நடராஜர் விக்கிரகம் சிதம்பரம் வந்த கதை

சி தம்பரத்தில் நடராஜருக்கு ஆறு கால பூஜை வேத விதிப்படி நடைபெறுகிறது. இந்த பூஜைகளின்போது, முதலில் ஸ்படிக லிங்கத்துக்கு பூஜை நடந்த பிறகுதான் நடராஜருக்கு பூஜை நடக்கும். இங்குள்ள ஸ்படிக லிங்கம், ஆதிசங்கரரால் கொண்டு வரப்பட்டது என்று கருதப்படுகிறது. இந்த நடராஜர் விக்கிரகம் எப்படி, யாரால் கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம்.
வியாக்கிரபாதர், பதஞ்சலி ஆகியோருடன் தேவர்களுக்கும் ஞானசபையில் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடிக் காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து தில்லை மூவாயிரம் தீட்சிதர்கள் நடராஜருக்கு இடைவிடாமல் பூஜை செய்து வந்தார்கள். அப்போது, வடக்கே அந்தர்வேதி என்னுமிடத்தில் பிரம்மா ஒரு யாகம் செய்ய முற்பட்டார். அதன் அவிர்பாகம் பெற்றுக் கொள்வதற்காக தேவர்களையும், யாகத்தைச் செய்விக்க தில்லைவாழ் அந்தணர்களையும் அழைத்து வருமாறு கூறி பிரம்மா, தன் மகன் நாரதரை அனுப்பி வைத்தார்.
நாரதர் அவர்களிடம் சென்று இந்தத் தகவலைக் கூறியபோது, தேவர்களும் தீட்சிதர்களும், ''நாங்கள் ஆனந்தத் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதால் வர முடியாது!'' என்றனர்.
இதையறிந்த பிரம்மா நேரில் வந்து அவர்களை அழைத்தார். உடனே தேவர்கள் சம்மதித்தார்கள். ஆனால் தீட்சிதர்கள், ''நடராஜரை பூஜிப்பதை விட்டு நாங்கள் வர முடியாது. தவிர, தாங்கள் யாகம் செய்யும் இடம் வெகுதொலைவில் உள்ளது!'' என்றார்கள்.
உடனே வியாக்கிரபாதரையும் பதஞ்சலியையும் அணுகிய பிரம்மா, ''இந்த யாகத்துக்கு தீட்சிதர்களையும் அவசியம் வரவழைக்க வேண்டும்!'' என்றார்.
எனவே, அவர்கள் இருவரும் தீட்சிதர்களிடம் சென்று, ''நீங்கள் யாகத்துக்குப் போய்த் திரும்பி வரும்வரையில், நாங்கள் பெருமானை பூஜிக்கிறோம்!'' என்று உறுதியளித்தனர்.
அதற்குச் சம்மதித்த தீட்சிதர்கள் யாகத்துக்குச் சென்றார்கள். எனினும், 'நடராஜ மூர்த்தியை தரிசிக்க முடியவில்லையே!' என்று அவர்கள் மனம் வருந்தினர். அவர்களது வருத்தத்தைப் போக்க எண்ணிய ஸ்ரீநடராஜர், யாக குண்டத்தில் ஒளி வடிவில் தோன்றினார். தங்கள் மனம் விரும்பி எண்ணிய வடிவத்தை யாக குண்டத்தில் தரிசித்த தீட்சிதர்கள் அந்தப் பெருமானை உளமார தரிசித்தனர். யாகத்தையும் குறைவின்றி முடித்தனர். சிதம்பரம் திரும்பும்போது யாகத்தின் மூலம் கிடைத்த நடராஜப் பெருமானுடன் வந்து சேர்ந்தனர்.
அந்த நடராஜ மூர்த்திதான் 'மாணிக்க மூர்த்தி' என்றும், 'ரத்தினசபாபதி' என்றும் அழைக்கப்படுகிறார். அவருக்குத்தான் தினமும் பகல் பதினோரு மணிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.
 
 
 

Comments