துவேஷம்

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்குமாய் நடந்த குருகே்ஷத்திர யுத்தத்தில் பல தர்ம சங்கடங்கள், வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. பர்ணாசை என்பவளின் புதல்வன் சுருதாயுதன். என் மகன் சத்ருக்களால் கொல்லப்படாதவனாயிருக்க வேண்டும்" என வருணனை நோக்கிக் கடும் தவமிருந்த அவளிடம், வருணன் ஒரு அற்புதமான கதா யுதத்தைக் கொடுத்து, இதைப் போரில் எதிரி முன் காண்பித்தாலே எல்லா ஆயுதங்களும் தவிடு பொடியாகி விடும். ஆனால், ஆயுதம் தரிக்காதவன் மேல் தாக்கினால் அது திரும்பி வந்து எறிந்தவனை அழித்துவிடும்" என எச்சரித்துச் சென்றார்.
பாரதப் போரில் 13-ம் நாள் யுத்தத்தில் கண்ணன் வளைத்து வளைத்து குதிரைகளைச் செலுத்தி அர்ஜுனனின் வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுப்பதைக் கண்டு ஆத்திரமுற்ற சுருதாயுதன், ஸ்ரீகிருஷ்ணர் மேல் அந்த அற்புதக் கதையை வீசினான். அடுத்த நொடி அது திரும்பி வந்து அவனை மார்பில் தாக்கிக் கொன்றது.
தேவகியின் சுயம்வரம். சௌமதத்தனும் சினியும் அவளுக்காகக் கடும் போரிட்டனர். வசுதேவர் சார்பாகச் சண்டையிட்ட சினி வெற்றி பெற்று தேவகியை வசுதேவரிடம் ஒப்படைத்தான். அன்று முதல் இரு குலத்தவருக்கும் ஜன்மப் பகை.
சினியின் பேரன் சாத்யகி, அர்ஜுனனின் அந்தரங்கத் தோழன். சௌமதத்தனின் புதல்வன் பூரிசிரவஸுவும் வலிமையில், வீரத்தில் நிகரற்றவன். பாரதப் போரில் இருவருக்கும் கடும் யுத்தம். குதிரைகள் மாள, விற்கள் அறுபட, ரதங்கள் நொறுங்க கடும் போர். கடைசியில் மல்யுத்தம் செய்தனர்.
அச்சமயம் அர்ஜுனன் ஜயத்ரதனோடு மும்முரமாக யுத்தம் புரிந்து கொண்டிருந்தான். ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் ‘பூரிசிரவஸு சாத்யகியைக் கொன்று விடுவானோ?’ என்று கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
பார்த்தா! நாம் சாத்யகிக்கு உதவியே ஆக வேண்டும். அவன் களைத்துவிட்டான் பார்" என முகுந்தன் கூறி முடிக்குமுன், பூரிசிரவஸு சாத்யகியைத் தூக்கிக் கீழே போட்டு அடித்தான். ‘சாத்யகி இறந்தான்’ என்றே கொக்கரித்தது கௌரவப்படை. சாத்யகியின் உடலைத் தரதரவென்று தரையில் சுழற்றினான் பூரிசிரவஸு.
யுத்தத்தில் தன்னோடு யுத்தம் செய்யாதவன் மேல் பாணம் தொடுப்பது க்ஷத்திரிய தர்மமல்லவே" என்று பார்த்தன் தயங்க, நண்பன் உயிரிழப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் நட்பின் இலக்கணமோ?" என்றான் வாசுதேவன். அப்போது பூரி சிரவஸு கீழே கிடந்த யுயுதானனை காலால் மிதித்தபடி கத்தியால் குத்த முயன்றான். அப்போது பார்த்தன் விட்ட அம்பு, கத்தியோடு பூரிசிரவஸுவின் கையைப் பறக்க வைத்தது.
குந்தி புத்திரனே! உன் தமையன் தருமனிடம் சென்று இதைச் சொல். மெச்சிக் கொள்வார். இதை உனக்குச் சொன்னவன் இந்த வெண்ணை திருடிதானே! இல்லை உன் தந்தை இந்திரனா?" என்று பூரிசிரவஸு இகழ்ந்தான்.
ஆயுதமிழந்தவனைக் கொல்ல முற்பட்டது என்ன நியாயம்? சினேகிதனைக் காக்க நான் இப்படிச் செய்ய வேண்டியதாயிற்று" என்றான் விஜயன். பூரி சிரவஸு மௌனமாக இடக்கரத்தால் அம்புகளைப் பரப்பி யோகாசனத்தில் அமர்ந்து மூச்சை உள்ளிழுத்துக் கொண்டிருந்தான். தலை பூமியில் படும்படி வணங்கினான்.
ஒரு முகூர்த்த காலத்தில் எழுந்த சாத்யகி கோபத்துடன் வாளை எடுத்து, கிருஷ்ணரும், அர்ஜுனனும் வேண்டாம், வேண்டாம்" என்று தடுத்தும் பூரிசிர வஸுவின் சிரத்தைக் கொய்து எறிந்தான். கூடியிருந்த அனைவரும் துவேஷம் எத்தனை கொடூரமானது" என விமர்சித்தனர்

Comments