ருத்திரனின் தோற்றம்!

ஒவ்வொரு யுக முடிவிலும் பிரளயம் ஏற்பட்டு, அனைத்து உயிர்களும் ஒடுங்கி பரமாத்மாவில் ஐக்கியமாகின்றன.
பரமாத்மாவோ யோகத் துயில் கொள்கிறார். பகவானின துயில் கலைகிறது. அவர் உந்தியிலிருந்து ஒரு கமலம் எழுகிறது. அதில் பிரம்மா தோன்றுகிறார். இப்பொழுது படைப்புக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்படுகிறது.
படைப்பினால் பிரகிருதி தோன்றுகிறது. வேதங்கள் தோன்றுகின்றன. அவற்றின் ஒலியிலிருந்து தேவர்கள், கந்தர்வர்கள், யட்சர், அசுரர், மானுடர், நீந்துவன, ஊர்வன, பறப்பன, தாவரங்கள் என எல்லாவகை உயிர்களும் தோன்றின. மனித ஆயுளைப் பற்றி தெரிவிக்கிறது இப்புராணம்.
கிருத யுகத்தில் நானூறாகவும், திரேதாயுகத்தில் முன்னூறாகவும், துவாபரயுகத்தில் இருநூறாகவும், கலியுகத்தில் நூறாகவும் வாழும் ஆண்டுகள் வகுக்கப்பட்டுள்ளது.
துஷ்சகன் என்பவன் மிகவும் கொடியவன். அவன் மனிதர்களையும் பிராணிகளையும் பிடித்துத் தின்ன ஆரம்பித்தான். அவனுடைய அகங்காரத்தை அடக்கிப் பணிய வைத்தார் பிரம்மா. அவனோ பிரம்மாவிடம் தனக்கு இருக்க இடமும், உண்ண உணவும் தந்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டினான்.
அதற்கு பிரம்மா, "உரோமம், பூச்சி, புழு, அசுத்த மனிதன், எச்சில், நாய் இவற்றால் தீண்டப்பட்ட உணவு அசுத்த உணவாகக் கருதப்படும். அவையே உன் உணவாகும். சண்டை சச்சரவு உள்ள வீடு, சாஸ்திரங்களை நிந்தை செய்பவர், பக்தி இல்லாமல் பூஜை செய்யும் இடம், காரணமின்றி உபவாசம் இருப்பவார்கள், சாஸ்திரம் அறியாமல் யாகம் செய்பவன் உள்ள இடங்களில்தான் நீ வாசம் செய்வதற்கான இடங்கள்' என்றார்.
இந்த துஷ்சகன் மனைவி பெயர் நிர்மாஷ்டி. இவர்களுக்கு எட்டுபிள்ளைகள், எட்டுப் பெண்கள் இவர்கள் நல்லவர்களா என்றால் அதுவும் இல்லை. நல்ல தந்தைக்கு துஷ்டப் பிள்ளைகள் பிறப்பதும், துஷ்ட தந்தைக்கு நல்ல பிள்ளைகள் பிறப்பதும் உலகின் முரண்பாடான செயலாகும்.
இந்தப் பிள்ளைகளில் ஒருவன் தந்தத் திருஷ்டி என்பவன். இவன் பற்களில் வசித்துக் குழந்தைகளைப் பீடிப்பான். இதற்கு பரிகாரமும் உண்டு. அரக்கர்களைக் கொல்லும் மந்திரங்களை ஜபித்து வெள்ளைக் கடுகை இறைத்தால் இப்பீடை விலகும்.
உத்தி என்பவன் வாக்கினால் பேச வைத்துச் சிக்கலை உண்டாக்குவான். பகவான் நாம சங்கீர்த்தத்தினாலும் மங்கல வார்த்தையினாலும் இவனை வெல்லலாம்.
பரிவர்த்தகன் என்பவன் கருவில் உள்ள குழந்தைகளைப் பீடிப்பான். வெள்ளைக் கடுகு பரிகாரம் செய்யவேண்டும்.
அங்கத்ருகன் என்பவன் வாயுவைப் போல் பிடிப்பான். தர்ப்பைப் பரிகாரம் பண்ண வேண்டும்.
சகுனி என்பவன் பறவைகளால் கெடுதலைச் செய்வான். சகுனம் சரியில்லை என்றால் காரியத்தை விட்டு விடுதலே சிறந்தது.
கண்ட பிராந்தாதி என்பவன் கழுத்திலிருந்து தொல்லை கொடுப்பான். தெய்வப் பிரார்த்தனை, மறையோர், முதியோர் ஆசிகர் மூலம் இவனால் வரும் நோய் விலகும்.
கர்பஹா என்பவன் கர்ப்பத்தைக் கலைப்பவன். சிவ, ராம, கிருஷ்ண நாமங்களால் இவனை வெல்லலாம். (இதனால்தான் கர்ப்பமுற்ற பெண்கள் தெய்வத்துதிகளைக் கேட்பது, பாடுவது, பூஜை செய்தல், இராமாயணம் படித்தல் போன்றவற்றை செய்ய வேண்டும் என்பார்கள்).
சம்சயஹா என்பவன் எட்டாவது மகன். பயிர் பச்சைகளை அழிப்பவன். பழைய செருப்புகளைத் தொங்க விடுதல் மூலம் இவனை விரட்டலாம். (தோட்டந்துரவுகளில் விரவம் தெரிந்தவர்கள் பழைய செருப்புகளை, திருஷ்டி பொம்மைகளைத் தொங்க விட்டிருப்பார்கள்)
துஷ்சகனின் பெண்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர்களும் தீயவர்களே! நமக்கு வரும் நோய்களுக்கு காரணகர்த்தா யார் என்று புராணங்கள் காட்டித் தருகின்றனவே! அதற்குரிய பரிகாரங்களை செய்வது சிறந்த வழியாகும்.
நியோஜிஜா என்பவள் பிற ஆண்கள் அல்லது பெண்கள் மீது ஆசையை உண்டாக்குவாள். சாஸ்திர உபதேசங்களைக் கடைப்பிடித்து இவளை விரட்டலாம்.
விரோகினி என்பவள் குடும்பங்களில் சண்டையை மூட்டுவதில் சமர்த்தி. இவளை பொறுமை, நல்லெண்ணம், விட்டுக் கொடுத்தல் மூலம் விரட்டி விடலாம்.
சுவயம்ஹரி என்பவள் பண்டங்களைக் கெடுப்பவள். ஹோமம் செய்து இவளை அடக்கி வைக்கலாம். பீடை அகலும்.
பிராமணி என்பவள் சித்த சஞ்சலம் உண்டாக்குவாள். வெள்ளைக் கடுகு வைத்து இவளை விரட்டலாம்.
ருதுகாரிகா என்பவள் ருது மூலம் பெண்களைக் கெடுப்பவள். ஓடும் நதியில் நீராடினால் இவளது பீடை விலகும்.
ஸ்மிருதிஷா என்பவள் நினைவை மறக்கச் செய்வாள். தியானத்தால்தான் இவளை வெல்ல முடியும்.
பீஜஹாரிணி என்பவள் ஆண்களின் பீஜத்தைக் கெடுப்பவள். குறைவாக அளவுடன் உணவு உண்ணல், தூய்மையான இடத்தில் வசித்தல், புனித நீராடல் மூலம் இவளை வெல்ல முடியும்.
துவேஷிணி என்பவள் எல்லோரும் வெறுக்கக்கூடிய காரியங்களையே செய்ய வைப்பவள். பூஜை, ஹோமம் இவற்றால் இவளை வெல்லலாம்.
இவ்வாறு துஷ்சகனாலும், அவனுடைய சந்ததியினராலும் வரும் தொல்லைகளைப் பற்றியும், பரிகாரங்கள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது இப்புராணத்தில்.
இன்னும் ஒன்றையும் தெரிந்து கொள்ளலாம்.
யமன் கழுகு உருவையும், காலன் காக்கை உருவையும், நிருதி கோட்டான் உருவையும், விபாதி பெருங் கழுகு உருவையும் எடுப்பதால் இவை உட்கார்ந்த வீட்டில் வசிக்கலாகாது.
பெண்கள் செய்ய வேண்டிய சில செய்திகளையும் மார்க்கண்டேய புராணம் சொல்கிறது.
கரண்டியில் நெருப்பை எடுத்தால் வீட்டில் சண்டை உண்டாகும்.
கோள் சொல்பவள் வீட்டில் லட்சுமி தங்கமாட்டாள்.
சுத்தமாய் கால் கழுவாமல் சமையலறையில் நுழைந்தால் மூதேவி தொடர்வாள்.
குளிக்காமல் உணவு உண்டால் நோய் உண்டாகும்.
கர்ப்பிணிகள் சம்போகத்தை விரும்பக்கூடாது.
இரவில் மரத்தின் நிழல், மயானம் இவற்றை அணுகக்கூடாது.
குழந்தை இருக்கும் அறையிலோ, பிறக்கும் அறையிலோ தீபங்கள் எரிவது அவசியம். இல்லையேல் ஆபத்து உண்டாகும்.
உருத்திரனின் தோற்றத்தைப் பற்றி புராணம் என்ன சொல்கிறது?
படைப்பின் துவக்கத்தில் பிரம்மா தன்னைப் போல் ஒரு தேவன் தேவை என்று எண்ணினான். உடனே அவர் மடியில் ஒரு குழந்தை அழுதுகொண்டே தோன்றியது. அழுதுகொண்டே பிறந்ததால் அக்குழந்தைக்கு உருத்திரன் என்று பெயர் வைக்கப்பட்டது.
இன்னொரு ஆச்சர்யம் என்ன தெரியுமா? ஒவ்வொரு தடவை அழும் பொழுதும் ஒவ்வொரு பெயர் பெற்றார். அவை முறையே பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்ரன், மகான் என்பன.
சூரியன், சந்திரன், பஞ்சபூதங்கள், தீட்ஷிதர் ஆகிய எட்டு ஆலயங்களைக் கட்டிய பிரம்மா அவற்றில் அவரவர் மனைவிகளுடன் வசிக்கச் செய்தார்.
தானே சுயமாகத் தோன்றிய பிரம்மா சுயம்பு என அழைக்கப்பட்டார். இவருடைய அருளால் தோன்றிய பிரிய விரதன் ஸ்வயம்புவ மனுவானான்.
ஸ்வயம்புவ மனுவிலிருந்து தொடங்கி ஸ்வரோசிஸ், உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷûஷ, மனுக்கள் காலம் வரை அதே பெயரில் மன்வந்த்ரங்கள் அழைக்கப்பட்டன. அடுத்தடுத்து வைவஸ்வத மன்வந்தரம், ரௌச்ய மன்வந்த்ரம், பௌத்ய மன்வந்த்ரம் என்று மன்வந்த்ரங்கள் பல தோன்றின.

Comments