சி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா?
முகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா? ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி! வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம்.
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் தாழிக்காக சிறப்புப் பெற்ற இடம். நம்மைப் பெருமிதத்தில் ஆழ்த்தும் புதைபடிவ தேசியப் பூங்கா (பார்க்க- பெட்டிச் செய்தி) ... இவை யாவுமாகித் திகழும் திருவக்கரை செல்வோம்!
திண்டிவனம்- புதுச்சேரி பாதையில், மயிலம் தாண்டிச் சிறிது தூரம் சென்றால், பெரும்பாக்கம். அங்கிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருவக்கரை. திண்டிவனம் மற்றும் விழுப்புரத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.
திருவக்கரை என்றதும் நினைவுக்கு வருவது வக்கிர காளியம்மன். சாதாரணமாக, காளி கோயில் ஊர் எல்லையில் இருக்கும். ஆனால், இங்கோ ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் வளாகத்துக்குள் காளிதேவி கோயில் கொண்டிருக்கிறாள்.
சிவபெருமானை எண்ணித் தவம் செய்து பூஜித்தான் வக்கிராசுரன். அதனால் பற்பல வரங்களைப் பெற்றான். அந்த வரங்களின் விளைவாகப் பலருக்கும் துன்பம் தந்தான். கொடுமைகள் செய்தான். அவனது கொடுமைகள் தாங்க முடியாமல், பலரும் சிவனாரிடம் சென்று முறையிட்டனர். சிவனாரும் மகாவிஷ்ணுவை அழைத்து, வக்கிரனை வதம் செய்யச் சொன்னார்.
அதன்படி, வக்கிரன் இருந்த இடத்தை அடைந்த மகாவிஷ்ணு, பெரும் போருக்குப் பின் சக்கராயுதத்தைப் பிரயோகித்து அவனை வதம் செய்தார்.
வக்கிராசுரனுக்கு துன்முகி என்றொரு சகோதரி. அண்ணனின் அதிகாரம் தந்த ஆணவத்தால், துன்முகியும் பற்பல கொடுஞ்செயல்களைச் செய்தாள். சிவபெருமான், பார்வதி தேவியை நோக்கினார். திருக்கயிலையிலிருந்து புறப்பட்ட பார்வதிதேவி, துன்முகியை நோக்கிச் சென்றார். துன்முகி அப்போது கருவுற்றிருந்தாள்.
என்னதான் இருந்தாலும் கர்ப்பிணியாயிற்றே! அவள் தவறு செய்திருந்தாலும், அந்தச் சிசு என்ன பாவம் செய்தது? பார்த்தாள் பார்வதி. துன்முகியின் வயிற்றுச் சிசுவை பத்திரமாக எடுத்துத் தன் காதில் மாட்டிக் கொண்டு, துன்முகியை (இப்போது அவள் கர்ப்பிணி இல்லையல்லவா!) வதம் செய்தார். வக்கிரன் வாழ்ந்த இடம் என்பதால், ‘வக்கரை’ ஆன இந்த இடத்தில், காளியாகி நின்று காட்சி கொடுப்பதால் அம்பாள், வக்கிரகாளி ஆனார்.
சிவபெருமான் ஆலயத்துக்குள்ளேயே திருமாலும், செங்கண்மால் திருத்தங்கச்சியாம் வக்கிரகாளியும் கோயில் கொண்டுள்ளார்கள். எனவேதான், ரத்னத்ரயத்தை வணங்கும் சிறப்பு பெறுகிறது திருவக்கரை!
விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் வட்டம் - வராக நதி பாய்கிற இடம். சங்கராபரணி (சங்கரருக்கு ஆபரணம் ஆனவள்) என்றும் அழைக்கப்படும் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது திருவக்கரை திருக்கோயில்.
பழைமையான, பெரிய கோயில். கிழக்கு வாயிலில், விண்ணளாவி நிற்கும் கிழக்கு ராஜ கோபுரம். இது கண்டராதித்தன் திருக்கோபுரம் என்றும் கண்டர் சூரியன் திருக்கோபுரம் அழைக்கப்படுகிறது.
பிற்காலச் சோழ சாம்ராஜ்யம் உருவாகக் காரணமான ஆதித்த சோழனால், இன்றைக்குச் சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன், செங்கற் கோயிலாக இந்தத் திருக்கோயில் கட்டப்பட்டது. அதற்கு முன்னரேகூட கோயில் சிறிய அளவில் இருந்துள்ளது. பின்னர், முதலாம் பராந்தகனின் மகன்களான ராஜாதித்தனும் கண்டராதித்தனும் இந்தக் கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள் ளனர். கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவி (திருவாரூர் அசலேஸ்வரத்தில் நாம் சந்தித்த, அதே செம்பியன் மாதேவியார்) திருவக்கரைக்குப் பற்பல திருப்பணிகள் செய்து தானங் கள் வழங்கியுள்ளார்.
கண்டராதித்தன் கட்டு வித்த கண்டராதித்த கோபுரம், ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோபுர வாயிலில் உள்ள கணபதியை வணங்கி, உள்ளே நுழைந்து அண்ணாந்து பார்க்கிறோம். கூரையில் ஒன்பது கட்டடங்கள் போன்ற அமைப்பு. நடுவில் அழகான தாமரை. மலரைச் சுற்றிலும் எண்திசைக் காவலர்களாம், அஷ்டதிக்குப் பாலர்கள்.
ராஜ கோபுரம் தாண்டியதும், வடக்கு நோக்கிய வக்கிரகாளி அம்மன் சந்நிதி. சந்நிதிக்குள் நுழையும்போது, வாயிலில் உள்ள துவாரபாலகியர் நமது கவனத்தைக் கவர்கிறார்கள். பக்கத்துக்கு இரண்டாக, மொத்தம் நான்கு பேர். இவர்களைப் பற்றிய உள்ளூர்க் கதை நெகிழ்ச்சி தருகிறது.
நான்கு பேரும் பால் வியாபாரம் செய்தவர்களாம். ஆனால், பாலில் அதிகமாகக் கலக்கப்பட்ட தண்ணீரைத்தான், பால் என்று வியாபாரம் செய்தனராம். மக்கள் முறையிட, மன்னன் வரைக்கும் புகார் சென்றது. மன்னன், நால்வருக்கும் தண்டனை வழங்கினான். மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட நால்வருக்கும், இறுதித் தண்டனை சிரச்சேதம். அந்தக் கடைசி வேளையில் அறிவு வந்தது போலும்! நால்வரும் தவறு உணர்ந்து அழுது புலம்பி அரற்றி, காளியை வழிபட... அவர்கள் மீது இரக்கம் கொண்ட காளி, நால்வரையும் தம்முடைய துவாரபாலகியராக ஆக்கிக் கொண்டார்.
இந்தச் சம்பவம் உண்மையில் நடந்ததோ, இல்லையோ தெரியவில்லை! ஆனால், இரண்டு செய்திகள் புரிகின்றன. ஒன்று, ஏமாற்றும் புரட்டும் செய்தால், தண்டனை கட்டாயம். இரண்டாவது, மனம் உருகிப் பிரார்த்தித்து, தவறுக்கு வருந்தித் திருந்தினால் மன்னிப்பு கிடைக்கும்.
சமயக் கதைகள், கோயில் கதைகள் என்ற பெயர்களில், மக்கள் சமுதாயம், முறையாகவும் வளமாகவும் வாழ வழி காட்டியிருக்கும் நம் முன்னோரின் நுட்ப மான அறிவை வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
‘‘அம்மா, வக்கிரகாளி... எங்கள் முன்னோர் கட்டிக் காத்த அறத்தையும் பெருமையையும் நாங்களும் காப்பாற்ற அருள் கொடு, தாயே!’’ என்று வணங்கிக் கொண்டே உள்ளே நுழைகிறோம்.
வக்கிரகாளியம்மன் திருமேனி உள்ளத்தைச் சுண்டுகிறது. லேசாகச் சாய்த்த தலை. கிரீடத்தில் மண்டையோடு. வலக் காதில் சிசுக் குண்டலம். இடக் காதில் ஓலைச்சுருள். வதனத்தில் வசீகரமான புன்னகை. சற்றே கூர்ந்து கவனித்தால், உள்ளத்தில் தெளிவு கலந்த அச்சத்தை ஏற்படுத்துகிறாள். எட்டுத் திருக்கரங்கள். வலக் கரங்களில் பாசம், சக்கரம் (திருமாலின் சகோதரியாயிற்றே!), வாள், கட்டாரி. இடக் கரங்களில், மேல்கரம் உடுக்கையைப் பிடித்தாற் போல இருக்கிறது. அடுத்த இரு கரங்களில் கேடயமும் கபாலமும். கீழ்க்கரம், ஆள் காட்டி விரல் நீட்டி அம்மனின் பாதத்தைச் சுட்டுகிறது. கபாலங்களையே கோத்து முப்புரி நூலாக அணிந்திருக்கிறாள். கோரைப் பற்கள். பெரிய விழிகள்! ‘தவறு செய்தால், அம்மன் தண்டிப்பாள்!’ என்ற அச்சத்தையும் ‘தவறு செய்யக் கூடாது!’ என்ற தெளிவையும் தருகிற வக்கிரகாளியை மீண்டும் வழிபடுகிறோம்.
வக்கிரகாளி சந்நிதியைத் தனியே வலம் வரலாம். வலம் வரும்போது, சிலர் திசை மாறி இடமாகச் சுற்றுவது (அப்பிரதட்சிண மாக) தெரிகிறது. அது என்ன ஐதீகம்?
ஒன்பது கோள்களை நவக்கிரகங்கள் என்று வழிபடுகிறோம் அல்லவா! நவக்கிரகங்களுக்கும் தனித்தனியாக அதிதேவதை கள் உண்டு. ராகு-கேதுவுக்கு காளியம்மனே அதிதேவதை. சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகுவும் கேதுவும் தீயவர்கள். எப்போது தீமை தரலாம் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள். அதிலும் அவர்கள் வக்கரித்துக் கொண்டால், கேட்கவே வேண்டாம். எனவேதான், இந்தக் கோயிலில் புது முறையான வலம் வருதலும் ஏற்பட்டது. நவக்கிரகங்களைச் சுற்றுகிற ஒன்பது சுற்றுகளில், ஏழு சுற்றுகள் சாதாரண வலமாகவும், வக்கரித்துக் கொள்ளும் ராகு- கேதுவுக்காக இரண்டு சுற்றுகள் அப்பிரதட்சிணமாகவும் சுற்றுகிற வழக்கம் தோன்றியது. இந்தக் கோயிலில், சனியும் வக்கிர சனியாகவே உள்ளார். அவருக்கு ஒரு சுற்று. தவிர, அவரவர்க்கு ஏதாவது ஒரு கிரகம் சரியான நிலையில் இல்லாமல் இருப்பது சகஜம். அந்த கிர கத்துக்காக ஒன்று என்றாகி, தற்போது மொத்தம் ஒன்பதில் ஐந்து பிரதட்சிணமாகவும், நான்கு அப்பிரதட்சிணமாகவும் அமைந்து விட்டது.
வக்கிரகாளியை வலம் வந்து மீண்டும் வணங்குகி றோம். காளியின் சந்நிதியிலேயே ஒரு புறம் யோகேஸ்வர லிங்கம். இன்னொரு புறம் வலம்புரி விநாயகர்.
வக்கிரகாளியம்மன் திருக்கோயிலை அடுத்தாற் போல, தீபலட்சுமி கோயில் உள்ளது. திருமணத் தடை ஏற்பட்டுள்ளவர்கள், ராகு காலத்தில் வக்கிரகாளியம்மனை வழிபட்டு, தீபலட்சுமிக்கு விளக்கேற்றி, மாங்கல்யம் கட்டி வணங்கினால், உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. வெறும் நம்பிக்கை மட்டுமல்ல; அவ்வாறு நடந்ததாக நிறையப் பேர் சொல்கிறார்கள்.
காளி கோயிலுக்கு எதிரில் (வடக்குப் புறத்தில்) ஆத்மலிங்கக் கோயில். கண்ட லிங்கம் (வக்கிராசுரன் தன் கண்டத்தில்/தொண்டையில் வைத்துப் பூஜித்ததால்) என்றும் வக்கிர லிங்கம் என்றும் பெயர்களுண்டு. மேற்கு நோக்கிய லிங்கம். ஆத்ம லிங்கத்துக்கு ஒரு தனிச் சிறப்பு இருப்பதாகக் கோயிலைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டார்கள். கோடை காலத்தில், லிங்கம் படுகுளிர்ச்சியாக இருக்குமாம். குளிர் காலத்திலோ, லிங்கத்தின் மீது, முத்து முத்தாக நீர்த் துளிகள் காணப்படுமாம். குளிர்ச்சி மிக்கவரான ஆத்ம லிங்கரை வணங்கித் திரும்புகிறோம்.
ராஜ கோபுரத்துக்குள் நுழைந்தோம். இன்னும் நாம் உள் கோபுரத்தை அடையவில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட விசாலமான இடத்தில்தான், வக்கிர காளியம்மன் சந்நிதியும் ஆத்மலிங்கமும் உள்ளன.
உள் கோபுரம் நோக்கி நடக்கத் தொடங்குகிறோம். நமக்கு இடப் புறத்தில், மரத்தடியில் புற்றும், சுற்றிலும் நிறைய நாகர்களும். நாகராஜாவுக்குப் பால் வார்த்து விளக்குப் போட்டால், நினைத்ததெல்லாம் நடக்குமாம்!
ஏன் திருவக்கரை?
தி ருவக்கரையின் பெயர்க் காரணம் வக்கிராசுரன் என்று கூறினாலும், இந்த ஊரின் சிறப்பு, மற்றொரு சிந்தனையை யும் தருகிறது.
சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், இந்தப் பகுதியில் இருந்த மரங்கள், காலப்போக்கில் பூமியில் புதைந்து போயின. படிந்த மரங்கள் சிதைவடைவதற்கு முன்னால், வேதிம நிகழ்வொன்று இங்கு நடந்தேறிவிட்டது. இந்தப் பகுதியின் மண்ணிலும், நிலத்தடி நீரிலும் சிலிக்கா துகள்கள் இருந்தன. கண்ணாரக்கல் என்று கிராம மக்களால் அழைக்கப்படும் சிலிக்காவின் அணுக்கள், பூமியில் படிந்த மரங்களின் பாகங்களுக்குள் ஊடுருவின. இதனால், மரங்கள், வடிவத்தில் சிதையாமல் வேரோடும் கிளையோடும் கல் மரங்களாகவே தங்கிவிட்டன. எனவே, இங்கு நிறையப் பாறைகள், கற்கள். மரக்காடு கள் இருந்த இடம், இப்போது மரக்கல் காடுகளாகக் காட்சியளிக்கின்றன. இதைத்தான், புதைபடிவ தேசியப் பூங்காவாக்கி, இந்திய நில இயல்துறை சிறப்பித்துள்ளது.
சரி. பெயருக்கு வருவோம். வல் + கரை - வலிய பாறைகளை உடைய இடம் என்று பொருள். வல் + கரை = வக்கரை. கிராம மக்கள், பூமியில் புதைந்து கிடக்கும் மரக்கல் பாறைகளை, வதம் செய்யப்பட்ட வக்கிராசுரனின் எலும்புகள் என்று நம்புகின்றனர்.
கூடவே ஒரு துண்டுச் செய்தி: சற்றுத் தள்ளி, இதே மாதிரி புதைந்த மரங்கள், அங்கிருந்த உவர்நீரின் பாதிப்புக்கு உள்ளாயின. வேதிம வினை நிகழ்ந்து, மரங்கள் கரியாகி, நிலக்கரியாகத் தங்கின. இதுவே, நெய்வேலியில் நிலக்கரி உருவான கதை.
|
Comments
Post a Comment