அபூர்வமாக சந்திரகாந்த லிங்கத் திருமேனியனா, ‘திருவெண்காடர்’ எனும் திருநாமம் கொண்டு திகழும் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சதுர்வேதி மங்கலம்.
‘வேதம் ஓதிக் கொண்டிருந்த துர்வாசர், ஒரு இடத்தில் ஸ்வரம் தவறுதலாகச் சொல்ல, சரஸ்வதி தேவி சிரித்து விட்டாள். இதனால் 64 வருடம் பூமியில் இருந்து, 64 கலைகளையும் மானிடர்க்குக் கற்றுக் கொடுக்கக் கடவது" எனச் சாபம் கொடுத்தார் துர்வாசர். அதன்படியே ராம நதி பாயும் இத்தலத்தில் திருவெண்காடரையும், வாடாகலை நாயகியையும் வழிபட்டனர் பிரம்மனும், சரஸ்வதியும்’ என்கிறது புராணம்.
பிராமணர்கள் வேதங்கள் ஓதி பூஜை செய்த இடமாதலால் ‘பார்ப்பான்குளம்’ என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘சதுர்வேதிமங்கலம்’ என்று மருவியது என்கிறார்கள். புதன் பகவான் வணங்கி பேறு பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலை பாண்டிய மன்னன் ஆதித்யவர்மன் நிர்மாணித்ததாக வரலாறு.
புதனுக்கு ‘கிரஹபீடாஹரன்’ என்று ஒரு பெயர் உண்டு. மற்ற கிரகங்களால் விளையும் அசுபலனைப் போக்கும் வல்லமை புதனுக்கு உண்டு. அந்த புதனே வழிபட்ட தலம் என்பதால் இந்த இறைவனை பூஜித்தால் எல்லா கிரக தோஷமும் நிவர்த்தியாகும், பூரணக் கல்வி கைகூடும்.
அன்னை வாடாகலை நாயகி, கலைகளின் தாயாக விளங்குவதால், இவளை வணங்க கலைகளில் சிறந்து விளங்கவும், சிறப்புடன் செயல்படவும் முடியும்.
கருவறை அருகிலுள்ள அர்த்த மண்டபத்திலிருந்து வழிபடும்போது மூலவர் சிவலிங்கம் சிறியதாகவும், கொடிமரத்தின் அருகில் நின்று வழிபடும்போது பெரியதாகவும் தோன்றுகிறது. சுவாமி திருவெண்காடர் சந்திரகாந்த லிங்கத் திருமேனியனாக இருப்பதனால் இவருக்குச் செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தம் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. ஒரு மண்டலம் இவரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தினைப் பருகிவர, அனைத்துவித நோய்களும் குணமாகிறது என்பது பக்தர்களின் அனுபவம்.
இக்கோயிலில், பிரதோஷம், சிவராத்திரி, சித்திரை 1 மற்றும் ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேகம் போன்றவை விசேஷமானவை. உற்சவர் சுவே தாரண்யேசுவரர். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். தல விருட்சம்: பவளமல்லி (பாரி ஜாதம்).
இங்குள்ள குரு பகவான் காலடியில் நாக வடிவம் காணப்படுவதால், இவரை வணங்க இராகு, கேது தோஷம் நீங்குகிறது. இங்குள்ள சனி பகவானை வணங்க எதிரிகள் பயம் நீங்கும் என்றும் கூறுகிறார்கள்.
பழைமையான இந்த ஆலயத்தின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. பிறை சூடும் பெருமானின் ஆலயத் திருப்பணியில் பங்கேற்பது, நம் மரபுக்குச் சேர்க்கும் செல்வமன்றி வேறென்ன?

செல்லும் வழி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடையம் செல்லும் வழியில் 33 கி.மீ. அங்கிருந்து கோயில் செல்ல 1 கி.மீ.. ஆட்டோ வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 5 மணி முதல் 12 வரை. மாலை 4 மணிமுதல் 9 வரை.
தொடர்புக்கு: +91 9486396383 / 9486426872

Comments