உ லக மனிதர்களின் ஏற்றத் தாழ்வு, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அடிப்படையாகத் திகழும் நவக்கிரகங்கள்கூட, நோய் வாய்ப்பட்டுள்ளது ஆச்சரியம் அல்லவா?
முக்காலமும் அறிந்த காலவ முனிவர், ஞான திருஷ்டியால் தனக்குத் தொழு நோய் வரவிருப்பதை அறிந்தார். அதைத் தடுக்க என்ன பரிகாரம் செய்யலாம் என யோசித்தார். இறுதியில் பஞ்சாக்கினி வளர்த்து, ஒன்பது கிரகங்களையும் வேண்டி அதன் நடுவே தவத்தில் அமர்ந்தார். இதனால் மகிழ்ந்த நவக்கிரகங்கள் அவர் முன்பு தோன்றினர்.
‘‘முனிவரே, என்ன வரம் வேண்டும் தங்களுக்கு?’’ என்று கேட்டனர். காலவ முனிவர், ‘‘என்னைத் தொழுநோய் தாக்காமல் இருக்க வரமளிக்க வேண்டும்!’’ என்றார். நவக்கிரகங்களும் அப்படியே அருளினர்.
இதையறிந்த பிரம்மாவுக்குத் தாங்கொணா கோபம் ஏற்பட்டது. ‘‘அத்தனை உயிர்களுக்கும் நான் தலை விதி எழுதும்போது, அதை மாற்ற இந்தக் கிரகங்களுக்கு எவ்வளவு திமிர்? அழைத்து வாருங்கள், அந்த கிரகங்களை!’’ என்றார். அதன்படி அவரின் பணியாட்கள், ஒன்பது கிரகாதிபதிகளையும் அழைத்து வந்தனர்.
பிரம்மா அவர்களிடம், ‘‘எனது கடமையில் குறுக்கிட்ட நீங்கள் தொழு நோயால் அவதியுறுவீர்களாக. காலவ முனிவருக்கு வந்திருக்க வேண்டிய இந்த வியாதி, உங்களைப் பீடிக்கட்டும்!’’ என்று சாபம் கொடுத்தார். நடுநடுங்கிய கிரகாதிபதிகள், இந்த சாப விமோசனத்துக்கு வழி கூறுமாறு அவரிடம் வேண்டினர். சற்றுச் சாந்தமடைந்த பிரம்மா, ‘‘நீங்கள் பூலோகம் சென்று சிவனை வேண்டினால் வழி கிட்டும்!’’ என அருளினார். இதன்படி பூலோகம் வந்த ஒன்பது கிரகங்களும் செய்வதறியாமல் திகைத்தனர். அப்போது அங்கு வந்த அகத்திய முனிவர், அவர்க ளுக்கு வழிகாட்டி உபதேசமளித்தார்.
அதன்படி, வெள்ளெருக்கங்காட்டுக்கு வந்த நவக்கிரகாதிபதிகளும் ஆளுக்கொரு குளத்தில் நீராடி, பிள்ளையார் பிரதிஷ்டை செய்து, மங்கள நாயகி சமேத பிராணநாதரை வணங்கி எருக்கம் இலையில் தயிர் அன்னம் நிவேதித்து, பின்னர் அதைப் புசித்து வந்தனர். இதனால் அவர்களைப் பீடித்த தொழுநோய் ஏறத்தாழ குணமானது. இந்தச் சூழ்நிலையில் அவர்கள் முன்பு சிவபெருமான் காட்சி தந்து அவர்களின் நோயை முற்றிலுமாகக் குணமடையச் செய்து அருள் புரிந்தார்!
நவக்கிரகங்கள் பூஜித்த இந்த விநாயகரே, கும்பகோணம் அருகே சூரியனார்கோவில் என்ற ஊரில் ‘கோள் தீர்த்த விநாயகர்’ என்ற பெயரில் காட்சி அளித்து, தன்னை நாடி வந்து வணங்கு பவர்களின் குறைகளைத் தீர்த்து வருகிறார். இந்தத் திருத்தலத்திலுள்ள நவக்கிரகங்களை அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி உருவாக்கியதாக ஐதீகம்!
Comments
Post a Comment