கேதாரகௌரி விரதம்

கேதாரம்’ என்பது இமயமலையில் உள்ள திருத்தலமான கேதார்நாத்தை குறிக்கும். இங்கு சிவபெருமான் கேதாரநாதராக கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். அந்த கேதாரநாதரை நோக்கி கௌரியான அன்னை பார்வதி இருந்த விரதம்தான் இது.
ஒருமுறை பார்வதியோடு சிவபெருமான் கைலாய மலையில் வீற்றிருக்க, பிரம்மா, விஷ்ணு தேவேந்திரன் உள்ளிட்ட முப்பது முக்கோடி தேவர்கள் என அனைவரும் அவர்களை வலம்வந்து வணங்கினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் வண்டு உருவத்திற்கு மாறி சிவபெருமானை மட்டும் வணங்கினார். அவர்தான் பிருங்கி முனிவர்.
தன்னை வணங்காமல் புறக்கணித்த பிருங்கி முனிவர் மீது கோபம் கொண்ட பார்வதி தேவி, ‘நடக்க சக்தியில்லாமல் போகக்கடவது’ என்று சபித்தாள்.
தன் பக்தனுக்கு ஏற்பட்ட நிலைகண்டு, சிவபெருமான் முனிவருக்கு நடப்பதற்குத் துணையாக ஒரு ஊன்றுகோலைக் கொடுத்தார். இதனால் மேலும் கோபம் கொண்ட பார்வதி, சிவனை பிரிந்து பூலோகத்துக்கு வந்து விட்டாள். அவள் வந்த இடம் வால்மீகி மகரிஷி வசித்த வனம். பார்வதியை வணங்கிய மகரிஷி, வந்த காரணத்தை அறிந்து, சொன்ன (தான்) விரதம்தான் கேதார கௌரி விரதம். தீபாவளி அன்று நோன்பு ஏற்று, சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்து வந்தால் குடும்பப் பிரச்னை, தம் கணவரைப் பிரிந்து இருப்பவர்கள் மீண்டும் சேர்வார்கள் என்பது ஐதிகம்.
அன்னை பார்வதி தேவியின் அருள் வேண்டி பெண்கள் மேற்கொள்ளும் பல்வேறு விரதங்களுள் முக்கியமானது இது. தீபாவளி அன்று இது கடைப்பிடிக்கப்படுகிறது. அன்னை பார்வதி இந்த விரதம் இருந்த பின்னர்தான் சிவபெருமான், அவளைத் தன் இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீசுவரராகக் காட்சி தந்தார்.
கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும் மணமான மங்கையர் மாங்கல்ய பலம் வேண்டியும் இந்த விரதம் இருக்கிறார்கள். கேதார விரதம் இருந்து பார்வதியின் அருளைப் பெறுவோமாக!

இந்த நாள்...
கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்பது தவிர இந்நாளுக்கு வேறு பல சிறப்புகள் உள்ளன.
ஆதி சங்கரர் ஞான பீடத்தை நிறுவிய நாள், மாவலிச் சக்ரவர்த்தி முடி சூடிய நாள், புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற நாள், சமண மத மகா வீரர் நிர்வாணம் அடைந்து வீடுபேறு அடைந்ததினம், குரு கோவிந்த் சிங் சீக்கியமத அமைப்பான ‘கல்சா’வை அமைத்த தினம்.
சாவித்திரி யமனிடம் வாதிட்டு சத்தியவான் உயிரை மீட்ட நாள். நசிகேதன் யமனுலகுக்குச் சென்று வரம் பெற்று திரும்பிய நாள், கோவர்த்தன பூஜை செய்யும் நாள், மாவலி பூஜை செய்யும் நாள், வங்காளத்தில் காளி பூஜை செய்யும் நாள், ராமர் சீதையை ராவணனிடமிருந்து மீட்டு அயோத்தி திரும்பிய நாள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...


 

Comments