ஸ்ரீமுக்தி குப்தேஸ்வரர்’





ஸ்ரீமுக்தி குப்தேஸ்வரர்’


ஆஸ்திரேலியா, மின்டோ நகரில் ரம்மியமாக அமைந்துள்ளது ஸ்ரீமுக்தி குப்தேஸ்வரர் சிவன் கோயில். இதுதான் சிட்னியில் எழுப்பப்பட்ட முதல் கோயில் என்று கூறுகிறார்கள். சுற்றிலும் மலை அரணாக விளங்க, பச்சைப் பசேலென அமைதியான சூழல். தரையில் இருந்து சுமார் பதினைந்து அடி இறங்கிச் சென்றால் ‘ஸ்ரீமுக்தி குப்தேஸ்வரர்’ தரிசனம்.
மிகச்சிறிய லிங்க வடிவில் இறைவன் இங்கு எழுந்தருளியிருக்கிறார். கருங்கல் மூர்த்தம். பூமிக்கு அடியில் 1450 சதுர அடி பரப்பில் குகை வடிவில் அமைக்கப்பட்ட கோயில் இது. கருவறைக்கு இருபுறமும் மாதா மந்திர், ராம் பரிவார் மந்திர் மற்றும் பக்கச் சுவர்களில் கணேஷ் மந்திர், ஆஞ்சநேய மந்திர் என்று மற்ற மூர்த்திகள். இவை பளிங்கினால் ஆனவை.
1997-ல் இக்கோயில் கட்டும் பணி ஆரம்பித்து 1999-ல் மகாசிவராத்திரி அன்று ஸ்ரீமுக்தி குப்தேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின. உலகமெங்கிலுமுள்ள இரண்டு மில்லியன் சிவ பக்தர்கள் சேர்ந்து எழுதிய, ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரம் அடங்கிய ஒரு பெட்டி 10 மீட்டர் ஆழத்தில் வைத்து, அதன் மீது இம்மூலவர் சன்னிதியை அமைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். உலகின் பல புண்ணிய நதிகளின் நீர், ஐம்பெரும் கடல் நீர், எட்டுவித உலோகங்களும் இதில் உடன் அடங்கி உள்ளனவாம்.
கோயிலில் நுழையும்போதே பக்தி அதிர்வலைகளை நம்மால் உணர முடிகிறது. இக்கோயிலின் அர்ச்சகர் பீஹாரைச் சேர்ந்தவராம். தினமும் 108 ருத்ரம், 1008 சஹஸ்ர ஸ்துதி சொல்லி வழிபாடு நடத்துகிறார். கோயிலின் வெளிப்புறத்தில் சிவபெருமானின் மிகப்பெரிய வெண்மை நிற உருவச்சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான, அழகான ஜடாமுடிதாரியின் தோற்றம் பார்க்கப் பரவசமளிக்கிறது.
இந்த சிவன் கோயில் சிட்னி நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் ‘மின்டோ’ என்னும் இடத்தில் உள்ளது.




 

Comments