ஒரு தாளின் மிசை நின்று
நின்ற தாளின் ஊருவின்மேல்
ஒரு தாளை ஊன்றி
வேறொன்றும் கருதாமல் மனமடக்கி
விசும்பில் ஓடும் கதிரவனைக் கவர்வான் போல
அர்ஜுனன் தவம் செய்தான்
நின்ற தாளின் ஊருவின்மேல்
ஒரு தாளை ஊன்றி
வேறொன்றும் கருதாமல் மனமடக்கி
விசும்பில் ஓடும் கதிரவனைக் கவர்வான் போல
அர்ஜுனன் தவம் செய்தான்
உடல் முழுதும் திருநீறு பூசி, மரஉரி தரித்து எம்பெருமானை வேண்டி அர்ஜுனன் கடுந்தவம் புரிந்ததை இப்படி விளக்குகிறது வில்லிபாரதம். பாசுபதாஸ்திரம் வேண்டி அர்ஜுனன் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான்.
அப்போது பன்றி வேடத்தில் ஓர் அரக்கன் அர்ஜுனனின் தவத்தைக் குலைக்க முயன்றான். எம்பெருமான்மீது மாறாத பக்தியுடன், அர்ஜுனன் தபசு மரம் ஏறி தன்னுடைய தவத்தைத் தொடர்ந்தான்.
அர்ஜுனனின் தவத்தால் மகிழ்ந்த எம்பெருமான், அர்ஜுனனுக்கு பாசுபதாஸ் திரத்தை வழங்கி பாண்டவர்களை ஆசீர்வதித்ததோடு, அவனது பிரார்த் தனைக்கு இணங்கி அந்த இடத்திலேயே கோயில் கொண்டார். அர்ஜுனனுக்கு அஸ்திரம் கொடுத்ததால் சிவபெருமான் அஸ்திரபுரீஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது ஆனூர். மகாபாரத காலத்தில் இருந்தே பிரசித்தி பெற்றிருந்த ஆனூர், அன்னியூர், ஆனியூர், ஆதியூர், சத்யாச்ரய குல கால சதுர்வேதிமங்கலம் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. பிரிட்டிஷார் காலத்தில் 1933-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்வெட்டு ஆண்டு அறிக்கை ஒன்றில், 'திருவம்பன்காட்டு மகாதேவர்’ என்ற பெயரில் இந்தக் கோயில் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
கோயில் முகப்பில் நான்குபுறங் களிலும் நந்தி, விநாயகர், முருகன் மற்றும் சூலத்துடன் இருக்கிறது தீப ஸ்தம்பம். கார்த்திகை தீபத்தன்றும், மாத பௌர்ணமி தினங்களிலும் இந்த தீப ஸ்தம்பத்தில் விளக்கேற்றி வழிபட, பல நன்மைகள் கிட்டும். கோயிலின் உள்ளே நந்தி மண்டபத்தைக் கடந்து சென்றால், ஈசனின் சந்நிதியை தரிசிக்கலாம். இங்கே அருள் புரியும் ஈசனுக்கு ஸ்ரீஅஸ்திரபுரீஸ்வரர் என்றும், அம்பிகைக்கு ஸ்ரீசவுந்திரவல்லி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.
கோயில் திருச்சுற்றில், கைகளால் தாளம் போடுவதுபோன்ற விநாயகரின் புடைப்புச் சிற்பம் ஒன்று காணப்படுகின்றது. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த விநாயகருக்கு 'சங்கீத விநாயகர்’ என்று பெயர். இந்த விநாயகருக்கு அருகிலேயே மற்றொரு புடைப்புச் சிற்பமாக ஜேஷ்டா தேவியின் சிலையும் உள்ளது. ஜேஷ்டா தேவி, ஸ்ரீ லக்ஷ்மி தேவிக்கு மூத்தவள் ஆவாள். இவளின் வலப்புறம் நந்தியும், இடப்புறம் அக்னியும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஜேஷ்டாதேவிதான், 13-ம் நூற்றாண்டுக்குப் பிறகு 'மாரியம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் தக்ஷிணாமூர்த்தி இங்கே கல்லால மரம், முயலகன், சனகாதி முனிவர்கள் என யாருமே இல்லாமல் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல இங்குள்ள பைரவரும் தன் வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.
ஈசனின் அருள் திறம் பொலிந்து விளங்கிய தொன்மைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருக்கோயிலின் இன்றைய நிலை வருத்தமளிக்கிறது.
பிரம்மாண்டமான நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், தற்போது முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. நித்திய வழிபாடுகளோ வழிபடும் ஜனங்களோ இன்றி வெறிச்சோடிக்கிடந்த இந்தக் கோயிலில், 2002-ம் ஆண்டில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது ஒரு வேளை பூஜை மட்டும் நடந்துகொண்டிருக்கிறது.
கோயிலின் உள்ளே உள்ள ஒரு கல்தூணில் ஆஞ்சநேயரையும், மற்றொரு தூணில் காளிங்கநர்த்தனரையும் தரிசிக்கலாம். 8-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் விஜய கம்ப வர்மனால் கட்டப்பட்ட இந்த ஸ்ரீஅஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு, பராந்தக சோழன், ராஜராஜன் மற்றும் குலோத்துங்க சோழன் ஆகியோரும், பின்னாளில் வந்த நாயக்க மன்னர்களும் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர் என்று இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் களத்தூர் கோட்டத்தில், களத்தூர் நாட்டில் ஆனூர் இருந்ததையும் இந்தக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. சரித்திரச் சான்றுகளுக்கு அத்தாட்சியாக விளங்கும் இந்தக் கல்வெட்டுகள் பலவும் சிதிலமடைந்து உள்ளன. கல்வெட்டுகளின் மீது செடிகொடிகள் முளைத்து, அவற்றை மறைத்துள்ளன. வரலாற்றையும் புராதனத்தையும் நமக்கு எடுத்துச் சொல்லும் கல்வெட்டுகள்கூட நமது பொக்கிஷங்கள் அல்லவா? அவற்றைப் பராமரிப்பதும்கூட நமது கடமைதானே?
திருப்பணியைத் துவங்குவதற்கு முன்னர் பிரஸ்னம் பார்த்ததில், இங்குள்ள எம்பெருமான் மிகவும் சாந்நித்தியம் கொண்டவர் என்றும், அவரை வழிபட, வழக்குகளில் வெற்றி கிடைப்பதோடு, எதிர்ப்பு, தடை என எதுவுமே இருக்காது என்றும் தெரியவந்தது. இதன் காரணமாக, இப்போது பல ஊர்களில் இருந்தும் இங்குள்ள ஈசனை வழிபட பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.அதுபோலவே, இங்குள்ள அம்பாள் ஸ்ரீசவுந்திரவல்லியை வழிபட சர்வ மங்கலங்களும் உண்டாகும்.
2002-ம் ஆண்டு 'ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை’ என்ற அமைப்பினை நிறுவி, அதன்மூலம் ஸ்ரீஅஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகளை நடத்திவருகிறார் தேவராஜன். ஆனூர் மக்களும் ஆர்வமாக இக்கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுக் காலமாகப் பாழடைந்து கிடந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் துவங்கப்பட்டு, 12 ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும், நிதிப் பற்றாக்குறை காரணமாக திருப்பணிகள் நிறைவடையவில்லை. தற்போது ஒரு வேளை பூஜை மட்டுமே நடந்து வரும் இக்கோயிலில் ஆருத்ரா, சிவராத்திரி, பிரதோஷ நாள்களில் அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன என்று இக்கோயிலின் திருப்பணிக் கமிட்டியினர் தெரிவிக்கின்றனர்.
அர்ஜுனனுக்கு அஸ்திரம் தந்து, பாண்டவர்களின் சங்கடங்களை எல்லாம் போக்கி, அவர்களின் வாழ்வை வளமாக்கிய ஸ்ரீஅஸ்திரபுரீஸ்வரரின் ஆலயம் இப்படிச் சிதிலமடைந்து இருக்கலாமா?
அவரது ஆலயத்தில் திருப்பணிகள் விரைவிலேயே முழுமையாக நடத்தி முடிக்கப்படவும், ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, விரைவிலேயே கும்பாபிஷேகம் நடைபெறவும், கோயிலில் நித்திய பூஜைகள் தவறாமல் நடந்திடவும், நம் தொன்மைச் சிறப்பை எடுத்துக் கூறும் இங்குள்ள கல்வெட்டுகளைப் பாதுகாக்கவும் நம்மாலான உதவிகளைச் செய்வோம். அர்ஜுனனுக்கும் பாண்டவர்களுக்கும் அருள்புரிந்த ஈசன், நமக்கும் அருள்புரிவார்; அவர்களுக்கு வெற்றியைத் தந்த ஸ்ரீஅஸ்திரபுரீஸ்வரர் நமக்கும் வெற்றியையும் எல்லா வளங்களையும் வாரி வழங்குவார்.
எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருந்து, 14 கி.மீ. தொலைவில், புதூர் செல்லும் வழியில் இருக்கிறது ஆனூர் கிராமம். செங்கல்பட்டில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.
Comments
Post a Comment