பாடல் சொல்லும் பாடம்!

''அம்மா! நீ அவனுக்கு அது கொடுத்தாய். இவனுக்கு இது கொடுத்தாய். எனக்கு ஏதும் கொடுக்கவில்லையே!'' என்று கேட்டது.
மேலும், அந்தக் குழந்தை, மற்றவர்களுக்குக் கொடுத்ததைச் சொன்னதே தவிர, தனக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லவும் இல்லை; கேட்கவும் இல்லை. தாயாரின் நிலை எப்படி இருக்கும்?
வேல் கொடுத்தாய் திருச்செந்தூரர்க்கு
   அம்மியின் மீது வைக்கக்
கால் கொடுத்தாய் நின் மணவாளனுக்கு
    கவுணியர்க்குப்
பால் கொடுத்தாய், மதவேளுக்கு
    மூவர் பயப்படச் செங்
கோல் கொடுத்தாய் அன்னையே!
    எனக்கு ஏதும் கொடுத்திலையே!
இந்தப் பாடலில் நான்கு தகவல்கள் சொல்லப்பட்டு, ஐந்தாவதான ஒன்று கேள்விக்குறியாகவே விடப்பட்டிருக்கிறது.
வேல், கால், பால், கோல் எனும் நான்கையும் கொடுத்தவள் அம்பிகை.

சூரசம்ஹாரத்துக்காக முருகன் புறப்பட்டபோது ஞானவேல் கொடுத்து வாழ்த்தி அனுப்பினாள்; சூரசம்ஹாரம் நடந்தது.
அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் நடந்த திருமணத்தில், அம்மி மிதிக்கும் சடங்கின்போது, அம்பிகை மெள்ள தன் காலை நீட்ட, அதை வாங்கி அம்மி மீது வைத்தார் சிவபெருமான்.
மூன்றாவதாகச் சொல்லப்பட்ட பால் கொடுத்த நிகழ்ச்சி, சீர்காழி குளக்கரையில் நடந்தது. ஞானசம்பந்தக் குழந்தை அழ, அம்பிகை ஞானப்பால் அளித்தாள்.
நான்காவது, செங்கோல் கொடுத்தது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் மீண்டும் உயிர் பெற்றபோது, அவன் அம்பிகையை வழிபட்டு வணங்கி, செங்கோல் பெற்றான்.
இந்த நான்கையும், அவர்கள் கேட்காமலேயே அம்பிகை அவர்களுக்கு வழங்கினாள்.
'அது போல, அன்னையே! நான் கேட்காமலேயே என் தேவை என்ன என்பதை அறிந்து, எனக்கு அதைத் தந்தருள வேண்டும்’ என்பதைத்தான் இப்பாடல் உணர்த்துகிறது.
மற்றொரு சூட்சுமம்...
தெய்வத்திடம் போய் அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பதில் லாபமில்லை.
நாம் கேட்பதையெல்லாம் தெய்வம் கொடுத்துவிட்டால், நம்மால் தாங்க முடியாது. சைக்கிள்கூட நுழையமுடியாத சந்தில் இருந்துகொண்டு கார் கேட்கிறோம். 50 கிலோ எடையுள்ள நாம் 5000 கிலோ தங்க நகை அணிய விரும்புகிறோம். அவை கிடைத்துவிட்டால், மேலும் மேலும் பிரச்னைகள்தான் வளருமே தவிர, ஒருபோதும் குறையாது.
அதனால்தான் விவரமறிந்த மகான்கள், 'அதைக் கொடு! இதைக் கொடு!’ என்று குறிப்பாக எதையும் கேட்பதில்லை.
மேலும், ஒரு குழந்தைக்கு என்ன வேண்டும், அதை எப்போது கொடுக்க வேண்டும் என்பது அன்னைக்குத் தெரியாதா? அதனால்தான், 'உலகுக்கே அன்னையான அம்பிகைக்கு, எனக்கு எதைக் கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா?’ என்ற எண்ணத்திலேயே இந்தப் பாடலில் வேண்டுகோள் வைக்கப்படவில்லை.
ஆனால், ஒரு சிறு குழந்தையின் ஆவலும், தனக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே என்ற ஏமாற்றமும் இப்பாடலில் தத்ரூபமாக வெளிப்பட்டிருக்கிறதல்லவா?
பெற்ற தாயிடம் கேட்பதுபோல மிகவும் உரிமையோடு கேட்கிறார் இந்தப் பாடலை எழுதிய புலவர்.
அன்பு கொண்ட ஓர் உள்ளம் அன்னையிடம் உறவாடும் அழகை அற்புதமாக விவரிக்கும் இந்தப் பாடலை எழுதியவர் - படிக்காசுப் புலவர்.

Comments