பிக்ஷாடனர் கோலத்தின் தத்துவம் என்ன?

கல்யாண சுந்தரர், பைரவர், நடராஜர், வீரபத்திரர் உட்பட சிவபிரான் வெளிப்பட்ட வடிவங்களுக்குள் ஆண்டி கோலத்துடன் கையில் கபாலம் ஏந்தி (பார்வதியிடம்) பிட்சை எடுக்கும் பிக்ஷாடனரும் ஒருவர்.
ஒருசமயம் சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மதேவர், அகம் பாவத்துடன் கயிலாசத்தில் சிவனைப் போலவே வலம் வர, அதைக் கண்டு பார்வதி கலங்க, பிரம்மாவின் ஆணவத்தை அடக்க, சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ளி விடுகிறார். அதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. அத்துடன் பிரம்மாவின் பாதி கபாலமும் (மண்டை ஓடும்) சிவனின் கையில் ஒட்டிக் கொள்கிறது. அந்த பிரம்ம கபாலம் முழுவதும் ஏதாவது பொருட்களால் நிறைந்தால்தான் சிவனின் கையை விட்டு நீங்கும். அதுவரை சிவன் பிட்சை எடுத்தாக வேண்டும். ஆகவே, அந்த சமயத்தில் பிட் சாண்டாராக சிவன், பார்வதி தேவியிடம் கபாலத்தை நீட்டுகிறார். அன்னை பார்வதியும் சிவனுக்கு பிட்சையிட கபாலம் நிறைந்தது. சிவனின் கையிலிருந்தும் விலகியது. இதை நினைவுபடுத்தும் விதமாகவே இன்று திருச்சிக்கு அருகிலுள்ள உத்தமர் கோயில் என்னும் பிட்சாண்டார் கோயிலிலும், வாரணாசி என்னும் காசியிலும் மற்றும் பல இடங்களிலும் சிவன் பிக்ஷாடன மூர்த்தியாகக் காட்சி தருகிறார்
ஆகவேதான், சிவாலயங்களில் நடைபெறும் பிரம்மோத்சவ (திருவிழா) காலங்களில் ஒருநாள் மட்டும் உடலில் ஆபரணங்களும் அலங்காரமும் இல்லாமல் கையில் கபாலம் ஏந்தி பிட்சாடன வடிவில் உலா வருவார். அந்தச் சமயத்தில் அனைவரும், குறிப்பாக அனைத்து வியாபாரிகளும், அந்த சிவனின் கையிலுள்ள கபாலத்தில் காணிக்கையாக தனம், பணம் போடுவார்கள்.
ஆனால், நம்மிடமுள்ள அகந்தை, ஆணவம் பொறாமை போன்ற தீய குணங்களையும் ஆசை, பாசம் முதலானவற்றையும் ஈசன் நம்மிடம் யாசிக்கிறார். இவை இருக்கும் வரை ஈசனாலும் நமக்கு ஞானத்தை உபதேசிக்க முடியாது. ஆகவே, பக்தனான நமக்கு அருள் செய்வதற்காக நம்மிடம் (நமது இருப்பிடம்) வந்து யாசிக்கும் ஈசனிடம் நம்மிடமுள்ள தீய குணங்களை பிகை்ஷயாகப் போட்டுவிட (விட்டு) வேண்டும். இதன் அடையாளமாகவே பணமும் பொருளும் உலா வரும் பிக்ஷாடன மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

பில்லி, சூன்ய, ஏவல் பாதிப்பு இருப்பதை எவ்வாறு உணர்வது? அதைத் தடுப்பது எப்படி?

தினசரி அதிகாலை வீட்டு வாசலில் ஜலம் தெளித்து, கோலம் போட்டு, சூரிய உதய, அஸ்தமன நேரத்தில் தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி, வீட்டில் மணியடித்து பூஜை செய்து, குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் கேட்கச் செய்து, அந்தணர்களின் வேத சப்தம் ஒலிக்கச் செய்து, அடிக்கடி பலரும் வந்து உணவருந்தி ஆசி வழங்கி... என்பதாக வசிக்கும் வீட்டின் சூழ்நிலையை அமைத்துக் கொண்டால், அந்த வீட்டில் வசிப்பவருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. மற்றவரின் பொறாமையும், சூன்யமும் அண்டாது.
அத்துடன், நம் உடலை தூய்மையாக வைத்திருத்தல், தூய்மையாக ஆடை அணிதல், மகிழ்ச்சியோடு இருத்தல், குறிப்பாகப் பெண்கள் அழாமல், மகிழ்ச்சியுடன் இருத்தல் போன்ற தனி மனிதனின் கட்டுப்பாடுகளும் குடும்பத்தைப் பாதுகாக்கும்.
இதற்கு மாறாக, மனம்போன போக்கில் வாழ்க்கையை நடத்தும்போது, எதிரிகளோ, வேண்டாதவர்களோ செய்யும் சில வேண்டாத செயல்கள், அவர்களது தீய எண்ணங்கள் நம்மை பாதிக்கத்தான் செய்யும். அதனால், குடும்பத்தில் எப்போதும் கருத்து வேறுபாடுகள், ஓயாமல் சண்டை, சச்சரவுகள், யாருமே வீட்டுக்கு வரத் தயங்குதல், மன நிம்மதி இல்லாதிருத்தல், தூக்கம் வராமல் இருத்தல், தூக்கத்தில் கெட்ட கனவுகள் தோன்றுதல், காரணமின்றி பலகாலமாக இருக்கும் மரம் அல்லது மரக்கிளைகள் தானாகவே ஒடிந்து கீழே விழுதல், நாய் ஊளையிடுதல், ஏற்றி வைத்த தீபம் (காற்றே இல்லாத நிலையிலும்) அணைந்து போதல், வீட்டில் எந்தஒரு நல்ல செயலையும் செய்யவிடாது தடங்கல் ஏற்படுதல் போன்றவை, வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்த்தும். அப்போது முன் சொன்னபடி வீட்டின் சூழ்நிலையை மாற்றிக் கொண்டால் துஷ்ட சக்திகள் வெளியேறி நிம்மதி கிடைக்கும்.

 

Comments