அரங்கனுக்கு அபிஷேகம்!





ஆனித்திருமஞ்சனம் என்றதும் பொதுவாக எல்லோருக்கும் நடராஜர்தான் நினைவுக்கு வருவார்.
ஆனால், ஆடல் வல்லானுக்கு அபிஷேகம் நடக்கும் அந்த தினத்தில் அரங்கனுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடப்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
ஸ்ரீரங்கத்தில் ஆனி மாதத்தில் ரங்கநாதருக்கு நடைபெரும் திருமஞ்சனத்தை ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றுவார்கள்.
அப்போது பெருமாளின் திருக்கவசங்களை எல்லாம் களைந்து விட்டு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறும். இதை சேவிப்பது விசேஷம் என்பர். அன்றைய திருமஞ்சனத்திற்காக காவிரியிலிருந்து யானை மீது தங்கக் குடத்திலும், வெள்ளிக் குடத்திலும், தாமிரக் குடங்களிலும் வேத கோஷங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வருவார்கள்.
ஆனி மாத திருமஞ்சன சேவையை பெரிய திருமஞ்சனம் என்றும் அழைப்பார்கள். திருமஞ்சனத்துக்குப் பின்னர் மூலவருக்கு, பலவித மூலிகைகளால் தயாரிக்கப் பட்ட தைலக்காப்பு இட்டு ஒரு மண்டலம் அது உலர்ந்த பின் மறுபடி ரங்கநாதருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம், ஆபரணங்கள் அணிவித்து ரங்கநாதரின் முழு உருவையும் தரிசனத்திற்குத் தயார் படுத்துவார்கள். திருமஞ்சனத்திற்கு மறுநாள் பலாச்சுளை, வாழைப்பழம், மாங்காய், தேங்காய் நெய் ஆகியவற்றைக் கொண்டு "பெரிய திருப்பாவாடை தளிகை' என்ற பிரசாதமாக வழங்குவார்கள். தினந்தோறும் நடைபெறும் நைவேத்தியத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதை நிவர்த்திப்பதற்காக இந்தப் பெரிய திருப்பாவாடை தளிகை செய்விக்கப்படுவதாக ஐதிகம்.

ஆனி மாத விழாக்கள்
திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாதம் மூல நட்சத்திரநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல் நாள் சுதர்சன ஹோமம், பஞ்ச சுக்ல ஹோமம், அனுமத் சகஸ்ரநாம ஹோமம் மற்றும் மகா காஞ்சி ஹோமம் ஆகியவை நடைபெறும். அப்போது ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால், 108 இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் உட்பட 16 வகை அபிஷேகங்களும், கனகாபிஷேகமும் செய்யப்படுகின்றன. அனுமன், ஆனிமூல நட்சத்திரத்தன்று பஞ்சமுக ஆஞ்சநேயராக தரிசனம் தருவார்.
புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல் குடிக்கு வடக்கு திசையில் இருக்கும் பகுதியை வடக்கூர் என்கின்றனர். இங்குள்ள பேச்சியம்மன் கோயிலில் ஆனிமாதம் முளைப்பாரி திருவிழா பிரசித்தம். இந்த விழாவின் 13ம் நாளன்று காலை அம்மனுக்குக் காவடியும் இரவு முளைப்பாரியையும் தென்னம்பாளைகளையும் ஊர்வலமாக எடுத்து வருகிறார்கள். நேர்த்திக் கடன் வைத்தவர்கள் ஏராளமான துளைகள் உள்ள பானைக்குள் மாவிளக்கேற்றி அதையும் குடங்களுடன் எடுத்து வருகிறார்கள்.
அதிகாலை 2.30 மணிக்கு ஆலய வாசலில் ஊர்ப் பொங்கல் வைக்கிறார்கள். பின்னர், முளைப்பாரி எடுத்து வந்தவர்களை மேளதாளத்துடன் ஆலயத்துள் அழைத்து வருகிறார்கள். தொடர்ந்து அம்மனுக்கு திரை போட்டு விட்டு காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமிக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. பிறகு நல்ல நேரம் பார்த்து அம்மனுக்கு காப்புக் களைந்து அனைத்து முளைப்பாரிகளையும் திருக்குளத்தில் செலுத்திவிட்டு வீடு திரும்புகிறார்கள்.
சென்னை திருநின்றவூருக்கு வடக்கே அமைந்துள்ள புலியூர் அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஆனி உத்திரத்தன்று காலையில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது திருமணமாகாத பெண்களுக்கு தாலிச்சரடும், குழந்தை இல்லாதவர்களுக்கு எலுமிச்சம்பழமும் கொடுக்கப்படுகிறது. அவற்றை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர்.
கோவை, பேரூர் பட்டீஸ்வரர் பச்சை நாயகி கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவனும் இறைவியும் நாற்று நடும் திருக்கோலத்தில் தரிசனம் தந்த விழாவான நாற்று நடவு உற்சவம் ஆனி உத்தரத்தன்று வருடா வருடம் தடைபெறுகிறது.

Comments