சுனாமியை முன்கூட்டியே கணித்த மகான்

மது புண்ணிய பாரத பூமியில், பல்வேறு பிரதேசங்களில், பல்வேறு காலகட்டத்தில் அருளாளர்கள் பலர் அவதரித்து, இறையருள் பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார்கள். முக்காலமும் உணர்ந்த அந்த ஞானிகள், மனித வாழ்வின் அவலங்களை உணர்ந்து, இறையருள் துணையுடன் அவற்றை வெல்லும் வழிகளையும் உபதேசித்தனர்.
இப்படி - முக்காலமும் உணர்ந்தவராக, எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நிகழப் போகிற முக்கிய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிவித்து தீர்க்கதரிசியாக விளங்கியவர்தான் ஆந்திரப் பிரதேசத்தில் அவதரித்த ஸ்ரீவீரபிரும்மங்கர் ஸ்வாமிகள்.
சுமார் 450 வருடங்களுக்கு முன் பிரகிருதாம் பாள் - பரிபூர்ணாசார்யா தம்பதிக்குத் திருமக னாக அவதரித்தார் வீரபிரும்மங்கர். இவருக்கு வேமண்ணா என்று ஒரு சகோதரனும் உண்டு. சிறு வயதிலேயே இவரின் பெற்றோர் இறந்து விட்டதால், முனிவர் ஒருவரால் பிரும்மங்கர் வளர்க்கப்பட்டார். பின்னர், பாபாக்னி மடத்தின் தலைவரால் பராமரிக்கப்பட்ட பிரும்மங்கருக்கு குருவருளும் இறையருளும் இளமை யிலேயே கைகூடின. கோவிந்தமாம்பாள் என்ற புனிதவதியைத் தக்க வயதில் திருமணம் செய்து கொண்டார்.
‘இறையருளும் முக்தியும் பெறுவதற்குக் குடும்ப வாழ்க்கை ஒரு தடையல்ல. முக்திக்காகக் குடும்பத்தைத் துறந்து சந்நியாசி ஆக வேண்டியதில்லை!’ என்ற கருத்துக் கொண்ட வீரபிரும்மங்கருக்கு ஐந்து குழந் தைகள் பிறந்தனர்.
தன் சீடர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பல வித உபதேசங்களும் உதவிகளும் புரிந்த வீரபிரும்மங்கரின் சாதனைகளில் மகத்தானது, பூத பவிஷ்யத் வர்த்தமான கால ஞானம் (முக்காலம் பற்றிய அறிவு) என்ற தலைசிறந்த தீர்க்கதரிசன நூல்.
‘‘உலகத்தில் - குறிப்பாக இந்தியாவில் எதிர்காலத் தில் நிகழவுள்ள முக்கிய நிகழ்வுகளைத் தம் தெய்விக அறிவினால் உணர்ந்து தெளிந்து, அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீ வீரபிரும்மங்க சுவாமி!’’ என்று பெருமிதத்தோடு கூறுகிறார்கள் அவரின் பக்தர்கள்.
அவரது கணிப்புகளில் சில அப்படியே பலித்திருப்பதை அறியும்போது நமக்கு மெய் சிலிர்க்கிறது.
கணவனை இழந்த ஒரு பெண்மணி, இந்தியாவை 12 வருட காலம் அரசாட்சி செய்வார் என்பது அவரது கணிப்புகளில் ஒன்று. மறைந்த நமது பாரதப் பிரதமர் இந்திரா காந்திதான் அவர்!
இது மட்டுமா? சுனாமி வரப் போவதைக்கூட முன் கூட்டிக் கணித்திருக்கிறார் வீரபிரும்மங்கர் சுவாமி- பிரதிப பார்த்திப மத்யே பிரபஞ்ச பிரளய: என்ற வரிகளின் மூலம்.
எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி வீரபிரும்மங்கர் என்ன கூறுகிறார்?
உலகம் பல வித அழிவுகளைச் சந்தித்தாலும் இந்திய தேசம் எவ்விதப் பாதிப்புமின்றிச் சிறப்பா கவே இருக்கும். வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியா மிகவும் செழிப்பாக இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் தென் மாநில மக்களிடையே பெருகிவரும் பக்தி நெறியே என்கிறார் சுவாமிகள்.
கலியுக முடிவு பற்றி சுவாமிகள் என்ன சொல்கிறார்?
இமய மலையின் பனி, அதிக அளவில் உருகி, கடல் மட்டம் பெருமளவு அதிகரிக்கும். அப்போது விஜயவாடாவில் வீற்றிருக்கும் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மனின் மூக்குத்தியைத் தொடும் அளவு நீரால் உலகம் சூழப்படும். பிறகு கிருத யுகம் பிறக்கும். நம் விஞ்ஞானிகளும் உலக வெப்பமேற்றல் காரணமாக இமயமும், பனித் துருவங்களும் உருகும் என்றுதான் கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட அரிய தீர்க்க தரிசனக் குறிப்புகள் அடங்கிய சுமார் 4,500 சுவடிகள் ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்திலுள்ள பனகானபள்ளி என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் கீழ் புதைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஸ்ரீவீரபிரும்மங்க சுவாமி, தம்மை வழிபடுபவருக்கு எளிமையையே உபதேசிக்கிறார்.
‘‘என்னைத் வழிபடுபவர்கள் ஏழையாக இருப்பார்கள். அவர் களை வாழ்வின் துன்பங்களிலிருந்து கண்ணை இமை காப்பது போல் காத்திடுவேன்!’’ என்று கூறியுள்ள ஸ்ரீவீரபிரும்மங்கரின் ஜீவசமாதி, ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் கந்திமல்லையா பள்ளி என்ற ஊரில் இருக்கிறது.
ஸ்ரீவீரபிரும்மங்கரின் பிரதம சிஷ்யரான சித்தையா, ஓர் இஸ்லாமியர். இன்னொரு சிஷ்யர் மாதிகாக்கையா, மலை ஜாதி இனத்தவர்.
தாம் ஜீவசமாதி அடைவதற்கு முன், தம் தர்மபத்தினி கோவிந்தமாம்பாளை அழைத்த ஸ்ரீவீரபிரும்மங்கர், தமது காலத்துக்குப் பிறகு அவர் விதவைக் கோலம் பூணாமல் சுமங்கலியாகவே இருக்கலாம் என்றும், தாம் உண்மையில் இறக்கப் போவதில்லை என்றும் கூறினாராம். எனவே, தொடர்ந்து சுமங்கலிக் கோலத்திலேயே இருந்தார் கோவிந்தமாம்பாள்.
வருடா வருடம் சுவாமிகளுக்கு குருபூஜை நடக்கும். சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு குருபூஜை செய்து அன்னதானத்துக்காக ஊராரை அழைத்தபோது, ஊரார் அங்கு வந்து அன்னதானம் ஏற்பதற்கு மறுத்து விட்டார்களாம். ‘கணவனை இழந்த பின் சுமங்கலிக் கோலம் பூண்டிருக்கும் பெண்மணியும், அவர் மகன்களும் தரும் உணவை ஏற்க மாட்டோம்!’ என்று வாதம் புரிந்தார்களாம். இதனால் வருந்திய அன்னையின் வருத்தம் தீர வழி தேடிய சுவாமிகளின் இளைய புதல்வர் ஓங்காரையா, சுவாமிகளின் பிரதான சீடர் சித்தையாவிடம் சென்று, ‘‘என் அம்மா உண்மையிலேயே சுமங்கலியா, இல்லையா?’’ என்று கேட்டார். சீடரோ தயங்காமல், ‘‘உங்கள் தாய் சுமங்கலிதான். உங்கள் தகப்பனார், சமாதிக்குள் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்!’’ என்றார்.
இதை நம்பாத ஓங்காரையா, சமாதியைத் திறந்தார். கண் திறந்து அவரைப் பார்த்த ஸ்ரீவீரபிரும்மங்கர், ‘‘நான் இறக்கவில்லை. உயிரோடுதான் இருப்பேன் என்று சொன்னதையும், என் சீடன் சொன்னதையும் நம்பாத பாவத்துக்குப் பிராயச் சித்தமாக நீயும் உன் தாயும் (கோவிந்தமாம்பாளும்) ஊருக்கு வெளியிலுள்ள மலை உச்சியில் உண்ணாவிரதத்துடன் தியானமும், தவமும் செய்ய வேண்டும். அங் குள்ள புளிய மரத்திலிருந்து பன்னிரண்டு வருடத்துக்கு ஒரு முறை தானாகவே பழுத்து விழும் புளியம் பழத்தை மட்டுமே உண்ண வேண்டும்!’’ என்று மகனிடம் கூறிவிட்டு யோகத்தில் ஆழ்ந்து விட்டாராம்.
இப்படி, எத்தனையோ அற்புதங்களைச் செய்த அருளாளர் ஸ்ரீவீரபிரும்மங்கருக்கு ஆந்திராவிலும், அதைத் தாண்டியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள். ஆந்திராவில் ஸ்ரீவீரபிரும்மங்கர் மடாலயம் அநேகமாக எல்லா ஊர்களிலும் இருக்கிறது. ஒவ்வொரு மடாலயத்திலும் பூஜைகளும் அறப்பணிகளும் செவ்வனே நடைபெற்று வருகின்றன.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமாபுரம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள ஸ்ரீவீரபிரும்மங்கர் மடாலயம் எளிமையும், அழகும் ஒன்றிணைந்தது. இங்கு ஸ்ரீவீரபிரும்மங்கரின் உற்சவமூர்த்தியுடன் அவர் தர்மபத்தினி கோவிந்தமாம்பாளுக்கும் அழகிய உற்சவ விக்கிரகம் உள்ளது. இங்கு பூசாரியாகப் பணிபுரியும் பிரம்மையா, ஸ்ரீவீரபிரும்மங்கரின் திவ்விய சரித்திரத்தையும் அருமை பெருமைகளையும் விவரிக்கும்போது நம் மனம் பிரமிப்பில் ஆழ்ந்து விடுகிறது.
இங்கு ஆஞ்சநேயருக்குப் பெரிய சிலை ஒன்றும் தனித்தனியே ஆஞ்சநேயர், விநாயகர் மற்றும் நவக்கிரகங்களுக்கு சந்நிதிகளும் உள்ளன. ஒவ்வொரு பௌர்ணமி நன்னாளின்போதும் சந்திர பூஜை, கலச பூஜை ஆகியவற்றுடன், நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் செய்யப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை தோறும் பஜனை யுடன் வீதி வலம் நடைபெறுகிறது. சிவராத்திரியில் ஸ்ரீவீரபிரும்மங்கர் - கோவிந்தமாம்பாள் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமியில் குருபூஜை, ஆராதனை நடத்தப்படுகிறது.
கடப்பாவில் உள்ள தலைமை மடத்தில் இப்போது பீடாதிபதியாக இருந்து அருள் பாலித்துக் கொண்டிருப்பவர் ஸ்ரீவீரபிரும்மங்கர் பரம்பரையின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்த ஸ்ரீவீரபோக வசந்த வெங்கடேச சுவாமிகள் ஆவார்.

Comments

  1. அருமையான தகவல்.இது போல் மகான்களை பற்றிய தகவல்களை எனக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.

    ReplyDelete

Post a Comment