ராஜராஜ சோழனின் படைத் தளபதி ஒருவர், சூரிய கிரகண பரிகாரத்துக்காகவும், சோழப் பேரரசின் ஆட்சி இன்னும் நல்ல முறையில் திகழ்வதற்காகவும் ஓர் ஆலயம் அமைத்தார். ஆண் பொருநையாறும் (தற்போது அமராவதி ஆறு எனப்படுகிறது) முதிரையாறும் (தற்போது குதிரையாறு எனப்படுகிறது) கூடுகிற இடத்தில், அழகுற அமைந்துள்ளது அந்த ஆலயம்.
அந்தக் காலத்தில் சங்கரராம நல்லூர் எனப் பட்ட ஊரில், கடையெழு வள்ளல்களில் ஒருவரான குமண வள்ளல் வசித்தார். அவரைச் சுற்றிப் புலவர்களும் பாவலர்களும் எந்நேரமும் குழுமி இருந்தார்கள். எனவே, அந்த ஊர் குழுமம் எனப்பட்டு, பிறகு கொழுமம் என மருவியது. திருப்பூர் மாவட்டம் கொழுமத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீதாண்டேஸ்வரர்.
திருப்பூரிலிருந்து உடுமலைப்பேட்டை வழியாக இந்த ஊருக்குச் செல்லலாம். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்தும் கொழுமத்துக்குப் பேருந்து வசதிகள் உள்ளன.
மூலவரின் திருநாமம்- ஸ்ரீசோழீஸ்வரர். அம்பாள்- ஸ்ரீபிரஹன்நாயகி. இங்கே, தாண்டவக் கோலத்தில் சிவனார் காட்சி தருவதால், அவருக்கு ஸ்ரீதாண்டேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது.
திங்கட்கிழமை மற்றும் பிரதோஷ நாள்களில் சிவனாரைத் தொழுவது சிறப்பு! குறிப்பாக, தொடர்ந்து 15 திங்கள்கிழமைகளில் வில்வமாலை சார்த்தி வழிபட்டு வந்தால், தொழில் வளம் பெருகும், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
இந்தத் தலத்தின் ஸ்ரீநடராஜருக்கு ஆனி உத்திரத் திருநாளன்று காலையில் பால், தயிர், பஞ்சாமிர்தம் எனப் பல திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அப்படி அபிஷேகித்து இறைவனை வேண்டினால், சகல ஐஸ்வரியமும் பெறலாம் என்பது ஐதீகம்!
ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசனீஸ்வரர் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உள்ளன. இந்தக் கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீகல்யாண வரதராஜ பெருமாள் கோயிலும் உள்ளது. ஒரே இடத்தில் சைவ- வைணவ ஆலயங்கள் அடுத்தடுத்து இருப்பதைப் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர், ஊர்க்காரர்கள்!
Comments
Post a Comment