பிரத்யங்கிராதேவி

பக்த பிரகலாதனின் வாக்கை மெய்ப்பிக்கவும், அசுரனான இரண்யனை வதைக்கவும் தூணிலிருந்து வெளிப்பட்டார் ஸ்ரீநரசிம்மர்; அசுரனை வதைத்தார். அதன்பின்பும் அவர் ஆவேசம் குறையவில்லை. அதைத் தணிக்கும்பொருட்டு தோன்றியவர் ஸ்ரீசரபேஸ்வரர். இந்த சரபேஸ்வரருக்கு உதவியவர்கள் ஸ்ரீபிரத்யங்கிராவும், சூலினி துர்கையும். சரபரின் தேவியர் என்று இவர்களைக் குறிப்பிடும் மந்திர சாஸ்திரம்.
பிரத்யங்கிராதேவி சிங்க முகத்துடன் ஆயிரம் திருமுகங்களும், இரண்டாயிரம் கைகளும், சிவப்பேறிய கண்கள் மூன்றும், கனத்த சரீரமும், கரிய நிறமும், நீலநிற ஆடையும் அணிந்த விஸ்வ ரூபத்தினை உடையவள்.
அன்னை பிரத்யங்கிராதேவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்கள் உள்ளன. தென்தமிழகத்தில் தூத்துக்குடிக்கு மிக அருகேயுள்ள கோரம்பள்ளம் அயனடைப்பு சித்தர் நகரில் பிரம்மாண்டமான வடிவில் பிரத்யங்கிராதேவிக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
கேரளா கட்டடக்கலை வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தில் பிரத்யங்கிராதேவிக்கு ஒரே கல்லில் ஆன 11அடி உயர சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதுபோன்று ஆலய வளாகத்தில் காலபைரவருக்கும் ஒரே கல்லில் 11 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மூலவர் பிரத்யங்கிராதேவி சிங்கமுகத்துடன் வடக்கு நோக்கியவளாக ஆவேசமான கோலத்தில் காட்சி கொடுக்கிறாள். நாகம், சூலம், கபாலம் போன்றவற்றை ஏந்திய அமர்ந்த திருக்கோலம்.
பத்து கரங்களுடன் கூடிய விஸ்வரூபக் கோலத்தில் காலபைரவர் மேற்குநோக்கி எழுந்தருளியுள்ளார். தட்சிணாமூர்த்தி குருமகாலிங்கேஸ்வரராக தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆகம விதிப்படி நிர்மாணம் செய்யப்பட்டுள்ள இவரை வணங்கினால் குழந்தைபேறு, தொழில் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
வீரனார், குருமகாலிங்கேஸ்வரர், சரபேஸ்வரர், பஞ்சமுக கணபதி, சூலினி துர்கா, சிம்ம கணபதி, நாகலிங்கம், முனீஸ்வரர், குரு பகவான், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், காளி, சனீஸ்வரன் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர்.
சனிக்கிழமைதோறும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடக்கின்றன.
சித்தர் நகரில் எழுந்தருளியுள்ள பிரத்யங்கிராதேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும், புத்ர பாக்யம் கிட்டும், கொடிய நோய்கள் விலகிப் போகும், எதிரிகளின் சூழ்ச்சிகள் காணாமல் போய்விடும், ஏவல் - பில்லி - சூன்யம் போன்ற கெடுதல்கள் அண்டாது, அரசியலில் மேன்மை கிடைக்கும், அரசு வேலை, பதவி உயர்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள காலபைரவரை வணங்கும் பக்தர்களுக்கு இழந்த செல்வங்கள் திரும்பக் கிடைக்கும், முன்னோர்களின் சாபம் நீங்கி, வாழ்வில் மேன்மை கிட்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் காலபைரவர், சரபேஸ்வரருக்கு ஹோமத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. மக்கள் நலமாக வாழவும், பசுமை வளம் சிறக்கவும் சமீபத்தில் இக்கோயிலில் 2013 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடத்தப்பட்டது. 48 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த யாகத்தில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரத்யங்கிராதேவியை வாரத்தில் வியாழக்கிழமை சந்தனக்காப்பு அலங்காரத்துடன், எள்ளுப்பூ, செவ்வரளி மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வணங்கினால் புத்ர பாக்யம் கிட்டும். வெள்ளிக்கிழமை தாமரை மலர் அணிவித்து, சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும். காலபைரவருக்கு புனுகு பூசி, அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரத்யங்கிராதேவி-காலபைரவருக்கு மாதம்தோறும் அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் தமிழ் வருடமான சித்திரை மாதம் திருவிழா நடக்கிறது.
ஆலயத் துளிகள்...
* ஆலயத்தின் ஸ்தல விருட்சம் வேம்பு.
* எள்ளுப்பூ, செவ்வரளி பிரத்யங்கிராதேவிக்கு மிகவும் உகந்த மலர்கள்.
* காலபைரவரை நந்தியாவட்டை, மரிக் கொழுந்து, அரளிப்பூ அணிவித்து வழிபடுகின்றனர்.
* செவ்வாய், வெள்ளி, அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை தினங்கள் வழிபடச் சிறந்தவை.
* ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு காலை, மாலையில் சுக்கு காபி வழங்கப்படுகிறது.
* தமிழகத்திலேயே 11அடி உயரத்தில் பிரத்யங்கிராதேவி - காலபைரவருக்கு சிலை இங்குதான் உள்ளது.
செல்லும் வழி: தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் - கோரம்பள்ளம் பஸ் நிறுத்தம். அங்கிருந்து ஆட்டோ, கார், மினிபஸ் வசதி உள்ளது.
தரிசன நேரம்: காலை 7மணி முதல் 1வரை. மாலை 4மணி முதல் இரவு 9 வரை.
தொடர்புக்கு: 94434 04832

 

Comments