தந்தையையே தண்டித்த நாயனார்!

ன்பே சிவம்’ என்பது ஆன்றோர் மொழி. இதை திருமூலர் கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார்:
அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாவரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாவரும் அறிந்த பின் அன்பே சிவமாக அமர்ந்திருந்தாரே.
‘சிவம்’ என்பதற்கு ‘வீரம்’ என்றும் பொருள் உண்டு. அறுபத்துமூன்று நாயன்மார்களில் பெரும் பாலானவர்கள் அன்பு மிகக் கொண்டு, உள்ளம் உருகி, பக்தியில் தம்மை இழந்தவர்கள். மற்றும் சிலர் இதற்கு மாறாக சிவபெருமானின் ருத்திரம் உடையவர்களாகவும் திகழ்ந்தனர்.
இந்த வகை நாயன்மார்கள், சிவ வழிபாடு மற்றும் சிவனடியார்களுக்கு ஊறு நேர்ந்தால் கடும் கோபம் கொள்பவர்கள். இவர்களுக்கு சுற்றம், நட்பு, அரசு, ஆட்சி போன்றவை பெரிதாகத் தோன்றுவதில்லை. சிவ பக்தி மட்டுமே பெரிதாக இருந்தது. எனவே, சிவ வழிபாட்டைக் குறை சொல்பவர்களை இவர்கள் முரட்டுத்தனமாகத் தண்டித்தனர். அதனால் சிவபெருமான், இவர்களின் வீரத்துக்கு வீடுபேறு தந்து அருள் புரிகிறான். பாதகத்துக்கே பரிசு வைத்தானுக்குப் பல்லாண்டு கூறுதுமே என்று திருவிசைப்பா கூறுவது இங்கு எண்ணத் தக்கது.
நாயன்மார்களில் பதினோரு பேர் ‘வீரம் விளைத்த சிவனடியார்கள்’ எனப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் ‘சண்டேசுர நாயனார்’ எனப்படும் விசாரசருமர்.
சோழ நாட்டுத் தலைநகரங்கள் ஐந்தில் ஒன்று திருசேய்ஞலூர் (காவிரிப்பூம்பட்டினம், கருவூர், உறையூர், திருவாரூர் _ மற்ற நான்கு தலைநகரங்கள்). இங்கு எச்சதத்தன் எனும் அந்தணரின் மகனாகத் தோன்றியவர் விசாரசருமர். இவர், பூர்வஜென்ம புண்ணிய பலனால், இளமையிலேயே வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
ஒரு நாள் ஆயர்குல மேய்ப்பன் ஒருவன் ஆநிரைகளை மேய்க்க ஓட்டிச் செல்லும்போது அவற்றை முரட்டுத்தனமாக அடிப்பதைக் கண்டு மனம் வருந்தினார் ஏழு வயதான விசாரசருமர். அவனைக் கண்டித்ததுடன், ‘சிவ வழிபாட்டுக்கு பஞ்சகவ்யம் தரும் பசுக்களை வதைத்தல் கூடாது!’ என்பதற்காக பசுக்களுக்கு உரியவர்களிடம் சென்று பேசி, அவற்றை மேய்க்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டார்!
சிறந்த புல்லை மேயவிட்டு, தூயநீர் காட்டி, குளிப்பாட்டி, அகில் மணம் காட்டி, காலத்தில் காளைகளுடன் சேர்ந்திருக்கச் செய்து, அன்பைப் பொழிந்த விசாரசருமர் மீது பசுக்களும் அன்பு காட்டின. மட்டுமின்றி, அவர் அருகில் வந்தாலே, தாமாகவே பாலையும் சொரிந்தன.
இந்தப் பாலைக் கொண்டு மணலில் தான் செய்யும் லிங்கத் திருமேனிக்குத் திருமஞ்சனம் செய்து, கொன்றை, ஆத்தி மலர்களால் அர்ச்சித்து மகிழ்ந்தார் விசாரசருமர். இந்தப் பசுக்கள் அதன்பின் தம் உரிமையாளர்களுக்கும் குறையாமல் பால் வழங்கின.
ஒரு நாள் விசாரசருமரின் இந்தச் செயல்களைக் கவனித்த ஒருவன் ஊராரிடம் சென்று, ‘‘விசாரசருமன் பால் கறந்து மண்ணில் ஊற்றி விளையாடுகிறான்’’ என்று கூறினான். உடனே ஊரார், விசாரசருமரின் தந்தையை அழைத்து விசாரித்தனர். அவரோ, ‘‘இனிமேல் இது போல் நடக்காது!’’ என்று உறுதி கூறினார்.
மறுநாள், எச்சதத்தன் மாடுகளைப் பின்தொடர்ந்து சென்று ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார். வழக்கம் போல் விசாரசருமர் சிவலிங்கம் அமைத்து, பாலபிஷேகம் செய்தார்.
இதைப் பார்த்த எச்சத்தன், கோபத்துடன் அங்கிருந்து வெளிப்பட்டு ஒரு கோலால் விசாரசருமரின் முதுகில் அடித்தார். அதோடு, பால் பாத்திரங்களையும் காலால் உதைத்து சிவத்தொண்டை அவமதித்தார்.
இதைக் கண்டு வெகுண்ட விசாரசருமர், ‘‘சிவ பூஜைக்குரிய பாலை எட்டி உதைத்த உம்மை தண்டிப்பேன்!’’ என்று கூறி அருகிலிருந்த கோலை எடுத்தார். அது ‘மழு’வாக மாறியது. அதைக் கொண்டு தந்தையின் காலை வெட்ட... எச்சதத்தன் இறந்தார்.
பின்னர் அமைதியாக சிவ பூஜை செய்து முடித்தார் விசாரசருமர். அப்போது வானில் சிவபெருமான் இடப வாகனத்தில் உமையவளுடன் காட்சி தந்தார். பின்னர் ஈசன், விசாரசருமனைத் தழுவி உச்சி மோந்து, ‘‘பிள்ளாய்! இனி யானே உம் தந்தையானோம். என் அடியார்களுக்கெலாம் நீயே தலைவன் ஆவாய். யான் உண்பன உடுப்பன, அணிவன இப்படி அனைத்தும் உனக்கே ஆகுக. உனக்கு சண்டேஸ்வர பதமும் தந்தருளினோம்!’’ என்று கூறி தமது சடையிலிருந்து கொன்றை மாலையை எடுத்து விசாரசருமரின் முடிமேல் சூட்டினார்.
இறைவன் அருளாணைப்படி விசாரசருமர், ‘சண்டீசர்’ என்னும் திருநாமத்துடன் தேவதேவனாகி இறையனாரின் அருகிலேயே இருந்தருளினார்! இந்த நிகழ்ச்சியை சேக்கிழார் சுவாமிகள்,
சண்டீசனுமாம் பதந்தந்தோம் என்றங் கவர் பொற் றடமுழக்குத் துண்ட, மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார் என்று குறிப்பிடுகிறார்.
திருநாவுக்கரசரும் தமது தேவாரத்துள், ‘குளிர்ச் சடைக் கொன்றை மாலையை’ சண்டேஸ்வரருக்கு சிவபெருமான் சூட்டியதை மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, சிவாலயங்களில் இறைவனின் சந்நிதியருகே சண்டேஸ்வரர் சந்நிதி இருக்கும். சண்டேஸ்வரருக்கு சிறப்பான பதவி கொடுத்து, இறைவன் அவரை ஆட்கொண்டதால், திருவிழாக் காலங்களில் பஞ்சமூர்த்தி புறப்பாடு அன்று சண்டேஸ்வரரும் ரதத்தில் அமர்ந்து அருள் பாலிப்பார். பிரதோஷ காலத்தில் சண்டீசர் சந்நிதி வரை வந்து, அப்பிரதட்சணம் செய்து வழிபடுவது புண்ணியம் தருவதாகும்!
இறைவனுக்கு சாற்றப்பட்ட மாலைகள், ஆடைகள், நிவேதனங்கள் அனைத்தும் பின்னர் சண்டேஸ்வரர் சந்நிதிக்கே கொண்டு செல்லப்படும். இத்தகு பெருமையும் சிறப்புகளும் மிக்க சண்டேஸ்வர நாய னாரின் கழலடிகளைப் போற்றிப் பணிவோம்!

Comments