அற்புதமான கோயில்கள் கொண்ட ஈரோடு மாநகரம்

அதிசயவன்னி


ஈரோடு அருகே கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் மிகப் பழைமையான வன்னிமரம் உள்ளது. இது பூ பூக்கும், ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும் மறுபக்கம் முள் இருக்காது. இதன் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெடாது. பழனி பங்குனி உத்திரத் திருவிழாவுக்குத் தீர்த்தக் காவடி எடுத்துச் செல்லும் போது, காவிரி தீர்த்தத்தில் இம்மர இலைகளைப் போட்டுத்தான் எடுத்துச் செல்வார்கள்.
பிரம்மாண்ட துவஜஸ்தம்பம்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோயிலில் ஒரே கல்லால் ஆன பிரம்மாண்ட துவஜஸ்தம்பம் உள்ளது. இது தரைக்குமேல் சுமார் 80 அடியும், பூமிக்கடியில் சுமார் 40 அடியும் உள்ளது. இதன் ஒரு பகுதியில் 6 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் கம்பீரமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
விநாயகி வடிவம்
நுரோடு மாவட்டம், பவானியில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள சௌந்திர நாயகித் தாயார் சன்னிதி மண்டபத்தின் மேற்கூரையில் வீணையை மீட்டும் விநாயகி வடிவச் சிற்பம் அழகு மிளரச் செதுக்கப்பட்டுள்ளது.


தினசரி கணபதி ஹோமம்
ஈரோடு மாவட்டம், கரும்பாறையில் ‘சங்கடஹர அவதார’க் கோலத்தில் விநாயகர் சிலை உள்ளது. இது பார்வதிதேவி, விநாயகர் மடியில் அமர்ந்து தவம் செய்யும் கோலம். பொதுவாக விநாயகர் கோயில்களில் விசேஷ காலங்களில் மட்டுமே கணபதி ஹோமம் நடத்தப்படும். ஆனால் இக்கோயிலில் தினசரி கணபதி ஹோமம், கஜ பூஜை, நிர்மால்ய பூஜைகள் செய்யப்படுகின்றன. தன்வந்திரி பெருமாளுக்குத் தனி சன்னிதி இங்குள்ளது.


வயிற்று நோய் நீங்க...
ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது பெரிய மாரியம்மன் கோயில். இங்கு உப்பு, மிளகை கோயில் வளாகத்தில் போட்டு மாரியம்மனை வணங்கி, ஏழை, எளியோருக்கு அன்னதானம் செய்ய வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.


அமுத லிங்கம்
ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீஅமுதலிங்கம், ஆவுடையாரிலிருந்து எடுக்கவும், பின்பு வைக்கவும்கூடிய அமைப்பில் உள்ளது. இந்த அமுத லிங்கத்தை பெண்கள் தமது இடையில் வைத்துக்கொண்டு, சன்னிதியை மூன்று முறை வலம் வந்து வணங்க மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அறுபடை முருகன்
விபூதி செம்பு
ஈரோடு மாவட்டம், மட விளாகம் சிவன் கோயிலில் உள்ள சுனையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை விபூதி நிரம்பிய செம்பு மிதந்து வருகிறது என்கிறார்கள். மூலவர் பச்சோட்டு ஆவுடையார் தன் விரல் நகத்தால் கீறி உருவாக்கிய சுனை இது. பார்வதி தேவி தவமிருந்ததால் ‘பார்வதிபுரம்’ என்றும் இதற்குப் பெயர் உண்டு.


வேதகிரி
பவானியிலிருந்து மேட்டூர் செல்லும் சாலையில் உள்ள ஊராட்சிக் கோட்டை மலை 4000 அடி செங்குத்தானது. இதன் உச்சியில் வேத கணபதி, வேத தண்டாயுதபாணி, வேத கிரீஸ்வரர், வேத நாயகி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வேத வரதராஜப் பெருமாள் சன்னிதிகள் உள்ளன. திருமால், இத்தலத்தில் வியாசராகத் தோன்றி வேதங்களைத் தொகுத்ததாக தலபுராணம். இம்மலை உச்சியில் உள்ள ஊற்று நீரைப் பருகினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இது கிரிவலம் செய்ய உகந்த மலையாகும்.


அறுபடை முருகன்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகிலுள்ள சீனாபுரத்தில் 60 அடி உயரக் குன்றில் முருகப் பெருமான் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மலை உச்சிக்கு 60 படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். அருகருகே ஆறு மலைகளில் முருகக் கடவுள் அருள்புரிவதால், பக்தர்கள் இதை அறுபடை வீடுகளாகப் போற்றுகின்றனர். ஒரே நாளில் ஆறு கோயில் முருகனையும் வழிபடுவதால் நிறைந்த செல்வம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வை அருள்வதாக நம்பிக்கை.


சென்னிமலை சுப்ரமணிய சுவாமி
ஈரோட்டிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சென்னை மலை. ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில் கொண்டிருக்கும் இங்குள்ள கோயிலில்தான் ஸ்ரீகந்த சஷ்டி கவசம் அரங்கேறியது என்பர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்கத் தீர்த்தமும் இத்தலத்தின் சிறப்பு.


பத்தாம் நூற்றாண்டு கோயில்
ஈரோடு மாவட்டம், விஜய மங்கலத்தில் சமண மதத்தைக் காலூன்றச் செய்த 24 தீர்த்தங்கரர்களில் ஒருவரான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கரர் ஆலயம் உள்ளது. கொடூம்பாளூர் இருக்கு வேளிர் கலை நுணுக்க முறையிலே கட்டப்பட்ட மிகப்பெரிய இக்கோயிலில் பத்தாம் நூற்றாண்டு ஓவியங்கள் உள்ளன. எம்மதத்தவரும் போற்றும் பழைமையான தமிழ் இலக்கண நூலான ‘நன்னூல்’ இயற்றிய பவனந்தி முனிவர் சிலை இங்குள்ளது. அவரை ஆதரித்த சீயங்கன் சிலை, பெருங்கதை பாடிய கொங்கு வேளிர் சிலை ஆகியவையும் உள்ளன.


நட்டாற்றீஸ்வரர்
ஈரோடு மாவட்டம், காங்கயம்பாளையத்தில் காவிரி நதியின் நடுவில் உள்ள குன்றின் மீது ஓம்கார வடிவில் அமைந்துள்ளது நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில். இங்கு மணல் வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தைச் சுற்றி, கொக்கராயன் பேட்டையில் முக்கூடநாத சுவாமி, சாத்தம்பூரில் வல்லாளேஸ்வரர், காளமங்கலத்தில் மத்தியபுரீஸ்வரர், மொளசியில் முக்கண்ணீஸ்வரர் என நான்கு சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்நான்கு சிவத் தலங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளதால் இது பஞ்சபூத தலங்களுள் பிருத்வி (மண்) தலமாகக் கருதப்படுகின்றது. காவிரி ஆற்றைக் கடந்துதான் இக்கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
ஆடிப் பெருக்கன்று சிவபெருமானுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கிறது. அன்று அகத்தியருக்கு தலைப்பாகை மற்றும் வஸ்திரம் அணிவித்து வழிபடுவர். அம்பாள் நல்லநாயகி. சிவ சன்னிதிக்கு வலப்புறம் அருள்பாலிக்கிறாள். ஆடிப்பூரத்தன்று மதிய வேளையில் செய்யப்படும் பூஜையில் இவளுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
வாதாபி, வில்வலன் எனும் அசுரர்களைப் பற்றிய கதை நமக்குத் தெரியும். அவர்களை அகத்திய முனிவர் வதைத்ததால், அவருக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க காவிரி ஆற்றின் நடுவில் இருந்த குன்றின் மேல் மணலில் லிங்கம் பிடித்து பூஜித்தார். காலப்போக்கில் அந்த லிங்கம் இறுகிப் போனது. காவிரி ஆற்றின் நடுவில் இருந்ததால் இவருக்கு ‘நட்டாற்றீஸ்வரர்’ எனப் பெயர் ஏற்பட்டதாகத் தலவரலாறு.
கோயில் வளாகத்திலுள்ள பாறை ஒன்றின் மீது தலவிருட்சம் அத்திமரம் உள்ளது. மிகவும் பழைமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம். இதன் கீழே காவிரி கண்ட விநாயகர் அருள்பாலிக்கின்றார். காவிரி நதியே தல தீர்த்தம். இங்குள்ள முருகப்பெருமான் வலது காலை முன் வைத்தும், இடதுகாலை பின் வைத்தும் நடக்கும் கோலத்தில் காட்சியளிக்கிறார். அகத்திய முனிவர் இத்தல சிவனை தரிசிக்க வரும்போது, முருகப் பெருமான் அவரை முன்னின்று வரவேற்றதாக வரலாறு. முருகனின் இடது கையில் கிளி வைத்திருப்பது வித்தியாசமான கோலம்.
இக்கோயிலில் மார்கழி திருவாதிரையன்று நடராஜப் பெருமானுக்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது. அன்று ஒரு பரிசலில் நடராஜர் எழுந்தருளி, காவிரி நதியில் கோயிலைச் சுற்றி வருவார். அவருக்கு முன்பாக மற்றொரு பரிசலில் மேள வாத்தியங்கள் முழங்கிச் செல்லும். மாலையில் திருக்கல்யாண வைபவம்.
ஆடிப்பெருக்கு, சித்திரை முதல் நாள், மார்கழி திருவாதிரை, கார்த்திகை சங்காபிஷேகம் ஆகியவை இக்கோயிலில் விசேஷம். சித்திரை முதல் நாள் மட்டும் சிவபெருமானுக்கு தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பிரசாதமாகத் தருகிறார்கள்.
பேச்சுக் குறைபாடு, உள்ளவர்கள் இத்தல முருகனை வழிபட, நிவர்த்தி கிடைக்கிறது. நேர்த்திக் கடனாக சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபடுகிறார்கள்.
செல்லும்வழி: ஈரோடு - கரூர் சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது சாவடிபாளையம்புதூர் நான்கு வழி சாலை. அங்கிருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 வரை.
தொடர்புக்கு: +91-424 - 3201 675, 2920 039, 98420 22017.


பவளமலை முருகர்
ஈரோடு மாவட்டம், முருகன் புதூரில் அமைந்துள்ளது பவளமலை முருகர் ஆலயம். ‘பச்சை மலை, பவள மலை எங்கள் மலை அம்மே’ என குற்றாலக் குறவஞ்சி இத்தலத்தினை பெருமைபட பேசுகிறது.
வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் நடந்த பலப்பரிட்சையில், சக்தி வாய்ந்த மேரு மலையை தாக்கும் நோக்கத்துடன் மலை மீது மோதினார் வாயு. காற்றின் வேகம் தாங்காமல் மலைச் சிகரங்களில் ஒன்று பூலோகத்தில் விழுந்தது. அதுவே பவளமலை. குன்றிருக்கும் இடத்திலெல்லாம் குமரன் இருப்பதாக எண்ணிய கணவால குலகே்ஷத்திரத்தைச் சேர்ந்த பக்தர்கள் முருகப் பெருமானுக்கு இங்கு கோயில் எழுப்பி வழிபட்டனர் என்பது வரலாறு.
துர்வாச மகரிஷி இத்தல முத்துக்குமார சுவாமியை வணங்கி வழிபட்டுள்ளார். விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.
மலைப்பாதை படிக்கட்டுகளைச் ஏறிச் சென்று தான் பிரம்மச்சாரியாக உள்ள மூலவர் முத்துக்குமார சுவாமியை தரிசிக்க வேண்டும். பின்பு வாயு மூலையில் தவக்கோலத்தில் உள்ள வள்ளி, தெய்வானையை தரிசிக்கலாம். முருகப் பெருமானைத் திருமணம் செய்து கொள்ள இருவரும் தவம் புரியும் கோலம் இது.
உற்சவர் ஆறுமுகர், வள்ளி, தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கிறார். அன்னை பார்வதி பெரியநாயகியாகவும், ஈசன் கைலாச நாதராகவும் இங்கு அருள்புரிகின்றனர். இங்குள்ள சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றியவர். இவரை வணங்குவதால் தீராத நோய்கள் குணமடைகிறது எனக் கூறுகிறார்கள்.
செவ்வாய் தோஷமுள்ளவர்கள் மூலவர் முத்துக்குமார சுவாமிக்கு ‘திரிசதார்ச்சனை’ செய்வதால் தோஷம் நீங்கி திருமணம் கைகூடுகிறது. ‘திரி’ என்றால் மூன்று. ‘சதம்’ என்றால் நூறு. சூரனை சம்ஹாரம் செய்த பின் இந்திரன் முதலான தேவர்கள் கூடி முருகப்பெருமானுக்குச் செய்த அர்ச்சனையே ‘திரிசதார்ச்சனை.’ குமரக் கடவுளின் வெற்றியை போற்றிச் செய்ததால் இதற்கு ‘சத்ரு சம்ஹார திரிசதார்ச்சனை’ என்று பெயர்.
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானுக்கு ஒரு முகத்துக்கு 50 மந்திரம் வீதம், ஆறு முகத்துக்கும் 300 வழிபாட்டு மந்திரங்கள் சொல்லி வழிபடுவதால் திருமணத்தடை நீங்குதல், குழந்தைப் பேறு, அரசியலில் வெற்றி, தொழிலில் அபிவிருத்தி, எதிரிகளிடம் வெற்றி போன்றவை கிடைக்கின்றன.
செல்லும் வழி: ஈரோட்டிலிருந்து கோபிசெட்டிபாளையம் 35 கி.மீ. அங்கிருந்து அந்தியூர் செல்லும் வழியில் 3 கி.மீ. தொலைவில் முருகன் புதூர்.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 1 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.
தொடர்புக்கு: 9715740960

Comments