கா ஞ்சிபுரம் போனால், காலை ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம்!’ என்றொரு பழ மொழி உண்டு. காஞ்சிப்பதி நெசவுத் தொழிலுக்குப் பெயர்பெற்றது என்பதால், இப்படிக் கூறுவார்கள்.
காஞ்சிபுர நெசவாளர்களின் திறமையை உணர்ந்த அந்தக் கால அரசர்கள், அவர்களைத் தங்கள் நாட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கு இருப்பிடம் முதலான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து நெசவுத் தொழிலை மேம்படுத்தியுள்ளனர். அப்படி, பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற காஞ்சி நெசவாளர்கள், அந்தந்தப் பகுதி மக்களது விருப்பம், வழக்கம், நாகரி கத்துக்கு ஏற்ப தங்களது தொழிலை வளர்த்து வந்தனர்.
இப்படி, சேர நாட்டின் பாலக்காடு பகுதியில் குடியேறிய நெசவாளர்கள் பலர் செங்குந்த மரபைச் சார்ந்தவர்கள். இவர்கள், முருகக் கட வுளைக் குலதெய்வமாக வழிபட்டவர்கள்.
பராசக்தியின் கால் சிலம்பிலிருந்து தோன்றிய நவ மாதர்களுக்குப் பிறந்தவர்கள் வீர பாகுத் தேவர் முதலான நவ வீரர்கள். இவர்கள் முருகப் பெருமானின் சகோதரர்களாகக் கருதப்படுபவர் கள். சூரபத்மனுடனான போரின்போது முருகனுக்கு உறுதுணையாக இருந்து வெற்றி தேடித் தந்தவர்கள். இந்த வீரபாகுத்தேவரின் வழி வந்தவர்கள் செங் குந்த மரபினர் என்பது நம்பிக்கை. எனவே, முருக வழிபாடு இவர்களது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது எனலாம். இவர்கள், செல்லும் இடங்களில் எல்லாம் முருகக் கடவுளுக்கு ஆலயம் கட்டி, திருவிழாக்கள் நடத்தி வந்துள்ளனர். அப்படி இவர்களால், பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதுதான் ‘கொடும்பு’ எனும் சிற்றூரில் உள்ள அருள்மிகு கல்யாண சுப்ர மணிய சுவாமி திருக்கோயில். கேரள மாநிலம், பாலக்காடு - சித்தூர் சாலையில் பாலக்காட்டில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது கொடும்பு.
அருணகிரிநாதர் இந்தத் திருக்கோயில் முருகனை தரிசித்து வழிபட்டிருக்கிறார். அவர், ‘கலைஞரெனும் கற்பு’ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலில், ‘ஏழு உலகங்களிலும் முறுக்கி விடப்பட்ட மயில் என்கிற அழகிய குதிரையைச் செலுத்தும் செட்டியே... பராக்ரமசாலியே... கொடும்பைத் தலத்தில் விளங்கும் பெருமானே...’ என்று இந்தத் திருத்தல முருகனைப் போற்றுகிறார். திருப்புகழ் பாடல் பெற்ற கேரளத் திருத்தலம் ‘கொடும்பு’ மட்டுமே! இங்கு முருகன்தான் பிரதான தெய்வம். சிவன், அம்பாள் எல்லாம் உபதேவதை! கொடும்பை என்ற சொல்லுக்கு பச்சிலை, பூண்டு, குளம், அருவி, தூம்பு, தாம்பு, மலை என்று பல பொருள் உண்டு. இங்கு ‘சோகநாசினி’ எனும் புண்ணிய நதி ஓடுகிறது. இந்தப் பெயருக்கு ‘அடியார்களது சோகத்தை நாசம் செய்வது’ என்று பொருள். இதைத் தவிர அருகில் பாரதப்புழை, கண்ணாடிப் புழை ஆகிய ஆறுகளும் உள்ளன. இப்படி ஆறு, குளம், சோலை நிறைந்த பகுதி ஆதலாலும் இந்தத் தலம் கொடும்பை எனும் பெயர் பெற்றது எனலாம்.
தமிழகக் கட்டடக் கலைப்பாணி யில், அழகான சிற்பங்களுடன் அமைந்த ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. மயில் மண்டபம் தாண்டி உள்ளே சென்றால் மூலஸ் தானத்தில் முருகப்பெருமான், ஒரு முகம் நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள் புரிகிறார். முருகனுக்கு இருபுற மும் வனவல்லியும் கஜவல்லியும் காட்சியளிக்கின்றனர். இங்குள்ள பாலசுப்ரமண்யர் உற்சவ மூர்த்தி வடிவமும் சிறப்பாக உள்ளது. இங்கு சிவபெருமான் ‘கோஷ்டேச்வரர்’ என்ற பெயரிலும் அம்பிகை, ‘மரகதாம்பாள்’ என்ற பெயரிலும் அருள் பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் உள்ள 36 கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இந்த மண்டபத்தில் உள்ள எட்டுத் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் கண் ணையும் கருத்தையும் கவர்வன. நாகலிங்க கணபதி, தண்டபாணி, ஊர்த்துவ தாண்டவர், வீரவாகுத் தேவர், யானை உரித்த பெருமான், மயில்வாகனன், காளி, ருக்மணி- சத்யபாமாவுடன் வேணுகோபாலன் ஆகிய சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிக அழகு!
இந்தத் திருக்கோயிலில் தினமும் மூன்று கால வழிபாடுகள் நிகழ்கின்றன. பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை தினங்களில் விசேஷ வழிபாடுகள் உண்டு. மேலும் நவராத்திரி, கார்த்திகை மண்டல பூஜை, ஸ்கந்த சஷ்டி, தைப்பூசம், சித்திரை விஷ§ ஆகிய நாட்களையும் வெகு சிறப்பாகக் கொண்டாடுகி றார்கள். தைப்பூசத்தன்று இங்கு நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் பிரபலம்! அப்போது தங்க மயிற்பீலிக் காவடி, புஷ்பக் காவடி, சந்தனக் காவடி போன்ற பலவகைக் காவடிகள் தூக்கி, காவடிச் சிந்துடன் கந்தனின் புகழ் பாடியவாறு பக்தர்கள் ஆடி வருவது கண்கொள்ளாக் காட்சி!
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப கோணத்தில் நடைபெறும் மகாமகம் போன்று இங்கு தீர்த்தத்தில் நீராடி ஒரு விழா கொண்டாடுகிறார்கள். இது மிகவும் விசேஷத் திருவிழா. சோகநாசினி ஆற் றின் அடியிலிருந்து பொங்கி வரும் நீர்க்குமிழ்கள், மணலைப் புரட்டியவாறு மேலெழுந்து மறையும் அதிசயத்தைக் கண்டு களிக்கிறார்கள். அப்போது அந்த நதியில் நீராடினால், வினைகள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை. ஆகவே அன்று கூட்டம் அலைமோதும். தவிர, தீபாவளி அமாவாசை தினத்தன்று ஸ்வாமி இங்கு வந்து தீர்த்த ஸ்நானம் செய்வார். அன்று பக்தர்களும் அதிக அளவில் நீராடிச் செல்வதும் உண்டு.
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் இங்கு வந்து வழிபட்டதாகச் செய்திகள் உண்டு. அவரது காலம் முதல் சிவாச்சார்யர்கள், இங்கு ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தி வருவதாகக் கூறுவர். கோவை- கூனம்பட்டி மாணிக்கவாசகர் மடத்தின் அதிபதி, ஆண்டு தோறும் இங்கு வந்து, கொடியேற்றி, தைப்பூச விழாவைத் தொடங்கி வைக்கிறார். கேரள தேவஸ்வம் போர்டு நிர்வாகத்தின் கீழ் இந்தக் கோயில் உள்ளது. தல விருட்சம் செண்பக மரம். பழநிக்கு நிகரான சாந்நித்தியம் உள்ள தலம் என்பதால், ‘பழநியில் பாதி கொடும்பு!’ என்ற பழமொழி உண்டு.
துஷ்ட மந்திரவாதி ஒருவர், இந்தத் தலத்தில் வேலனை துணைக்கு அழைத்தார். அவர் வேலாயு தத்தால் அழிக்கப்பட்டார் என்றும் அவர் மரபினர் குத்த (குற்ற) காணிக்கைகளை (படிப் பணம், அதா வது படிமேல் பணம் வைத்து தருவது) செலுத்தி வணங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது என்றும் சொல்கிறார்கள். முன்னொரு காலத்தில் ஒரு முறை ‘‘கொடும்பு முருகனுக்கு அரோகரா! கூர்வடிவேல் வேலனுக்கு அரோகரா!’’ என்று முழங்கி, தாரை தப்பட்டை முழக்கத்துடன் ஒரு கூட்டம் இந்தத் தலத்துக்கு வந்தது. கூட்டத்தில் வயதில் முதிர்ந்த ஒருவர், தன் தலையில் மலர் மாலைகளால் அலங் கரிக்கப்பட்ட ஒரு ஜோடி செருப்பைத் தாங்கி வந்தார். அவர், தன் கனவில் முருகன் வந்து காலணி கள் கேட்டதாகவும் அதன்படி உடனே அவற்றைத் தயார் செய்து, எடுத்து வந்ததாகவும் கூறி, அந்த செருப்புகளை முருகனுக்கு சமர்ப்பித்து விட்டுச் சென்றாராம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த செருப்புகளைப் பார்த்தால், இத்தனை காலமும் தொடர்ந்து பயன்படுத்தியது போல அவை தேய்ந்து போயிருந்தன! இப்போதும் விழாக் காலங்களில் தாரைத் தப்பட்டை வாசிக்கும் உரிமை, இவர்களின் குடும்பத் தாருக்கே என்கிறார்கள்.
இந்தத் தலத்தில் திருமணம், புத்திரப் பேறு ஆகிய வேண்டுதல் களுடன் பக்தர்கள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கிறார்கள். சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால் புத்திரப் பேறு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
கோலமயில் வாகனனை, கொடும்புக் குமரனை, அருணகிரி போற்றிய அழகனை, நாமும் சென்று வழிபட்டுப் பேறு பெறுவோம்!
Comments
Post a Comment