வாலி வழிபட்ட ஈசனின் ஆலயம்

ரிஷிகள் வழிபட்டதும், முனிவர்கள் பூஜித்ததும், சித்தர்கள் ஸ்தாபித்ததும், மன்னர்கள் நிர்மாணித்ததுமான எண்ணற்ற திருக்கோயில்கள் நம் நாட்டில் அருளளி பரப்பித் திகழ்கின்றன.
இத்தகைய ஆலயங்களைவிடவும் தனிச் சிறப்பு பெற்றவை, இறைவன் சுயம்புவாகத் தோன்றிய திருத்தலங்கள். அத்தகைய ஆலயங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமே இல்லை. அப்படி ஓர் ஆலயம்தான் இதோ நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீவாலீஸ்வரர் திருக்கோயில்.
இங்குள்ள இறைவனுக்கு வாலீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது எப்படி?
திரேதாயுகத்தில் இந்திரனின் மகனாகத் தோன்றியவன் வாலி. அவன் மிகச் சிறந்த சிவபக்தன். நாளெல்லாம் நாதன் நமசிவாயனை பூஜிப்பதையே தன் பிறவிக் கடனாகக் கருதி, உதயகாலம் முதல் சந்தியாகாலம் வரை கடல் நீராடி, சிவ பெருமானை வழிபடுவது வாலியின் வழக்கம்.
ஒருமுறை, சிவ பூஜையில் திளைத்திருந்த போது, தன்னைப் பின்புறம் இருந்து தாக்க வந்த ராவணனைத் தன் விரல் இடுக்கில் பற்றிக்கொண்டு, (வாலில் சுற்றிக் கொண்டு என்றும் சொல்வதுண்டு) ராவணன் அலறித் துடிக்கும்படியாக எட்டு திசைகளையும் சுற்றி வந்து, ராவணன் மன்னிப்பு கேட்ட பிறகே, அவனை விடுவித்தான். அந்த அளவுக்கு வலிமை கொண்டிருந்தவன் வாலி.
வாலியின் சிவபக்தியைப் போற்றும் வகையில், அவனுக்கும் அவனைக் காரணமாகக் கொண்டு உலக மக்களாகிய நமக்கும் அருள்புரியும்பொருட்டு சிவ பெருமான் ஓர் அருளாடல் புரிந்தார். அந்த அருளாடல் நிகழ்ந்த திருத்தலம்தான், இதோ நாம் இப்போது தரிசித்துக் கொண்டிருக்கிறோமே, இந்த எச்சூர் திருத்தலம். ஆதியில், இந்த ஊருக்கு லக்ஷ்மிநிவாசபுரம் என்று பெயர்!
ஒருநாள், வழக்கம்போல் காலையில் கிழக்குக் கடலில் நீராடி சிவபெருமானை வழிபட்ட வாலி, மாலையில் மேற்குக் கடலில் நீராடி சிவபூஜை செய்வதற்காக வான் வழியே இந்த இடத்துக்கு மேலாக வந்த போது, அவன் பயணம் தடைப்பட்டது. தாம் அங்கே சுயம்புவாக பூமியில் புதைந்து இருப்பதாகவும், தம்மைக் கண்டெடுத்து வழிபடும்படியாகவும், அசரீரியாக ஈசனின் குரல் ஒலித்தது. அதன்படி, வாலி பூமியில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தை எடுத்து, முறைப்படி ஓர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். வாலி வழிபட்டதால் இந்த ஈசன் வாலீஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டார். பச்சை நிறக் கல்லால் ஆன அம்பிகையின் திருநாமம் - ஸ்ரீஅபீதகுசாம்பாள்.
இத்திருத்தலத்துக்கு வந்து ஸ்ரீவாலீஸ்வரரை வழிபட, வாழ்க்கையில் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்றும், வழக்குகளில் வெற்றியே கிடைக்கும் என்றும் ஊர்மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
புராதனச் சிறப்புகள் கொண்ட இந்த ஆலயம் சரித்திர பிரசித்தியும் பெற்றதாகத் திகழ்கிறது. முதலாம் குலோத்துங்க சோழன் இக்கோயிலை அழகான கற்கோயிலாக எழுப்பி, திருப்பணிகள் செய்ததாகக் கல்வெட்டுகள் இருந்ததாகவும், அந்நியர் படையெடுப்பின்போது கோயிலும் கல்வெட்டுகளும் சிதைக்கப்பட்டதாகவும், அரைகுறையாக எஞ்சியிருந்த ஒரு கல்வெட்டைக் கொண்டே முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பெற்ற விவரம் தெரிய வந்ததாகவும், அந்த ஊரைச் சேர்ந்த 84 வயதான ஜெயலட்சுமி அம்மாள் என்ற பெண்மணி நம்மிடம் தெரிவித்தார்.
கோயிலில் இருந்த சிலைகள் எல்லாம் காணாமல் போனாலும், சுயம்புவாகத் தோன்றிய சிவபெருமான் மட்டும் இருந்த இடத்தைவிட்டு இம்மியும் அசைந்து கொடுக்காமல் அங்கேயே நிலைபெற்றுவிட்டார். ஆவுடையார் மட்டும் சற்றே பின்னப்பட்டு உள்ளது. அதேபோல், அம்பிகையும் தான் இருந்த இடத்திலேயே இருக்க, பாதுகாப்பு கருதி ஊர்மக்கள் அம்பிகையின் சிலையை ஓரிடத்தில் பத்திரமாக வைத்திருக்கின்றனர்.
சுயம்புவாகத் தோன்றிய ஈசனின் திருக் கோயில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே சிதிலம் அடைந்த நிலையில் இருப்பது? இப்படியே இருந்தால் ஊர் எப்படிச் செழிக்கும்? ஊர் செழித்தால்தானே தனக்கும் வழிபாடுகள் தடையின்றி நடக்கும்? இப்படியாக எண்ணமிட்டாள் எச்சூரின் காவல் தெய்வமும், எச்சூர் மக்களின் குலதெய்வமுமாகத் திகழும் சேம்பி அம்மன்.
2011-ம் வருடம், இந்த ஊரைச் சொந்த ஊராகக் கொண்டவரும் அரசுத் துறையில் உயர்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவருமான ராஜாமணி ஐயர் என்பவர், குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்ற எச்சூர் சேம்பி அம்மன் கோயிலுக்கு வந்திருந்தார். வாலீஸ்வரர் கோயிலின் புராதனச் சிறப்பையும், இன்றைய அதன் அவல நிலையையும் அறிந்துகொண்ட ராஜாமணி ஐயர், திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்ய முடிவு செய்து,  அன்றைய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனிடம் விவரம் சொல்லி, கோயிலைப் புதுப்பிக்க உதவும்படி கேட்டுக்கொண்டார். அதன் பயனாக, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையினரால் இதற்கு ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஊர்மக்களும் தங்கள் பங்களிப்பாக ரூ. 10 லட்சம் வரை திரட்டிக் கொடுத்து, கோயிலைப் புதிதாகக் கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
முற்றாகச் சிதைந்துவிட்ட கோயிலைப் புதுப்பித்துக் கட்ட இந்தப் பணம் எப்படிப் போதும்? ஒரு கட்டத்துக்குமேல் திருப்பணிகள் அப்படியே ஸ்தம்பித்துவிட்டன.
கிராமத்தின் காவல் தெய்வமான சேம்பி அம்மன் அப்படியே விட்டுவிடுவாளா என்ன?
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எச்சூரைச் சொந்த ஊராகவும், சேம்பி அம்மனை குலதெய்வமாகவும் கொண்ட சகோதரர்களான கணேசனும் ரமேஷ§ம் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்ற எச்சூருக்கு சென்றிருந்தனர். ஊர்மக்கள், இவர்களிடமும் கோயிலின் சிறப்பை விவரித்துச் சொன்னதோடு, தொடங்கிய திருப்பணிகள் பாதியிலேயே நின்று விட்டது பற்றியும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டு, எப்படியாவது திருப்பணிகளை முழுமையாக முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டனர்.
சிவத் திருப்பணி செவ்வனே நிறைவு பெறவேண்டும், அதன் பயனாக ஊர் செழிக்க வேண்டும் என்ற ஊர்மக்களின் விருப்பத்தை விரைவிலேயே பூர்த்தி செய்யும் முடிவுக்கு வந்துவிட்ட கணேசன், சென்னைக்குத் திரும்பியதும், தன் நண்பரும், கோயில் திருப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுபவருமான உமாசங்கர் என்பவரின் துணை யுடன் அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.
நாம் அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்த தினத்தில்தான் புதிதாகச் செய்யப்பட்டிருந்த விநாயகர், வள்ளி தேவயானை சமேத முருகர், வாலீஸ்வரருக்கான ஆவுடையார் போன்ற விக்கிரகங் கள் மகாபலிபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஜலவாசத்தில் வைப்பதற்கான வைபவம் நடைபெற்றது.
''நாங்கள் கடந்த சித்திரை மாதம் இங்கே வந்திருந்தபோது, திருப்பணிகள் நின்றுபோனதால் புதர் மண்டிக்கிடந்த கோயிலைச் சுத்தப்படுத்தி, ஒரு அர்ச்சகரை நியமித்து, சிவபெருமானுக்கு ஒருகால பூஜை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். அன்றிலிருந்து திருப்பணிகளில் முன்னேற்றம் தெரிவதுடன், மழையே காணாமல் இருந்த ஊரில் அவ்வப்போது மழையும் பெய்கிறது'' என்றார் உமாசங்கர்.
''சிவாலயத் திருப்பணியில் எங்களை ஈடுபடச்செய்த எங்கள் குலதெய்வமான சேம்பி அம்மனுக்கு முதலில் அபிஷேகம் செய்து வரலாம் என்று சென்றிருந்தோம். அப்போது, அம்மனின் கை பின்னப்பட்டு இருப்பதைக் கண்டோம். உடன் வந்த உமாசங்கரும் ஸ்தபதியும் சொன்னதன்பேரில், சேம்பி அம்மனுக்குப் பாலாலயம் செய்து, புதிதாக ஒரு அம்மன் சிலையைச் செய்து, வாலீஸ்வரர் கோயிலுடன் சேர்த்து சேம்பி அம்மன் கோயிலுக் கும் கும்பாபிஷேகம் செய்ய நினைத்துள்ளோம்'' என்றார் கணேசன்.
வாலியின் மாசற்ற பக்திக்கு இரங்கியும், உலக மக்களாகிய நமக்கெல்லாம் அருள்புரியவும், சுயம்புவாகத் தோன்றிய ஸ்ரீவாலீஸ்வரர் கோயில் புதுப் பொலிவு பெற்று நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெறவும், சிவாலயத் திருப்பணியில் அன்பர்களை ஈடுபடுத்திய சேம்பி அம்மன் திருவுருவம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பெற்று, சேம்பி அம்மன் ஆலயத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெறவும், நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்து, ஸ்ரீஅபீதகுசாம்பாள் சமேத ஸ்ரீவாலீஸ்வரரின் திருவருள் பெற்று, வாழ்க்கையில் எந்நாளும் சந்தோஷம் நிலைத்திருக்கப் பெறலாமே!
                
எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி- செய்யாறு வழியில், வந்தவாசியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது எச்சூர் திருத்தலம். வந்தவாசியில் இருந்து பேருந்து வசதி உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்துசெல்லும் தொலைவிலேயே கோயில் அமைந்து உள்ளது.

Comments