பொதுநலம்... சுயநலம்... சாஸ்திரம் என்ன சொல்கிறது?

இன்றைய சூழலில் ஒட்டுமொத்த சமுதாய நலன் குறித்த சிந்தனை குறைந்து வருகிறது. 'பிறருக்குத் தொந்தரவு இல்லாமல் வாழ்கிறேன். எனது தேவைகளுக்கு எவரையும் சார்ந்திராமல், என் கதையை நானே பார்த்துக் கொள்கிறேன். இது எப்படி சுயநலம் ஆகும்?’ எனக் கேட்கிறான் நண்பன் ஒருவன். அதேபோல், 'எந்தவொரு பொதுநல செயல்பாடாக இருந்தாலும், ஏதேனும் ஒருவகையில் அதிலும் தனிப்பட்ட ஆதாயம் இருக்கவே செய்யும்’ என்பது மற்றொரு நண்பனின் கருத்து.
இதுகுறித்த தெளிவான விளக்கமும் அறிவுரையும் தேவை!
-
சுயநலம் ஆரம்பத்தில் இனிக்கும்; முடிவில் கசக்கும். அது துயரத்திலேயே முடிவடையும். பொது நலம் ஆரம்பத்தில் கசக்கும்; இன்பத்தில் நிறைவுறும். மனம் எப்போதுமே துயரத்தைத் தொடாத மகிழ்ச்சியையே விரும்பும். சுயநலத்தைத் துறந்து, பொதுநலத்தில் நுழைந்தால் விருப்பம் ஈடேறும்.
 
முதல் கோணம்...
 
'தனிமனிதனின் செயல்பாடு பொதுநல நிறைவை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்’ என்கிறது ஸனாதனம். அகில உலகமும் மகிழ்ச்சி யடைய வேண்டும் என்பதே ஸனாதனத்தின் தாரக மந்திரம் (லோகா ஸமஸ்தா: ஸுகினோபவந்து).
கடவுள் பணிவிடையும் பொதுநலனைப் பேணிக் காப்பதற்காகப் பயன்பட வேண்டும். உரிய காலங்களில் மழை பொழியவேண்டும். பயிர் விளைந்து பூமி செழிக்கவேண்டும். கொந்தளிப்பு அற்ற நாடாக இருக்கவேண்டும். அறங்காவலர்கள் பயமின்றி அறத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் குழந்தைகள் பெற்று மகிழவேண்டும். குழந்தை இருப்பவர்கள் பேரக் குழந்தைகளைப் பெற்று வம்சத்தைச் செழிப்புற வளர்க்க வேண்டும். ஏழ்மை அகல வேண்டும். நீடூழி வாழ வேண்டும்... மனித இனமானது இப்படியான வேண்டுகோள்களையே கடவுளிடம் வைக்க வேண்டும் என்று கூறி, பொதுநலனை குறிக்கோளாகக் கடைப்பிடிக்கும்படி பரிந்துரைக் கிறது ஸனாதனம் (காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ரிதீவிஸஸ்யசாலினீ...)

? சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? நாம் நலமாக இருந்தால்தானே பொதுநலனை கவனிக்க முடியும்? அப்படியிருக்க சுயநலத்தைத் தவிர்க்க முடியாதே!
 
ஒவ்வொரு தனிமனிதனின் கடமையையும் பொதுநலனில் முடியும் விதமாக வகுத்துத் தந்திருக்கிறது ஸனாதனம். பொது நலனில் ஈர்ப்பு இல்லை. சுயநலனிலேயே ஈர்ப்பு உண்டு என்றால், பொதுநலனையும் சுயநலனில் இணைத்துவிடு. பொதுநலனை சுயநலமாக எண்ணிவிடு. ஆசான், அரசன், அமைச்சர் ஆகியோர் பொதுநலனை சுயநலமாகப் பார்ப்பவர்கள். பண்டைய ரிஷி பரம்பரைகளுக்கு பொதுநலம்தான் சுயநலம். அவர்களுக்கு சுயநலம் தெரியாது; பொதுநலன் மட்டுமே தெரியும். பிறருக்காகத் தங்களது வாழ்வைப் பயன்படுத்தியவர்கள் என்ற பெருமை அவர்களுக்கு உண்டு (பரார்த்தை கப்ரயோ ஜனேப்யோநம:).
ஸ்வார்த்தத்தை (தன்னலம்) துறந்து பரார்த்தத்தை (பொதுநலன்) செழிக்கவைக்க முனைபவர்கள் நல்லவர்கள்; மனிதரில் மாணிக்கமாக விளங்குபவர்கள். 'தன்னலம் மறந்து பொதுநலனில் அக்கறை கொண்டிருந்தவர்கள் நமது ரிஷிகளும் முனிவர்களும். அவர்கள், பொதுநலனுக்காகத் தங்களின் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்’ என்கிறார் பர்த்ருஹரி (ஏதே ஸத்புருஷா: பார்த்தகடகா: ஸ்வார்த் தான் பரித்யஜ்யயே). இவர்கள் ஒரு வகை எனில், சுய நலத்தை முழுமையாகச் சுவைப்பதற்கு இடையூறு இல்லாமல், பொதுநலனில் இணைந்தவர்களும் உண்டு. சுயநலனை முழுமையாகப் பெற, பொதுநலனை அழிப்பவர்களும் உண்டு. எந்தக் குறிக்கோளும் இல்லாமல், பொதுநலனை அழிப்பவர்களும் உண்டு. இப்படி நான்கு வகை மனித இனம் தென்படும் என்பது பர்த்ருஹரியின் கணிப்பு.
சூரியன் எல்லோருக்கும் ஒளி வழங்குகிறான். சந்திரனும் அப்படித்தான். காற்றும் மழையும் எல்லோருக்கும் பொதுவாகச் செயல்படுகிறது. ஐம்பெரும் பூதங்களும் தத்தமது இயல்பின் மூலம் பொதுநலனின் சிறப்பைச் சொல்லாமல் சொல்கின்றன. சிருஷ்டி தத்துவமே பொதுநலன் எனும் குறிக்கோளில் செயல்படுகிறது. சிந்தனை விரிவடைய பொதுநலன் பயன்படும். தனிமனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கு, அவனது பொதுநல அக்கறையே அளவுகோள். தொண்டு நிறுவனங்கள் பொதுநலனின் அடித்தளத்தில் வளர்ந்தோங்கி, பொது நலனுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன. அரசும் வர்த்தகமும் பொதுநலனில் இணைந்த பிறகு உயிரோட்டத்தோடு விளங்குகிறது.
 
? எல்லாம் சரி! ஆனால் பொதுநலனையே சுயநலமாக்கிக் கொள்வது, சாத்தியமா என்ன?
சாத்தியம்தான்! நான், எனது என்ற எண்ணத்தில் உடலெடுத்த சுயநலம் துயரத்தில் ஆழ்ந்து மரணத்தைத் தழுவுகிறது. இந்த 'நான்’, 'எனது’ என்ற சுய நலத்தைத் துறந்து பொதுநலனை ஏற்பவர் கள், துயரம் தொடாத மகிழ்ச்சியை எட்டி, மரணத்தை வென்று விளங்குகிறார்கள் என்கிறது சாஸ்திரம் (மமேதி த்வயஷரம் மிருத்யு: நமமேதிச சாச்வதம்).
உனது வாழ்க்கைப் பயணம் நல்லவர்களோடு இணைந்து தொடரட்டும். அது, உனது சுயநலனை பொதுநலனாக மாற்றிவிடும் என்கிறார் ஆதிசங்கரர் (ஸத்ஸங்கத்வேநிஸ்ஸங்கத்வம்). குழந்தைப் பருவங்களில் சுயநலம் வேரூன்றியிருக்கும். கல்வி கற்கும் பருவத்தில் அது வளர்ந்தோங்கிவிடும். இளமையில் ஏற்பட்ட ஆசையில் திருமணத்தில் நுழையும்போது சுயநலத்தோடு தென்படுகிறான். ஆனால் திருமணமானது அவனது சுயநலத்தை மறக்கடித்து பொதுநலனில் இணையவைக்கிறது. குடும்ப வாழ்க்கை இனிக்க, பொதுநல சிந்தனை அவனுக்கு ஒத்துழைக்கும்.
வேலையில் அமர்ந்து பணம் ஈட்டும்போது, தன்னலம் வளர பாடு படுகிறான். மனைவியின் இணைப்பில் அவளையும் திருப்திப்படுத்த, அவளையும் தன்னலத்தில் சேர்த்துக் கொள்கிறான். குழந்தை பிறந்ததும் அதுவும் தன்னலத்தில் இணைந்துவிடும். அடுத்து, மனைவியைச் சார்ந்தவர்களையும் தன்னைச் சார்ந்தவர்களையும் திருப்திப்படுத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகும். அப்போது அவர்களை அரவணைப்பதையும் தன்னலமாக மாற்றிக்கொள்கிறான். இப்படி உற்றார், உறவினர், நண்பர்கள், குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துழைப்பவர்கள், சமுதாயத்தில் இணைந்தவர்கள் அத்தனைப் பேருக்கும் ஏதோ ஒரு வகையில் ஊக்கம் அளிப்பதால், அவனது சுயநலம் விரிவடைந்து பொதுநலனாக  மாறிவிடுகிறது. இப்படி திருமணமானது, வேரூன்றி வளர்ந்த சுயநலத்தை பலபேருடைய இணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்து, பொதுநலனை ஏற்கவைத்து வாழ்க்கைக்கு மகிழ்ச்சியூட்டுகிறது எனும் சாஸ்திரத்தின் கண்ணோட்டம், பொதுநலனே மகிழ்ச்சிக்குப் பயன்படும் என்று விளக்கும் (பரோபகாரார்த்தமிதம் சரீரம்).
இன்றைய சூழலில் தென்படும் அட்டூழியங்களுக்கும் அவலத்துக் கும் சுயநலமே காரணம். விவாகரத்து, போட்டி, பொறாமை, பகை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு - அத்தனையிலும் சுயநலத்தின் பங்கு உண்டு. எல்லாமும் பொதுநலனாக மாறும்போது கொந்தளிப்பு இல்லாத சமுதாயம் காணலாம். சமீபத்தில் தோன்றிய பொதுநலவாதிகள் உள்நோக்கத்தோடு செயல்பட்டதால், அவர்களுடைய சீர்திருத்தம் வெற்றிபெறவில்லை. ஏனெனில், அவர்கள் எல்லோரும் மறைமுக சுயநலவாதிகள்!
 
இரண்டாவது கோணம்...
ங்களின் கணிப்பு சிந்தனையாளர்களை ஈர்க்காது. பாமர ரஞ்சகமாக இருப்பவை எல்லாம் தத்துவ விளக்கமாகாது. தங்களுடைய விளக்கம், மேலெழுந்தவாரியாக இனிப்பாக இருந்தாலும், ஆராயும்போது அது பயனற்றது என்று விளங்கிவிடும்.பொது நலனில் அக்கறை காட்டுபவர்களில் சிலர், சுயநலனை செழிப்பாக்க நினைப்பவர்கள். எந்த பயனும் தனக்கு இல்லாத வேலையில் ஈடுபாடு வராது (பயனில்லாத வேலையில் முட்டாளும் ஈடுபட மாட்டான் (ப்ரயோஜன மனுத்திச்ய நமந்தோபி ப்ரவர்த் ததெ).
 
? அப்படியெனில் பொதுநலனிலும் சுயநலம் உண்டு எனச் சொல்ல வருகிறீர்களா?
 
ஆமாம்! 'பட்டம், பதவி, பணம், பெருமை அத்தனையும் மகிழ்ச்சி அளிக்காது. ஒட்டுமொத்தமாக கடவுளிடம் சரணாகதி அடைந்துவிடு. அவர் உன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்’ என்ற தத்துவ விளக்கத்தை உதிர்க்கும் சொற்பழிவாளருக்கும்... அவர்கள் எவற்றையெல்லாம் துறக்கும்படி பரிந்துரைக் கிறார்களோ, அவை அத்தனையையும் அளித்து பெருமைப்படுத்துகிறோம். 'நவீன வ்யாச முனிவர்’ 'பக்தஜனங்களின் தலைவன்’ என்றெல்லாம் அவருக்கு வெகுமதி அளிப்பதில் நமக்குப் பெருமை; அவரைப் புகழ்ந்து பாடுவது நமது கடமை - என்று செயல்படுபவர்களும் உண்டு.
ஈட்டிய செல்வத்தை பொது நலனுக்காக அர்ப்பணித்தவரை புகழ்ந்து பாடுவோம். ஆனால், அவரைப் பராமரிக்க அறக்கட்டளை ஏற்படுத்தி, அவர் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சேமிப்பையும் சேவகர்களையும் நிரந்தரமாக ஏற்படுத்திவிடுவோம். கட்சி யின் தலைவராக இருந்தவர் தனது அத்தனை சொத்துக்களையும் கட்சியின் வளர்ச்சிக்கு வழங்கிவிட்டார். இப்போது உயிருள்ளவரையிலும் அவரைப் பராமரிக்கும் பொறுப்பு கட்சியில் சுமத்தப்பட்டது. அவர் நிம்மதியாக வாழ்கிறார்.
அறக்கட்டளை ஏற்படுத்தி சமுதாய தொண்டில் இணைந்தவர்களில், தங்களுடைய சுயநலம் பறிபோகாமல் பார்த்துக் கொண்ட பலர் உண்டு. எல்லாம் துறந்த துறவி ஒருவர், மக்களை முன்னேற்ற அவர்களுக்குப் பற்றற்ற நிலையை எட்டுவதற்கான வழிவகைகளைப் பரிந்துரைக்கிறார். எல்லாவற்றையும் துறக்கும் துணிவை ஊட்டுகிறார். ஆனால், மக்கள் குழாம் எல்லா செல்வங்களையும் அவருக்கு அளித்து மகிழ்கிறது. 'அவர்களைப் பற்று அற்றவர்களாகச் செய்யவே செல்வத்தை ஏற்கிறேன். எனக்கும் எதிலும் பற்றில்லை’ என்கிறார். இருந்தாலும் நடைமுறையில் துறவியின் சுயநலம் பூர்த்தி அடைவதாலேயே பொதுநலனில் அவர் பற்று வைத்திருக்கிறார் என்று சொல்வது பொருந்தும்.
 
? ஆக, பொதுநலனைவிடவும் சுயநலம் பேணுவதே சிறப்பு என்கிறீர்கள்... அப்படித்தானே?
 
தவறாகப் புரிந்துகொண்டீர்கள். எவராலும் சுயநலத்தைத் தவிர்க்க முடியாது எனச் சொல்ல வருகிறேன்.
எவரும் சுயநலத்தைத் துறந்து பொதுநலனில் அக்கறை காட்ட மாட்டார்கள். சுயநலனின் பாதுகாப்புக்குப் பொதுநலனை ஏற்பதும் ஒரு வழி. குறிக்கோள் சுயநலம்; அதற்காக செயல்படுத்தப்படுவது பொது நலம் - இப்படித்தான் அனுபவத்தில் உணரமுடிகிறதே தவிர, மனப்பூர்வமாக பொதுநலனில் இறங்கியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் அதில் உண்மையான பொதுநலவாதிகளும் இருப்பார்கள். பிழைப்புக்காக பொதுநலனை போர்வை ஆக்கியவர்களும் இருப்பார்கள். சில விஷயங்களுக்கு அனுபவம் அளவுகோலாக மாறிவிடும். துறவிக்கு மனைவி இல்லை; மற்ற எல்லா மகிழ்ச்சியும் உண்டு. ஸம்ஸாரிக்கு மனைவி உண்டு; மற்ற ஐஸ்வர்யங்கள் இருக்காது! ஸமுதாயத் தில் இப்படி வாழ்பவர்களையும் பார்க்கிறோம்.
சுருங்கச் சொன்னால்... சுயநலத்தில் பற்று இல்லாதவன் பொதுநலனில் இறங்கமாட்டான். பிழைக்க வழி தெரியாமல் தத்தளிக்கும் சிலரே, வேறுவழியின்றி பொதுநலன் எனும் போர்வையில் சுயநலத்தை நிறைவு செய்பவர்களாகக் காணக்கிடைக்கிறார்கள். புராண - இதிகாசங்களில் தென்படும் பொதுநலத் தொண்டர்கள், இன்றைய நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டார்கள். சுயநலம் வாழ்க்கையை சுமை இல்லாமல் செய்துவிடும். பொது நலம் எதிர்பார்ப்போடு வாழ்க்கையில் இறங்கச்செய்து, ஏமாற்றத்தை சந்திக்கவைக்கும்.
 
மூன்றாவது கோணம்...
 
தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். நமக்கு ஏற்பட்ட அனுபவம், நமக்குத் தெரிந்த தகவல், நாம் மனத்தில் வாங்கிய விளக்கங்கள் ஆகியவற்றை வைத்து முடிவெடுப்பது தகாது. போதுமான தகவல்களைத் திரட்டி, ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு, சான்றோடு விஷயத்தை அணுகி, அப்பழுக்கில்லாத- எல்லோ ரும் ஏற்கும்படியான முடிவை ஏற்க வேண்டும்.
மனிதனானவன் பிறரோடு இணைந்துதான் வாழவேண்டும் (ஏகாதீநரமாத). பிறரது இணைப்பில் இன்பத்தை நுகர வேண்டும். முற்றும் துறந்தால் மகிழ்ச்சியுண்டு என்கிற ஆன்மிகக் கோட்பாடு, லோகாயத வாழ்க்கையில் இணைந்தவனுக்குப் பயனளிக்காது. தனது செழிப்பு, பிறர் உதவியோடு செயல்படும்போது நிறைவுபெறும். தன்னைப் போக்கித்தான் தருமம். பிறந்தவுடன் பற்றற்ற நிலையில் கடவுளைச் சரணடைவதைவிட பிறக்காமல் இருப்பதுமேல். பிறந்தவன் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி காண வேண்டும். அதற்குப் பொதுநல அக்கறையே அடித்தளம். உலகவியல் இன்பத்தைச் சுவைக்கப் பிறக்கிறான். அதை சுவைத்து மகிழ பலபேரின் ஒத்துழைப்பு அவசியம். அந்த ஒத்துழைப்பு வலுவாக இருக்க பொதுநல அக்கறை அவசியம்
.
? பொதுநலன் அக்கறை அவசியம் எனில், நமது தேவைகள் எப்படிப் பூர்த்தியாகும்?
 
சமுதாயத்தில் இணைந்தும், எல்லோரையும் திருப்திப்படுத்தவும் முயன்றால் மட்டுமே அவர்களின் ஒத்துழைப்புடன் நமது சுயநலன் வெற்றி பெறும். எல்லோரும் வாழவேண்டும் என்கிற வேண்டுகோளில், தனது வாழ்வும் அடங்கியிருப்பதால் பொதுநலனில் சுயநலன் தானாகவே ஈடேறிவிடும். எல்லோருக்காகவும் பெய்யும் மழை, எல்லோருக்காகவும் வீசும் காற்று, எல்லோருக்காகவும் காட்டும் வெளிச்சம் - என்ற இயற்கைப் பாடமான பொதுநலன், நாம் வேண்டாமலேயே நமது சுயநலத்தை பூர்த்தி செய்துவிடுகிறது. பொதுநலனில் இறங்கு. அது, உனது சுயநலனின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும். சுயநலம் உன்னைத் தனிமைப்படுத்தி, உலகவியல் வாழ்க்கையை சுரத்தில்லாமல் செய்துவிடும். நதிகளும், மரங்களும், பசுமாடுகளும் பொதுநலனில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவை. அவற்றில் இன்பம் காண்பவர்கள், அந்த இயற்கை தனது படைப்பின் மூலம் அறிவுறுத்தும் பொது நலனை ஏற்பது சிறப்பு.
சுயநலம் தோன்றவும் வலுவடையவும் ஆசைகளே காரணம். ஆசைகள் முற்றுப்பெறாததால், அவன் சுயநலத்தில் இருந்து வெளிவராமல் போய்விடுகிறான். ஆசைகளின் ஏக்கத்தில் கட்டுண்டவன் இன்பத்தைச் சுவைக்கும் தகுதியை இழப்பான். ஆசையை அறுத்தால் சுயநலம் மறைந்துவிடும்; பொதுநலன் முளைத்துவிடும். அதை ஏற்கும்போது, ஆசையற்ற தெளிவான மனம் பொதுநலனில் அமைதி காணும். அமைதி வேண்டுமா? அதற்குப் பொதுநலனே மருந்து. பொதுநலன் ஆசையில் ஈர்ப்பு இல்லாத மன நிலையைத் தோற்றுவிக்கும். அதுதான் உண்மையான மகிழ்ச்சி!
 
தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...
 
சுயநலம் - பொதுநலம் என்று இரண்டாகப் பார்க்கும் எண்ணம் தோன்றுவதற்கு, நம் மனத்தில் குடிகொண்டிருக்கும் ஆசைகளே அடிப்படை. எங்கே ஆசை நிறைவேறாமல் போகுமோ என்ற பரபரப்பில் அதை நிறைவேற்றும் உந்துதலில் சுயநலம் விரிவடைகிறது. விரிவடைந்த சுயநலத்தில் மாட்டிக்கொண்டவன் சிந்தனை வளம் குன்றி, ஆசைகளின் வழிகாட்டுதலில் சுயநலத்தை சுவைப்பதில் ஈடுபடுகிறான். அதனால் மன அமைதி இல்லாமல் தவிக்கிறான். அந்த ஆசைகள் சங்கிலித் தொடர் போல் வளர்ந்துகொண்டு போவதால், அதை நிறைவேற்றும் முயற்சி மட்டுமே அவன் வாழ்க்கையில் வேலையாகிவிடுகிறது. ஆக, சுரத்தில்லாத வாழ்க்கையில் முடிவுபெறுகிறான்.
அதேநேரம், ஆசையை அறுத்தால் பொதுநலன் - சுயநலம் என இரண்டாகப் பார்க்காது மனம். இரண்டு கண்கள் ஒரு பார்வை போல், இரண்டு நலம் ஒரு குறிக்கோள் என்று மலரும்போது, பொதுநலன் அவன் மகிழ்ச்சிக்குக் காரணமாகிவிடுகிறது. பொதுநலன் இருந்தால் மகிழ்ச்சி உண்டு.

Comments