வா ழ்க்கையில் வெற்றிகளை மட்டுமே சுவைத்து வந்த அறிவுக் கூர்மை மிக்க ராஜா அவர். அரசவையில் மந்திரி பிரதானிகளுடன் சேர்ந்து அடிக்கடி ஏதாவது விவாதங்களில் ஈடுபடுவது அவர் வழக்கம். ஒரு நாள் மரணத்தைப் பற்றி அவர்களுக்குள் பேச்சு வந்தது.
‘‘எவ்வளவு சக்தி வாய்ந்த நபராக இருந்தாலும் சரி... மரணதேவன் முன்பு அடிபணிந்தே ஆக வேண்டும். அவன் நாள் குறித்து விட்டால், அதிலிருந்து தப்பிக்கவே முடியாது!’’ என மூத்த மந்திரி ஒருவர் சொன்னார்.
உடனே ராஜாவுக்குத் தனது மரணம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணிக்கும் திறமை பெற்ற பிரபல ஜோதிடர் ஒருவரை அரசவைக்கு வரவழைத்தார். தனது ஜாதகத்தைக் கொடுத்துக் கணிக்கச் சொன்னார் ராஜா.
ஜாதகத்தைக் கணித்த ஜோதிடருக்குப் பலத்த அதிர்ச்சி. ‘‘இன்றுதான் உங்கள் வாழ்க்கையின் கடைசி நாள். இன்று மாலை சூரியன் மறையும்போது நீங்களும் மறைந்து போவீர்கள். உங்கள் ஜாதகம் இதைத்தான் சொல்கிறது’’ என்று கவலையோடு சொன்னார் அந்த ஜோதிடர்.
ராஜாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? துயரத்தின் சிகரத்துக்கே அவர் போனார். தனது தீர்ப்புகளின் மூலமும் போர்களிலும் பலரது வாழ்வு-சாவுகளைத் தீர்மானித்த அந்த ராஜா, சாகத் தயாராக இல்லை. மரணம் எதிர்பாராத தருணத்தில் வந்து சூழ்ந்து கொள்ளும்போது அதன் வலையில் சிக்கிக் கொள்ளும் மனிதர்கள், அதை ஒருவேளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் தப்பிக்கத் துடிப்பது இயல்புதானே. ராஜாவும் தப்பிக்க முயன்றார்.
உடனடியாக அவர் உத்தரவு போட, நாட்டில் இருக்கும் தலைசிறந்த பண்டிதர்கள் அனைவரும் அரசவைக்கு வரவழைக்கப்பட்டார்கள். ராஜாவின் உயிரைக் காக்கக் கூடிய ஓர் உபாயத்தைக் கூறுமாறு அவர்களுக்குக் கட்டளை இடப்பட்டது.
பண்டிதர்கள் அனைவரும் ஒன்றுகூடி ராஜாவைக் காக்கும் சரியான வழியை அறிய விவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு பண்டிதர், ‘‘யாகம் ஒன்று செய்யலாம்!’’ என யோசனை சொல்ல, இன்னொருவர் அதை மறுத்து, ‘‘இல்லை இல்லை... மந்திர உபாசனை செய்து காலதேவனைக் கட்டிப் போடலாம்’’ என்றார். இந்த இரண்டையுமே மறுத்த இன்னொருவர், ‘‘யந்திரத் தகடு ஒன்றுக்கு சக்தி கொடுத்து, அந்த சக்தி வளையத்துக்குள் ராஜாவை அடைத்து வைக்கலாம்’’ என்றார். இப்படியாகப் பண்டிதர்களுக்குள் கூச்சலும் குழப்பமும் சண்டையும் முடிவில்லாமல் தொடர்ந்தன.
நடுப்பகலும் கடந்தது. ஆனால், பண்டிதர்கள் ஒருமித்த முடிவுக்கு வரவில்லை. ராஜா பொறுமையிழந்து அவர்களைப் பார்த்துக் கத்தினார். ‘‘நேரமாகிறது... சீக்கிரம்... சீக்கிரம்!’’
ஆனால், அவர்கள் ராஜாவின் கூக்குரலைக்கூட காதில் வாங்காமல் தர்க்கம் செய்தபடி இருந்தனர். ஆளாளுக்கு ஒரு சாஸ்திரத்தின் வார்த்தைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தாங்கள் சொல்வதுதான் சரியான வழி என வாதிட்டபடி இருந்தனர்.
ராஜா நிம்மதியிழந்து தவித்தார். இதைப் பார்த்த ராஜகுரு, ‘‘இந்தப் பண்டிதர்களை நம்பாதீர்கள் ராஜா! இவர்களால் எந்த வழியையும் கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் உயிர் பிழைக்க நினைத்தால் இந்த நகரத்தை விட்டு சூரியன் மறைவதற்குள் எவ்வளவு தூரம் போக முடியுமோ அங்கே போங்கள். உங்களைத் தேடி இங்கே வரும் மரணதேவன் குழம்பிப் போவான்!’’ என தனக்குத் தெரிந்த யோசனையைச் சொன்னார்.
ஒன்றும் புரியாமல் நின்றிருந்த ராஜாவுக்கு இது நல்ல வழியாகத் தோன்றியது. அரண்மனை லாயத்திலிருந்து மிக வேகமாக ஓடும் ஒரு குதிரையைத் தேர்ந்தெடுத்து அதன்மீது ஏறிப் பறந்தார். நகரத்தைத் தாண்டிக் காடுகளுக்கு நடுவே புயல் வேகத்தில் விரைந்தது குதிரை. மாலை மங்கும் நேரத்தில் களைத்துப் போய் குதிரை சுருண்டுவிழ, ஒரு மரத்தடியில் படுத்தார் ராஜா.
காலையிலிருந்து நடந்த நிகழ்வுகள் அவர் மனத்திரையில் ஓடின. ‘எப்படியோ மரணதேவனை ஏமாற்றிவிட்டுப் பாதுகாப்பாக இருக்கிறோம்!’ என்ற நினைப்பு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்தது. களைப்பில் அவருக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது. வெளிச்சம் மறைந்து இருள் பரவ ஆரம்பித்தது. அந்த நொடியில் மரக் கிளை ஒன்றிலிருந்து மரணதேவன் குதித்தான்.
‘‘நீ இங்குதான் வருவாய்... உன் உயிரை இந்த இடத்தில்தான் எடுக்க வேண்டும் என விதி இருந்தது. எவ்வளவு நேரமாகக் காத்துக் கொண்டிருந்தேன் தெரியுமா? சரியான நேரத்தில் நீ வர மாட்டாயோ என கவலைப்பட்டேன். ஆனால், நீ வந்துவிட்டாய். நன்றி!’’ என்று சொன்ன மரணதேவன், அரசனைத் தனது பிடியில் சிக்க வைத்தான்.
சாவிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது! அது போலவே வாழ்விலிருந்தும் தப்பித்து ஓட முடியாது. எங்கே சென்றாலும் மரணம் பின்தொடர்ந்து வருவது போலவே வாழ்வும் பின்தொடர்ந்து வரும். இரண்டையும் தவிர்க்க முடியாது. புத்திசாலிகளால் அவற்றைக் கடந்து செல்ல முடியும். எல்லோருக்கும் நன்மை தரும் விதமாக வாழ்ந்து காட்டுகிறவர்கள், மரணத்துக்குப் பிறகும் மக்களின் மனதில் வாழ்வார்களே... அதுதான் வாழ்வையும் மரணத்தையும் கடந்து செல்லும் கலை!
ஒரு நல்ல குடும்பத் தலைவன் மனதால் சந்நியாசியாக இருக்க வேண்டும். மனதளவில் சந்நியாசியாக இருப்பது என்றால் கடமைகளிலிருந்து நழுவித் துறவறம் பூண்டு ஓடி விட வேண்டும் என்பதல்ல. அது தேவையே இல்லை. தனக்கென விதிக்கப்பட்ட குடும்பக் கடமைகளை அவன் பரிபூரணமாகச் செய்ய வேண்டும். கடமைகளுக்கு பயந்து வாழ்க்கையைத் துறந்து ஓடுவது கோழைத்தனம்.
இந்த உலகத்தின் சிக்கல்களுக்கு நடுவே இருந்தபடி குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்து, இறைவனை நினைத்தபடி வாழ வேண்டும். வாழ்க்கையின் கடமைகளைச் செய்யாமல் ஓடுகிறவர்கள் ஆன்மிக வாழ்க்கைக்குத் தகுதி அற்றவர்கள். அதனால்தான் பகவான் கிருஷ்ணர் போர்க்களத்திலிருந்து அர்ஜுனனைப் பின்வாங்க அனுமதிக்கவில்லை. வாழ்க்கை ஒரு போர்; அது தவிர்க்கப்பட வேண்டியதோ, ஒதுக்கப்பட வேண்டியதோ இல்லை!
அப்படித் தவிர்த்து, ஒதுங்கி எங்கே போக முடியும்? நீங்கள் இமய மலைக்கு ஓடலாம்... காட்டுக்கு ஓடலாம்... ஏதாவது ஆசிரமத்தில் சென்று பதுங்கி விடலாம். ஆனால், எங்கே போனாலும் வாழ்க்கை உங்களைப் பின்தொடர்ந்து ஓடி வரும்.
மனதளவில் சந்நியாசம் மேற்கொள்வது என்றால், குடும்பக் கடமைகளைச் செய்தபடி, அவற்றின் மீது பற்றில்லாமல் இருக்க வேண்டும். ஆனால், வெளியுலகுக்கு என்று நீங்கள் செய்தாக வேண்டிய கடமைகள் இருக்கின்றன. பொருள் தேடுங்கள்... பணம் சேருங்கள்... ஆனால், அவை உங்களை ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இறைவனைப் பற்றிய நினைவுகளில் மூழ்குங்கள்.
இறைவன் கோடானுகோடி சூரியப் பிரகாசத்தோடு உங்கள் அருகில் இருக்கிறார். யாரெல்லாம் தங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் அந்த ஒளியைப் பெறுகிறார்கள். இறைவனுக்கு வரம்புகளோ, எல்லைகளோ இல்லை. எந்த விதமான நிபந்தனைகளும் இல்லாமல் அவர் அருளைத் தருகிறார். உங்களின் இதயக் கதவுகள் மூடப்பட்டு விட்டால் அவரால் உள்ளே வர முடியாது. அவர் அந்தக் கதவுகளுக்கு வெளியே காத்திருப்பார். கதவுகளை உடைத்துக் கொண்டு அவர் உள்ளே வர மாட்டார். அது ஆக்கிரமிப்பு ஆகிவிடும். அவர் ஆக்கிரமிப்பவர் அல்ல. ஏனென்றால், அவர் அன்பு மயமானவர். அன்பு, ஆக்கிரமிப்பாக ஆக முடியாது!
அந்த அன்பை இறைவனிடமிருந்து பெற, நீங்கள் இல்லற சந்நியாசம் மேற்கொள்ள வேண்டும். இல்லற சந்நியாசம் என்றால், வீட்டுக்குள்ளேயே ஒரு காவி உடையைத் தரித்துக் கொண்டு யாரோடும் தொடர்பில்லாமல் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களது தினசரிக் கடமைகளை துடிப்போடு செய்ய வேண்டும். உங்களை நம்பி இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால், உங்களுக்குள் எதன் மீதும் பற்றை வளர்த்துக் கொள்ளாமல் ஆழ்ந்த அமைதியில் நனைந்திருக்க வேண்டும். ஓர் உண்மையான குடும்பஸ்தர் புறத்தில் குடும்ப வாழ்வையும், அகத்தில் சந்நியாச வாழ்வையும் நடத்துகிறார்.
ஒரு முறை சந்நியாசி ஒருவர் ரயிலில் பயணம் செய்தார். அவர் கையில் பெரிய துணிப்பை இருந்தது. அந்த பெட்டியில் இருந்த எல்லாப் பயணிகளுமே ஏகப்பட்ட பைகளும் பெட்டிகளும் வைத்திருந்தார்கள். ஆனால், சந்நியாசி பை வைத்திருந்தது அவர்களுக்கு விசித்திரமாக இருந்தது.
வர்களில் ஒரு குறும்புக்காரப் பயணி, ‘‘சுவாமி! நாங்கள் குடும்பஸ்தர்கள். எங்களுக்குப் பல பொருட்கள் தேவை. அதனால் பைகளைச் சுமந்து கொண்டு பயணம் செய்கிறோம். எங்களைப் போலவே நீங்களும் பெரிய பை வைத்திருக்கிறீர்கள். அப்புறம் எதற்கு உங்களுக்கு சந்நியாசம்? உண்மையில் உங்களுக்கும் எங்களுக்கும் அணிந்திருக்கும் ஆடைகளைத் தவிர வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது?’’ என்று கேட்டார்.
சந்நியாசி அமைதியாக ஒரு புன்சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தார்.
சில நிமிடங்களில் ரயில் ஒரு ஆற்றுப்பாலத்தின் மீது தடதடவெனப் பயணித்தது. ஆற்றில் நுரைத்துக் கொண்டு வெள்ளம் ஓடியது. சந்நியாசி புன்னகை பொங்கும் முகத்துடன் தனது பெரிய பையை ஜன்னல் வழியாக ஓடும் ஆற்றில் தூக்கி எறிந்தார்.
அதே புன்னகை மாறாத முகத்தோடு தன்னைக் கேள்வி கேட்ட பயணியின் பக்கம் திரும்பினார். ‘‘நீங்களும் நான் செய்தது போல செய்வீர்களா?’’ என்று கேட்டார். அந்தப் பயணி அதிர்ச்சியோடு, ‘‘என்ன சொல்கிறீர்கள்? எனது பைகளிலும் பெட்டியிலும் நகைகள், பணம் மற்றும் ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் இருக்கின்றன. இதை எப்படி அம்போவென ஆற்றில் போட்டு விட முடியும்?’’ எனக் கேட்டார்.
சந்நியாசி சிரித்தபடி சொன்னார்: ‘‘இதைவிட விலை உயர்ந்த பொருட்கள் எனது பையிலும் இருந்தன. ஆனால், துளிக்கூட வருத்தம் இல்லாமல் என்னால் அவற்றைத் தூக்கி எறிய முடிந்தது. உங்களால் அதைச் செய்ய முடியவில்லை. காரணம்... உங்களுக்கு அந்தப் பொருட்கள் மீது ஆசை இருக்கிறது. எனக்கு இல்லை. இதுதான் நம் இருவருக்கும் இருக்கும் வித்தியாசம்.’’
உண்மையைப் புரிந்து கொண்ட அந்தப் பயணி வெட்கத்தில் தலைகுனிந்தார்.
நமது பழங்கால வரலாற்றைப் பார்த்தால் பெயரோடும், புகழோடும் வாழ்ந்து, பல சாஸ்திரங்களைப் படைத்த முனிவர்கள் பலர் குடும்பஸ்தர்கள்தான். இல்லற வாழ்க்கையையும் துறவையும் இணைத்துக் கடைப்பிடித்து அவர்கள் சாதனை புரிந்தனர். அவர்களால் முடிந்தது என்றால் உங்களாலும் அதைச் சாதிக்க முடியும்!
Comments
Post a Comment