‘ ‘ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தும் சேவை செய்தும் நாம் மகிழ்வுடன் இருப்போம்!’’
- - ஷீர்டி சாயிபாபா
‘கா யத்துக்குக் கட்டுப் போடுவது மருத்துவராக இருந்தாலும், அந்தக் காயத்தைக் குணப்படுத்துவது கடவுளின் செயலே!’ என்று சொல்லப்படுவதுண்டு.
மருத்துவ முறைப்படி உரிய சிகிச்சை அளிக்கும் உலகியல் மருத்துவர்களுக்கு இது பொருந்தும். ஆனால் பாபாவோ, பார்வையாலேயே பல்வேறுபட்ட நோய்களையும் பஸ்மம் செய்பவர்.
சொற்களால், வியாதிகளைச் சுவடு தெரியாமல் போக்குபவர். அவரது கனிவும் கருணையும் கவசங்களாக இருந்து கடும் பிணிகளின் தாக்குதல்களைத் தடுத்திடும் வல்லமை மிக்கவை. அவர் அளிக்கும் மருந்துகளும், அவரது மருத்துவ முறைகளும் விசித்திரமானவையாகவும், வழக்கத்துக்கு மாறானவையாகவும், மருத்துவ விதிகளுக்கு முரண்பட்டவையாகவும் இருப்பதுண்டு.
மருத்துவத்தால் குணமாகாத கொடிய நோய்களை அவர் தெய்விக மகத்துவத்தால் குணப்படுத்தி வந்தார்.
மனிதனின் அங்கங்களைச் சிதைத்துச் சீரழிக்கும் தொழுநோயைக் குணப்படுத்த அவர் கையாண்ட வழிமுறை இந்த உண்மையை விளக்கும்.
அப்போது பாபா, ஷீர்டிக்கு வந்து சில ஆண்டுகளே ஆகியிருந்தன. பெரும்பாலான மக்கள் அவரை ஒரு மருத்துவராகவே அறிந்திருந்தனர். வெகுசிலர் மட்டுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்திருந்தனர். அவர்களில் ஒருத்தி ஆமன்பாய் என்ற பெண்மணி.
ஆமன்பாய், அன்பும் பொறுமையும் இறையுணர்வும் மிக்கவள். பாபாவின் மீதும் அவரது அருளாற்றலின் மீதும் அளவு கடந்த நம்பிக்கை கொண்டவள். இந்த ஆமன்பாய்க்கு அவள் மகன் உருவில் சோதனை வந்தது. அவளுடைய மகன் கண்பத்ஷரி கனாடே 35 வயது நிரம்பியவன். வாழ வேண்டிய வாலிபப் பருவத்தில் கொடிய தொழுநோயினாலும் கடுமையான காய்ச்சலினாலும் அவதிப்பட்டான்.
அருமை மகன் அல்லல் படுவதைக் கண்ட ஆமன்பாய் உடைந்து போனாள். அந்தத் தாயுள்ளம் பதறித் தவித்தது. இருப்பினும் அவள் நம்பிக்கை இழக்கவில்லை. பாபா தன் மகனைக் கண்டிப்பாகக் குணப்படுத்துவார் என்று பரிபூரணமாக நம்பினாள். அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம், பெரிய மகானாகிய பாபா தன் மகனைக் குணப்படுத்தி விடுவார் என்றும் சொன்னாள்.
அவள் மீது கருணை கொண்ட பாபா அவளது வீட்டுக்குச் சென்று, கண்பத்ஷரி கனாடேயின் உடல்நிலையைப் பரிசோதித்தார். பின், அவனுக்கு வந்திருக்கும் தொழுநோயை நிச்சயமாகக் குணப்படுத்த முடியும் என்று கூறிய சாயிபாபா, அதற்குரிய மருந்து தயாரிக்க நல்ல பாம்பின் விஷம் தேவை என்பதையும் தெரிவித்தார். நல்ல பாம்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டு வர அவனைப் பணித்தார்.
அச்சத்தாலும் அவநம்பிக்கையாலும் தயங்கினான் கனாடே. தொழுநோயாளியை நல்ல பாம்பு கடிக்காது என்றும், எவ்வித அச்சமும் இன்றிப் பாம்பைப் பிடிக்கலாம் என்றும் அவனை ஊக்கப்படுத்தினார் பாபா.
கனாடேயின் உள்ளத்தில் நம்பிக்கை துளிர்த்தது. காடு முழுவதும் அலைந்து திரிந்து ஒரு நல்ல பாம்பைப் பிடித்து வந்தான். அந்த பாம்பு அவனது கைகளில் இருந்து தப்பிக்க முயன்றதே தவிர, அவனைக் கடிக்கவில்லை.
நல்ல பாம்பின் விஷத்தைக் கொண்டு மருந்து தயாரித்து அவனுக்குக் கொடுத்தார் பாபா. உட்கொள்ள வேண்டிய முறைகளையும் பத்தியங்களையும் பற்றி உரைத்த பாபா, அவற்றை மிகச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கண்பத்ஷரி கனாடே மருந்து உட்கொள்ள ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல பலன் தெரிந்தது. ஆச்சரியப்படத் தக்க விதத்தில் அவன் வெகு விரைவில் குணமடையத் தொடங்கினான். பாபாவிடம் ஏதோ தெய்விக சக்தி குடிகொண்டு இருக்கிறது என்ற எண்ணம் ஷீர்டி மக்களிடையே தோன்ற ஆரம்பித்தது.
பகோஜி என்பவன் கடுமையான காய்ச்சலால் மிகவும் அவதிப்பட்டான். அவன் உடல் அனலாகக் கொதித்தது. கண்களைத் திறந்து பார்க்கக்கூட முடியாமல் காய்ச்சல் மிகுதியில் உளற ஆரம்பித்தான். மரணத்தின் எல்லைக்கே சென்று விட்டதால், அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கை உறவினர்களுக்குக் கொஞ்சம் கூட இருக்கவில்லை.
அப்போது பாபா அவனுக்கு ஏதோ மருந்தைப் புகட்டினார். பிறகு அதிர்ச்சியளிக்கும் விசித்திரமான ஒரு வைத்திய முறையைக் கையாண்டார். இரும்புக் கம்பி ஒன்றைப் பழுக்கக் காய்ச்சி அவன் செவித் தடங்களிலும், முதுகிலும் சூடு வைத்தார்.
பார்ப்பதற்கு முரட்டு வைத்தியமாகத் தோன்றினாலும் அது உடனடியாக பலன் தந்தது. பகோஜியின் காய்ச்சல் சட்டென்று குறைந்தது. அவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபட்டு முழுமையாகக் குணமடைந்தான்.
சாயிபாபாவின் சிகிச்சைகள் மட்டுமின்றி, அவரது செயல்களும் வாழ்க்கை முறைகளும் விசித்திரமானவையாக இருந்தன. அதுவும் அவர் தூங்கும் முறை மிக மிக விநோதமானதாகும்.
நானா சாகெப் டேங்கலே என்பவர், பாபா உறங்குவதற்காக ஒரு பலகையைக் கொண்டு வந்து கொடுத்தார். அது நான்கு முழ நீளமும், ஒரு முழ அகலமும் கொண்டது. பாபா அந்தப் பலகையைத் தரை மீது கிடத்தி அதன் மீது உறங்குவார் என்று அவர் நினைத்தார்.
ஆனால், பாபா அந்தப் பலகையை நைந்து போன மெல்லிய கந்தல் துணிகளால் மசூதியின் உத்தரங்களில் ஊஞ்சல் போலக் கட்டி அதன் மீது உறங்குவதை வழக்கமாகக் கொண்டார். எந்த நேரத்திலும் அறுந்துவிடும் போல் தோற்றமளித்த கந்தல் துணிகள் அந்தப் பலகையைத் தாங்கியதே ஓர் அதிசயம். அதிலும் அது பலகையையும் தாங்கி, பாபாவையும் தாங்கியது அதிசயத்திலும் அதிசயம்!
பலகையின் நான்கு புறங்களிலும் மூலைக்கு ஒரு மண் விளக்கு ஏற்றி வைப்பார் பாபா. அந்த விளக்குகள் இரவு முழுவதும் தொடர்ந்து எரிவதற்குத் தேவைப்படும் எண்ணெய், திரி போன்றவற்றைக் கச்சிதமாக வைத்திருப்பார். சுடர்விட்டு எரியும் விளக்குகளின் நடுவே ஊஞ்சல் பலகையில் பாபா அமர்ந்து இருப்பதையோ, துயில் கொள்வதையோ தரிசனம் செய்தவர்கள், புண்ணியம் செய்தவர்கள்.
இடைவிடாமல் பக்தர்கள் அவரைக் காண அங்கு வந்தபோதிலும், ஒருவராலும் அவர் பலகையின் மீது ஏறுவதையோ அல்லது கீழே இறங்குவதையோ காண முடியவில்லை.
அவர் ஊஞ்சல் பலகையில் எப்படி ஏறினார், எப்படி இறங்கினார் என்பதை அறிந்து கொண்டே ஆகவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பலர் விழிப்புடன் கவனிக்கத் தொடங்கினார். ஆனால், அந்த முயற்சியில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. அவர்களின் ஆர்வக்கோளாறு அதிகமானது. கூட்டமும் அதிகமானது. ஒரு நாள் பாபா ஊஞ்சல் பலகையைத் துண்டு துண்டாக உடைத்து எறிந்து இதற்கு ஒரு முடிவு ஏற்படுத்தினார்.
பாபாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி, அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஷீர்டியின் மக்களுக்குப் புரிய வைத்தது.
பாபாவுக்கு விளக்குகள் மீது தனிப் பிரியம் உண்டு. அவர் கடைக்காரர்களிடம் சென்று எண்ணெய் பெற்றுக் கொண்டு வந்து மசூதியிலும், கோயிலிலும் விளக்கேற்றி மகிழ்வது வழக்கம். இரவு முழுவதும் விளக்குகள் நட்சத்திரங்களைப் போல் ஒளி சிந்தி மின்னி எரிவது உண்டு.
என்ன ஆயிற்றோ தெரியவில்லை! இலவசமாக எண்ணெய் வழங்கி வந்த வணிகர்கள், ‘இனி எண்ணெய் கொடுக்கத் தேவையில்லை’ என ஒரு நாள் தீர்மானித்தனர். வழக்கம் போல் பாபா எண்ணெய் கேட்டு வந்தார். அவர்களோ, ‘எண்ணெய் இல்லை’ என்று தீர்க்கமாக _ தீர்மானமாகத் தெரிவித்துவிட்டனர்! எண்ணெய் இருந்தது. ஆனால், கொடுக்கும் எண்ணம் இல்லை. இதனால் பாபா கோபமோ, குழப்பமோ அடையவில்லை.
காலி தகர டப்பாவுடன் மசூதிக்குத் திரும்பினார். எண்ணெய் தர மறுத்த வணிகர்களுக்கு, ‘ஏதோ நடக்கப் போகிறது!’ என்ற உணர்வு ஏற்பட்டது. வியாபாரத்தை விட்டுவிட்டு மசூதிக்குப் போய் அங்கு நடப்பவற்றைக் கவனிக்கத் தொடங்கினர்.
பாபா, எண்ணெய் இல்லாத விளக்குகளில் காய்ந்து போன திரிகளை நிதானமாக இட்டார். ‘பாபா, என்ன செய்யப் போகிறார்?’ என்று வணிகர்கள் ஒருவரை ஒருவர் பார்வையால் கேட்டுக் கொண்டனர்.
_ தொடரும்...
ஷீர்டி புனிதத் தல தரிசனம்
பா பா உபயோகித்த சக்கி அல்லது இயந்திரம்
இந்த இயந்திரம் பத்திரமாக துவாரகாமாயியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் பாபா கோதுமையை அரைப்பது வழக்கம். ஒரு முறை பாபா கோதுமையை அரைத்து, அந்த மாவை ஷீர்டி எல்லைக்கு வெளியே கொட்டி ஷீர்டிக்குள் காலரா வராமல் தடுத்தார். நம் கர்ம வினைகளை அழிப்பதுதான், பாபா இயந்திரத்தில் கோதுமை அரைப்பதன் உண்மையான உட்பொருள்.
இந்த இயந்திரத்தை இப்போது தரிசித்தாலும், பாபாவின் அருளால் நம் கர்ம வினைகள் அகலும் என்பது உறுதி.
|
அடியவரை அழைத்த அற்புதம்!
மு ம்பையைச் சேர்ந்தவர் ராம்லால். பக்தியும் பண்பும் நிறைந்தவர். அவர் பாபாவைப் பார்த்ததே இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை.
ஒரு நாள் ராம்லால் உறங்கும்போது கனவு கண்டார். அந்தக் கனவில் பாபா தோன்றினார். தன்னை வந்து பார்க்கும்படி ராம்லாலைப் பணித்தார்.
கனவில் தோன்றிய மகான் யார் என்பதும், அவர் எங்கு இருக்கிறார் என்பதும் ராம்லாலுக்குத் தெரியவில்லை. ஆயினும் அவரைப் பார்த்தே தீருவது என்று முடிவு செய்தார். என்ன செய்வது, எங்கு செல்வது, எப்படி அறிவது என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்தார் ராம்லால்.
அடியவரைத் தேர்ந்தெடுத்த பாபா, அவருக்கு வழி காட்டாமல் இருந்து விடுவாரா? அன்று மாலை ராம்லால் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு தெருவில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது _ ஒரு கடையில் காணப்பட்ட படத்தைப் பார்த்தவுடன் பரவசமானார். அது அவரது கனவில் வந்து அழைத்த மகானின் படம் என்பதைக் கண்டார். உடனே, கடைக்காரரிடம் சென்று விசாரித்தார். படத்தில் இருந்தவர், ஷீர்டியைச் சேர்ந்த மகானான சாயிபாபா என்பதைத் தெரிந்து கொண்டார்.
தன்னைத் தேர்ந்தெடுத்து அழைத்ததோடு நில்லாமல், வந்து சேரும் வழியையும் காட்டிய பாபாவின் லீலையை எண்ணி உள்ளம் உருகினார் ராம்லால்.
உடனே ஷீர்டிக்குப் பயணமானார். அதன் பின் வாழ்நாள் இறுதிவரை பாபாவின் அருகிலேயே இருக்கும் பெரும் பேறு பெற்றார்.
|
Comments
Post a Comment