திரிவிக்ரம அவதார ஸ்தலம்!

கொந்து அலர்ந்த நறுந் துழாய், சாந்தம், தூபம் தீபம் கொண்டு அமரர் தொழப் பணம் கொள்பாம்பில் சந்து அணி மென் முலை மலராள், தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை வந்தனை செய்து, இசை ஏழ், ஆறு அங்கம், ஐந்து வளர்வேள்வி, நால் மறைகள், மூன்று தீயும் சிந்தனை செய்து, இருபொழுதும் ஒன்றும் செல்வத் திருக்கோவலூர் அதனுள்கண்டேன் நானே!
- திருமங்கையாழ்வார்
ந ல்லவர்களை நயந்து காக்கவும் தீயவர்களைத் திருத்தவும், திருந்தாதோரைத் தண்டிக்கவும் இறைவன் பல திருவிளையாடல்கள் புரிகிறான். சாதுக்களைக் காக்கவும் சதுர்மறை சாற்றும் தர்மத்தை நிலைநிறுத்தவும், தான் யுகம் தோறும் அவதாரம் எடுப்பதாக கீதையில் கிருஷ்ண பரமாத்மா தெளிவுடன் தெரிவிக்கிறார்.
அப்படி அவதாரங்கள் எடுக்கும்போது, அவன் பாதம் பட்டுப் பவித்திரமான திருத்தலங்கள் பல நமது பாரத நாடெங்கும் பரவிக் கிடக்கின்றன.
நமது நாட்டில் உள்ள நலம் தரும் தலங்களுள் நடுநாயகமாகத் திகழ்வது திருக்கோவலூராகும் (திருக்கோவிலூர் என்பது தற்போதைய பெயர். விழுப்புரம் அருகில் உள்ளது). புராண காலத்தில் திருக்கோவலூரின் பெயர் கிருஷ்ண க்ஷேத்ரம். பெண்ணையாறு நதி, ‘கிருஷ்ண பத்ரா’ என்ற பெயர் கொண்டிருந்தது.
இந்தத் தலம் கண்ணபிரானுக்கு உகந்த ஐந்து திருத்தலங்களில் ஒன்றாகப் பெருமை பெற்றது என்று பிரம்ம புராணம் கூறுகிறது.
பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்றான கோவலூரில்- கோவலனாக, ஆயனாக, வேணுகோபாலனாகக் கோயில் கொண்டுள்ளான் குறுநகைக் கண்ணன். மலையமான் திருமுடிக்காரி, மாண்புடன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாக ஆட்சி புரிந்த இடம் இது.
திவ்வியப் பிரபந்தம் முதன்முதலில் பாடப்பெற்றது திருக்கோவலூர்த் திருத்தலத்தில்தான். எனவே, இது திவ்யப்பிரபந்த அவதார ஸ்தலம் என்று பெருமை அடைந்தது. ஆழ்வார்கள் இந்த ஊரின் அழகை அமிழ்தினும் இனிய அருந்தமிழ்ப் பாசுரங்களில் பாடிப் பரவியுள்ளனர். தேன் போன்ற அந்தப் பாடல்கள் படிக்கப் படிக்கத் திகட்டாத தீந்தமிழ் விருந்தாகத் திகழ்கின்றன.
ஆலய முகப்பு
108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான திருக்கோவலூர், திரிவிக்ரம அவதாரத் தலமாகும். வலக் கையில் சங்கமும், இடக் கையில் சக்கரமுமாக வலக் காலால் வையத்தை அளந்தபடி காட்சி தருகிறார் திரிவிக்ரமர்.
வாமனனாக வந்து, வையம் அளந்த பெருமாளாக, வானளாவி ஓங்கி உயர்ந்து கம்பீரமாகத் திகழும் திரிவிக்ரமர், திருக்கோவலூரில் கோயில் கொண்டது எப்படி?
முன்னொரு காலத்தில் மகாபலி என்ற அசுரன் மூவுலகையும் வென்று அனைவரையும் அடக்கி ஆட்சி புரிந்தான். அவன் ஏராளமான வரங்களைப் பெற்றிருந்தான். தான தர்மங்கள் செய்வதில் நிகரற்று விளங்கினான். ஆனாலும் அசுரனான அவன் ஆணவத்தால், அனைவரையும் ஆட்டிப் படைத்து அல்லல் விளைவித்தான். தேவர்களையும் முனிவர்களையும் திசைதோறும் தேடிச் சென்று கொடுமைப்படுத்தினான்.
மகாபலியின் கொடுமை தாங்காத அவர்கள், மாதவனாம் திருமாலிடம் தங்கள் மனக்குறையைத் தெரிவித்து முறையிட்டனர். பாலாழியில் பள்ளி கொண்ட பரந்தாமன், அந்த பக்தர்களுக்கு உதவி புரியத் திருவுள்ளம் கொண்டான்.
மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினான் மகாபலி. யாகத்தில் அந்தணர்களுக்கு தானம் செய்து கொண்டிருந்த மகாபலியிடம் மகாவிஷ்ணு குள்ள உருவம் கொண்ட வாமனமூர்த்தியின் வடிவில் சென்றார்.
உலகளந்த பெருமாள் எனும் திரிவிக்ரமன் (மூலவர்)
வாமனனுக்கு பூஜைகள் செய்த மகாபலி அவன் விரும்புவதை அளிப்பதாக வாக்களித்தான். வாமனனாக வந்த மகாவிஷ்ணு, தன் திருவடியால் மூன்றடி மண் வேண்டுமெனக் கேட்டான். அவன் ஆதிமறை நாயகன் நாராயணனே என்பதை அறிந்து கொண்ட அசுர குரு சுக்கிராச்சார்யார், மகாபலியின் தானத்தைத் தடுக்க முயன்றார்.
செல்வத் திருமகளின் மணாளன் மாலவன் தன்னிடம் தானம் கேட்பது பெருமைக்குரியதே என்றும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதே தனது கொள்கை என்றும் கூறிய மகாபலி மன்னன் மூன்றடி மண்ணை மனமுவந்து தாரை வார்த்துத் தந்தான்.
உடனே யாவரும் வியக்கும் வண்ணம் வாமனன் வடிவம் மாறினான். திரிவிக்ரம உருவெடுத்து ஒரு திருவடியால் விண்ணை அளந்தான். மற்றொரு திருவடியால் மண்ணை அளந்தான். தேவர்களும் முனிவர்களும் திரிவிக்ரமனைச் சேவித்துப் போற்றினர்.
புஷ்பவல்லித் தாயார்-ஸ்ரீ தேஹளீச பெருமாள் (உற்சவ மூர்த்திகள்)
பரந்து விரிந்த விண்ணையும், இந்தப் பாரினையும் தன் பாதத்தின் இரண்டு அடிகளால் அளந்த திரிவிக்ரமன் மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டான்.
முதலாழ்வார்கள் மூவருக்கு
காட்சித் தரும் திரிவிக்ரமன்
மூன்றாவது அடியாகத் தன் தலையை அளந்து கொண்டு தன்னையும், தன் உடைமைகளையும் ஏற்று அருள் புரியுமாறு வேண்டினான் மகாபலி. பகவானும் தன் பாதத்தை அவன் தலைமேல் வைத்து அவனைப் பாதாள லோகத்துக்கு அனுப்பி வைத்தார். பின்பு மூவுலகப் பொறுப்புகளையும் இந்திரனிடம் அளித்து விட்டு மறைந்தார்.
மார்க்கண்டேயனின் தந்தையான மிருகண்டு முனிவர் இந்த அற்புத நிகழ்ச்சி நடந்தபோது தவம் செய்ய எங்கோ போயிருந்தார். உலகளந்தானைக் கண்டு உவகை அடையும் உன்னத வாய்ப்பு தனக்குக் கிடைக்கவில்லையே என்று உள்ளம் ஏங்கினார்.
எனவே, அவர் பிரம்மனின் அறிவுரைப்படி கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரமான திருக்கோவ லூரில் தவம் புரியலானார். அதிதிகளின் அரும்பசி களைய அன்னதானம் செய்தார்.
ஒரு நாள் ஒரு முதிய வேதியர் தம்பதி அவரது குடில் தேடி வந்து உணவு யாசித்தனர். உள்ளே சிறிதுகூட உணவு இல்லை. மிருகண்டு முனிவரின் மனைவி மித்ரவதி, மகாலட்சுமியின் அருளால் உணவு பெற்று அவர்களின் மனமும் வயிறும் நிறையும் வண்ணம் விருந்து அளித்தாள்.
உடனே அந்த வேதிய தம்பதி மறைந்தனர். சங்கு, சக்ரதாரியாக, சகல வித அலங்காரங்களுடன், உலகளந்த உயர்கோலத்தில் தேவியருடன், தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் புடை சூழ திரிவிக்ரமனாகக் காட்சி தந்தார் கருணை மூர்த்தி. பிறகு மிருகண்டு முனிவரின் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சதுர்புஜ ரூபத்தில் காட்சி தந்தருளினார்.
முதலாழ்வார்கள் மூவர் என்று போற்றப்படுபவர்கள்: பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். இவர்கள் மூவரும் தனித்தனியே தல யாத்திரை சென்றிருந்தபோது, ஒரு நாள் இரவு திருக்கோவலூர் வந்து சேர்ந்தனர். மூவுலகும் அளந்த அந்த மூர்த்தி, மூவரையும் ஒன்று சேர்க்க விரும்பியதால், ஒரு முத்தமிழ் நாடகத்தை அரங்கேற்றினார்.
பெருமாள் திருவுள்ளக் குறிப்பின்படி, பெருமழை பெய்யத் தொடங்கியது. முதலில் வந்த பொய்கையாழ்வார், மிருகண்டு முனிவரின் ஆசிரமக் கதவைத் தட்டித் தங்குவதற்கு இடம் கேட்டார். ஓர் இடைகழியைக் காட்டிய முனிவர், அங்கு ‘ஒருவர் படுக்கலாம்’ என்று பகர்ந்து விட்டுச் சென்றார்.
அடுத்ததாக அங்கு வந்து சேர்ந்த பூதத்தாழ்வாரும் இடம் கேட்க, அந்த இடைகழியில் ‘இருவர் இருக்கலாம்’ என்று இயம்பி இடம் கொடுத்தார் மிருகண்டு முனிவர்.
பிறகு வந்த பேயாழ்வாரும் இடம் கேட்க, அந்த இடத்தில் ‘ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்’ என்று மொழிந்த முனிவர் அவரையும் உள்ளே வரவிட்டார்.
முதலாழ்வார்கள் மூவரும் நெடியவன் கருணையை நெஞ்சில் நிறுத்தி நெக்குருகி நின்று துதித்தனர். அப்போது இருட்டில் நான்காவதாக ஒரு நபர் அவர்கள் நடுவில் புகுந்து கொண்டு நெருக்கலானார். அப்படி நெருக்கியவர், அவர்களுக்கு மிகவும் நெருங்கியவர்தான். ஞானக்கண்ணால் அவன் நாராயணனே என்பதைக் கண்டுணர்ந்த மூவரும், ‘வையம் தகளியா’, ‘அன்பே தகளியா’, ‘திருக்கண்டேன்’ என்று முறையே பாடித் துதித்தனர்.
முதல் மூவர், மொழி விளக்கேற்றியதால் ஞானஒளி வீசும் நற்றலமாக விளங்குகிறது திருக்கோவலூர்.
திருக்கோவலூர் தொன்மை வாய்ந்த தலமாகும். மூன்று பெரிய கோபுரங்கள், விண்முட்டக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன. இங்கு மூலவர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
கிழக்குக் கோபுரம் அருகே வரங்களை வழங்கும் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.
கோயிலின் எதிரே 40 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் உச்சியில், ஊர்தியாகிய கருடன் உள்ளார்.
வலப்புறம் உள்ள சந்நிதியில் பாமா- ருக்மிணியுடன் கலை நுணுக்கம் தோன்ற எழிலுடன் காட்சி தருகிறான் வேணுகோபாலன். முதன் முதலில் க்ஷேத்ராதிபதியாக இருந்தவன் இவனே என்பது புராணக் கூற்று.
தாயார் சந்நிதி, பல மண்டபங்களுடன் மிகப் பெரியதாக அமையப் பெற்றுள்ளது ஒரு தனிச் சிறப்பு. மூலவர்- பூங்கோவல் நாச்சியார். உற்சவர்- புஷ்பவல்லி தாயார்.
இங்குள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதி சக்தி வாய்ந்தது. சக்கரத்தாழ்வாரின் பின்புறம் யோக நரசிம்மர் தாமரையில் யோக நிலையில் காணப்படுகிறார். இந்தச் சந்நிதியில் சனிக்கிழமை வழிபாடு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
இங்கு வழிபடுவதால் மன வியாதி, உடல் நோய், குடும்பப் பிரச்னை ஆகியவை தீரும் என்று நம்பப்படுகிறது. இங்கு நெய் விளக்கேற்றி சுதர்சன சதகம் வாசிப்பதும் பெரும் பயன் தரும் என்று சொல்லப்படுகிறது.
இந்தத் திருக்கோயிலில் ராமர், வரதராஜர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி வராகர், லட்சுமி நாராயணர் ஆகியோருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் சிறப்புற அமைந்துள்ளன. ஆண்டாள் சந்நிதியில் மார்கழித் திங்களில் மனங்கவர் உற்சவங்கள் நடைபெறுகின்றன.
உட்பிராகாரம்
108 வைணவத் திருத்தலங்களில் திருக்கோவலூரில் மட்டும்தான் விஷ்ணு துர்க்கைக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
விந்திய மலையிலிருந்து வந்த இந்த துர்க்கை, பெருமாளுக்குக் காவல் தெய்வமாக விளங்கும் பெருமை கொண்டவள்.
வாமனர் சந்நிதி, அவர் அவதாரத்துக்குத் தகுந்தாற் போல் சிறியதாக உள்ளது. கையில் குடையுடன் காட்சி தரும் வாமனரை தரிசித்த பிறகே நெடியவனை வழிபடச் செல்லலாம்.
உலகளந்த பெருமாள் திரிவிக்ரமனின் பெரிய திருக்கோலம் கண் கொள்ளாக் காட்சியாகும். வலக் கையில் சங்கமும், இடக் கையில் சக்கரமும் தாங்கி உள்ளார். ஓரடியால் விண்ணும், மற்றோர் அடியால் மண்ணும் அளந்து, மூன்றாவது அடி வைக்க இடம் எங்கே என்று கேட்பது போல் வலக்கைத் தோற்றம் வனப்புடன் விளங்குகிறது.வலது திருவடியில் பிரம்மா பூஜை புரிகிறார். கீழே லட்சுமி, பிரகலாதன், சுக்ராச்சாரியார், மிருகண்டு, ஆழ்வார்கள், கருடன் ஆகியோர் காணப்படுகின்றனர்.
மரத்தால் ஆன மூலவர் பெருமாளின் திருமேனி பழைமையானது; மிகப் பெரியது. திருவிக்ரமனின் மென் மையான ஒரு திருவடி, அண்டத்துக்கு அப்பால் வெள்ளத் தைத் தொட்டு, மற்றொரு திருவடி மகாபலியின் நெஞ்சு நினைவையும் கடந்து, விண்மீன்களை வியாபித்து, எல்லாம் தமதே, எல்லாமும் தாமே என்று உணர்த்துகின்றன.
மண் அளந்த பெருமாள், தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு பொன் அளந்து - சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் அந்த தாமரைத் திருவடிகளை உளமார வணங்குவோம்.
தகவல் பலகை
தலத்தின் பெயர் : திருக்கோவலூர்.
பெருமாள் பெயர்-மூலவர் : உலகளந்த பெருமாள், திரிவிக்ரமன்.
உற்சவர் : தேஹளீசன்.
தாயார் பெயர்-மூலவர் : பூங்கோவல் நாச்சியார்.
உற்சவர் : புஷ்பவல்லி தாயார்.
அமைந்திருக்கும் இடம் : சென்னையிலிருந்து சுமார் 160 கி.மீ. தொலைவில் உள்ளது விழுப்புரம். அங்கிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் உள்ளது திருக்கோவலூர்.
எப்படிச் செல்வது? : சென்னையிலிருந்து விழுப்புரம் வரை ரயில்,பேருந்து, கார். விழுப்புரத்திலிருந்து பேருந்து, கார் மூலம் செல்லலாம்.
எங்கே தங்குவது?: திருக்கோவலூரிலேயே தங்கும் விடுதிகள் உள்ளன.
எங்கே உண்பது?: திருக்கோவலூரில் பல உணவு விடுதிகளும் உள்ளன.
தரிசன நேரம் : காலை 6 மணி முதல் 12 வரை; மாலை 5 முதல் 9 வரை.
வேறு சிறப்புகள் : சக்கரத்தாழ்வாரை சனிக் கிழமைகளில் வணங்கினால் மனக் கோளாறுகள், தீராத நோய்கள், குடும்பத் துன்பங்கள் ஆகியவை விலகும்.



Comments